Home Blog Page 3625

‘ஜெனிவா இராஜதந்திர சமர்’ – 23 ஆம் திகதி அமைச்சர் தினேஷ் உரை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் இலங்கை தனது கருத்துக்களை முன்வைக்குமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22 முதல் மார்ச் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடர் அமர்வின் ஆரம்ப நாட்களில் நடைபெறும் உயர்மட்ட கூட்டங்களில் பொதுவாக நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பர்.

இம்முறை காணொளி ஊடாகவே மாநாடு நடைபெறும்.தினேஷ் குணவர்தன 23 ஆம் திகதி உரையாற்றுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் கனடா, பிரிட்டன், ஜேர்மன், மொண்டிநீக்ரோ, வடமசிடோனியா ஆகியவற்றின் சார்பாக பிரிட்டனின் வதிவிடப் பிரதிநிதி ஜூலியன் பிரெய்த்வெயிட் இலங்கை மீதான அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.

இலங்கையின் முன்மொழிவுடன் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை மேற்கொண்ட பதில் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் ஆணையாளர் தயாரித்த அறிக்கையும் இந்த அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவ்வறிக்கைகள் மூலம் பலத்த குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவிக்க இது ஒரு தருணம் என்றாலும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுக்கு இது மிகவும் சவால் நிறைந்த நாட்களாக இருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கருத்துக்களைத் தெரிவிக்கவிருக்கும் இதர நாடுகளின் பிரதிநிதிகள் தரப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மற்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் அடங்குவர்.

குழும நாடுகளால் முன்வைக்கப்படும் புதிய தீர்மானம், ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 30/1 – 40/1 தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியே இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், இத் தீர்மானத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகியதாக புதிய அரசாங்கம் அறிவித்தது.

இந்நிலையில் கடந்த மாதம் ஐ.நா. ஆணையாளர் வெளியிட்ட இலங்கை தொடர்பான புதிய அறிக்கையில், கடந்த கால மனித உரிமை மீறல்களை இலங்கை கவனிக்கத் தவறியமையானது இத்தகைய மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை போன்ற தடைகளையும் ஐ.நா. ஆணையாளர் முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கும்போது, அதனை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு 16 தவறான விளக்கங்கள் அடங்கிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘இம்ரான் கானின் வருகை இந்தியாவுக்கு எதிரானதாக அமையக்கூடாது’

இலங்கைக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வருகின்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கைக்கான விஜயம் இந்திய அரசாங்கத்திற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது. அப்படி அமைந்து விடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (14.02.2021) நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

” தற்பொழுது இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான ஒரு நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது.அதற்கு காரணம் கொழும்பு துறைமுகம் தொடர்பான ஏற்பட்டுள்ள முறுகல் நிலையாகும்.ஏறடகனவே இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு தயாராக இருந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு தரப்பினரின் இந்திய எதிர்ப்பு போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்பொழுது இந்தியா தொடர்பாக இலங்கையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கைக்கான திடீர் விஜயம் பல கேள்விகளை எழுப்புகின்றது.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயமானது இந்தியாவிற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது. ஏனேனில் இந்தியா என்பது எமது குடும்பத்தில் ஒருவர் போல. பல்வேறு இக்கட்டான சந்தரப்பங்களிலும் இந்தியாவின் உதவி எமக்கு கிடைத்துள்ளது.

குறிப்பாக அது யுத்த காலமாக இருந்தாலும் சரி யுத்தத்தின் பின்பாக இருந்தாலும் சரி சுனாமியின் போதும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு இலங்கை சுற்றுலா துறைக்கு பாதுகாப்பான நாடு இல்லை என சர்வதேசம் குறிப்பிட்டிருந்த நிலையிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை பாதுகாப்பான நாடு என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துறைத்தார்.அதன் பின்பே எங்களுடைய நாட்டின் சுற்றுலா துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தது.

எனவே இந்தியா என்ற நாட்டை நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பகைத்துக் கொள்வது என்பது பிழையான ஒரு அரசியல் நகர்வாகும்.ஏனெனில் தொடர்ந்தும் நாம் இந்தியாவுடன் நல்லுறவுடன் பயணிக்காவிட்டால் அது எமக்கு பொருளாதாரம் உட்பட இன்னும் பல வழிகளிலும் எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் இந்தியா என்பது இலங்கையில் பல்வேறு அபிவிருத்திகளுக்காக பாரிய நிதியினை வழங்கிவருகின்றது.குறிப்பாக மலையக பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் மூலமாக முன்னெடுக்கப்படுகின்ற இந்திய வீடமைப்பு திட்டம் மலையகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகள் ஆசிரியர் பயிற்சி கலாசலைகள் தொடர்பான அபிவிருத்தி என்பன முக்கிய இடங்களை பெறுகின்றது.

இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இவர்களின் ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் கலை கலாச்சாரம் பாரம்பரியமான தொடர்புகள் இருந்து வருகின்றது.இந்திய அரசாங்கம் இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்தியாவில் இரண்டை பிரஜா உரிமையை வழங்கி வருகின்றது.இப்படி பல வழிகளிலும் இந்தியா இலங்கைக்கான உதவிகளை செய்து வருகின்றது.

இந்த விடயங்கள் அனைத்தையும் நாம் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.பாகிஸ்தான் பிரதமரின் விஜயம் இந்தியாவிற்கு எதிரானதாக அமைந்து விடக்கூடாது. இன்றைய இந்த சூழ்நிலையில் அவருடைய விஜயமானது பொருத்தமற்ற ஒரு விடயமாகவே கருத வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் பிரச்சினைக்கு மத்தியில் மலையக சமூகத்தின் அடுத்த இலக்கு என்னவாக இருக்க வேண்டும்

– மல்லியப்புசந்தி திலகர்

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி சரியாக ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வரையான நாட்சம்பளம் வழங்கப்படும் என வரவு செலவுத்திட்டத்தில் அறிவித்த நிலையிலும் 2021 ஜனவரி 15 ல் அதற்கான பதிலாக கிடைத்திருப்பது 1105/= நாட்சம்பளம் என்ற முதலாளிமார் சம்மேளனத்தின் முன்மொழிவு .

கபடக்கணக்கு
அடடே … ஆயிரம் ரூபா கேட்டவர்களுக்கு அதற்கும் மேலதிகமாக 105/= சேர்த்து கொடுத்துவிட்டோம் என கணக்கு விடும் கம்பனிகளின் கபடத்தனமே இது.

இந்த 1105/= ரூபா எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம். முதலில் 105/= ரூபாவை எடுத்துக்கொள்வோம்.

105/- எப்படி வருகிறது?

தொழிலாளி ஒருவரின் அடிப்படை நாட்சம்பளத்தில் 12 % ஐ தொழில் வழங்குனர் மாதாந்தம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு (EPF) செலுத்த வேண்டும் என்பது ஊழியர் சேமலாப நிதிய நியதிச் சட்டம். இந்த நிதியத்துக்கு தொழிலாளர்களும் தமது பங்கிற்கு 10% செலுத்த வேண்டும் என்பதும் சட்டத்தில் உள்ளது. மேலதிகமாக 3 % ஐ ஊழியர் நம்பிக்கை நிதியத்துக்காக தொழில் வழங்குனர் வழங்குதல் வேண்டும் என்பதுவும் தனியான நியதிச் சட்டம்.

இதன் பிரகாரம் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 15 % தொழில் வழங்குனரும் 10 % வீதம் தொழிலாளர்களும் நிதியத்துக்கு செலுத்திவைக்க வேண்டியது, அவர்கள் வயோதிப காலத்தில் வேலையை விட்டு விலகிச்செல்லும்போது அதற்குப் பின்னான வாழ்க்கைக்கான சமூக பாதுகாப்புத் தொகையாகும். இது ஒரு வகையில் சேமிப்பு ஆகிறது. இதனை தொழிலாளி ஒருவர் 55 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வேலையைவிட்டு நீங்கியபிறகு வட்டியுடன் மீளப்பெற்றுக்கொள்ளக்கூடியது.

ஆனால், தற்போது கம்பனிகள் முன்வைத்துள்ள முன்மொழிவில் தாம் நிதியத்துக்கு செலுத்தும் 15% ஐயும் (EPF 12%+ETF3%) கணக்கிட்டு நாள் சம்பளத்தில் சேர்க்கின்றன. அதாவது இன்றைய நாள்சம்பளத்தை 25-30 வருடங்கள் கழித்து தொழிலாளி பெறவேண்டும் என்கிற புதுவிதமான ஒரு (அ)நியாயம்.

இப்போது இவர்களின் 1105/= ரூபா தொகையில் இந்த 105/= இப்படித்தான் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே அடிப்படைச்சம்பளம் நாள் ஒன்றுக்கு 700/= தான் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. 12+3/100×700 = 105 என்பதே அந்தக் கணிப்பீடு.

தொழில் வழங்குனரின் பங்களிப்பை நாள் சம்பளத்துடன் கூட்டிப் பார்த்தால் தொழிலாளர்களின் பங்களிப்பை கழித்துப் பார்க்க வேண்டுமே என ஒரு வாதத்திற்கு இப்படி ஒரு கணிப்பீடு செய்தால், அதாவது தொழிலாளியின் பங்களிப்பு 10 சதவீதமும் இப்போது அவர்களது கைக்கு கிடைப்பதில்லை. எனவே 10/100x 700 = 70 எனப்பார்த்தால் அடிப்படைச் சம்பளமாக தொழிலாளி கைக்கு கிடைப்பது 630/- மட்டுமே

எனவே அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட 1000/= அடிப்படைச்சம்பளம், ‘தைப்பிறந்தால் வழிபிறக்கும்’ என்ற தத்துவம் எல்லாமே தவிடுபொடியாகியுள்ளது.

விலைசகாய படி நீக்கம்
கூடவே 700/= அடிப்படைக்கு மேலதிகமாக இப்போது நடைமுறையில் உள்ள விலை சகாயப்படி (PSS – Price Share Supplement) 50/= முற்றாக புதிய முன்மொழிவில் நீக்கப்பட்டுள்ளது. இது 700/= அடிப்படைக்கு மேலதிகமாக நிரந்தரமாக கடந்த இரண்டு ஆண்டுகளும் கொடுக்கப்பட்டு வந்தது.

வரவுக் கொடுப்பனவு 150/-
இதற்கு மாற்றமாக இனி வரவுக் கொடுப்பனவு 150/= எனும் முன்மொழிவைப் பார்ப்போம். மாதம் ஒன்றில் கம்பனிகள் வழங்கும் வேலை 25 நாட்களாக இருந்தால் (வருடாந்தம் வழங்கப்படும் வேலைநாட்கள் 300 ஆக இருக்க வேண்டும் என மூல கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு சரத்து உண்டு. ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவது இல்லை) அதில் 19 (18.75) நாட்கள் வேலைக்குச் சென்றிருந்தால் மாத்திரமே ஒரு நாளைக்கு 150/= வீதம் 19 நாட்களுக்கும் கிடைக்கும். தற்செயலாக 18 நாட்கள்தான் ஒரு தொழிலாளி சமூகமளித்திருந்தால் ஒட்டுமொத்த 18 நாட்களுக்குமான அந்த 150/= கிடைக்காது. எனவே 19 நாள் வேலை செய்தால் 19×150=2850/= கிடைக்கும். 18 நாட்கள் அல்லது அதற்கு குறைவாக வேலை செய்திருந்தால் 18×0=0 வரவுக் கொடுப்பனவு அறவே கிடைக்காது. எனவே மாதத்தில் வேலை செய்ய நாட்கள் முழுவதற்குமாக நாளுக்கான அடிப்படைச் சம்பளம் 700/= மட்டுமே கிடைக்கும். மழையும் குளிரும் நிறைந்த காலநிலையில் மலையேறி, குளிரில் நடுங்கி வேலை செய்யும் தொழிலாளி சுகவீனத்தினாலோ அல்லது வேறு காரணத்திற்காகவோ வழங்கும் வேலை நாட்களில் 75 சதவீமான அளவுக்கு குறைவாக சமுமளித்திருந்தால் இந்த சம்பளம் அவர்களைச் சென்றடையாது. எனவே நிபந்தனை அடிப்படையிலான இந்த வரவுக் கொடுப்பனவு முறைமையை நாட்சம்பள அதிகரிப்பாகக் கருத முடியாது.

உற்பத்தித்திறன் கொடுப்பனவு 150/-
உற்பத்தித் திறன் கொடுப்பனவு 150/= என்பதும் இதேபோன்ற ஒரு நிபந்தனைத் தொகைதான். ஒரு நாளைக்கு 20 கிலோ கொழுந்துக்கு மேலதிகமாக எடுத்தால்தான் (இந்த கிலோ அளவு மாறுபடலாம். இரப்பருக்கும் ஒரு அளவு உண்டு) இந்த 150/= கிடைக்கும். தேயிலை உற்பத்தி வறட்சியினால் வீழ்ச்சி அடைந்தால் அல்லது ஒரு தொழிலாளி தனது சாதாரண உழைப்பால் அதனை அடைய முடியாது போனால் இந்தத் தொகைக் கிடைக்காது.

எப்போதாவது ஒரிரு தொழிலாளிகள் எடுத்த இந்த நிறையளவைக் காரணம் காட்டி கம்பனிகள் இதனை ஒரு கணக்காக் காட்டுகின்றன. ஆனால் ஒரு நாளைக்கு 14 கிலோ கொழுந்து தான் சாதாரண உழைப்பாளி ஒருவரால் எடுக்க முடியும் என்பதே இதுவரையான சராசரி ஓர் ஆய்வு அளவாகும். இந்த சுமையை அவர்கள் சுமந்தபடி நிலுவை செய்யும் மத்திய இடத்திற்கு வரவேண்டும். அதிலும் தண்ணீர் சேர்த்த பாரம் என்றும், தட்டுப்பாரம் (தராசில் தேயிலையைக் கொட்டும் தட்டு) என்றும், தரக்குறைப்புக்கான கழிவு என்றும் மொத்த கிலோவில் 2 முதல் 3 கிலோ கணக்கில் சேர்ப்பதில்லை. இப்படியாக இந்த உற்பத்தித் திறன் கொடுப்பனவு தொழிலாளிக்கு சென்று சேராமல் இருப்பதற்கான ஏற்பாடுகளே அதிகம்.

மேலும் இவை இரண்டும் புத்தம் புதிய முன்மொழிவுகளும் கூட இல்லை. இந்த இரண்டு நடைமுறைகளும் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் கூட்டு ஒப்பந்த சரத்துகளாகச் சேர்க்கப்பட்டு பிறகு சிக்கல்களை உணர்ந்து அகற்றப்பட்ட முறைமைகள்தான்.

இப்படியாகக் கபடத்தனமான கணக்கு காட்டுதல் மூலமாக 1105/= நாட்சம்பளம் என முன்மொழிவில் காட்டப்பட்டாலும் 700/= மட்டுமே நிரந்தரமானது. இருந்த நிரந்தர 50/= தொகையும் இல்லாமல் ஆக்கப்படுகிறது.

தோல்வியடைந்த முறைமை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் இங்கே உள்ள பிரச்சினை 1000/= அல்ல. ஆயிரம் என்பது ஒரு குறியீடு எனக் கொள்ளுதல் வேண்டும். அது இப்போது நடைமுறையில் உள்ள குறைபாடு என கொள்ளுதல் வேண்டும். கடந்த 25 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் இந்தத் முறைமை ‘தோல்வி’ கரமான ஒரு முறைமை என்பதன் குறிகாட்டியாக பின்வருவனவற்றைக் கொள்ளலாம்.

தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் 1000/= அடிப்படை சம்பளம் என்பதை பெற்றுக் கொள்ள முடியாத தொழிலாளர்கள் பக்கமும் தோல்வி
தொடர்ச்சியாக தாம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறும் தோட்டக் கம்பனிகளால் ‘நட்டம்’ என்ற சொல்லினால் உணர்த்தப்படுவது தோல்வி. ஏனெனில் 25 ஆண்டுகளில் பயிர்ச்செய்கை பரப்பளவு நிலம் வெகுவாக குறைந்துள்ளது. தொழிலாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. உற்பத்தி அளவு குறைவடைந்துள்ளது. ஏற்றமதி வருமானம் ‘பெருந்தோட்டத் துறையில்’ இருந்து குறைவடைந்துள்ளது. எனவே தொழில் தருனர் பக்கத்திலும் தோல்வி.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் அரச மானியமாக நாளாந்தம் 50/ பெற்றுக் கொடுக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு (ஒன்றுக்கு இரண்டு தடவைகள்) பெற்றுக் கொடுக்க எடுத்த முயற்சிகள் தோல்வி.
தற்போதைய அரசாங்கம் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுக்க 2020 ஜனவரியில் அனுமதித்த அமைச்சரவைப் பத்திரம் தோல்வி. அதுவும் ‘நிறைவேற்றதிகார ஜனாதிபதி’ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் தோல்வி.
தற்போதைய அரசாங்கம் 2021 ஜனவரி முதல் ஆயிரம் ரூபா நாள் சம்பளம் வழங்குவதாக வரவுசெலவுத்திட்டத்தில், அதுவும் நாட்டின் பிரதமரே அறிவித்த தொகை தோல்வி.

இவ்வாறு தொழிலாளர் – தொழில் வழங்குனர் – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு- பிரதமர் (வரவு செலவுத்திட்டம், பாராளுமன்றம்) – நிறைவேற்றதிகார ஜனாதிபதி, அமைச்சரவை என எல்லாத்தரப்பு முயற்சிகளும் தோல்வி அடைந்த ஒரு தோல்வி முறைமையே இப்போது பெருந்தோட்டப் பொருளாதாரத்தில் நடைமுறையில் உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பேற்றால்… ?
இதற்கான மாற்று வழிகளாக அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதில் எந்த முன்னேற்றமும் நிகழப்போவதில்லை. ஏற்கனவே 200 வருட கால பெருந்தோட்ட வரலாற்றில் பத்துசதவீதமான காலப்பகுதியில் (1972 முதல் 1992 வரையான இருபது ஆண்டுகள்) மட்டுமே அரசாங்கம் பொறுப்பேற்று நடாத்தியது. அப்போது தாம் நட்டமடைந்ததாக கூறியே, 1992 ஆம் ஆண்டு மீண்டும் (உள்நாட்டு) தனியாருக்கு ஒப்படைத்தார்கள். எனவே அரசாங்கம் ஏற்று நடாத்தினாலும் தோல்வி.

ஆனால், அரசு வெற்றிபெற்ற புள்ளியும் இங்கேதான் இருக்கிறது. 1972 ஆண்டு காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் பிரித்தானிய கம்பனிகளிடம் இருந்து பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்ற அரசு, 1992 ஆம் ஆண்டு மீளவும் உள்நாட்டு தனியாருக்கு தோட்டங்களை முகாமிக்க பகிரந்தளித்தபோது மேல்நிலைத் தேயிலையின் (High grown tea) 98 சதவீதப் பகுதியையும் , மத்திய நிலத் தேயிலையின் (Mid grown tea ) 25 சதவீத பகுதியையும், தாழ்நிலத் தேயிலையின் (low grown) 5 சதவீதப் பகுதியையும் வழங்கியது. மறுபக்கமாக சொன்னால் தாழ்நிலத் தேயிலையின் 95 சதவீதமான பகுதியை அங்கு வாழும் மக்களுக்கு பகிரந்தளித்துவிட்டது. மத்திய நிலத் தேயிலையின் 75 சதவீதத்தை அங்கு வாழும் மக்களுக்குப் பகிரந்தளித்து விட்டது. எஞ்சிய உயர்நிலத் தேயிலையின் 98 சதவீத்தை தனியார் பிராந்திய கம்பனிகளுக்கும் (RPC) ஏனைய 2 சதவீதத்தை அரசும் நடாத்தி நட்டத்தில் இயங்க வைத்துள்ளது.

தேயிலை வகையும் ஏற்றுமதி நிலையும்
இப்போதைய புள்ளிவிபரங்களின்படி மக்களுக்கு பகிரந்தளிக்கப்பட்ட தாழ்நில, மத்திநில (low grown and mid grown) தேயிலை உற்பத்தியில் இருந்தே 72 சதவீதமான ஏற்றுமதி இடம்பெறுகிறது. எனவே வெற்றிபெற்ற முறைமை என்பது மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்ட பகுதியில் இருந்தே கிடைந்துள்ளது. இத்தனைக்கும் அங்கு மொத்த தேயிலை உற்பத்தி நிலத்தின் 30 சதவீதமான பகுதியே உள்ளது. அவை மக்களின் (சிறு தோட்ட) உடமையாக உள்ளது. அதில் இருந்து 72 சதவீதமான ஏற்றுமதி கிடைக்கிறது. அந்த மக்கள் ஆயிரம் ரூபா வேண்டும் என கோஷம் எழுப்புவதில்லை. தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்படும் 98 சதவீத ஆய்வுகள் சிறு தோட்டங்களை முன்னேற்றும் நோக்கம் கொண்டன.

மாறாக மொத்த தேயிலை உற்பத்தி நிலத்தில் 70 சதவீத்த்தை உயர் தேயிலை நிலங்கள் (high grown ) கொண்டுருக்கின்றன. அவை கம்பனிகள், அரச கூட்டுத்தாபனங்கள் வசமே உள்ளன. 28 சதவீத ஏற்றுமதியையே செய்கின்றன. நட்டத்தில் இயங்குவதாகவும் சொல்கின்றன. நிலத்தை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கத் தயங்குகின்றன. அவர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்குவதற்கு பதிலாக ‘அவுட்குரோவர் முறைமை’ (உற்பத்தித் திறன் முறை என்பது இதுதான்) என கம்பனிகளே அரசின் நிலத்தை வைத்துக் கொண்டு தொழிலாளர்களை அதில் கூலிகளாக வைப்பதற்கே முயற்சிக்கின்றன.

(இந்த முறைமை முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் EPF / ETF முற்றாக இல்லாமல் செய்யப்படும் அபாயம் உள்ளது) தொழிலாளர்கள் தொடர்ந்தும் 1000/= என கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கின்றனர்.

இந்தக் கதைத் தொடரின் முக்கிய திருப்பம் இனித்தான் வரப்போகிறது. உயர்நிலத் தேயிலை உற்பத்தியில் 99.9 சதவீதம் “தமிழ் தொழிலாளர்களும்”, மத்திய மற்றும் தாழ் நிலத் தேயிலையில் 99 சதவீதம் “சிங்கள சிறுதோட்ட உடமையாளர்களும் ” உள்ளனர்.

1000 தொகையல்ல குறியீடு
எனவே 1000 என்பது தொகை அல்ல ஒரு குறியீடு என்பது இப்போது புரிந்திருக்கும். இங்கே சிங்கள மக்களை குறை சொல்வதற்கு இல்லை. அவர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக இருப்பதில் எமக்கு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த உரிமையை தமிழ் தொழிலாளர்களுக்கு (அல்லது மலையகத் தமிழ் மக்களுக்கு) வழங்க முடியாது என்கிற ‘தத்துவார்த்தமே’ இந்த 1000/- பிரச்சினையின் அடிப்படையாகும்.

இலங்கை அரசு (அது எந்த அரசாங்கமாக இருந்தபோதும்) மலையகத் தமிழ் மக்களுக்கு காணியைப் பெற்றுக் கொடுக்க திறந்த மனதோடு முன்வரவில்லை என்பதே இந்த பிரச்சினையின் பிரதான மையப் புள்ளி ஆகும்.

இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுக்க இலங்கையை பௌத்த தேசமாக நிறுவுவதற்கு தத்துவார்த்தத்தை வழங்கிய அநகாரிக்க தர்மபாலவின் கருத்து நிலை ஆழ வேரூன்றி உள்ளது. பிரித்தானியருக்கு எதிரான கருத்து நிலையில் இலங்கை மண்ணை மீட்டு பௌத்த அரசை நிறுவும் அவரது கோட்பாட்டில், அந்த பிரத்தானியரால் அழைத்து வரப்பட்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள்களுக்கு இலங்கையில் இடம் இருக்கவில்லை. எனவேதான்

1. 1948 ல் அவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கியிருந்த குடியுரிமை சுதேச அரசினால் பறிக்கப்பட்டது

2. 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து நாடு கடத்தப்பட்டது

3. பிரஜாவுரிமை என்ற பெயரில் வாக்குரிமை மாத்திரம் வழங்கப்பட்டது

4. 1972- 1992 காலப்பகுதியில் சிங்கள மக்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றப்படும்போது தமிழ்த் தொழிலாளர்கள் தொடர்ந்தும் கூலிகளாகவே வைக்கப்பட்டுள்ளார்கள்.

5. குறைந்தபட்சம் அவர்களின் வீடமைப்புக்கான 7 பேர்ச் காணி கூட கொள்கை அடிப்படை அல்லாது தற்காலிகமான அமைச்சரவைப் பத்திரங்களால் அவ்வப்போது அனுமதிக்கப்படுகிறது. அதுவும் தற்போதைய தொழிலாளர்க்கு மாத்திரம்.

6. தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகளே தோட்ட மக்களின் சேம நலன்களை கவனிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்கிறது (பிரித்தானியர் காலத்தில் அந்தக் கம்பனிகளும், 72-92 காலப்பகுதியில் அரசின் சார்பாக நிர்வகித்த கூட்டுத்தாபனங்களும், 1992 க்குப் பின்னர் தனியார் கம்பனிகளின் பங்களிப்பில் நாடத்தப்படும் PHDT (TRUST) நிறுவனமும் அதற்கு பொறுப்பாக இருந்தன / இருக்கின்றன.

இதன் உச்சகட்டமாக “தோட்ட மக்களின் சுகாதாரம் முதல் சகல சேம நலன்களையும் நாங்களே கவனிக்கிறோம். அவர்களின் சம்பளவிடயத்தில் தலையிடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை” என முதலாளிமார் சம்மேளன பேச்சாளர் ரொஷான் ராஜதுரை ஊடகங்களுக்கு (20-01-2021 Daily mirror) தெரிவிக்கும் அளவுக்கு மலையகத் தமிழ் மக்கள் இலங்கை அரசில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள்.

தலைவர்கள் நிலை
எனவே, மலையகத் தமிழ் மக்களை காணி உரிமையுடன் கூடிய அர்த்தமுள்ள குடிகளாக, அரச சேவைகளைப் பெற உரித்துடையவர்களாக ஆக்கும் வரை 1000/- 2000/- என ஆண்டுகள் மாறி கோரிக்கைகள் தொடரும். அவை 1105/- போன்ற தொகைகளால் கபடத்தனமாகக் கணக்குக் காட்டப்பட்டு நகர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.

எனவே 1000/- ஒரு தொழிற்சங்க பிரச்சினை இல்லை. அது கம்பனிகளுடன் நடாத்தும் பேச்சுவார்த்தையில் / கூட்டு ஒப்பந்தத்தில் தீர்க்கப்படும் பிரச்சினையுமில்லை. அதனை ஆஜானுபாகுவாக தீர்த்துவைக்கும் அரசியல் தொழிற்சங்க தலைவர்களும் இல்லை .

இது ஒரு தலைமுறை சார்ந்த பிரச்சினை.
மலையகத்தின் முதலாம் தலைமுறை கொத்தடிமை நிலையில் இருந்தது. இரண்டாம் தலைமுறை அந்த சமூகத்தை அரசியல் மயப்படுத்தி நாடாளும் சபைக்கு வந்தது, அதனைத் தடுக்க குடியுரிமையைப் பறித்த போது மூன்றாந் தலைமுறை அதனைப் போராடி மீளவும் பெற்றது. மீளப்பெற்ற வாக்குரிமையைக் கொண்டு மீண்டும் நாடாளுமன்றம் வந்த நான்காம் தலைமுறை அபிவிருத்தி அரசியலை கையில் எடுத்தது. அதுவரை இருந்த உரிமை அரசியலை கைவிட்டது. அந்தப் பாரமே இப்போது ஐந்தாம் தலைமுறையினரின் கைக்கு வந்துள்ளது.

நீண்டதூர அரசியல் பார்வையும் வரலாற்று ஆய்வுப்புலமும் கொண்ட அரசியல் செயற்பாட்டினால் மட்டுமே மலையகத் தமிழர் அர்த்தமுள்ள குடிகளாக இலங்கை மண்ணில் வாழ வழி சமைக்க முடியும். அதனையே அடுத்த மலையகத் தலைமுறையினர் தமது அரசியல் செயற்பாடாக கொள்ள வேண்டும்.

7,457 பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

இலங்கையில் கடந்த 29 ஆம் திகதி முதல் இன்றுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 654 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவால் இலங்கைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவற்றை 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு செலுத்த முடியும்.

அந்தவகையில் முதற்கட்டமாக கொரோனா ஒழிப்பு சமரில் முன்கள பணியாளர்களாக செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு கொவிட் – 19 தடுப்பூசி கடந்த 29 ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டுவருகின்றது.

இதன்படி 29 ஆம் திகதி 5 ஆயிரத்து 286 முன்கள பணியாளர்களுக்கும், 30 ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31 ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2 ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3 ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்துடன், 4 ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5 ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும், 6 ஆம் திகதி 3,838 பேருக்கும்,7 ஆம் திகதி 1,625 பேருக்கும், 8 ஆம் திகதி 5,989 பேருக்கும், 9 ஆம் திகதி 6,431 பேருக்கும், 10 ஆம் திகதி 2,532 பேருக்கும்,11 ஆம் திகதி 1,362 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

12 ஆம் திகதி ஆயிரத்து 110 பேருக்கும், இன்று 13 ஆம் திகதி 7,457 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

‘எவரும் வரலாம் – போகலாம், எங்கள் முற்போக்கு பயணம் தொடரும்’

எவரும் வரலாம். எவரும் போகலாம். எங்கள் முற்போக்கு பயணம் தொடரும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு,
மலையக சமகால வரலாற்றில், தமிழ் முற்போக்கு கூட்டணி அதிகாரத்தில் இருந்த காலமே, அதிக காத்திரமான காரியங்கள் நிகழ்ந்த பொற்காலம். மனசாட்சியுள்ள எவரும் இதை மறுத்திட முடியாது. ஆரம்பித்து முடிவுராத பல காரியங்கள் இன்னமும் உள்ளன. அவற்றை முடித்திட நாம் மீண்டும் எழுந்து அதிகாரத்துக்கு வருவோம். அதுவரை எதிரணியில் இருந்து காத்திரமான தேசிய பணியை நாம் ஆற்றுகிறோம்.
கீழ்வரும் ஆவணம், தமிழ் முற்போக்கு கூட்டணியின், 2015 முதல் 2019 வரையிலான நான்கு (4) வருட சாதனைகளை பட்டியலிடுகிறது.
எங்கள் முழு ஆட்சிகாலம், 2018 வருட ஒக்டோபர் மாத அரசியலமைப்பு சதியின் மூலமும், பின் 2019ம் வருடம் முன்கூட்டியே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதனாலும், அதிகாரத்தில் இருந்த காலம் நான்கு (4) வருடங்களாக சுருங்கியது.
இந்த “நான்கு (4) வருட சாதனைகளை”, எங்களுக்கு முன் மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்து, 1978 முதல் 2015 வரை சுமார் நாற்பது (40) வருட காலமாக, மாறி மாறி வந்த ஒவ்வொரு ஆட்சியிலும் அதிகாரத்தில் இருந்த ஏனைய “கட்சிகளின்” செயற்பாட்டுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
1. தோட்டங்களில் ஏழு பேர்ச் காணி வழங்கலுக்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2. நீண்ட காலமாக நின்று போயிருந்த, இந்திய அரசின் பெருந்தோட்ட வீடமைப்பு உதவி திட்டம், இலங்கை-இந்திய அரசுகளின் ஒப்புதலுடன், இந்திய அரசுக்கும், புதிய மலைநாட்டு கிராமங்கள் அமைச்சுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையடுத்து, நடைமுறைக்கு வந்தது.
3. அதன்படி, தோட்ட தொழிலாளருக்கான சொந்த உறுதி பத்திரம் கொண்ட தனி வீடுகள் கட்டப்படும் திட்டம் மலைநாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.
4. அவ்விதம், கட்டப்படும் குடியிருப்புகள் மலையகத்தில் புதிய “கிராமங்களாக” அறிவிக்கப்பட்டு, மலைநாட்டின் மற்றும் இந்திய, இலங்கை பழம்பெரும் தலைவர்களின் பெயர்களால் பெயரிடப்பட்டன.
5. நுவரெலிய மாவட்டத்தில், மேலதிக புதிய ஆறு பிரதேச சபைகள் அமைக்கும் தீர்மானம், அரசாங்கத்துக்குள் நடைபெற்ற பெரும் வாத விவாதங்களுக்கு பின்னர், அரசாங்கத்தால், ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய பிரதேச சபைகள் அமைக்கப்பட்டு, மலையக தமிழ் மக்களால் அரசியல் அதிகாரம் பகிர்வு உண்மையாக உணரப்பட்டது.
6. “மலையக மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்படும் பிரதேச சபைகளுக்கு, தம்மை தெரிவு செய்யும் தோட்ட புறங்களுக்கு, அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது” என 1987 முதல் சுமார் 30 வருடங்களாக இருந்த, மலையக பிரதேச சபை அதிகார எல்லை சட்டத்தின் கொடூரமான 33ம் இலக்க விதி, அதற்கான திருத்த சட்டமூல அமைச்சரவை பத்திரம், அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தில் சட்டமாகி, இப்போது பிரதேச சபைகளின் அதிகார வரம்பு, தோட்டபுறங்களுக்கு உள்ளேயும், அதிகாரபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
7. மலையக அபிவிருத்திக்கான தனியான அதிகார சபை அமைக்கும் அமைச்சரவை பத்திரம், அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் சமர்பிக்கப்பட்டு, இரு சந்தர்ப்பங்களிலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று சட்டமாகி, பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை அமைக்கப்பட்டுள்ளது.
8. சுமார் 300 தோட்டபுற பாடசாலைகளுக்கு, அவ்வவ் தோட்டங்களில், அவசியப்படும் போது, மேலதிக காணிகளை சுவீகரிக்கும் அதிகாரத்தை கல்வி துறைக்கு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது.
9. மலையக மக்களுக்கு, தேசிய அரசியலமைப்பு பணியில், ஏனைய இனங்களுக்கு வழங்கப்படும் அதே சம அந்தஸ்தும், காத்திரமான சமபங்கும், வழங்கப்பட்டன.
10. தேசிய நிர்வாக அதிகார பரவலாக்கும் கொள்கையின்படி, புதிய ஆறு பிரதேச சபைகளுக்குள்ளும், ஏனைய பெருந்தோட்ட பிரதேசங்களிலும், புதிய பிரதேச செயலகங்களும், கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
11. பெருந்தோட்ட மறுசீரமைப்பு இலக்கில், தோட்ட தொழிலாளர்களின் வருமானத்தை கூட்டும் வெளிப்பயிர்செய்கை வருமான திட்டம் சீரமைக்கப்பட்டு, தோட்ட தொழிலாளர்களை, சிறு நில உடைமையாளர்களாக (மலையக விவசாயி) ஆக்கும் திட்டம் பற்றிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அது, தமுகூ பங்கு கொண்டு ஆதரித்த, 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டது. இது இப்போது சாதகமான எதிர்கால பயன்பாட்டுக்கான ஆவணம்.
12. மலையக பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில், தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் முன்னெடுப்பில் ‘மலையக சான்றோர் ஆய்வுக்குழு’ அமைக்கப்பட்டதுடன், அக்குழு கூடி ஆராய்ந்து, பல்கலைக்கழகம் தொடர்பான சாத்தியப்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
13. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சாரம், மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி ஆகிய அமைச்சரவை அமைச்சுகள் மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சு ஆகியவை மூலமாக மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, வட, கிழக்கு மாகாணங்களில் செய்யப்பட்ட பல மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி பணிகள் இங்கே கூறப்படவில்லை.

கொரோனாவால் மேலும் 6 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பெண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இன்று மாத்திரம் 796 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆயிரம் ரூபா விடயத்தில் அரசும்,கம்பனிகளும் கூட்டு நாடகம்!

” ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என சில தொழிற்சங்கங்கள் மார்தட்டினாலும் இன்னும் அது சரிவரவில்லை. கூட்டு ஒப்பந்தம், சம்பள உயர்வு ஆகிய இரண்டையும் இழக்கவேண்டிய அபாய நிலையும் இருக்கின்றது.
 
கம்பனிகளுடன் இணைந்து அரசாங்கம் நாடகமாடுகின்றது. அரசாங்கத்தின்கீழ் 3 பெருந்தோட்ட நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் ஊடாகவேனும் ஆயிரம் ரூபாவை வழங்கியிருக்கலாம். எனவே, பெருந்தோட்டத்துறை தொடர்பில் பொதுவானதொரு பொறிமுறை அவசியம்.”
 
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கம்பளையில் பல்பொருள் அங்காடி ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா

கம்பளை நகரில் அமைந்துள்ள பாரிய பல்பொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களில் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களின் குடும்பங்களும், தொடர்பில் இருந்தவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடம் கடந்த 8 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. பரிசோதனை முடிவுகள் நேற்று (12) வெளியாகின. இதன்படி 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திலகர் ‘அவுட்’ – உதயாவுக்கு உயர் பதவி! திகாம்பரம் அதிரடி முடிவு!!

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய முன்னணியின் மத்திய குழுக் கூட்டம், கினிகத்தேனையில் அமைந்துள்ள வெரிட்டாஸ் விடுதியில் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் இன்று (13) நடைபெற்றது.

இதன்போதே முன்னணியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், பிரதிப் பொதுச் செயலாளர் வீ.புத்திரசிகாமணி ஆகியோர் நீக்கப்பட்டு, அப்பதவிகளுக்குப் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக  சவரிமுத்து வைலட்மேரியும் பிரதிப் பொதுச் செயலாளராக ரட்ணம் சிவகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பதாக முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்த எம். திலகராஜ், பிரதி பொதுச் செயலாளராக இருந்த வீ. புத்திரசிகாமணி, கொட்டகலை அமைப்பாளராக இருந்த செந்தூரன் ஆகியோர், அந்தப் பதிவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

அதேவேளை, தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவர் பதவி உதயகுமார் எம்.பிக்கு வழங்கப்பட்டுள்ளது.

74, 484 பேருக்கு கொரோனா – 67,831 பேர் குணமடைவு

நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவிலிருந்து 67 ஆயிரத்து 831 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 269 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 384 பேர் உயிரிழந்துள்ளனர்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

மட்டுக்கலையில் விபத்து!

0
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை மட்டுக்கலை சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் காரொன்று விபத்துக்குள்ளானது. தலவாக்கலையில் இருந்து நுவரெலியா நோக்கிசென்ற கார் ஒன்றின் குறுக்கே திடீரென ஒரு நாய் பாய்ந்தபோது, அதனைப்...

25 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் இறால் அபிவிருத்தி!

0
இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக லாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு வரவு - செலவுத்...

தோட்டத் தொழிலாளியின் மகன் மீது தாக்குதல்: முகாமையாளர்களை இடமாற்றக்கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

0
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு   தோட்டத் தொழிலாளியின் மகன் மீது தோட்ட முகாமையாளர் உள்ளிட்ட குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து, உடபுஸ்ஸல்லாவ - பெயாலமன்ட் (Blairlomond) தோட்டத்தைச் சேர்ந்த சென்மார்கிரட் பிரிவின் தொழிலாளர்கள் இன்று...