Home Blog Page 3610

நானுஓயாவில் பஸ் விபத்து – 13 பேருக்கு காயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதல்ல குறுக்குவீதியில் ஈஸ்டல் தோட்டத்துக்கு அருகாமையில் பஸ்ஸொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

பிபிளையிலிருந்துமரண வீடொன்றிற்கு தலவாக்கலை நோக்கி பயணித்த சிறிய ரக பஸ்சொன்றே இவ்வாறு  கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பவுசர் ஒன்றுடன் மோதி பாதையில் தடம் புரண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரனைகளை நானுஓயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ளனர் எனவும், அதில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.கிசாந்தன்

பெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ விற்பனை செய்யப்படாது – இ.தொ.கா. உறுதி

பெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது என்று இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 தனி வீடுகளை கட்டி அமைக்க (22.02.2021) இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் கடந்த காலங்களில் உரியவகையில் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது திட்டங்கள் உரியவகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு வீட்டுக்கு தலா 13 லட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, ஓல்டன் தோட்ட மக்களுக்கும், முகாமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்கும், சம்பள பிரச்சினைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. சம்பள நிர்ணயச் சபையின் அடுத்தக்கூட்டத்தின்போது ஆயிரம் ரூபா தொடர்பான சாதகமான முடிவு எட்டப்படும் என நம்புகின்றோம்.

ஏதோவொரு உள்நோக்கத்தின் அடிப்படையில்தான் கம்பனிகளின் பிரதிநிதிகள் கடந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அடுத்தமுறை அவ்வாறு நடைபெறாது.

நாம் இந்திய தூதுவரை வழமையாக சந்தித்து கலந்துரையாடுவோம். இந்தியாவால் மலையகத்துக்கு 14 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டன. அந்நாட்டின் உதவியுடன் உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. பாடசாலைகள் மேம்படுத்தப்பட்டன. தற்போது கொரோனா தடுப்பூசிகூட வழங்கப்பட்டுள்ளது. இவற்றை இந்தியா செய்யும்போது நல்லம், அது பற்றி எவரும் கதைப்பதில்லை. ஆனால் தோட்டங்களை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதில் மாத்திரம் குறை காண்கின்றனர்.

பெருந்தோட்டங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கும் எண்ணம் இல்லை. சீனாவுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் கூறுகின்றனர். அவ்வாறும் நடைபெறாது. தற்போதைய கம்பனிகளுக்கு தோட்டங்களை நிர்வகிக்கமுடியாதென்றால், அவற்றை எமது மக்களுக்கே பகிர்ந்தளித்து, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பதே காங்கிஸின் நிலைப்பாடாகும்.

இலங்கையின் உள்விவகாரங்களை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்வது சரியில்லை. பிரச்சினைகளை இங்கு பேசி தீர்க்க வேண்டும். ஜெனிவா மாநாடு என்பதெல்லாம் வீண் பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா தடுப்பூசி’ – பெருந்தோட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்!

கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதில் மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

“கொவிட்- 19 ஆரம்பித்த காலம் தொடக்கம் முழு நாடும் முடங்கிய போதும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது வழமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாட்டின் பொருளாதார துறைக்கும் பேருதவியாக இருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டப் பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோணா தொற்றாளர்கள்அதிகரித்து வருகின்றனர்.

இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட தொழிலாளர்களும் எனையவர்களும் பாதிப்படைந்துள்ளனர். எனவே இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு நுவரெலியா மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளிலும் ஏனைய மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதில் சுகாதார அமைச்சு முன்னுரிமை வழங்க வேண்டும்.” – என்றார்.

புதுச்சேரியில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு – பதவி துறந்தார் முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் தொடங்கியது.

இக்கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றும், ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாகவும் கூறினார். முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்ததாகவும் கூறினார்.

அவரது உரையைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி சட்டசபையை விட்டு வெளியேறினார்.

புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் பகல்-இரவு டெஸ்டில் மோதவுள்ள இந்தியா – இங்கிலாந்து அணிகள்

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (புதன்கிழமை) ஆரம்பமாகின்றது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் பகல்-இரவாக (மின்னொளியின் கீழ்) இந்த டெஸ்ட் நடத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக மிளிரும் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) பயன்படுத்தப்படுகிறது.

ரசிகர்களை ஈர்க்கவும், போட்டியில் விறுவிறுப்பு, சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் நோக்கிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 15 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் அரங்கேறியுள்ளன. எல்லா போட்டியிலும் முடிவு கிடைத்திருப்பது சாதனைக்குரிய அம்சமாகும். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 8 பகல்-இரவு டெஸ்டில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காத அணியாக வலம் வருகிறது.

இந்திய அணி நீண்டகாலமாக பகல்-இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டியது. சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் சபை தலைவர் பதவிக்கு வந்ததும், தலைவர் விராட் கோஹ்லியிடம் பேசி சம்மதிக்க வைத்தார். இதன்படி இந்தியா, பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தா ஈடன்கார்டனில் வங்காளதேசத்துக்கு எதிராக மோதியது.

3 நாட்களுக்குள் நிறைவடைந்த இந்த டெஸ்டில் இ்ந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிங்க் பந்து டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை விராட் கோஹ்லி (136 ரன்) பெற்றார்.

இந்தியாவின் 2-வது பகல்-இரவு டெஸ்டை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. கடந்த டிசம்பர் மாதம் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்டில் இ்ந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதுவும் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 21.2 ஓவர்களில் வெறும் 36 ரன்னில் சுருண்டு டெஸ்டில் மோசமான ஸ்கோரை பெற்றது. ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்கை தொடாத மோசமான நாளாக அமைந்தது.

இங்கிலாந்து எப்படி?

இங்கிலாந்து அணி இதுவரை 3 பகல்-இரவு டெஸ்டில் ஆடியுள்ளது. அவற்றில் ஒன்றில் வெற்றியும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக) தழுவியுள்ளது.

பிங்க் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்களே வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். பகல்-இரவு டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் 354 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் 115 விக்கெட்டும் அறுவடை செய்துள்ளனர். 21 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாகிஸ்தானின் அசார் அலி (302 ரன்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (335 ரன்) முச்சதம் விளாசியுள்ளனர்.

1 லட்சத்து 10 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட பிரமாண்டமான ஆமதாபாத் சர்தார் பட்டேல் ஸ்டேடியம் புதிதாக கட்டப்பட்டது ஆகும். இதனால் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை இன்னும் முழுமையாக வீரர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆடுகளத்தில் வேகப்பந்துக்கு சாதகமான சூழல் காணப்பட்டால் தங்களது கை ஓங்கும் என்று இப்போதே இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி கூறியுள்ளார்.

இருப்பினும் உள்ளூர் சீதோஷ்ண நிலையில் இந்திய வீரர்கள் சாதிப்பார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

65 கள்ளு போத்தல்களுடன் கம்பளையில் ஒருவர் கைது!

கம்பளை, மில்லகாமுல பகுதியில் சட்டவிரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரொருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து 65 கள்ளு போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மில்லகாமுல பகுதியில் வசிக்கும் 41 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், இவர் சட்டவிரோதமான முறையில் கள்ளு தயாரித்து விற்பனை செய்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் கோணவல தலைமையிலேயே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸ் உத்தியோகத்தர்களான சரத் (45154), கருணாதிலக்க (46850), தர்மரத்தின (15780), அரிச்சந்திர (52147) மிஸ்க்கின் (65885), சுதாகரன் (80562) ஆகியோரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பங்கேற்றனர்.

கம்பளை நிருபர் – லாவண்யா

இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரருக்கும் கொரோனா தொற்று

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்று இலங்கை கிரிக்கட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே குறித்த வீரருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த வீரருடன் தொடர்பை பேணிய நபர்களை கண்டறியும் நடவடிக்கையில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை அணியின் ஏனைய வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத காரணத்தினால் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் எவ்வித பாதிப்பும் இல்லையென ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணம் நிறைவடைந்தவுடன் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான லஹிரு குமாரவுக்கு பதிலாக சுரங்க லக்மால் அணிக்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கம்பளையில் 23 பேருக்கும், புஸல்லாவையில் ஐவருக்கும் கொரோனா!

கண்டி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 85 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், கடுகன்னாவ சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், கண்டி சுசுகாதார மருத்துவ அதிகாரி 44 பேருக்கும், நாவலப்பிட்டியவில் ஆறு பேருக்கும், புஸல்லாவை சுகாதார மருத்துவ அதிகாரி ஐவருக்கும், பூசாபிட்டியவில் இருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் கடந்துள்ள 21 நாட்களில் 1,519 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

மனைவியை கொடூரமாக கொலைசெய்த கணவனுக்கு விளக்கமறியல்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 91 ஆம் கட்டை பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலைசெய்த கணவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கந்தளாய் நீதிமன்ற நீதவான் திஷானி தேனபது முன்னிலையில் நேற்றைய தினம் (21) குறித்த கணவரை ஆஜர்படுத்திய போது இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர் கந்தளாய் என்ற பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கடமையாற்றி வரும் தொலஸ்வாகே கெதர சமிந்த ஜயலத் (49வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது கந்தளாய் வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் உக்குபண்டா அப்புஹாமிலாகே சிறானி புஷ்பலதா (44வயது) என்பவர் தனது கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கணவர் மோட்டார் சைக்கிளில் அவர் வருகை தந்து கொண்டிருந்த போது அவரை நிறுத்தி பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

இதேநேரம் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு நிலையில் அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த கூரிய ஆயுதத்தினால் தனது மனைவியை தாக்கியதாகவும் இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதி நீதிமன்றத்தினால் கிடைக்கப் பெற்றவுடன் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

28 ஆம் திகதி வெளியாகிறது மலையக குறும்படம் “ஓடை”

மலையக, தமிழ் மக்களின் சமூக வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஓடை திரைப்படம் இம்மாதம் 28 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
மலையக குறும்பட இயக்குனர்  சகாதேவன் தயாளன் இயக்கத்தில்  கந்தையா துஷாந்தன், ஆனந்தகுமாரி நடிப்பில் திருநாவுக்கரசர் இசையில் இக்குறும்படம் வெளிவர தயாராக உள்ளது.
இக்குறும்படத்தின் முதல் காட்சி 28/02/2021 காலை 10 மணிக்கு கொட்டக்கலை Green Hill Retreat Centre ல் இடம்பெறவுள்ளது.
இப்படம் தொடர்பில் இயக்குனர் தயாளன் குறிப்பிடுகின்ற போது,  இத் திரைப்படத்தின் கரு பொருள் அனைத்து சமூகத்திற்கும் பொருந்த கூடியதே, ஐந்து மாத கால தேடலின் விளைவாக உருவான ஓர் உண்மை கதையின் தழுவல்
ஓடை யாக உருவெடுத்துள்ளது.
ஊற்று நீர் தூய்மையானதே  ஆனால் அது ஓடையாக மாறி மனிதர்கள் மத்தியில் புரண்டோடும் போது அசுத்தமாகிறது  நிறம் மாறுகிறது. தன்நிலை மாறுகிறது.
தேங்கிய நீர் அசுத்தமாகும்….ஓட ஓட நீர் தூய்மையாகும். இது விஞ்ஞானம்.
வாழ்க்கையும் ஓடையாக தான்கரு வளர்ந்து குழந்தையாகி குழந்தை பிள்ளையாகி பிள்ளை இளமையாக பாலுருப்பால் பிரிக்கப்பட்டு மண்டைக்குள் பலதையும் திணித்து வளர்ந்து வருகின்றான்.
இந்த ஓடை திரைப்படம் சமூகத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைக்கதையின் தொகுப்பு.நிச்சயம் இத்திரைப்படம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமென கூறினார்.
தகவல் – நீலமேகம் பிரசாந்த்

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

லக்னோவிடம் வீழ்ந்தது சிஎஸ்கே!

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 59 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற...

தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை கம்பனிகளின் பிடியிலிருந்து மீட்பதே தீர்வின் ஆரம்பம்!

0
" தோட்ட குடியிருப்பு பிரதேசங்களின் உரிமை தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதை தோட்ட நிர்வாகங்களில் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விடுவிக்க வேண்டும் அவ்வாறு நடந்தால் மட்டுமே தோட்ட குடியிருப்பாளரின் காணி...

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...