Home Blog Page 3611

இம்ரான் கானுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து – கவலையில் ஹக்கீம், ரிஷாட்!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் மாத்திரமே சந்திப்புகளை நடத்தவுள்ளார். ஹக்கீம், ரிஷாட் ஆகியோருடனான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை அண்மையில் சந்தித்து, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் கலந்துரையாடியிருந்தார். இதன்போது பாகிஸ்தான் பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கோரியிருந்தனர். இதன்படி குறுகிய நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த சந்திப்பு நடைபெறாது என பாகிஸ்தான் தூதுவரால், மேற்படி இரு தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சந்திப்பு இரத்துக்கான காரணம் வெளியாகாதபோதிலும், அரச உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழுத்தத்தால் அவ்வாறு நடந்திருக்ககூடும் என நம்பப்படுகின்றது.

‘கூட்டணிக்கு புத்துயிர் கொடுக்கவும்’ – அரச பிரதானிகளிடம் பங்காளிகள் கோரிக்கை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்கு புத்துயிர் கொடுத்து அதனை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதற்கு ஆளுங் கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் கூட்டணி கட்டியெழுப்பட்டு, ஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியில் அங்கம் வகிக்கும் 10 இற்கு மேற்பட்ட பங்காளிக்கட்சிகள், அண்மைக்காலமாக தொடர் சந்திப்புகளை நடத்திவருகின்றன. முதல் இரு சந்திப்புகளும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் வதிவிடத்தில் நடைபெற்றது. மூன்றாவது சந்திப்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போதே ‘ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை’ கட்டியெழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுங்கட்சியின் பிரதானிகளிடம் முன்வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் ‘ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு’ எனும் பெயரில் கூட்டணி உருவாக்கப்பட்டது. எனினும், தேர்தலின் பின்னர் கூட்டணியின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

இந்நிலையில் மொட்டு கட்சியை (ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை) மட்டும் பலப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலேயே, தனிவழி செல்லாவது, கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைப்பதற்கு பங்காளிகள் தீர்மானித்துள்ளன.

இதன்படி ஜனாதிபதி, பிரதமர் உட்பட மொட்டு கட்சியின் பிரமுகர்களை விரைவில் சந்தித்து இக்கோரிக்கையை முன்வைப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆளுங் கூட்டணிக்குள் அண்மைக்காலமாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டனை சேர்ந்த ஒருவர் உட்பட கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.

ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, இன்று மாத்திரம் 518  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று 35,912 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டது!

இலங்கையில் கடந்த 29 ஆம் திகதி முதல் இன்றுவரை மூன்று லட்சத்து 38 ஆயிரத்து 769 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவால் இலங்கைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. முதற்கட்டமாக கொரோனா ஒழிப்பு சமரில் முன்கள பணியாளர்களாக செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு கொவிட் – 19 தடுப்பூசி கடந்த 29 ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டது.

29 ஆம் திகதி 5 ஆயிரத்து 286 பேருக்கும் , 30 ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31 ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2 ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3 ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்துடன், 4 ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5 ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும், 6 ஆம் திகதி 3,838 பேருக்கும்,7 ஆம் திகதி 1,625 பேருக்கும், 8 ஆம் திகதி 5,989 பேருக்கும், 9 ஆம் திகதி 6,431 பேருக்கும், 10 ஆம் திகதி 2,532 பேருக்கும்,11 ஆம் திகதி 1,362 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

12 ஆம் திகதி ஆயிரத்து 110 பேருக்கும்,  13 ஆம் திகதி 7,457 பேருக்கும், 14 ஆம் திகதி 2,695 பெருக்கும், 15 ஆம் திகதி 3,589 பேருக்கும், 16 ஆம் திகதி 3,225 பேருக்கும், 17 ஆம் திகதி 14,242 பேருக்கும், 18 ஆம் திகதி 23,067 பேருக்கும், 19 ஆம் திகதி 30,307 பேருக்கும், 20 ஆம் திகதி 39,078 பேருக்கும், இன்று 35,912 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அனைத்து கத்தோலிக்க எம்.பிக்களுக்கும் பேராயர் அவசர அழைப்பு!

அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க எம்.பி.க்களை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மார்ச் முதல் வாரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பிலேயே இதன்போது முக்கியமாக ஆராயப்படவுள்ளது.

மார்ச் 2 ஆம் திகதி இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கின்றது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கத்தோலிக்க எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

21/4 தாக்குதல் தொடர்பில் நீதி கிடைக்காவிட்டால் தான் சர்வதேசத்தை நாடுவேன் என்று பேராயர் நேற்று அறிவித்திருந்தார். அத்துடன், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவையும் அவர் நிராகரித்தார்.

ஜெனிவா சமர் நாளை ஆரம்பம்! ஐவரடங்கிய குழுவை அமைத்தது இலங்கை!!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை (22) ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சரின் உரை நாளை மறுதினம் 23 இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே குறித்த மாநாடு நடைபெறவுள்ளது.

இலங்கை உட்பட 9 நாடுகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் ஏற்கனவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், 22 ஆம் திகதி ஆரம்ப உரையின்போதும் சில நினைவூட்டல்களை அவர் செய்வார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள அறிக்கையை ஏற்கனவே நிராகரித்துள்ள இலங்கை, 23 ஆம் திகதி அதற்கான விளக்கத்தையும், குற்றச்சாட்டுகளுக்கான பதில்களையும் வழங்கவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு உரையாற்றுவதற்கு 20 நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதால் உறுப்பு நாடுகளுக்கு, குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கான சான்றுகளை இலங்கை அறிக்கைமூலம் கையளிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இங்கிலாந்து, ஜேர்மன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கைமீது புதியதொரு தீர்மானத்தை இம்முறை கொண்டுவரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு சீனா, ரஷ்யா உட்பட மேலும் சில நாடுகள் எதிர்ப்பை வெளியிடக்கூடும் என இலங்கை தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதேவேளை,  மார்ச் 19 ஆம் திகதிவரை மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதால் இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், நிமல்சிறிபாலடி சில்வா, உதயகம்மன்பில, சரத்வீரசேகர மற்றும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கொழும்பில் இருந்தவாறே இக்குழு ஜெனிவா விவகாரத்தைக் கையாளும். இதற்காக வெளிவிவகார அமைச்சில் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினேஷின் உரைகூட ஒன்லைன்மூலமே இடம்பெறவுள்ளது.

சிறுபான்மை மக்களின் சார்பாக உப ஜனாதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் – ம.ம.மு. யோசனை முன்வைப்பு

இலங்கையின் புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகளை மலையக மக்கள் முன்னணி இன்று (21.02.2021) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியல் நிபுணர் குழுவிடம் கையளித்துள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன், முன்னணியின் பிரதித் தலைவர் ஏ.லோரன்ஸ், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா, உப தலைவர் சிவலிங்கம் சதீஸ்குமார், மலையக மகளிர் முன்னணியின் பிரதித் தலைவி திருமதி சுவர்ணலதா இளங்கேஸ்வரன், பிரதிச் செயலாளர் திருமதி.கிருஸ்ணவேனி விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த முன்மொழிவுகளில் பின்வரும் முக்கிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் பிரதான நான்கு தேசிய இனங்களாக சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் அங்கீகரிக்கப்படுவதோடு பரங்கியர், ஆதிவாசிகள், மலாயர் ஏனைய சிறு சமூகங்களும் இலங்கையின் மக்கள் என குறிப்பிடப்பட வேண்டும்.

கல்வி தொழில்வாய்ப்பு சுகாதாரம் வாழ்வாதாரம் உயிர்வாழ்வதற்கான உத்தரவாதம் என்பது அடிப்படை உரிமைகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இனங்களினது குறிப்பாக சிறுபான்மை இனங்களினது அடையாளங்களை பாதுகாத்தல் அவர்களுடைய கலாச்சார சமய மரபுகளை பாதுகாத்தல் அவர்களுடைய வரலாற்று சான்றுகளை பாதுகாத்தல் அவர்களுடைய இன அடையாளங்களுக்குறிய மற்றும் தொல் பொருள் சான்றுகளை பாதுகாத்தல் என்பன குழு உரிமைகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடரப்பட வேண்டும். அதே நேரம் இலங்கையில் சிறுபான்மை இனத்தை சார்ந்த ஒருவர் ஒருநாளும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட முடியாது. எனவே இலங்கையின் சிறுபான்மை இனங்களான வடகிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்களுக்கு அவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் மூவினங்களுக்கான உப ஜனாதிபதிகள் மூவர் பாராளுமன்றத்தில் சிறுபான்மையினர் மத்தியிலிருந்து தெரிவுசெய்யப்பட வேண்டும்.

இரண்டாவது மக்கள் பிரதிநிதித்துவ முறையாக செனட் சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு உப ஜனாதிபதி செனட்சபையை தலைமை தாங்கும் பொறுப்பும், சில அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்.

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் தேசிய பட்டியல் உறுப்பினர்களில் 25 வீதத்தினராவது மூன்று சிறுபான்மை இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாக இருக்க வேண்டும்.

தற்போதைய தேர்தல் முறைமை பற்றிய குறைபாடுகளும்; இது சிறுபான்மை மக்களை பாதுகாக்க முடியாத நிலைபற்றியும் பலரும் சுட்டிகாட்டி இருப்பதால் சிறுபான்மை இனங்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்பவும் அவர்கள் பிராந்திய அடிப்படையில் செறிவாகவும், சில பகுதிகளில் பரவளாகவும் வாழ்வதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேரிய ரீதியானதும், பிராந்திய அடிப்படையிலும், பாராளுமன்ற மாகாண உள்ளுராட்சி அடிப்படையிலான அரசியல் பிரதிநிதித்துவத்தை அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சிங்களமும் தமிழும் தேசிய உத்தியோகபூர்வ நிர்வாக மற்றும் நீதித்துறை மொழிகளாக இருக்க வேண்டும்.விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் மொழிகளும் இதற்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

இலங்கையில் முழுiமாயன ஒரு அதிகார பகிர்வு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.இச் செயல் முறைக்கு முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர்களுக்கான விசேட தன்னாதிக்க அலகுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.அத்தோடு இத்தன்னாதிக்க அலகிற்கு வெளியில் வாழுகின்ற மலையக முஸ்லிம் மக்களுடைய கலாசாரம் அபிவிருத்தி பொருளாதார மேம்பாடு Nபுhன்றவற்றை உறுதிப்படுத்த கூடிய நிர்வகிக்கக்கூடிய நிலத் தொடர்பற்ற அபிவிருத்தி சபைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மலையக தமிழர்கள் வாழ்கின்ற பெருந்தோட்ட பிரதேசங்கள் பொது நிர்வாக கட்டமைப்பிற்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டு அக்குடியிருப்புகள் கிராமங்களாக அங்கீகரிக்கப்பட்டு நாட்டின் கிராமிய முறைமைக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

இலங்கை அரசியலில் மலையக தமிழர்கள் 50 வருடங்களுக்கு மேலாக புறக்கனிக்கப்பட்டிருந்தமை கவனத்தில் கொண்டு அவர்களை தேசிய அபிவிருத்தி நீரோட்டத்தில் ஒன்றினைக்கும் வகையில் விசேட ஏற்பாடுகள் புதிய அரசியல் சீர்திருத்தத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.பெருந்தோட்ட மக்களுக்கு பாதிப்பாகவுள்ள சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.உட்பட இன்னும் பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையகத்திற்கான ரயில் சேவையில் தாமதம்

– க.கிஷாந்தன்

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் இன்று மதியம் 1.40 மணியளவில் இங்குருஓயா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த ரயிலின் காட்சிகாண் கூட பெட்டி தண்டவாளங்களை விட்டு விலகியதால் இந்த மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளது.

தற்போது ரயில்வே திணைக்கள அதிகாரிகளினால் ரயில் பெட்டியை தண்டவாளங்களில் நிறுத்தி ரயில் வீதியினை சீர்செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் தடையினை நிவர்த்தி செய்வதற்காக நாவலப்பிட்டியிலிருந்து பாரதூக்கி ரயில் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பெட்டியினை மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்படும் எனவும், அதன்பின் மலையக ரயில் சேவைகளுக்கான தடை நீங்கும் எனவும் அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

1000 ரூபா இழுத்தடிக்கப்படுவது ஏன்? சூழ்ச்சி திட்டத்தை அம்பலப்படுத்தினார் கணேசலிங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் பல்தேசிய கம்பனிகளின் தலையீடு இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (21.02.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
 
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதான தொழிற்சங்கங்கள் அறிவித்தன.அவ்வாறு பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கமும் உறுதியளித்தது. இறுதியில் அடிப்படை நாட் சம்பளமாக 900 ரூபாவை வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு இன்னும் கிடைக்கவில்லை. 
 
அதேபோல சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் தீர்மானிக்கப்பட்டால், கூட்டு ஒப்பந்தம் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறும் சலுகைகள் இல்லாமல்போகும் நிலையும் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே,  கூட்டு ஒப்பந்தமா, சம்பள நிர்ணய சபையா என்பதில் தற்போது தொழிலாளர்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகளை வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்குவதற்கான திட்டம் உள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சமூகவலைத்தளங்களிலும் பல தகவல்கள் கசிந்துள்ளன. 
 
குறிப்பாக இந்தியாவின் அதான நிறுவனத்துக்கு பெருந்தோட்டங்கள் வழங்கப்படலாம் எனவும், இதற்கு களம் அமைத்துக்கொடுப்பதற்காகவே சம்பள விடயத்தில் திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்பு இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.
 
இந்நிலையில் மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகளை கொழும்பிலுள்ள இந்திய தூதுவர் தனித்தனியே சந்தித்து வருகின்றார். அதானி நிறுவனத்துக்கு ஆதரவு வழங்குமாறு இதன்போது கோரப்பட்டிருக்கலாம். ஏனெனில் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்களை எந்தவொரு அரசியல்வாதியும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
 
மறுபுறத்தில் சீன நிறுவனங்களும் இலங்கையிலுள்ள வளங்களைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. தற்போதுள்ள கம்பனிகளை விரட்டியடித்து, வெளிநாட்டு கம்பனிகளுக்கு பெருந்தோட்டங்களை வழங்குவதற்காக வியூகத்தை அமைக்கவா சம்பளம் இழுத்தடிக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.” – என்றார்.
க.கிசாந்தன்

காடாக காட்சியளிக்கும் தனி வீட்டுத் திட்டம் – மக்கள் போராட்டம்!

தமக்கான வீட்டுத் திட்டத்தை விரைவில் முழுமைப்படுத்தி தருமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள பயனாளிகள் இன்று (21.02.2020) கனவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலயம் முன்னெடுத்தனர்.

அரசியல் என்பது மக்களுக்கானது, எனவே, எந்த தரப்பு ஆட்சிக்கு வந்தாலும் கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்த பழனி திகாம்பரம் தலைமையில் 2018 ஒக்டோபர் 7 ஆம் திகதி  பிரவுன்ஸ்வீக், குயின்ஸ்லேன்ட் பிரிவில் 40 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன்பின்னர் நிர்மாணப்பணிகளும் பகுதியளவு ஆரம்பமாகின. 9 வீடுகளுக்கு பகுதியளவு சுவர்களும் ஏற்றப்பட்டன. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஒப்பந்தக்காரர்களால் வீட்டுத் திட்டம் அவ்வாறே கைவிடப்பட்டது. இது தொடர்பில் பயனாளிகள் ‘ட்ரஸ்ட்’ நிறுவனத்திடம் பல தடவைகள் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.

தற்போது வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட பகுதி காடாகி வருகின்றது.  இந்நிலையிலேயே வீட்டுத்திட்டத்தை முன்னெடுத்து முழுமைப்படுத்துமாறு கோரி பயனாளிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

க.கிசாந்தன்

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை கம்பனிகளின் பிடியிலிருந்து மீட்பதே தீர்வின் ஆரம்பம்!

0
" தோட்ட குடியிருப்பு பிரதேசங்களின் உரிமை தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதை தோட்ட நிர்வாகங்களில் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விடுவிக்க வேண்டும் அவ்வாறு நடந்தால் மட்டுமே தோட்ட குடியிருப்பாளரின் காணி...

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...