Home Blog Page 3638

‘சம்பள உரிமையை வெல்ல ஓரணியில் திரள்வோம்’

நாளை 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தப்போராட்டமானது முற்று முழுதாக கம்பனிகளுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கும், தொழிலாளர்களின் ஒற்றுமையை வெளிக்காட்டுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டதாகும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜெ . அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகியுள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி சிந்திக்கும் ஒவ்வொருவரும் இந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களின் நியாயமான இக்கோரிக்கைக்கு எமது தோல்கொடுத்து எமது ஒற்றுமையை வலியுறுத்துவோம் .

நாட்டின் தற்போதைய சுகாதார விதிமுறைகளை கருத்திற்கொண்டு பணிப்பகிஸ்கரிப்பு செய்து வீட்டில் இருந்தவாறே இந்த அடையாள போராட்டத்தை மேற்கொள்ள சகல இளைஞர் யுவதிகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக அழைப்பு விடுக்கின்றோம்.

மேலும் இந்த போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் எமக்கு ஆதரவு தெரிவித்துள்ள நகர வர்த்தகர்கள் , முட்சக்கர வண்டி சங்கங்கள் , ஏனைய போக்குவரத்து சங்கங்கள் , ஏனைய தொழிற்சங்கங்கள் , அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் , பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் மற்றும் ஏனைய சகல துறை சார்ந்த அமைப்புகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணியினரின் சார்பில் நன்றிகள் .” – என்றும் அவர் கூறினார்.

பொத்துவில் -பொலிகண்டி வரையானபோராட்டத்துக்கு ம.ம.மு. ஆதரவு!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் முழு ஆதரவை வழங்குவதாக முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ.இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (04.01.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, சம்பள உயர்வுக்கான உரிமைப்போராட்டம் மற்றும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நடைபெறும் யாத்திரை ஆகியன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இவை குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி நாளை (05) மலையகம் தழுவிய ரீதியில் நடைபெறும் அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு மலையக தொழிலாளர் முன்னணி ஏற்கனவே தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர்கள் மத்தியில் பிளவு ஏற்படாமல் உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரண்டு காட்ட வேண்டும் என்பதற்காகவே நாம் இந்த முடிவை எடுத்தோம்.
ஆயிரம் ரூபா சம்பளம் மட்டுமல்ல கூட்டு ஒப்பந்தத்தின்மூலம் கிடைக்க வேண்டிய தொழில் உரிமைகள் மற்றும் சலுகைகளும் முழுமையாக கிடைக்கவேண்டும். அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவும் எமது அழுத்தம் தொடரும்.

சம்பள உரிமைக்கான போராட்டத்தை நடத்துவதற்கு மலையக தொழிலாளர் முன்னணி திட்டமிட்டிருந்தவேளையிலேயே, ஏனைய தரப்பும் அழைப்பு விடுத்துள்ளது. அந்தவகையில் ஊழியர்களுக்காக இணைந்துபோராடி, தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முழு ஆதரவையும் நாம் வழங்குவோம்.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கும் மலையக மக்கள் முன்னணி முழு ஆதரவை வழங்குகின்றது. இது தொடர்பில் மாவை சேனாதிராஜாவுடன் கலந்துரையாடினோம். அவர்களும் எமது சம்பள உயர்வு போராட்டத்துக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் இன்று காணிகள் அபகிரிக்கப்படுகின்றன. தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன. இவை நிறுத்தப்படவேண்டும். அதற்காக தமிழ்க்கட்சிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றார்.

க.கிசாந்தன்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆசிரியரும், வாங்கிய மாணவனும் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவரை புபுரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவரிடமிருந்து 520 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளையும் ஆசிரியரிடம் கொள்வனவு செய்த 17 வயது சிறுவனிடமிருந்து 470 மில்லிகிராம் கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர முன்நிலையில் ஆஜர் படுத்தியபோது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கஞ்சா கொள்வவுசெய்த 17 சிறுவனை சமூக சேவையில் ஈடு படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

புபுரஸ்ஸ தோட்டப்பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிவந்த மேற்குறிப்பிட்ட ஆசிரியர் பகுதி நேர வியாபாரமாக கஞ்சாவினை விற்பனை செய்து வந்ததாக தெரியவருகிறது.

இந் நிலையில் புபுரஸ்ஸ பொலிஸாருக்கு கடந்த வியாழக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவிலுக்கமைய மேற்குறிப்பிட்ட சிறுவனை பரிசோதனைக்குட்படுத்திய பொழுது அவனிடமிருந்து 470 மில்லிகிராம் கஞ்சாவினை கைப்பறிள்ளனர்.

கம்பளை சேகர்

‘ஊதிய உயர்வுக்கான போராட்டம்’ – நுவரெலியா மாவட்டத்தில் சகலரும் ஆதரவு

பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குமாறு வலியுறுத்தி நாளை (05) நடைபெறவுள்ள அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளனர் என்று நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜா தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பிரதேச சபை காரியாலயத்தில் இன்று (04.02.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முயற்சித்தபோதும் கடந்த பேச்சுவார்த்தையின் போது 200 ரூபாய் சம்பள உயர்வு மட்டுமே பெற முடிந்தது.

இன்று இ.தொ.கா வின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இந்த ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றார்.

அதன் ஆரம்பகட்டமாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும், சம்பள நிர்ணய சபைக்கும், அரசாங்கத்திற்கும் ஒரு அழுத்தம் கொடுக்கும் முன்னோடி ஏற்பாடான நாளை (05.02.2021) அமைதியான ஒரு நாள் பணிபகிஷ்கரிப்பை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒண்றிணைந்து ஒற்றுமையாக கைகோர்க்க வேண்டும்.

இந்த பணிபகிஷ்கரிப்புக்கு அனைத்து தோட்ட தொழிலாளர்களும் மலையகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நகர வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், ஆசிரிய தொழிற்சங்கங்கள், இளைஞர்கள், நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பொது மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு  வழங்குவார்கள்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘சிங்கள பெளத்த இராஜ்ஜியமே கோட்டாவின் இலக்கு’ – மனோ கருத்து

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான், இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்யத்தையே  கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாக என தெளிவுபட கூறி விட்டார். இதற்காக அவர், கெளதம புத்தரையும் துணைக்கு அழைத்து, தன்னை நியாயப்படுத்தியுள்ளார் என்று கொழும்பு மாவட்ட எம்பியும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி தலைவர் மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

” ஜனாதிபதி கோதாவின் இன்றைய சுதந்திர தின உரையின் பிரதான சாராம்சத்தை கேட்டு பார்த்தால் இது தெளிவாக புரிகிறது. தேடிப்பார்த்ததில் அவரது சிந்தனையில் உள்ள நான்கு முத்தான விடயங்களை தனது உரையில் அவர் உதிர்த்துள்ளார் என தெரிய வருகிறது

நாம் பல இன, மொழி, மத மக்கள் சகவாழ்வு வாழும் சுபீட்சமான இலங்கை ராஜ்யத்தை கட்டை எழுப்ப முயல்கிறோம். ஜனாதிபதி, தான் இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்யத்தையே தன கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாக என தெளிவுபட கூறி விட்டார்.

உண்மையில் தனது இலக்கை, ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக, உள்ளதை உள்ளபடி கூறியமையையிட்டு நான் ஜனாதிபதியை பாராட்டுகிறேன். அவரது இலக்கை நாம் ஏற்க மறுக்கிறோம் என்பது வேறு விஷயம். ஆனால், அவர் ஒளிந்து விளையாடவில்லை அல்லவா?

உலகத்துக்கு ஜனாதிபதி ஏதோ சொல்ல வருகிறார், அது என்ன என குழப்பிக்கொள்ள வேண்டாம். அவர் பின்வரும் நான்கு கருத்துகளைதான் தெளிவாக கூறுகிறார்.

(01) நீங்கள் தேடிய தலைவன் நான்தான். (02) நான் ஒரு சிங்கள பெளத்த தலைவன். இதை சொல்ல நான் ஒருபோதும் தயங்க போவதில்லை. (03) பெளத்த படிப்பினைகளின் அடிப்படைகளிலேயே நான் இந்நாட்டை ஆளுவேன். (04) நாட்டின் சட்ட வரையறைக்குள் எல்லா இன, மதத்தவருக்கும், சுதந்திரமும், சமத்துவமும் பெற்று சமாதான சகவாழ்வு வாழ பெளத்த தத்துவத்துக்குள்ளே உரிமையுண்டு.” – என்றுள்ளார்.

“நீங்கள் கேட்ட தலைவர் நான் – பொறுப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன்’ – ஜனாதிபதியின் சுதந்திர தின உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் 73 வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு,

நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரத்தை வென்றெடுக்க பல்வேறு தியாகங்களைச் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாயர், பரங்கியர் போன்ற பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் இன்றைய தினம் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.

அதேபோன்று, தேசத்தின் சுதந்திரத்திற்காகவும், இறைமைக்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்த, பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்த படைவீரர்களையும் நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

சுதந்திரம் பெற்ற 73 ஆண்டுகளில், ஒரு தேசமாக நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம். மத மற்றும் இன அடிப்படையிலான மோதல்கள், இனவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள், தேவையற்ற வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிகள் போன்ற பல பிரச்சினைகளை அவ்வப்போது எதிர்கொண்டோம். தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல், எமது நாட்டில் வாழும் பல்வேறு இனத்தவர்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், வறுமையை முற்றாக ஒழித்து வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் சவால் இன்னும் எமக்கு முன் உள்ளது.

எமது நாட்டின் தேசிய மரபுரிமைகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், தேசியம் மற்றும் தேசப்பற்று ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பலவீனமுற்றிருந்த தேசிய பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தி தாய் நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொள்வதற்கான தலைமைத்துவத்தை வழங்க இந்த நாட்டின் 69 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்தனர்.

நான் ஒரு சிங்கள பௌத்த தலைவர். அதை வெளிப்படுத்த நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். பௌத்த போதனைகளின்படியே நான் இந்த நாட்டை நிர்வகிக்கிறேன். அனைத்து சமயங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் உரிய கௌரவத்தை அளிக்கும் அஹிம்சையும் அமைதியும் கொண்ட பௌத்த தத்துவத்தில், எமது நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்குள் சரி சமமாக சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு.

தேசியத்தை மதிக்கும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் ஒரு தேசிய தலைமைக்கு எதிராக தேசத்துரோக சக்திகள் அணி சேர்ந்து, தங்கள் இலக்குகளை அடைய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை நாடுகின்றன.

இவர்கள் மிகவும் நுட்பமாக பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இந்த நாட்டு மக்கள் எப்போதும் விவேகத்துடன் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தரவுகளின் அடிப்படையில் விடயங்களை ஆராய்ந்து உண்மைகளை அறிந்து முடிவுகள் எடுக்கப்பட்டால் எவருக்கும் பொதுமக்களை தவறாக வழிநடத்த முடியாது.

நான் முன்வைத்த “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாய்ப்பளித்துள்ளனர்.
எதர்கால சந்ததியினருக்காக நாம் வென்ற சுதந்திரத்தை எப்போதும் பாதுகாப்பதற்கும், எமது நாட்டின் ஒருமைப்பாடு, ஆள்புல எல்லை மற்றும் இறைமையைப் பாதுகாப்பதற்கும் அரச தலைவர் என்ற முறையில் நான் உறுதியளித்திருக்கிறேன். அந்த உறுதிமொழியை நான் எப்போதும் பாதுகாப்பேன்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு. இன அல்லது மத அடிப்படையில் குடிமக்களைப் பிரிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஒரே சட்டம் என்ற கொள்கையே எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுவே எப்போதும் எமது நிலைப்பாடு.

நாங்கள் எப்போதும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறோம். கடந்த காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை மீது அரசியல்வாதிகள் மேற்கொண்டிருந்த அழுத்தத்தை மக்கள் நிராகரித்தனர். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளிடமிருந்து நியாயமான, பக்கச்சார்பற்ற மற்றும் திறமையான சேவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன்படி, மக்களின் முக்கிய கவனத்தை ஈர்த்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி போன்ற குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தற்போது எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும் கடந்த பாராளுமன்றத்தினால் இது பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு குறித்த கண்காணிப்பு செயற்குழுவின் பரிந்துரைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கொடூரமான குற்றத்தைத் திட்டமிட்ட உதவி ஒத்தாசைகள் வழங்கிய பொறுப்பானவர்கள் எவரும் சட்டத்திற்கு முகங்கொடுக்காமல் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதே போன்று இந்த நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கவும் நாம் இடமளிக்க மாட்டோம்.

கோவிட் தொற்றுநோயால் முழு உலகமும் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில், எமது நாடும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த தொற்றுநோய் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் ஒரு தடையாக இருந்து வருகிறது.

தற்போது, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கோவிட் வைரஸிற்கான தடுப்பூசிகளை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளன. இந்த தடுப்பூசிகளை விரைவாகப் பெறுவதற்கு இலங்கைக்கு உதவுமாறு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன்.

இந்த விடயம் தொடர்பில் உலக சுகாதார அமைப்புடனும் அரசாங்கம் கலந்துரையாடியது. அதன்படி, ஒரு தடுப்பூசி ஏற்கனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு எமது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய உலகளாவிய நெருக்கடியை எதிர்கொண்டு அனைத்து நாடுகளும் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம் வலுவான தேசிய உற்பத்தியாளர்களின் தேவையாகும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக சுதேச விவசாயத்துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எங்கள் கொள்கையானது சரியானதும் காலத்திற்கு ஏற்றதுமாகும் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

இலவச உர விநியோகம், நெல்லுக்கான உத்தரவாத விலையை ரூ.50 வரை உயர்த்தியமை, விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குளங்களை புனரமைத்தல், வீட்டுத் தோட்டம் மற்றும் நகர்ப்புற விவசாய மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல் போன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டில் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

நெல், சோளம், தானிய வகைகள், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை முகாமைத்துவம் செய்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட முடியுமான மஞ்சள் போன்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், மிளகு போன்ற பயிர்களின் மீள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் விவசாயிகளை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.

உள்ளூர் விவசாயிகளை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த விவசாயிகளை தொழில்முயற்சியாளர்களாக மாற்ற வேண்டும் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன், நாட்டிற்கு பெரும் அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் ஒரு துறையாக விவசாயத்தை மேலும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.

பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் முக்கியத்துவத்தை நாம் மறக்கவில்லை. சமீப காலங்களில், இந்தத் துறைகளுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலமும், வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலமும் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பத்திக், பிரம்பு, களிமண் மற்றும் ஆபரணங்கள் போன்ற பாரம்பரியத் தொழில்களை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட இராஜாங்க அமைச்சுக்கள் மூலம் ஏற்கனவே பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு மிகவும் குறைந்த ஒற்றை இலக்க வட்டி விகித கடன் வசதிகளை வழங்குவதிலும், தேவையான ஒப்புதல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பதற்கும் நாங்கள் கவனம் செலுத்தினோம்.

நிர்மாணத் துறையினருக்கு ஊக்கமளித்தல் செயலிழந்திருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கான வெற்றிகரமான ஒரு மூலோபாயமாகும். அதன்படி, நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள 100,000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டம், பத்தாயிரம் பாலங்கள் அமைத்தல், நாடு முழுவதும் குளங்களை புனரமைக்கும் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம், ‘ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு’ என்ற கருப்பொருளின் கீழ் 14,000 கிராமப்புற வீடுகளை நிர்மாணித்தல், நகர்ப்புற சேறிப்புரங்களில் வசிப்போர், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்காக ஒரு லட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம், தோட்ட மக்களுக்கு 4,000 வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் நாடு முழுவதும் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் நடைபாதைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்கும் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கும் நேரடியாக பங்களிக்கும்.

விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சியின் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைகளை அகற்றவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாட்டின் பொருளாதார மையப்பகுதியை வெளிநாட்டினருக்கு விற்கக் கூடாது என்ற கொள்கை எவ்வித மாற்றமும் இன்றி பின்பற்றப்படுவதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதைத் தடுக்க பல்வேறு திட்டங்கள் குறித்து தவறான வியாக்கியானங்களை முன்வைப்போரின் அரசியல் உள்நோக்கங்களை பெரும்பான்மையான மக்கள் அறிவுபூர்வமாக ஆராய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் நாட்டின் மக்களையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்களை பாதிக்கும் காலாவதியான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றவும் புதுப்பிக்கவும் நான் இப்போது ஒரு விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்துள்ளேன். பல காலமாக விவாதிக்கப்பட்டாலும் செயற்படுத்தப்படாதிருந்த இந்த செயன்முறையை நாங்கள் இப்போது ஆரம்பித்துள்ளோம். இந்த குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது நாட்டின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டு செயன்முறைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

21 ஆம் நூற்றாண்டு அறிவு மைய நூற்றாண்டாக கருதப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு மனித வளங்கள் மிக முக்கியமானவை. அறிவு மற்றும் திறன்கள் நிறைந்த எதிர்கால தலைமுறையை உருவாக்க கல்வித்துறையில் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்து “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, கல்வித்துறையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஒரு தனியான இராஜாங்க அமைச்சை நாங்கள் நிறுவியுள்ளோம். இந்த சீர்திருத்தங்களைச் செய்வதற்குத் தேவையான நிபுணத்துவ உதவியைப் பெறும் நோக்கில் இரண்டு செயலணிகள் நிறுவப்பட்டன. இவர்களது பரிந்துரைகளை அமுல்படுத்துவது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 10,000 அல்லது 30% ஆக அதிகரித்துள்ளது. அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 100,000 லிருந்து 200,000 ஆக உயர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் நகர்ப்புற பல்கலைக்கழக அமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவோம். அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க தரமான முன்னேற்றம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நவீன உலகில் எமது பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு சமூகத்தை எமது நாட்டில் உருவாக்க வேண்டும்.

போட்டித்தன்மையுடன் வெற்றிபெற, விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் போன்ற அனைத்து துறைகளும் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். இதற்கு உதவும் வகையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தொழில்நுட்ப புத்தாக்க கலாச்சாரத்தை உருவாக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைகளுக்கு ஏற்ப, பொருளாதார அபிவிருத்திக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் அரசாங்கம் குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கும். தொழில்நுட்ப துறைகளுக்கு ஏற்கனவே பல வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அண்மையில் தொழில்நுட்பத்திற்காக ஒரு தனியான அமைச்சு நிறுவப்பட்டு அதை எனது பொறுப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அமைச்சின் மூலம், தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவது, அத்துடன் அரச பொறிமுறை மற்றும் சந்தை செயன்முறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் நிர்வாகத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். தொழில்நுட்பத் துறையில் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தெரிவுசெய்யப்பட்ட ஐந்து மாவட்டங்களில் ஐந்து தொழில்நுட்ப பூங்காக்களை அனைத்து வசதிகளுடன் திறக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊக்குவிப்புகள் மூலம் தொழில்நுட்பத் துறையில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கிறது.

இதுவரை நான் கூறியவை அனைத்தும் முழு உலகையும் முடக்கிவிட்டிருந்த கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்ட நிலையில், ஒரு வருட குறுகிய காலாத்திற்குள் செய்யப்பட்டுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது என்று இந்த நாட்டின் விவேகமான மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆண்டுதோறும் சுமார் 4,500 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த சுற்றுலாத் துறை, இந்த நாட்டில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கியது. இன்று, இந்த மக்கள் தமது வாழ்வாதார வழிகளை இழந்து கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்த மக்களுக்கு நாம் விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டும். எனவே, சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றி, முறையான திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை படிப்படியாக மீள ஆரம்பிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நான் எப்போதும் சூழலை நேசிப்பவன். நான் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்தபோது, நகரங்களை அழகுபடுத்தல், வீடமைப்பு அபிவிருத்தி, நடைப்பாதைகள் மற்றும் நகர்ப்புற பூங்காக்கள் போன்ற அனைத்து திட்டங்களிலும் சூழலைப் பாதுகாத்து அந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தேன். வருங்கால சந்ததியினருக்காக சூழலைப் பாதுகாக்க இன்றும் எனது அரசு விசேட கவனம் செலுத்தி வருகிறது. நகர்ப்புற வனப் பூங்காக்களை அமைத்தல், பசுமை நகர திட்டமிடல், பசுமை திட்டங்கள், தேசிய மர நடுகை திட்டங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை புனரமைத்தல், தரிசு நெல் வயல்களை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், சேதன உரங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் ஆகிய இவை அனைத்தும் இந்த அரசாங்கம் பேண்தகு சுற்றாடல் முகாமைத்துவ கொள்கையை நடைமுறைப்படுத்தி வருவதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை என்னவென்றால், பொருளாதார சுதந்திரம் இல்லாமல் பொருளாதாரத்தின் உண்மையான பெறுபேறுகளை அடைய முடியாது என்பதாகும். வறுமையை ஒழித்தல், அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்கும் சமமான வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் சுதேச வர்த்தகர்களை ஊக்குவித்தல் போன்ற அரசாங்கத்தின் நோக்கங்களை அடைந்துகொள்ள எங்களுக்கு ஒரு தூய்மையான, வினைத்திறன் வாய்ந்த அரச சேவை அத்தியவசியமானதாகும்.

எமது நாட்டின் அரச சேவை என்பது நாடு முழுவதும் பரவியுள்ள ஒரு வலுவான பொறிமுறையாகும். உலகின் பல நாடுகளுக்கு கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு இது. எனவே, இந்த வலுவான பொறிமுறையானது நாட்டின் தீர்மானம் எடுக்கும் செயன்முறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், இன்று ஒவ்வொரு மட்டத்திலும் முடிவெடுப்பதில் ஒரு பலவீனத்தைக் காண்கிறோம். மிகவும் எளிமையான நிறுவனம் சார்ந்த விடயங்கள் தொடர்பான முடிவுகளில் கூட, அதிகாரிகள் முடிவுகளை எடுப்பதில்லை, அவற்றை அமைச்சரவையிடம் முன்வைக்கின்றார்கள். ஒவ்வொரு விடயத்திலும் சுற்றறிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் தீர்மானங்களை எடுக்கக்கூடிய எல்லைக்குள் கூட தீர்மானங்களை எடுக்க தயங்குகிறார்கள். இந்த நிலைமை மாற்றப்படாவிட்டால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது மிகவும் கடினம்.

சரியான முடிவுகளை எடுத்து நாட்டிற்காக உழைக்கும் அரச ஊழியர்களை மேலும் பாதுகாக்க தேவையான சட்ட சீர்திருத்தங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, சேவைகளை வழங்குவதில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் முறைமைகளை தளர்த்தி அரச பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு பொறுப்புள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
“கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தில் நான் தனிப்பட்ட முறையில் செயற்திறமாக பங்கேற்கிறேன், ஏனெனில் கிராமப்புற அபிவிருத்தி அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமையாகும்.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளை கிராமிய மட்டத்தில் செயல்படுத்துவதில் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரசாங்க பொறிமுறைகள் மிக முக்கியமானவை. இந்த அபிவிருத்தி செயன்முறையில், ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் முதல் கிராமிய மட்டத்தில் சேவைகளை வழங்கும் கிராம சேவகர்கள், சமுர்தி அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், அபிவிருத்தி அலுவலர்கள் என ஒவ்வொரு அரச ஊழியருக்கும் தெளிவான பொறுப்பு உள்ளது. கொரோனா தொற்றுநோய் நிலைமைகளின் போது நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் பிற சேவைகளை வழங்குவதற்கும் அவர்கள் அனைவரும் எங்களுக்கு ஒரு பெரிய பலமாக இருந்தனர். நாட்டின் பொருளாதார அபிவிருத்தி சவால்களை வெற்றிகொள்வதில் அரச ஊழியர்களின் அதிகபட்ச பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தேசிய விவகாரங்களிலும் கிராமப்புற அபிவிருத்தியிலும் அரசியல் தலைமைக்கு பெரும் பொறுப்பு உள்ளது. எமது அரசாங்கத்தில் அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்கும் ஒரு பொறிமுறையை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஊழல் மற்றும் வீண்விரயம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடைகள். அரச நிர்வாகத்தில் ஊழல் மற்றும் விரயங்களை ஒழிக்க நாம் முன்மாதிரியாக செயற்பட்டு வருகிறோம். ஊழல் மற்றும் வீண் விரயங்களில் குற்றவாளியான எவர் தொடர்பிலும் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் நெகிழ்வுப் போக்கை கடைபிடிக்க மாட்டோம். இருப்பினும், இன்று அரச துறையில் ஊழலைத் தடுப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ மக்கள் இவற்றுக்கு வழங்கும் மறைமுக ஆதரவாகும். எனவே, ஊழலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோக வேண்டாம் என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எவரேனும் ஒருவர் ஊழலில் ஈடுபட்டு உங்களை அவ்வாறு செய்ய தூண்டினால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதனை தெரியப்படுத்துங்கள். ஊழல் மற்றும் வீண்விரயங்களை ஒழிக்க நாடு முழுவதும் ஒரு சமூக கருத்தை உருவாக்குவதில் என்னுடன் இணையுமாறு உங்களை அழைக்கிறேன். எமது எதிர்கால சந்ததியினருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஊடகங்கள் வழங்கும் ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு கடுமையாக உழைத்ததாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அது உண்மையாக இருக்கலாம். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எனக்கு ஆதரவு அளித்தனர். பெரும்பான்மையான மக்கள் அவர்களது தனிப்பட்ட இலாபத்திற்காக அன்றி, என்னிடமிருந்து நாட்டிற்கான சேவையை எதிர்பார்த்தே அவ்வாறு செய்தார்கள் என்று நான் நம்புகிறேன். இத்தகைய நேர்மையான நோக்கங்களுடன் என்னை ஆதரித்த மக்களின் பொதுவான அபிலாஷைகளை நிறைவேற்ற நான் எப்போதும் செயற்படுவேன். ஆனால் தனிப்பட்ட அல்லது வர்த்தக நலன்களை நிறைவேற்றுவதற்கான குறுகிய நோக்கத்துடன் என்னை ஆதரித்தவர்களை மகிழ்விப்பதற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் முடிவுகளை எடுக்க நான் ஒருபோதும் தயாராக இல்லை.

வரலாறு முழுவதும், வலுவான நாகரிகங்கள் கட்டியெழுப்பப்பட்டதும், நாடுகள் அபிவிருத்தி செய்யப்பட்டதும் எதிர்காலத்தை சாதகமாகப் பார்த்து, இலக்குகளை நோக்கி பயணித்த மனிதர்களினாலேயாகும். இந்த நேரத்தில் எமது நாட்டின் வளர்ச்சிக்கும் இத்தகைய சிந்தனை தேவை.

மற்றவர்கள் செய்யும் அனைத்திலும் தவறுகளை மட்டுமே பார்க்கும், சமூகத்திற்காக எதுவும் செய்யாத அவநம்பிக்கையாளர்களிடமிருந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு எந்தவொரு பங்களிப்பும் கிடைக்காது.

இன்று எமக்குத் தேவைப்படுவது நாட்டை நேசிக்கும், சமூகத்திற்கு பயனுள்ள, விமர்சனங்களை ஒதுக்கி வைத்து, பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் நேர்மறையான குடிமக்களின் ஆசீர்வாதமும் ஆதரவுமே ஆகும்.

உற்பத்தி திறன்வாய்ந்த குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், ஒழுக்கப்பண்பாடான சமூகம் மற்றும் சுபீட்சமான தேசம் என்ற அடிப்படை நோக்கங்களை அடைய நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சரியான பங்களிப்பைச் செய்தால் அந்த நோக்கங்களை அடைய முடியும். எனவே ஒரு நேர்மறையான அணுகுமுறையுடன், உங்களுடையவும் என்னுடையவும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுமாறு இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.

நீங்கள் கேட்ட தலைவர் நான். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன்.

மும்மணிகளின் ஆசிகள்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.

‘முதல் காதல் தோல்வி’ – மனம் திறக்கிறார் நித்யா மேனன்

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நித்யா மேனன், காதல் தோல்வி குறித்து மனம் திறந்துள்ளார்.

அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் வெப்பம், மெர்சல், ஓ கே கண்மணி, சைக்கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்ததாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை நித்யா மேனன் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “என் மீது வரும் புகார்களையும் விமர்சனங்களையும் கண்டுகொள்ள மாட்டேன். எந்த விஷயம் ஆனாலும் ஒளிவு மறைவு இல்லாமல் நேராக எதிரில் பேசுவதும், தெளிவாக சொல்வதும்தான் எனது பழக்கம். எதற்கும் தயங்க மாட்டேன். எனது முதல் காதல் தோல்வியில் முடிந்தது.

அதன்பிறகு கொஞ்ச நாட்கள் ஆண்களையே நான் வெறுத்தேன். இனிமேல் காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. யாருக்காகவும் என்னை நான் மாற்றிக்கொள்வது சுத்தமாக பிடிக்காது.

எனக்கு பிடித்த மாதிரி வாழத்தான் விரும்புவேன். நிஜ வாழ்க்கையில் சாதாரண பெண்ணாகத்தான் யோசிப்பேனே தவிர நான் ஒரு நடிகை என்றோ, மற்றவர்களை விட வித்தியாசமானவள் என்றோ, ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவள் என்றோ எப்போதும் நினைக்க மாட்டேன்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

‘பேஸ்புக்’குக்கு தடை விதித்தது மியன்மார் இராணுவம்

மியான்மரில் பேஸ் புக் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மியான்மரில் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மியான்மரில் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு எம்.பி.டி உட்பட இணையதள சேவை வழங்குனர்களால், பேஸ் புக் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சகம் நாட்டின் “ஸ்திரத்தன்மை” பேணுவதற்காக பிப்ரவரி 7 ஆம் திகதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.

மேலும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மக்கள், போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும், பேஸ்புக்கைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பளுதூக்கல் பயிற்சிப் போட்டியில் 16 இலங்கை சாதனைகள் முறியடிப்பு

ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் பொலன்னறுவையில் நடாத்தப்பட்ட தேசிய பளுதூக்கல் தகுதிகாண் போட்டியில் ஏழு வீரர்களால் 16 இலங்கை சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு நேரடியாக தகுதிபெற்றுக் கொள்ளும் நோக்கில் ஆசிய பளுதூக்கல் சம்மேளளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பளுதூக்கல் சுப்பர் பிரிவு அணி பொலன்னறுவையில் உள்ள கல்லேல்லே விளையாட்டுத் தொகுதியில் தற்போது பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப்பிரிவில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த திலங்க இசுரு குமார, 251 கிலோ கிராம் எடையைத் தூக்கி புதிய இலங்கை சாதனை படைத்தார். இதில் அவர் ஸ்னெட்ச் முறையில் 111 கிலோ கிராம் எடையையும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 140 கிலோ கிராம் எடையையும் தூக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2019இல் சீனாவின் கிங்போவில் 240 கிலோ கிரோம் எடையைத் தூக்கி நிலைநாட்டிய தனது சொந்த சாதனையை அவர் முறிடித்தார்.

இதனிடையே ஆண்களுக்கான 67 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட திலங்க பலகசிங்க, ஸ்னெட்ச் முறையில் 119 கிலோ கிராம் எடையையும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 146 கிலோ கிராம் எடையையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 265 கிலோ கிராம் எடையைப் பதிவுசெய்து புதிய இலங்கை சாதனை படைத்தார்.

இதில் ஸ்னெட்ச் முறையிலும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையிலும் அவர் தனித்தனியாக இலங்கை சாதனைகளை முறிடியத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

முன்னதாக 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 263 கிலோ கிராம் எடையைத் தூக்கி சிந்தக லக்மாலினால் நிலைநாட்டப்பட்ட இலங்கை சாதனையை அவர் முறிடியத்தார்.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவரும், இலங்கையின் நட்சத்திர பளுதூக்கல் வீரருமான சிந்தன கீதால் விதானகே, ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 171 கிலோ கிராம் எடையைத் தூக்கிய குறித்த பிரிவில் புதிய இலங்கை சாதனை படைத்தார்.

முன்னதாக 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 160 கிலோ கிராம் எடையைத் தூக்கி நிலைநாட்டப்பட்ட தனது சொந்த சாதனையை சிந்தன கீதான் முறிடியத்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, குறித்த எடைப் பிரிவில் சிந்தனவுடன் போட்டியிட்ட இந்திக திஸாநாயக்க, ஸ்னெட்ச் முறையில் 137 கிலோ கிராம் எடையைத் தூக்கி புதிய இலங்கை சாதனை படைத்தார். இதில் சிந்தாக கீதால் விதானகேவால் நிலைநாட்டப்பட்ட 128 கிலோ கிராம் சாதனையை இந்திக திஸாநாயக்க பொலன்னறுவையில் வைத்து முறியடித்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான 102 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை கடற்படையச் சேர்ந்த ஷானக்க பீட்டர்ஸ், 340 கிலோ கிராம் எடையைத் தூக்கி புதிய இலங்கை சாதனை நிலைநாட்டினார்.

இதில் க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 170 கிலோ கிராம் எடையைத் தூக்கி மற்றுமொரு இலங்கை சாதனையை அவர் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பெண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை கடற்படையைச் சேர்ந்த சதுரிக்கா வீரசிங்க, ஸ்னெட்ச் முறையில் 85 கிலோ கிராம் எடையையும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 110 கிலோ கிராம் எடையையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 195 கிலோ கிராம் எடையைப் பதிவுசெய்து புதிய இலங்கை சாதனை படைத்தார்.

இதில் ஸ்னெட்ச் முறையிலும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையிலும் அவர் தனித்தனியாக இலங்கை சாதனைகளை முறிடியத்து மூன்று இலங்கை சாதனையை முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பெண்களுக்கான 87 கிலோ கிராம் மேற்பட்ட பிரிவில் போட்டியிட்ட திமாலி ஹபுதென்ன, ஸ்னெட்ச் முறையில் 88 கிலோ கிராம் எடையையும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 112 கிலோ கிராம் எடையையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 200 கிலோ கிராம் எடையைப் பதிவுசெய்து புதிய இலங்கை சாதனை படைத்தார்.

முன்னதாக 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் நிலைநாட்டிய தனது சொந்த சாதனையை அவர் முறிடியத்திருந்தார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பளுதூக்கல் பயிற்சிகள் தடைப்பட்டிருந்ததுடன், அரசாங்கத்தின் கொவிட் – 19 விதிமுறைகளை பின்பற்றி கடந்த சில வாரங்களாக வீரர்களின் தற்போதைய திறமைகளை மதிப்பிடும் நோக்கில் இந்த விசேட பயிற்சி முகாம் பயிற்சியாளர் ஆர்.பி விக்ரமசிங்கவின் மேற்பார்வையின் கீழ் பொலன்னறுவையில் நடைபெற்று வருகின்றது.

3 நாட்களில் கொழும்பில் 709 பேருக்கும் நுவரெலியாவில் 37 பேருக்கும் கொரோனா

கடந்துள்ள   நாட்களில் மாத்திரம் (பெப்ரவரி 1 முதல் 3 வரை) 2 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 709 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 367 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் ஆயிரத்து 136 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

மத்திய மாகாணத்தில் கடந்துள்ள 3 நாட்களில் கண்டி மாவட்டத்தில் 234 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 37 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 53 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

“தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்!”

0
தோட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கவும்! ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தல் டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த நுவரெலியா மாவட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம்...

விசாகப்பட்டினத்தில் 65 அடி உயர திரிசூலம்

0
ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் சுற்றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கைலாசகிரி மலைப்​பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்​குள்ள சிவன், பார்​வதி சிலைகள்...

சாரதிகளே அவதானம்!

0
சாரதிகளே அவதானம்! சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. நுவரெலியா பிரதான நகர், ஹாவாஎலிய, கந்தப்பளை, நானுஓயா, ரதல்ல மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் பனிமூட்டம்...