Home Blog Page 3627

மியன்மார்மீது பொருளாதாரத்தடை – ஜோ பைடன் உத்தரவு

மியான்மர் மீது பொருளாதார தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த முதலாம் திகதி கூடவிருந்த நிலையில் இராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதை வல்லரசு நாடான அமெரிக்கா கடுமையாக கண்டித்தது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

மியான்மர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அங்கு ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதை அந்த நாட்டின் ராணுவ தளபதி மின் ஆங் ஹலேங் நியாயப்படுத்தினார்.

இந்த நிலையில் மியான்மர் இராணுவ தலைவர்கள் மீது அமெரிக்கா அதிரடியாக பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையொட்டி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசியபோது, “மியான்மரில் நடந்த சதித்திட்டத்தின் மீதான விளைவுகளை சுமத்த தொடங்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை அறிவிக்கிறேன். அமெரிக்காவில் மியான்மர் அரசாங்க நிதியில் இருந்து 1 பில்லியன் டாலர்களை எடுப்பதற்கான முறையற்ற அணுகல்களை தடுக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது.

மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் தொடர்புடைய ராணுவ தலைவர்கள், அவர்களது வணிக நலன்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மீது பொருளாதார தடை விதிக்கும் நிர்வாக உத்தரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்” என கூறினார். “இந்த நடவடிக்கைக்கு முதல் கட்டமாக இலக்கு ஆகிறவர்கள் இந்த வாரம் அடையாளம் காணப்படுவார்கள். மியான்மர் அரசு சொத்துகளை முடக்குகிறோம்” எனவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் அதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். இந்த உத்தரவு விரைவில் அமலுக்கு வருகிறது.

சீனாவில் பிபிசிக்கு தடை விதிப்பு – இங்கிலாந்து கடும் எதிர்ப்பு!

சீனாவில் பிபிசி செய்தி சேனலுக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்றுக்கொள்ள முடியாதது என இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

தற்போது உலக வல்லுநர்கள் சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் ஜிங்ஜியாங் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டும் உள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், ஜிங்ஜியாங் பிரச்சினை குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டியது. இதையடுத்து, பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சீனாவின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப் இது பற்றி கூறுகையில், “ சீனாவின் நடவடிக்கை கருத்து ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது” எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல், அமெரிக்காவும் சீனாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

பண்டாரவளை பிரதேச சபையின் ‘பட்ஜட்’ நிறைவேற்றம்!

பண்டாரவளை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

சபையின் தலைவர் சங்கைக்குரிய கரகாவெல நந்தவிமல தேர ர்தலைமையில், சபை மண்டபத்தில்12-02-2021ல்சபை அமர்வு கூடியபோது, தவிசாளரால் இவ்வாண்டிற்கான வரவு – செலவுத்திட்டநிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதையடுத்து, நிதி அறிக்கை குறித்து வாதவிவாதங்கள் இடம்பெற்று, வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இவ்வாக்கெடுப்பில் ஆளும் பொதுஜன முன்னனிக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவாகவும், ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியகட்சிகளைச் சார்ந்தவர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இதனடிப்படையில் ஆதரவாக 14 வாக்குகளும், எதிராக மூன்றுவாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து 11 அதிகப்படியான வாக்குகளால் வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

எம். செல்வராஜா, பதுளை

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து மாணவி தற்கொலை!

தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து மாணவியொருவர் இன்று (12) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தலாவாக்கலை –  ரத்னனீலகல என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மொனிஷா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே அவர், நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார் என பொலிஸார் மேற்கொள்ள ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலவாக்கலை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

செய்தி – நீலமேகம் பிரசாந்த்

மொட்டு கூட்டணிக்குள் மோதல் ! 12 கட்சிகள் கூட்டாக எடுத்துள்ள அவசர முடிவு!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்க கூட்டணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கொழும்பு அரசியலில் களத்தில் அவசர சந்திப்புகளும் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் தேரர்கள் சிலர் இறங்கியுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் குறித்து விமல்வீரவன்ஸ வெளியிட்ட கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தமது கட்சி குறித்து கருத்து வெளியிடுவதற்கு விமலுக்கு அருகதையும் கிடையாது என பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அறிவிப்பு விடுத்ததுடன், விமல் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் சிலர் விமலை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதற்கு விமலும் பதிலடி கொடுக்க பிரச்சினை உச்சம் தொட்டது.

இந்நிலையில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் 12 கட்சிகள் விமல்வீரவன்சவின் வீட்டில் நேற்று அவசர சந்திப்பொன்றை நடத்தின. இதன்போது அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் எனவும், கூட்டு பொறுப்புடனும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையின்போது ஒருமித்த குரலில் கருத்து வெளியிட வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இத்தகையதொரு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும், சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

இலங்கையில் இதுவரை 178,087 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

இலங்கையில் கடந்த 29 ஆம் திகதி முதல் நேற்றுவரை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 87 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவால் இலங்கைக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவற்றை 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு செலுத்த முடியும்.

அந்தவகையில் முதற்கட்டமாக கொரோனா ஒழிப்பு சமரில் முன்கள பணியாளர்களாக செயற்படும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு கொவிட் – 19 தடுப்பூசி கடந்த 29 ஆம் திகதி முதல் ஏற்றப்பட்டுவருகின்றது.

இதன்படி 29 ஆம் திகதி 5 ஆயிரத்து 286 முன்கள பணியாளர்களுக்கும், 30 ஆம் திகதி 32 ஆயிரத்து 539 பேருக்கும், 31 ஆம் திகதி 21 ஆயிரத்து 329 பேருக்கும், பெப்ரவரி முதலாம் திகதி 36 ஆயிரத்து 396 பேருக்கும், 2 ஆம் திகதி 23 ஆயிரத்து 217 பேருக்கும், 3 ஆம் திகதி 21 ஆயிரத்து 147 பேருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்துடன், 4 ஆம் திகதி 6 ஆயிரத்து 413 பேருக்கும், 5 ஆம் திகதி 9 ஆயிரத்து 983 பேருக்கும், 6 ஆம் திகதி 3,838 பேருக்கும்,7 ஆம் திகதி 1,625 பேருக்கும், 8 ஆம் திகதி 5,989 பேருக்கும், 9 ஆம் திகதி 6,431 பேருக்கும், 10 ஆம் திகதி 2,532 பேருக்கும்,11 ஆம் திகதி 1,362 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

‘பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்’

பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.

ஆணைமடு கண்ணங்கர வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி கட்டிடத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே   பிரதமர் இவ்வாறு கூறினார்.

கல்வி அமைச்சு 360 மில்லியன் ரூபாயை செலவிட்டு இந்த மூன்று மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கட்டிடம் திறக்கப்பட்டதன் ஊடாக 2861 மாணவர்கள் மற்றும் 90 ஆசிரியர்களையும் கொண்ட கண்ணங்கர வித்தியாலயத்தின் அடிப்படை குறைப்பாடுகள் நிவர்த்திக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் அதிபர் விமல் விஜேரத்ன உள்ளிட்ட ஆசிரியர் குழாமினால் கௌரவ பிரதமர் வரவேற்கப்பட்டார்.

ஆணைமடு கண்ணங்கர வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை திறந்துவைத்து கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
இன்று இப்பாடசாலைக்கு வருகைத்தந்து உங்கள் அனைவரையும் சந்திக்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதே எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

நாம் எவ்வளவு பாடுபட்டாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையானோரே பல்பலைக்கழகத்திற்கு செல்ல முடியும். அதனால்தான் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தேவைப்படுகின்றன.

விசேடமாக தொழில் பயிற்சி அதிகாரசபையை உருவாக்கி, எமது பிள்ளைகளின் கரங்களை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம். அவ்வாறு பிள்ளைகளின் கரங்களை பலப்படுத்தினால் அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று கொள்வதற்கு கடினமாக அமையாது. எமது யுகத்தில் நாங்கள் இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி அளித்து கொரியா மற்றும் ஜப்பானுக்கு அனுப்பத் தொடங்கினோம்.

எனக்கு நினைவிருக்கிறது முதல் முறையாக எங்கள் தொகுதியில் உள்ள இளைஞர்களை கொரியா செல்லுமாறு கூறியபோது நாங்கள் உங்களுக்காக வேலை செய்தது கொரியா செல்வதற்கு அல்ல என்று குற்றம் சாட்டினர். அதனையடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியை அனுப்பினேன். அதன் பின்னர் முதலாவது சம்பளத்தை பெற்று அப்பணத்தை வீட்டிற்கு அனுப்பியவுடன் அந்த இளைஞர்கள் மீண்டும் ஓடிவந்து ஐயோ எங்களையும் அனுப்புங்கள் என கூறினர்.

அதுவரை கொரியா தொடர்பில் கொரியா குறித்து ஒரு விசித்திரமான நிலைப்பாடே காணப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலைப்பாடில்லை. இன்று எமது இளைஞர்கள் வெளிநாட்டிற்கு சென்று பணியாற்ற ஆர்வம் காட்டிவருகின்றனர். நாம் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன? முடிந்தளவு பாடுபட்டு கல்வி கற்று எமது பல்கலைக்கழகத்திற்கு சென்று சிறந்த கல்விமான்களாகுங்கள்.

பல பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். பிள்ளைகள் புத்தக பூச்சிகளாக இருப்பதும் ஒரு பாரிய அழுத்தமாகும்.எனவே, இந்த காலகட்டத்தில் நீங்கள் பெறும் அறிவு கல்விக்கு மட்டுமல்ல, விளையாட்டு மற்றும் தொழிற்பயிற்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பிள்ளைகள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்றே இந்த பிள்ளைகளின் பெற்றோரான நீங்கள் அனைவரும் நாங்களும் எதிர்பார்க்கின்றோம். கடின முயற்சியுடன் கல்வி கற்று சிறந்த குடிமக்களாக மாறுமாறு நாம் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.

‘சம்பள விவகாரம் இரண்டு தோணியில் கால் வைத்த கதையாகியுள்ளது’

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் இரண்டு தோணியில் கால் வைத்த கதையாகி இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆயிரம் ரூபா நாட்சம்பளம் தொடர்பில் சம்பள நிர்ணய சபை எடுத்த முடிவுக்கு கம்பனிகள் இணங்கவில்லை என்பது அவர்கள் அதனை எதிர்த்து வாக்களித்ததில் இருந்தே தெளிவாக தெரிகிறது. மேலும் 14 நாள் கால அவகாசத்தினை பயன்படுத்தி அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் செல்லலாம்.

மறுபுறம் தாங்கள் 1000 ரூபா நாட்சம்பளத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கொண்டாடினாலும் அடுத்துவரும் மாதங்களில் அந்த சம்பளத்தை மாதாந்தம் பெறும் தொழிலாளர்கள் வாயிலாக அதன் உண்மைத் தன்மை வெளிப்படும்.

எது எவ்வாறாயினும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமை கேள்விக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் இது என்றவகையில் தோட்டத் தொழிலாளர் சம்பளவிவகாரம் இரண்டு தோணியில் கால் வைத்த கதையாகி இருக்கிறது. அது பெருந்தோட்ட நிர்வாக முறைமை மாற்றத்தை நோக்கிய கோரிக்கையை வலுப்படுத்துவதாக அமையும்.

சம்பள நிர்ணய சபை ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தைத் தீர்மானிக்கும் முறைமை புதியதல்ல. ஆனாலும்கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்மானிப்பதற்கான ஒரு முறைமை வந்தவுடன் அந்த முறைமை கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் அந்த முறைமைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரமும் ஆண்டின் இறுதியில் பிரதமர் வரவு செலவுத் திட்டத்தில் விடுத்த அறிவிப்பும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவில்லை. அது அரசாங்கத்துக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த நிலையிலேயே சம்பளநிர்ணய சபையின் ஊடாக தீர்மானிப்பதற்கு தொழில் அமைச்சர் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.

இதனை கம்பனிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவு. அவர்கள் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்க 14 நாட்கள் கால அவகாசம் உண்டு. அதற்குள் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தங்களது தீர்மானத்தை வெளியிட்டு அதனை ஏற்று நடைமுறைப்படுத்த கம்பனிகள் நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர்கள் வழங்கும் வேலை நாட்களைக் குறைக்க வாய்ப்பு உள்ளது.

எனவே அது தொழிலாளர்களின் மாத வருமானத்தைக் குறைக்க வல்லது. இதனால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை மாற்றுவடிவில் வெளிவரும். இதன்போது அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் மேலும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கும் தேவை எழும்.

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையில் மாற்றம் வேண்டுமென கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வந்துள்ளது. இப்போது சம்பள நிர்ணய சபை மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒரு தொகையை கம்பனிகள் வழங்க வேண்டும் என அரசினால் நிர்ப்பந்திக்கப்படும் நிலையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையின் இறுக்கம் தளர்ந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது.

இந்த நிலைமைகளானது முறைமை மாற்றம் ஒன்றிற்கான அழுத்தத்தை அதிகரிக்கும். சமூக மட்டத்திலும் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என்கிற நிலையைக் கடந்து இந்தப் பிரச்சினையைப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படும். இது அரசியல் ரீதியான ஒரு முன்னகர்வு என கொள்ளுதல் வேண்டும். அதே நேரம் அந்த அரசியலை கவனமாக முன்னகர்த்தவும் வேண்டும் என்றார்.

முற்போக்கு கூட்டணிக்குள் முறுகல்! தனிவழி செல்வாரா ராதா?

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

மலையகத்தில் உதயமான கூட்டணிகளுள் 4 வருடங்களுக்குமேல் தாக்குபிடித்து நின்ற கூட்டணி என்ற பெருமை தமிழ் முற்போக்கு கூட்டணியையே சாரும். அவ்வாறானதொரு கூட்டணிக்குள்தான் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மலையக மக்கள் முன்னணியின் செயற்பாடே காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பியை, முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்திய நிர்வாகக்குழு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை மலையக மக்கள் முன்னணியிடம் ஒப்படைத்தது.

எனினும், மலையக மக்கள் முன்னணி இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அரவிந்தகுமாரை கட்சியில் தக்கவைத்துக்கொள்வதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதுமட்டுமல்ல சம்பள உயர்வு போராட்டத்துக்கான ஆதரவையும் மலையக மக்கள் முன்னணி தன்னிச்சையாக வெளியிட்டதால் இதர இரு பங்காளிகளும் அக்கட்சிமீது அதிருப்தியில் இருக்கின்றன.

இந்நிலையில் அடுத்துவரும் தேர்தல்களில் மலையக மக்கள் முன்னணி இல்லாமல்தான் போட்டியிட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்க உறுப்பினர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். இவ்விடயம் உட்பட மேலும் சில காரணங்களாலேயே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

‘கொரோனா’வால் மேலும் நால்வர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 379 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மூன்று பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

25 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் இறால் அபிவிருத்தி!

0
இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக லாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு வரவு - செலவுத்...

தோட்டத் தொழிலாளியின் மகன் மீது தாக்குதல்: முகாமையாளர்களை இடமாற்றக்கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

0
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு   தோட்டத் தொழிலாளியின் மகன் மீது தோட்ட முகாமையாளர் உள்ளிட்ட குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து, உடபுஸ்ஸல்லாவ - பெயாலமன்ட் (Blairlomond) தோட்டத்தைச் சேர்ந்த சென்மார்கிரட் பிரிவின் தொழிலாளர்கள் இன்று...

” இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்தல் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு”

0
டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இன்று (16) முற்பகல்...