Home Blog Page 3562

தகவல் கிடைத்திருந்தால் 21/4 தாக்குதலை தடுத்திருப்பேன் – மைத்திரி

21/4 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதிராக “கோயபெல்ஸ்” யுக்தி கையாளப்பட்டு, மக்கள் மத்தியில் தவறான கருத்து விதைக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் தொடர்பில் நான் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை. புலனாய்வு தகவல்கள் எனக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தால் பேரவலம் ஏற்பட இடமளித்திருக்கமாட்டேன் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது நாளாக நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“21/4 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் எனது அஞ்சலியையும், கவலையையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டியல் அன்று இன்றும் நான் உறுதியாக இருக்கின்றேன். இதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

இவ்விவாதத்தில் நான் உரையாற்றக் கூடாது என ஒரு சிலரும், இல்லை…. உரையாற்றியே ஆகவேண்டும் என மேலும் சிலரும் கருத்துகளை முன்வைத்தனர். இருதரப்பினரதும் கருத்துகள் என்னவாக இருந்தாலும் எனது மனசாட்சியின் பிரகாரம் சில விடயங்களை குறிப்பிட்டாக வேண்டும்.

21/4 தாக்குதலை மையப்படுத்தி மக்கள் மத்தியில் நான் தொடர்பில் எவ்வாறான கருத்து பரப்பட்டுள்ளது, விதைக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியும். குறிப்பாக எனது அமைச்சரவையில் இருந்த, என்னால் நியமிக்கப்பட்ட அமைச்சரொருவர் தாக்குதல் நடைபெற்று மறுநாளே அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போது இத்தாக்குதல் குறித்து ஜனாதபதி (மைத்திரிபால சிறிசேன) முன்கூட்டியே தகவல் அறிந்திருந்தார் எனவும், இதற்கு அவர் முழுமையாக பொறுப்புக்கூறவேண்டும் எனவும் அந்த அமைச்சர் அறிவிப்பு விடுத்தார். அதேபோல எனது அரசில் இருந்த மேலும் சில அமைச்சர்களும் தாக்குதல் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே அறிந்திருந்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கருத்தை மக்கள் மயப்படுத்தினர்.

இதனால் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் தெரிந்தும், தடுத்து நிறுத்த நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் தெரிவிப்பதன்மூலம் அதனை உண்மையாக்கலாம் என்பதே கோயபெல்ஸின் யுக்தியாகும். எனவே, 21/4 தாக்குதல் சம்பந்தமாகவும் அதே யுக்தி கையாளப்பட்டுதான் மக்கள் மத்தியில் எனக்கு எதிராக கருத்து பரப்பட்டுள்ளது. தவறான முறையிலும், தெளிவு இன்மையாலும், அரசியல் பகைமையாலுமே என்னை இலக்கு வைத்து கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.

எனது அமைச்சரவையில் ஒரு தரப்பே எனக்கு ஆதரவு வழங்கியது. பெரும்பான்மை ஒத்துழைப்பு வழங்கவில்லை. கொள்கையுடன் இணைந்து பயணிக்ககூடிய பிரதமரும் இருக்கவில்லை. இவ்வாறு பல தடைகள், நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் நாட்டை நிர்வகித்தேன். நாட்டுக்கு பாதகமான விடயங்களை தடுத்து நிறுத்தினேன். எம்.சி.சி. ,சிங்கப்பூர் போன்ற உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு அனுமதி வழங்கவில்லை.

போர்காலத்தில் நான் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துள்ளேன். சந்திரிக்கா அம்மையார் ஆட்சியிலும் பாதுகாப்பு சபை சென்றுள்ளேன். எனவே, எனக்கு பாதுகாப்பு சபை என்பது புதிய விடயமல்ல. 2015 – 16 முதலே ஐ.எஸ். அமைப்பு குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தேன். ச’;ரான் கைது செய்யப்படாமை தொடர்பிலும் வினா எழுப்பியுள்ளேன்.

அதேவேளை, 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அரச புலனாய்வு பிரிதான பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவர்களுக்கிடையில் கடிதம் பறிமாற்றல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இது தொடர்பில் எனக்கு எவரும் தெரியப்படுத்தவில்லை. தெரியப்படுத்தினோம் என எவரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமும் வழங்கவில்லை.

தாக்குதல் தொடர்பில் எனக்கு முன்கூட்டியே அறிவித்திருந்தால், நடவடிக்கை எடுக்காமல் வெளிநாடு செல்லும் அளவுக்கு நான் மிலேச்சத்தனமான மனிதன் கிடையாது. பேராயருடன் கலந்துரையாடி, கொழும்புக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பேன். ” – என்றார்.
………………

யார் இந்த கோயபெல்ஸ்?
ஹிட்லரின் கொள்கைப்பரப்பாளராக செயற்பட்டவர்தான் கோயபெல்ஸ் (Goebbels) .
எந்தவொரு பொய்யையும் நயமாகச்சொல்லி, மக்களின் மனங்களை மாற்றி நம்பவைக்கும் வித்தை அறிந்தவர். அதாவது, ஒரு கருத்தியலை,மெல்லமெல்ல மக்களிடம் திணித்து – அதை, பொதுக் கருத்தாக்கி – அந்தக் கருத்தைச் சுற்றியே மக்களை உரையாடவைக்கும் பெரும் தந்திரக்காரர்.

கிளிநொச்சியில் கோர விபத்து – தந்தையும் மகன்மாரும் பலி!

கிளிநொச்சி – பளைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பளை , இத்தாவில் பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் வாகனமொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாத்திலிருந்து பளை பிரதேசத்தை நோக்கி சென்ற மோட்டார் வாகனம் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனத்தில் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த 38 வயதுடைய தந்தை, 14 மற்றும் 11 வயதுடைய அவருடைய பிள்ளைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிதரன் எம்.பியின் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் – மகன்மீதும் தாக்குதல்!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஜானம் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதல் வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் சாரங்கன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8பேர் கொண்ட குழு பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதோடு, மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“பிள்ளைகளை வழங்கமாட்டோம் – நாமே வளர்ப்போம்” – உறவினர்கள் திட்டவட்டம்! நேரடி ரிப்போட்

பசறை 13ஆவது மைல் கல்லருகே கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளை தத்தெடுக்க வைத்தியரொருவர் முன்வந்துள்ள போதிலும், பிள்ளைகளை தத்துக்கொடுப்பதற்கு அவர்களின் அம்மம்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தாமே அவர்களை வளர்க்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

அம்பாறை வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வஜிர ராஜபக்ச என்பவரே பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும், தாம் பொறுப்பேற்பதற்கான சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,பசறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தியரின் இக் கோரிக்கை குறித்து, பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதுளை மஜிஸ்ரேட் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இப் பஸ் விபத்தில் லுணுகலையைச் சேர்ந்த அடாவத்தை தோட்டத்தின் அந்தோனி நோவா தமக்கான கண் சிகிச்சையை மேற்கொள்ள தனது மனைவியான பெனடிக் மெரோனாவுடன், பதுளை அரசினர் மருத்துவமனைக்கு புறப்பட்டார். அவ் வேளையில் காலையில் பதுளை செல்லும் பஸ் சென்றுள்ளதை அறிந்ததும், அவ்விருவரும் ஆட்டோவொன்றில் புறப்பட்டு, தவறவிட்ட பஸ்சைப் பிடித்து ஏறினர்.

அப் பஸ்சே விபத்துக்குள்ளாகியது. அவ்விபத்தில் இத் தம்பதிகள் உள்ளிட்டு 15 பேர் பலியாகினர். இத்தம்பதிகளின் இரு பெண்பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையுமாக மூன்று பிள்ளைகளும் தமது பாட்டியின் அரவணைப்பிலேயே இருந்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்தது.

இந்நிலையில், டாக்டர் வஜிர ராஜபக்சவும், அவரது மனைவி தரங்கா விக்கிரமரட்னவும், விபத்தில் பெற்றோரை இழந்த 9, 8, 3 வயதுகளையுடைய மூன்று பிள்ளைகளையும் சட்ட ரீதியாகவே தத்தெடுத்து பொறுப்பேற்க முன்வந்துள்ளனர்.

” எனது மகளும் மருமகனும் இல்லாத நிலையில் அவர்களின் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து, அவர்களை நல்லதோர் நிலைக்கு கொண்டு செல்வதே எனது குறிக்கோள். எனது மகனினதும், மருமகனினதும் பிள்ளைகள் குறித்த எதிர்காலக்கனவை நனவாக்க வேண்டும். இப்பிள்ளைகளை எவருக்கும் கொடுக்க என்னால் அனுமதிக்க முடியாது. பிள்ளைகள் மூவரையும் பிரிந்துவிட்டேனென்றால் எனக்கு பைத்தியமே பிடித்து விடுமென்று, பிள்ளைகளின் அம்மம்மா ஐயாசாமி செல்வநாயகி குறிப்பிட்டார்.

பெற்றோர் இல்லாத நிலையில், மூன்று பிள்ளைகளையும் எவரிடமாவது ஒப்படைக்க திட்டமிட்டுள்ளீர்களா? என்று நான் வினவிய போது, பிள்ளைகளின் அம்மம்மா ஐயாசாமி செல்வநாயகி மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘ எனது மகளும், மருமகளும் இல்லாத பெரும் துயரில் நானும், பெற்றோர் இல்லாத நிலையில் பிள்ளைகள் மூவரும் பெரும் சோகதிலுமே இருந்து வருகின்றோம். அச் சோகத்திலிருந்தும், துயரிலிருந்தும் நாம் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் எமது துயரிலும், சோகத்திலும் பலர் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர்.

எமக்கு உதவி செய்வதாக பலர் முகநூல்களிலும், வலையத் தளங்களிலும், இணையங்களிலும், ஊடகங்களிலும் கூறுகின்றார்களேயன்றி, எவரும் இதுவரையில் உதவி செய்ததாக இல்லை. பேரும் புகழும் பெறுவதற்காகவே இவ்வகையில் பலர் நடித்துக் கொண்டிருக்கின்றனர். சமூக சேவகர்களாக காட்டிக் கொண்டும் செயற்படுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளும் எம்மை வந்து பார்க்கவில்லை.

யார் உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும், எனது பேரப்பிள்ளைகளை படிப்பித்து, நல்லதோர் நிலைக்கு கொண்டு வருவேன். இம் மூவருமே எனது சொத்துக்கள். எவரிடமும் கையேந்த மாட்டேன். பிள்ளைகள் பெற்றோர் இல்லாத குறை மட்டுமே. அவர்கள் அனாதைகளல்லர். இரு பக்கத்திலும் உறவினர்கள் பலர் உள்ளனர்.

எனக்கு எவரும் இல்லை. ஆகையினால் உதவி செய்யுமாறு கோரி, நான் கூறுவதாக நிர்ப்பந்திக்கப்படுகின்றேன். சமூக வளையத்தளங்களில் வீரர்களாக, சமூக சேவையாளர்களாக காட்டிக் கொள்ளுபவர்கள், ஒருசில ஊடகத்தினர், பெரும்பான்மையின ஊடகத்தினர் ஆகியோரை, என்னை நிர்ப்பந்திக்கின்றனர். இம் மூன்று பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர என்னால் முடியும். எமது உறுவினர்களும் எம்முடன் இருக்கின்றனர். எமது திருச்சபையும், அருட்தந்தைகளும், அருட்சகோதரிகளும் எம்முடனேயே உள்ளனர்.

எமது இக்கட்டான நிலையை முன்னிலைப்படுத்தி, குழப்பகரமான சூழல், நிலையை எவரும் ஏற்படுத்த வேண்டாம். இது போன்ற செயலானது எனக்கும், எனது உறவினர்களுக்கும் பெரும் கவலையாகவும், மனவேதனையாகவுள்ளது’ என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

அருட்தந்தை யூஜின்

அருட்தந்தை யூஜின் கருத்துத் தெரிவிக்கையில், ‘நோவா நான் வளர்த்த பிள்ளை. நோவா வளர்ந்ததும் எனக்கு உதவியாளராகவே இருந்து வந்தார். அவருக்கு மெரோனாவை, நானே திருணமம் செய்து வைத்தேன். கத்தோலிக்க மதக் கோட்பாடுகளுடன் அவர்களின் குடும்பம் வாழ்ந்து வந்தது. நோவாவின் பக்கத்திலும், மெரோனாவின் பக்கத்திலும் உறவினர்கள் நிறையபேர் இருந்து வருகின்றனர்.

நோவாவும், மெரோனாவும் விபத்தில் பலியானது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பேயாகும். ஆனாலும், அவர்களின் பிள்ளைகள் மூவருக்கும் தாயின் பக்கத்திலும், தகப்பனின் பக்கத்திலும் நிறையவே உறவினர்கள் உள்ளனர். அம்மம்மாவிடம் பிள்ளைகள் மூவர் இருந்தாலும் அப்பம்மாவும் அப்பிள்ளைகள் மீது பாசம் கொண்டவராகவே இருந்து வருகின்றார்.

அத்துடன் உறவினர்கள் அனைவருமே இம் மூன்று பிள்ளைகளுடன் பற்று, பாசம் மிக்கவர்களாகவே காணப்படுகின்றனர்.

நோவாவும், அவரது குடும்பத்தினரும் அப்புத்தளைப் பகுதி ககாகொல்லை தோட்டத்தினைச் சேர்ந்தவர்கள். நான் அப்புத்தளையின் பங்குத் தந்தையாக இருக்கும் போது, அவர்கள் என்னுடன் பற்றுருதி கொண்டவர்களாக இருந்தனர். அக்காலப் பகுதியிலிருந்தே நோவைவை நான் வளர்த்தேன்.

அதன் பிறகு லுணுகலை பங்குத் தந்தையாக கடமையாற்றினேன். அவ்வேளையில், மெரோனாவை நோவாவிற்கு திருமணம் செய்து வைத்தேன். அவர்கள் இல்லாத நிலையில், அப் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கும், அருட்சகோதரிகளுக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் இருந்து வருகின்றது. அக்கடமையை பொறுப்புடன் நாம் மேற்கொள்வோம்.

நோவாவும், மெரோனாவும் இல்லாத நிலையில் பிள்ளைகள் மூவரும் அவர்களின் அம்மம்மா, அப்பம்மா, நோவாவின் தங்கை மொனிடா ஆகியோரிடம் தான் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு உதவி செய்பவர்கள் இருப்பின், அப்பிள்ளைகளின் வங்கி வைப்புப் புத்தகங்களுக்கு பணம் வைப்பீடு செய்து உதவலாம். அத்துடன் பிள்ளைகள் 18 வயதுகளை அடைந்ததும், அப்பணம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

பிள்ளைகள் மூவரும் வலு கெட்டிக்காரர்கள். அவர்களின் எதிர்காலம் சிறப்பாகவே அமையும். தாய், தகப்பன் இல்லாத குறைமட்டுமே அவர்களுக்கு உண்டு. உறவுகள் அனைத்தும் அப்பிள்ளைகளைத் தாங்கவே செய்வர். அத்துடன் நானும், அருட்சகோதரிகளும், கத்தோலிக்க திருச்சபையும் என்றுமே அவர்களுடன் இருப்போம். நோவா – யூஜினியா ஒன்பது வயது, நோவா எரோன் – எட்டு வயது, நோவா – இவேஞ்சலினா – நான்கு வயது ஆகிய மூவருக்கும் பாதுகாப்பாகவும், வழிநடாத்துனர்களாகவும் தொடர்ந்தும் செயற்படுவோம். அவர்கள் அனாதைகளல்லர்.

சமூக வலையத்தளங்கள், முகநூல், இணையத்தளங்கள், ஒரு சில ஊடகங்கள் இக்குடும்பத்தினர், பிள்ளைகள் மூவர் குறித்து உண்மைக்குப் புறம்பான விடயங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகையவர்களை நினைக்கும் போது, ஆத்திரம் மேலிடுகின்றது. இம் மூன்று பிள்ளைகளும் அனாதரவற்றவர்களல்லர். அவர்களின் பின்னணி ஆரோக்கியமான சூழலைக் கொண்டிருக்கின்றது. கத்தோலிக்க திருச்சபையே, பிள்ளைகள் மூவரது பாதுகாப்பு அரணாக இருந்து வருகின்றது. அத்துடன் அப்பிள்ளைகள் கல்வியில் வளர்ச்சியடைந்து பல்கலைக்கழகம் வரை சென்று, அவர்களின் வாழ்க்கையை ஒளிமயமானதாக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

நான் தற்போது யாழ்ப்பாணத்தில் கடமையாற்றுவதினால் அடிக்கடி லுணுகலைக்கு போக முடியாத நிலை இருந்த போதிலும், தேவையேற்படும் போதெல்லாம் லுணுகலை சென்று, அப்பிள்ளைகளைப் பார்த்து வருவேன்’ என்றார்.

எம். செல்வராஜா, பதுளை

அரிசி உற்பத்தியா? ட்டைல் உற்பத்தியா? ட்டைல் என்றால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல்!

ட்டைல் மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்து, அரிசியை இலங்கையில் உற்பத்தி செய்வதா அல்லது அரிசியை இறக்குமதி செய்து, ட்டைல் உற்பத்தியை இலங்கை செய்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் என்று ட்டைல் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ட்டைல் உற்பத்தியை அதிகரிப்பதால் அதன் உற்பத்தி செலவு பல மடங்காக இருக்கும் என்றும், இவற்றுக்கான மூலப் பொருட்களுக்காக வயல்களையே தோண்ட நேரிடம் என்றும் குறுித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், விவசாயத்தை கைவிட நேரிடும் என்பதுடன் சுற்றுச்சுழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், வயல் காணிகள் குறித்த சட்டமூலம் வலுவாக இருப்பதால், தேவையான மூலப் பொருட்களுக்காக அதிக பணத்தை செலவிட நேரிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ட்டைல் உற்பத்திகளின் போது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ட்டைல் எனப்படும் தரை ஓடுகள், ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் திருத்துவதற்கு அமைச்சரவை முடிவு செய்திருந்தாலும், இது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ட்டைல் மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்யும் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்திய போதிலும், ட்டைல் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் மீதான வரி ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பு சதுர அடிக்கான ட்டைல் 100 ரூபாவாக இருந்த வரி புதிய திருத்தப்பட்ட வரியின் கீழ் சதுர அடிக்கு 480 ரூபாவாக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

சிலர் உள்நாட்டில் உற்பத்தி செய்கிறார்கள், மற்றவர்கள் தொழில்துறையை விட்டு வெளியேறுகிறார்கள். உள்ளூர் ட்டைல் உற்பத்தி 40% – 45% தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். இதில் உற்பத்தி செலவில் சுமார் 50% வீதமானவற்றை மூலப்பொருட்கள் இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவில் ட்டைல் தயாரிப்பில் ஈடுபடும் நகரங்களைச் சேர்ந்த மக்கள், வாகனம் நீலமாக இருப்பதை வேறு பிரதேசங்களிலேயே காண்கின்றனர். அவ்வளவு சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

ட்டைல் மற்றும் ஆடம்பர பொருட்ள் இறக்குமதியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் மேலும் கூறுகையில்,

“இறக்குமதி செய்யப்பட்ட ட்டைல் மற்றும் பீங்கான் பொருட்களை உற்பத்தி செய்யும் போது நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் சுற்றுச்சூழல் மாசுபடுபவதாகும். அத்துடன், தயாரிப்புக்கள் சுடப்படும் போது மிகப் பெரிய வளிமாசடைதல் நடக்கிறது. தொடர்ந்து தொழிற்பாடு நடக்கிறது. ஒரு நாளைக்கு 24 மணிநேரமும், வருடத்திற்கு 365 நாட்களும். அதன் அளவை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை குறித்து யோசித்துப் பார்க்க வேண்டும். பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு சென்றுபார்த்தால் நாம் சொல்வது புரியும். சீனாவில் இவ்வாறான நகரங்களுக்குச் சென்றால் அங்கு நீல வானத்தைப் பார்க்க முடியாது. எனவே எங்களைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் என்ன நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

சுற்றுச்சூழல் அழிவு என்பது சுலபமானதல்ல!

அத்துடன் இந்த பொருட்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருளான களிமண் நெல் வயல்களில் இருந்தே வெட்டியெடுக்கப்பட வேண்டும். அல்லது தெற்கில் உள்ள அக்குரெஸ்ஸ போன்ற பிரதேசங்களில் உள்ள தேயிலை தோட்டங்களைத் தோண்ட வேண்டும். அங்கேயே இதற்கான மூலப் பொருட்கள் கிடைக்கின்றன. கைவிடப்பட்ட நெல் வயல்களைத் தோண்டினாலும் எவ்வளவு தான் தோண்டி எடுப்பது என்பதை சிந்திக்க வேண்டும். தேயிலை நிலங்களை இவ்வாறு தோண்டி எடுத்தால் அதன்பின்னர் அந்த நிலங்களுக்கு என்ன நடக்கும். இறக்குமதி கட்டுப்பாடுகள் மூலம் நன்மையை விட தீமையே அதிகமாக இருக்கிறது. இதன் உற்பத்திகளின் போது ஏராளமான தீமைகள் ஏற்படுகின்றன. இவை குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். ட்டைல்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி, அவற்றை இங்கு உற்பத்தி செய்து அரிசி இறக்குமதி செய்ய வேண்டுமா என்பதையும் சிந்திக்க வேண்டும். அத்துடன், அளவிடமுடியாத சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும்.

உற்பத்தி போதுமானதாக இல்லாவிட்டால், விலைகள் உயரும். இலங்கையின் பொருளாதார நலனுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். வழங்கப்பட்டுள்ள வாய்ப்பிற்குள் ட்டைல்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் அதிகபட்ச சலுகை விலையில் விற்பனை செய்யவே எதிர்பார்க்கிறோம். எனவே. இதற்கான நல்லதொரு தீர்வை எதிர்பார்பார்க்கிறோம்.” என்று குறித்த இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ட்டைல் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியை இலகுவானதல்ல!

இதற்கிடையில், நுகர்வோர் சார்பாகவும், நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்துறையில் ஈடுபடுவோரின் சார்பாக அரசாங்கத்தின் புதிய திருத்த கட்டுப்பாடுகளுக்கு சங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

பீங்கான் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடை அண்மைக்காலமாக தொழில்துறையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதியாளர்கள் மட்டுமல்லாமல் வர்த்தகர்களும், கட்டிடத் தொழிலாளர்களும் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு 12 பில்லியன் வரி வருமானம்!

பீங்கான் இறக்குமதியாளர்கள், சுமார் 300 உறுப்பினர்களைக் கொண்ட சங்கமாகும். ஆண்டுக்கு சுமார் 12 பில்லியன் ரூபா பணத்தை வரியாக அரசாங்கத்திற்கு செலுத்துகிறது. மற்றும் சுமார் 30 ஆண்டுகளுக்கு சுமார் 100,000 வேலை வாய்ப்புக்களை வழங்கி வருகிறது என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

தங்கள் தொழில் சுமார் 2,000 சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது என்றும் இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்டைல் மற்றும் ஆடம்பர பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம், தற்போதுள்ள கட்டுப்பாடுகளுக்குள் செயல்படுவது கடினம் என்று தெரிவித்துள்ளது.

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய ‘எவர் கிவன்’ கப்பல்: தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்

உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரும்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி சிக்கிக்கொண்டதால் அந்த வழியாக செல்லவேண்டிய பிற சரக்குக் கப்பல்கள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் (9.6 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்கின்றன கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள்.

இதன் பொருள் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்பதாகும்.

மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த சூயஸ் கால்வாய் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான சுருக்கமான கடல்வழி. இதற்கு மாற்று என்றால் ஆப்பிரிக்காவில் உள்ள நன்னம்பிக்கை முனை வழியாக சுற்றிக்கொண்டு செல்வதே ஆகும். இது மிகவும் நீளமான சுற்றுவழி.

ஒவ்வொரு நாளும் இந்த கால்வாய் வழியாக மேற்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்தின் மதிப்பு 510 கோடி அமெரிக்க டாலர் என்றும், கிழக்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்தின் மதிப்பு 450 கோடி அமெரிக்க டாலர் என்றும் கப்பல் போக்குவரத்து வல்லுநர் லாயிடு தருகிற தரவுகள் தெரிவிக்கின்றன.

கப்பலை மீட்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், இந்த வேலை முடிய வாரக்கணக்கில் ஆகும் என்று தெரிகிறது.

“திடீரென வீசிய பலத்த காற்றால் பாதை மாறிப்போன இந்தக் கப்பல் துரதிர்ஷ்டவசமாகத் தரை தட்டியது என்று சந்தேகிக்கப்படுவதாக” எவர்க்ரீன் மரைன் நிறுவனம் கூறுகிறது.

எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பலால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் – என்ன நடக்கிறது?
பெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது? #MYTHBUSTER
‘எவர் கிவன்’ என்ற இந்தக் கப்பலை தைவான் நாட்டைச் சேர்ந்த எவர் கிரீன் மெரைன் என்ற நிறுவனம் இயக்கிவருகிறது.

இதன் நான்கு கால்பந்து திடல் அளவு நீளம் கொண்ட இந்த கப்பல் உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று. 2 லட்சம் டன் எடை கொண்ட இந்த கப்பல் 20 ஆயிரம் கண்டெயினர்களை கொண்டு செல்லவல்லது.

இந்த கப்பல் குறுக்காகத் திரும்பி தரைதட்டிக்கொண்டதால் அந்த வழியாகச் செல்லவேண்டிய பிற கப்பல்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தரைதட்டிய கப்பலை மீட்கும் பணி
பட மூலாதாரம்,SUEZ CANAL AUTHORITY
படக்குறிப்பு,
தரைதட்டிய கப்பலை மீட்கும் பணி

உலக வணிகத்தின் அளவு அதிகரித்துவிட்டதால், கடந்த பத்தாண்டில் கண்டெயினர் கப்பல்களின் அளவு கிட்டத்தட்ட இருமடங்காகப் பெருத்துவிட்டது. இதனால், அவை சிக்கிக்கொண்டால் அவற்றை மீட்டெடுப்பது மிகவும் கடினமான செயலாக மாறிவிட்டது.

உலக வர்த்தகத்தில் 12 சதவீதம் இந்த வழியாகவே நடக்கிறது.

பெட்ரோலியம் தரவி, துணி, அறைகலன்கள், கார்கள், ஆலைத் தயாரிப்புகள் போன்ற நுகர்பொருள்கள் இந்த கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன.

லாயிடு தரும் தரவுகளின்படி கால்வாயின் இரு புறமும் 160 கப்பல்கள் தற்பது காத்துக்கொண்டிருக்கின்றன. இவற்றில் 41 பெரிய சரக்குக் கப்பல்கள், 24 கச்சா எண்ணெய் கப்பல்கள்.

ஒவ்வொரு நாள் தாதமத்தையும் சரி செய்ய இரண்டு நாள்கள் தேவைப்படும் என்கிறார் ஓ.எல். யுஎஸ்ஏ என்ற போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் ஆலன் பேயர்.

தரைதட்டியிருக்கும் கப்பலில் பல்லாயிரக்கணக்கான நுகர்பொருள் கண்டெயினர்களோடு ஏற்றுமதிக்குத் தேவையான காலி கண்டெய்னர்களும் உள்ளன.

அவசர காலத் திட்டம்
தரைதட்டிய கப்பலால் ஏற்படும் தாமதம் சில நாள்களாக இருந்தால், பெரும்பாலான நிறுவனங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், மீட்புப் பணி சில வாரங்கள் வரையில்கூட ஆகலாம் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இதனால், ஏற்கெனவே கோவிட் 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலக விநியோக வலைப்பின்னல் இன்னுமொரு பேரிடியை சந்திக்கிறது.

கப்பலில் கண்டெயினர்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
மீட்புப் பணிக்கு எத்தனை நாள்கள் ஆகும் என்று சொல்ல முடியாத நிலை நீடிக்குமானால், கப்பல்கள் ஆப்பிரிக்காவிந் நன்னம்பிக்கை முனையை சுற்றிக்கொண்டு போகவேண்டும். இதற்கு 7 முதல் 9 நாள்கள் கூடுதலாகத் தேவைப்படும் என்று தெரிவிக்கிறார் பேயர்.

சில நிறுவனங்கள் அதிக விலையுள்ள சரக்குகளை விமானத்திலோ, ரயிலிலோ அனுப்ப நினைக்கலாம்.

ஆனால், சரக்குகள் ஏற்கெனவே கப்பலில் ஏற்றப்பட்டுவிட்டால், கப்பல் போக்குவரத்து நிறுவனமோ, கொள்முதல் செய்தவர்களோ, இந்த சரக்குகள் வந்து சேரும் நேரத்தை மாற்றியமைக்க எதுவும் செய்ய முடியாது என்கிறார் அவர்.

மேயர்ஸ்க், ஹபக்-லாயிடு என்ற இரண்டு பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் சூயஸ் கால்வாய் வழியை தவிர்ப்பது குறித்து ஆலோசித்துவருவதாக கூறியுள்ளன.

பிரும்மாண்ட மண்வாரி இயந்திரங்கள், தூர்வாரி இயந்திரங்கள், இழுவைப் படகுகள் ஆகியவற்றின் துணையோடு தரைதட்டிய கப்பலை மீட்க தம்மாலான அனைத்தையும் செய்துவருவதாக எகிப்தின் சூயஸ் கால்வாய் ஆணையம் கூறுகிறது.

“காதலர்களின் படத்தை தோட்டம் முழுவதும் ஒட்டிய பிரதேச சபை உறுப்பினர்” – மக்கள் கடும் எதிர்ப்பு

வலப்பனை பிரதேச சபையின் உறுப்பினர் தமிழ்மாறன் ஜனார்த்தனை, உடனடியாகக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தி, இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் சில்வர்கண்டி தோட்ட மக்கள், இன்று (26.03.2021) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சில்வர்கண்டி தோட்ட கோவிலின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவருக்கும் மேற்படிப் பிரதேச சபை உறுப்பினருக்கும் இடையில் நீண்டகால பகையுள்ளது.

இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினர் பழிவாங்கும் நோக்கில், நிர்வாக சபை உறுப்பினரது மகள், அவரது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை பதாகைகளாக தோட்டம் முழுவதும் ஒட்டியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பிரதேச மக்கள், குறித்த நபரை பொலிஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த உறுப்பினர் இளம் பெண்களை அச்சுறுத்தும் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறித்த நபரை அவரது கட்சியிலிருந்தும் விளக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இவருடைய செயற்பாடு குறித்த ஆதாரங்களை தம்வசம் வைத்துள்ள பொதுமக்கள், கடந்த மூன்று நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் மேற்படி பிரதேச சபை உறுப்பினருக்கு, குறித்த பெண்ணின் புகைப்படங்களை வழங்கியதாகக் கூறப்படும் பெண்ணின் காதலனை, இராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (26.03.2021) மாலைக்கு முன்னர், பிரதேசசபை உறுப்பினரை கைது செய்யாவிடின் பாரிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

க.கிசாந்தன்

2024 ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுவேன் – ஜோ பைடன்

” நான் மீண்டும் வெற்றிபெற்று அமெரிக்க ஜனாதிபதியேவேன்” – என்ற நம்பிக்கை உள்ளது என ஜோ பைடன் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவி ஏற்றபின் முதன் முறையாக வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

” நான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு மக்களுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதே எனது இலக்கு. எனது எதிர்பார்ப்பும் அதுதான்.

நான் மீண்டும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கமலா ஹாரிஸ் 2-வது முறையாக அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்றும் முழுமையாக எதிர்பார்க்கிறேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

அரச கூட்டணிக்குள் வெட்டு, குத்து தொடர்கிறது – சுதந்திரக்கட்சி கவலை

அரச கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பாராபட்சம் தொடர்கின்றது. அது இன்னும் குறையவே இல்லை என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார்.

” இது நாம் உருவாக்கிய அரசு. அதனுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். தேர்தலிலும் கூட்டணியாகவே பயணிக்க உத்தேசித்துள்ளோம். எனினும், கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டால் தொடர்ந்தும் மௌனம் காக்கமுடியாது. ” எனவும் அவர் கூறினார்.

பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – சாரதி பலி!

பதுளை, லெஜார்வத்தை புதுமலை தோட்டப் பகுதியில் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலியாகியுள்ளார்.

நேற்று பிற்பகல் (24/03) வெட்டுமரக்கட்டைகளை ஏற்றிச் சென்றபோதே பள்ளத்தில் குடைசாய்ந்து லொறி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில்,...

மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17 .05.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் புதுப்பொலிவுடன் திறப்பு!

0
இலங்கையிலுள்ள மிகப்பழமையான அஞ்சல் நிலையங்களில் ஒன்றான, 150 வருட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பொகவந்தலாவை அஞ்சல் அலுவலகம் நவீனமயமாக்கப்பட்டு இன்று (16) சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள பழமையான மற்றும் பாரம்பரியமிக்க...