Home Blog Page 3620

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த 20 வயது இலங்கை இளைஞனுக்கு நடந்த சோகம் : சுயதனிமையின் கொடுமை?

சிங்கப்பூரில் ஓட்டல் அறையொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் விக்டோரியா வீதியில் உள்ள பிரபல விடுதியொன்றின் 13ஆவது மாடியில் அறையொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் பொலிசார் தெரவித்துள்ளனர்.

சிங்கப்பூர் Management University இல் உயர் கல்வியை பயின்றுவந்த Nishad Manilka De Fonseka என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று 16ஆம் திகதி பதிவாகியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி குறித்த மாணவன் தங்கியிருந்த அறையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, குறித்த ஓட்டலில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பு : மன இறுக்கத்தில் உறவுகள் இருக்கும் போது அவர்களுடன் தொடர்ந்து பேசுவதும், மருத்துவர் ஆலோசனைகளைப் பெற உதவி செய்வதும் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரும் உதவியாக இருக்கும். இயற்கைக்கு முரணாக உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாக அமையாது.

திருமண, மரண, நிகழ்வுகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பு

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு திருமண நிகழ்வுகள், மரண நிகழ்வுகள் மற்றும் இரவு களியாட்ட விடுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க திருமண நிகழ்வொன்றில் 150 பேர் பங்குபற்றலாம் என்ற நிலை மாற்றப்பட்டு தற்போது 50 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மரண வீடுகளில் இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இரவு களியாட்ட விடுதிகளுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும்

தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை முக்கியஸ்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை யடுத்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் அதிகரிப்பை கருத்திற்கொண்டே தளர்த்தப்பட்டிருந்த மேற்படி நடைமுறைகளை மீண்டும் கடுமையாக்கு வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பான சுகாதாரத் துறையின் வழிகாட்டல் நேற்று வெளியிட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபா விவகாரம் – வெள்ளியன்று முதலாளிமார் சம்மேளனம் விசேட அறிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (19) நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர், தமது தீர்மானத்தை அறிவிப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

900 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தமது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளம் தெரிவித்துள்ளது.

சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கினால், தம்மால் செலவுகளை ஈடு செய்துகொள்ள முடியாது என தாம் தொழில் அமைச்சுக்கு வழங்கியுள்ள ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளது என சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபா உழைக்க முடியுமான விதத்தில், தாம் ஏற்கனவே வழங்கியுள்ள முன்மொழிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அதில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் எடுக்கவுள்ள தீர்மானம் தொடர்பில் வௌ்ளிக்கிழமை சம்பள நிர்ணய சபையுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்தையின் பின்னர் அறிவிப்பதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளத்தின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

ஆயிரம் ரூபா குறித்து அனுசா விடுத்துள்ள அறிவிப்பு

சம்பள நிர்ணய சபை அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எவ்வகையிலும் தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வாக்கெடுப்பின் போது  எதிராக வாக்களித்த கம்பெனிகள் இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த விடயங்களில் எவ்வாறு நடந்துகொள்ள போகின்றன என்பது தெளிவுபடுத்தப்படாத சர்ச்சையான கருத்தாகவே நிலவுகின்றது.
இதன் மூலம் கூட்டு ஒப்பந்தம்  வலுவிழக்கப்படுமாயின் அதனை நிவர்த்தி செய்வதற்கு ஏற்ப எம்மிடம் என்ன மாற்றுத் திட்டங்கள் உள்ளன என்பதனை நான் இப்போது பேசி தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.
சம்பள உயர்வு கிடைத்து ஏனைய  உரிமைகள் மறுக்கப்படுவதையோ அல்லது ஏனைய சலுகைகள் கிடைத்து சம்பள உயர்வு மறுக்கப்படுவதையோ நாம் முழுமையான வெற்றியாக கருத முடியாது.
பதிமூன்று நாட்கள் வேலை என்ற கருத்து வதந்தியாக அல்லாமல்   அதை ஏதாவது வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதனை எவ்வாறு முகம் கொடுப்பது என்பது  பற்றியும் இதன்மூலம் தொழிலாளர்கள் வேலை நாட்களில் இழக்கப்பட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது பற்றியும் சம்பள நிர்ணய சபையின் முடிவு படி ஆயிரம் ரூபாய் வழங்கி கூட்டு ஒப்பந்தத்தை காலாவதியாக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றியும் முடிவெடுப்பதில் தாமதம் காட்டாமல் மலையக தொழிலாளர்களின் நலனில் அக்கறையுள்ள அனைத்து சக்திகளும் இணைந்து உறுதியான நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.
வெள்ளம் வரும்முன்னரே அணை கட்ட வேண்டும் என்பது போல ஏதாவது சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்னரே நாம் மாற்று திட்டங்களுடன் தயாராக இருப்பதே நன்மை தரும். தொழிலாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றிய புள்ளி விபரங்களுடன் வெளிவரும் தகவல்களையும் நாம் முழுமையாக உதாசீனப்படுத்தாமல் இவ்விடயத்தினை சர்ச்சைக்குள்ளாக்கும் போக்கில்  ஈடுபடாமல் இணைந்த செயற்பாட்டில் அனைவரும் ஆர்வம் செலுத்துவோம் எனவும் தெரிவித்தார்

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 76  ஆயிரத்து 781 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவிலிருந்து 70 ஆயிரத்து 429 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 949  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 403 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 72ஆயிரத்து 754 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இங்கிலாந்தில் பிரதமர் மாளிகையில் 10 ஆண்டுகள் சேவகம் செய்யும் பூனை

இங்கிலாந்து பிரதமர் வீட்டுக்கு எலித்தொல்லையை குறைக்க கொண்டுவரப்பட்ட பூனை 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இங்கிலாந்து பிரதமரின் அரசு வீடு லண்டனில் 10 டவுனிங் வீதியில் உள்ளது.

இங்கிலாந்து பிரதமராக டேவிட் காமரூன் இருந்த போது அவரது அரசு வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. இதற்காக அவர் வீட்டில் ஒரு பூனை வளர்க்க விரும்பினார்.

ஒரு நாள் அவரது வீட்டின் அருகே மாநகராட்சி ஊழியர்கள் ஒரு வாகனத்தில் தெருவில் சுற்றி திரிந்த பூனைகளை பிடித்து செல்வதை கண்டார். அதில் இருந்து ஒரு பூனையை தன் வீட்டில் வளர்ப்பதற்கு கேட்டார்.

மாநகராட்சி ஊழியர்கள் வழங்கிய பூனை,அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூனின் அரசு வீட்டில் வளர்ந்து வந்தது. அங்கு தொல்லை கொடுத்த எலிகளையும் பிடித்தது.

டேவிட் கேமரூனுக்கு பிறகு தெரசாமேயும், இப்போது போரீஸ் ஜான்சனும் பிரதமராக உள்ளார். ஆனால் பிரதமரின் வீட்டில் இருந்த பூனை மட்டும் மாறவேயில்லை. அந்த பூனை பிரதமர் வீட்டுக்கு சென்று நேற்றுடன் 10 ஆண்டுகள் முடிந்தது. இதனை பிரதமர் வீட்டு பணியாளர்கள் தெரிவித்தனர். பூனை வந்த பிறகு எலிதொல்லை குறைந்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

போர்காலத்தில்கூட நிறுத்தப்படாத அபிவிருத்தி கொவிட் தொற்று பரவலால் நிறுத்தப்படாது

போரின்போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்ததைப் போலவே கொவிட் தொற்று நோயையும் எதிர்கொண்டு நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் என்று  பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (2021.02.16) நம்பிக்கை வெளியிட்டார்.

வடமேல் மாகாண கால்வாய் (‘மஹ எல’) திட்டத்தின் மஹகித்துலா மற்றும் மஹகிருல நீர்த்தேக்கங்களின் கட்டுமானப் பணிகளை யாபஹுவ இருதெனியாய, கொன்கஹ சந்தியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே   பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது பிரதமர் மேலும் கூறியவை வருமாறு,

” குருநாகலில் மாற்றங்களை ஏற்படுத்துவதை எதிர்பார்த்தே குருநாகல் மாவட்ட மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் வாக்களித்தனர். அந்த மாற்றங்களை ஏற்படுத்த நாம் அனைவரும் உறுதியாக உள்ளோம். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பாரியதொரு கட்டமாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.

அன்றிலிருந்து இன்று வரை குருநாகல் மாவட்டத்தில் ஒரு பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கான தேவையே பாரிய குறைபாடாக இருந்து வருகிறது. குடிநீரை போன்றே குருநாகல் மாவட்டத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீரும் அத்தியவசியமானதாகும். இன்று நாங்கள் நிறைவுசெய்ய முயற்சிக்கும் திட்டம் குருநாகல் மாவட்டத்தில் ஏராளமான மக்களுக்கு மகத்தான சேவையாக இருக்கும்.

இத்திட்டத்தினூடாக சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைவர். சிறு மற்றும் பெரும் ஆகிய இரு போகங்களிலும் 12,500 ஹெக்டேயருக்கும் அதிகமாக சாகுபடி செய்ய முடியும். இந்த திட்டம் சிறுநீரக நோய்க்கு காரணமாகும் வடமேல் மாகாணத்தின் கடுமையான குடிநீர் பிரச்சினையையும் தீர்க்கும் என்று நம்புகிறோம்.

வயம்ப எலா திட்டத்தின் ஊடாக பிரதேசத்தில் 07 பிரதான நீர்த்தேக்கங்களுக்கும் 326 சிறிய குளங்களுக்கும் ஏற்படுத்தப்படுவதால் இந்த பகுதியில் நன்னீர் மீன் வளர்ப்பும் உருவாக்கப்படும். சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறை மேம்படுத்தப்படுவதன் ஊடாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும். நீர்ப்பாசனத் துறையின் வளர்ச்சியின் மூலம் தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

ஆரம்ப மகாவெலி திட்டத்தில் வடமேல் மாகாணத்திற்கு நீர் வழங்குவதற்கான திட்டங்கள் இடம்பெறவில்லை. இன்று இந்த மாகாண மக்களின் கோரிக்கைகளையும், குருநாகலையும் அபிவிருத்தி செய்வதற்கான அரசியல் தலைமையையும் வழங்க முடிவு செய்துள்ளோம்.

2019 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 பொதுத் தேர்தலின் போது, நாடு முழுவதும் கூட்டங்களுக்குச் செல்லும்போது மக்களின் மிகப்பெரிய கோரிக்கை, குறிப்பாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதாகவே இருந்தது. எங்கள் அரசாங்கத்தின் கீழ் இந்த நாட்டு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

நீர்ப்பாசனத்துறை அமைச்சு மூலம் இதற்கான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்நாட்டில் குடிநீர் பிரச்சினையை அடுத்த சில ஆண்டுகளில் தீர்க்க முடியும் என்று நம்புகிறோம்.

விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பொருளாதார திட்டங்களையும் நாங்கள் வகுத்துள்ளோம். விவசாயத்திற்கு நீர் வழங்க பாசன திட்டங்களையும் திட்டமிட்டுள்ளோம். நீர்ப்பாசன அமைச்சினால் செயல்படுத்தப்படும் தேசிய நீர்ப்பாசன செழிப்பு திட்டம் அதைத்தான் செய்கிறது.

இந்த நாட்டில் ஆரோக்கியமான மக்கள் தொகையை உருவாக்குவதற்கும், உள்ளூர் உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் இதையெல்லாம் செய்கிறோம்.

இந்த திட்டத்தை போன்றே முழுமையான வசதிகளை கொண்ட பாடசாலைகள், பிற நீர் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்களையும் நிறைவேற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம். இம்மாகாணத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான சாலை வலையமைப்பை மேம்படுத்த நாங்கள் அதே முறையில் செயல்படுகிறோம் என்று கூற வேண்டும்.

உலகின் மிக மோசமான பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடிய போதிலும், நாட்டின் அபிவிருத்தியை ஒரு கணம் கூட நாங்கள் கைவிடவில்லை. யுத்தத்தின் போது கூட நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்தோம், கிழக்கை காப்பாற்றி இராணுவத்தை வடக்கே வழிநடத்தும் போது கிழக்கு மாகாணம் வேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டது. வடக்கில் யுத்தத்தை நிறைவுசெய்த அந்த போர்வீரர்கள் அபிவிருத்தி செய்யப்பட்ட மாகாணங்கள் வழியாக தெற்கிற்கு வந்தனர்.

யுத்தத்தின் போது தான் கொழும்பு – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க நடவடிக்கை எடுத்தோம். யுத்தத்தின் போது தான் நாங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். யுத்தத்தின் போதுதான் மத்தள விமான நிலையத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றினோம். யுத்தத்தின் போதுதான் நாங்கள் நுரைச்சோலை மின் நிலையத்தை உருவாக்கத் தொடங்கினோம்.

நாங்கள் யுத்தத்தை வெற்றி கொண்டதன் பின்னர், இந்த பணிகளை செய்ய விரும்பியிருந்தால் நாங்கள் எதையும் செய்ய முடியாது. எனவே கொவிட் தொற்றுநோய்க்க மத்தியிலும் அபிவிருத்திகளை நிறுத்த மாட்டோம் என்று கூற வேண்டும். நோய்வாய்ப்பட்ட உலகத்தின் மத்தியில் ஆரோக்கியமான அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதே எங்கள் நம்பிக்கை.

முந்தைய நல்லாட்சி அரசாங்கம் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அப்பிரச்சினையை சுட்டிக்காட்டி நாட்டின் அபிவிருத்தியை கைவிட்டது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டமைக்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது. கொவிட் தொற்றுநோய் ஏற்பட்டபோது எதிர்க்கட்சியில் பலர் பாராளுமன்றத்தை கூட்டக்கூடாது, தேர்தலை நடத்த கூடாது என்று கூறினர். ஆனால் நாங்கள் நாடாளுமன்றத்தையும் கூட்டினோம். தேர்தலையும் நடத்தினோம்.

தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகளை கொண்டுவருவதற்கு தயாரானபோது அதை எமக்கு கொண்டுவர முடியாது என்றும் கணித்து கூறினர். அது மட்டுமல்லாமல், நாங்கள் மருந்தை இறக்குமதி செய்யத் தயாரானபோது, எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் நாங்கள் மருந்துக்காக பிச்சை எடுக்கப் போவதாகக் கூறினர். நாங்கள் மருந்தைக் கொண்டுவரத் தயாரானபோது, ஐரோப்பிய நாடுகளில் ஒரு சிறந்த மருந்து இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

கொவிட் தொற்றுநோயை இல்லாதொழிக்க தேவையான மருந்தை இப்போது கொண்டு வந்துள்ளோம். இப்போது எதிர்க்கட்சி என்ன சொல்கிறது? இப்போது எதிர்க்கட்சி இந்த மருந்து தோல்வியுற்ற மருந்து. இது மக்களுக்கு கொடுக்க நல்லதல்ல என்று கூறுகிறது. இது ஒரு நோயைக் காட்டி நாட்டை ஒரு குழிக்குள் தள்ளும் முயற்சி.

குருநாகல் மாவட்டத்தில் வடமேல் மாகாண மக்களின் பிள்ளைகளே பெரும்பாலும் போரில் பங்கேற்றனர். யுத்தத்தின் வெற்றியின் பின்னர், முந்தைய நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டின் போர்வீரர்களுக்கு எதிரான மனித உரிமை தீர்மானங்களுக்கு ஒப்புக்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இன்று ஒரு போர்வீரன் வெளிநாடு செல்வதோ அல்லது வெளிநாட்டில் வேலை செய்வதோ சாத்தியமற்றதாக மாற்ற அவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலைமைக்கு முகங்கொடுக்க நாம் தயார். நாம் இந்த தொற்று நிலைமைக்க மத்தியில் வேகமாக பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு வேகமாக தீர்வு கண்டு வருகின்றோம். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கிராமங்கள் தோறும் சென்று மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை வழங்கி வருகிறார். இவை அனைத்தும் இந்த தொற்று நிலைமைக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தொற்று மத்தியில் அபிவிருத்தியடைந்த நாடொன்றை நாம் உருவாக்குவோம். அதனை நாம் திட்டமிட்டு நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, சிறிபால கம்லத், தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான குணபால ரத்ணசேகர, அசங்க நவரத்ன, சாந்த பண்டார, சரித்த ஹேரத், யூ.கே.சுமித் உடுகும்புர, ஜயரத்ன ஹேரத், மஞ்சுளா திசாநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே உள்ளிட்ட அரச உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிராக 200 ஆட்சேபனை மனுக்கள் முன்வைப்பு!

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சம்பள நிர்ணய சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ள சம்பளத் தொகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 200இற்கும் மேற்பட்ட ஆட்சேபனை மனுக்கள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 22 கம்பனிகள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினர் சம்பள நிர்ணய சபையிடம் நேற்று தமது ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர்.

தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு நேற்று நண்பகல் 12 மணி வரை தொழில் திணைக்களத்தினால் காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று பெருந்தோட்டக் கம்பனிகள், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தனியார் தோட்ட உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையினால் கடந்த 8ஆம் திகதி முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவது குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் எட்டு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும், அரசாங்கம் சார்பில் கலந்துகொண்டிருந்த மூவரும் ஆதரவாக வாக்களித்ததுடன், கம்பனிகள் சார்பில் பங்கேற்றிருந்த எண்மர் எதிராக வாக்களித்திருந்தனர்.

அதனடிப்படையில் நாளாந்த அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவும் மேலதிக நிவாரணக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு எதிராக ஆட்சேபனைகளை முன்வைப்பதற்காகவே நேற்றுவரை காலஅவசாகம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே 200இற்கும் மேற்பட்ட ஆட்சேபனை மனுக்கள் சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அடுத்தகட்டமாகக் கலந்துரையாடுவதற்காக சம்பள நிர்ணய சபை இம்மாதம் 19ஆம் திகதி கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன் நாளிதழ்

தோனி படத்தில் நடித்த மேலும் ஒரு நடிகர் தற்கொலை

எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த மேலும் ஒரு நடிகர் தற்கொலை செய்து கொண்டார்.

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், நேற்றிரவு அதே திரைப்படத்தில் நடித்த சந்தீப் நஹர் தற்கொலை செய்துகொண்டார். மும்பை கோரேகான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த சந்தீப் நஹர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது இறுக்கமான மனநிலை குறித்து வீடியோ ஒன்றும் பதிவு செய்துள்ளார். தனது வீடியோவில், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள், குறிப்பாக அவரது சிக்கலான திருமணம் பற்றி பேசினார். ஆனால், அதே வேளையில் தனது மரணத்துக்கு தன் மனைவியை குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார்.

சந்தீப் நஹரின் தற்கொலை அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது இந்தியா – 317 ஓட்டங்களால் அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 161 ரன்னும், ரஹானே 67 ரன்னும், ரிஷாப் பண்ட் ஆட்டம் இழக்காமல் 58 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 134 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஆர்.அஸ்வின் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, அஸ்வினின்(106 ரன்கள்) அபார சதம், விராட் கோஹ்லியின் (62 ரன்கள்) பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் 286- ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 482 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து திணறியது. இன்று 4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியின் அக்‌ஷர் படேல், அஸ்வின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 54.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 164- ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 317- ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனான அஸ்வின் தெரிவுசெய்யப்பட்டார். முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மலையக மக்கள்மீதான வன்முறை குறித்து 19 ஆம் திகதி முத்தரப்பு சந்திப்பு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள்மீது, நிர்வாக தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (19) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

0
இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது. இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக...

நில உரிமைக்காக ஒன்றிணையும் தமிழ் பேசும் சமூகங்கள்: கொட்டக்கலையில் முக்கிய தீர்மானம்!

0
கிழக்கு மாகாண காணி வலையமைப்பு செயற்பாட்டாளர்களுக்கும், மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொட்டக்கலை சுயசக்தி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்,...