Home Blog Page 3686

2ஆவது அலைமூலம் 41,476 பேருக்கு கொரோனா – 202 பேர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்றுவரை 41 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 202  பேர் பலியாகியுள்ளனர்.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது என கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த நவம்பர் மாதத்தில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனா 2ஆவது அலைமூலம் கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 முதல் இன்றுவரை 18 ஆயிரத்து 869 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 9 ஆயிரத்து 720 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 556 தொற்றாளர்களும்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் 25 மாவட்டங்களிலும் 2ஆவது அலைமூலம் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 37 ஆயிரத்து 816 பேர்   குணமடைந்துள்ளனர்.

கற்பாறை சரிந்து விழுந்ததால் வீடு சேதம் – ஒருவர் படுகாயம்!

கினிகத்தேனை பிட்டவல கீ கியனாகெதர கிராம பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்துள்ளதால் வீடு சேதமடைந்துள்ளது.

இரண்டு அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த சில பொருட்கள் சேதமாகியுள்ளதோடு, சுவர்களும் சரிந்து விழுந்துள்ளன. அனர்த்தத்தின்போது வீட்டில் ஆறு பேர் இருந்துள்ளனர்.

வீட்டிலிருந்தவர்கள் பாதுகாப்பாக அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு  உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பவம் ஏற்படும் போது, சிறு குழுந்தையோடு இருந்த தாய் காயங்களுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தை கினிகத்தேனை பொலிஸார் நேரடியாக வந்து பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை கிராம சேவகர் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

க.கிசாந்தன்

‘பிளெக்வுட் தோட்டத்தில் சிறுவர் பராமரிப்பு நிலையம் திறந்துவைப்பு’

பிளெக்வுட் தோட்டத்தில் சகல வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தை, இ.தொ.காவின் உப தலைவரும், பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.

பிளெக்வுட் தோட்ட நிர்வாகம் மற்றும் உலக வங்கியின் 7.5 மில்லியன் ரூபா செலவின் குறித்த நிலையம் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு அறை, வாசிப்பு அறை, ஓய்வறை, சாப்பாட்டு அறை, சமையல் அறை, சிறுவர் பராமரிப்பு உதவியாளர்களுக்கான அறை, பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, குழந்தை அறை, விளையாட்டு பொருட்களுக்கான அறை, நோய்வாய்ப்பட்டவர்களுக்கான அறை,குழந்தைகளுக்கான கழிவறை ஆகியன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

3 லட்சத்து 18 ஆயிரம் ரூபா கொள்ளை – கம்பளையில் மூவர் கைது!

கம்பளையில் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூவர் கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை நகருக்கு கடந்த 28 ஆம் திகதி வருகைதந்துள்ள முன்னாள் கடற்படை அதிகாரி, வீடு நிர்மாணப் பணிகளுக்காக வங்கியிலிருந்து 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவை எடுத்துள்ளார். அத்துடன் அவர் வசம் ஏற்கனவே 10 ஆயிரம் ரூபா இருந்துள்ளது.

வங்கியிலிருந்து பணம் எடுத்த பின்னர், மதுபான விற்பனை நிலையமொன்றுக்கு சென்ற அவர் சுமார் 2 ஆயிரம் ரூபாவுக்கு மது அருந்தியுள்ளார்.

அதன்பிறகு கம்பளை தனியார் பஸ் நிலைய பகுதியிலுள்ள சிகையலங்கார நிலையமொன்றுக்கு சென்றுள்ளார். ‘மசாஜ்’ போட்டுள்ளார்.

அதிக மதுபோதையில் இவர் அங்கும், இங்கும் நடமாடுவதை நோட்டமிட்ட சிலர், அவரிடம் பணம் இருப்பதையும் கண்டுள்ளனர்.

தனியார் பஸ் நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் நிலையத்துக்கு அவர் சென்றபோது, பின்தொடர்ந்த மூவர், அவருடன் பழகி தமது ஆட்டோவில் ஏற வைத்துள்ளனர். மதுபோதையில் அந்நபரும் ஏறியுள்ளார். பின்னர் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தெளிவுவந்ததும் முன்னாள் கடற்படை அதிகாரி, இது தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கம்பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சம்பத் விக்கிரமரத்தினவின் வழிகாட்டலுக்கமைய, குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பொலிஸ் அதிகாரிகளான ஜயந்த, தசநாயக்க, , அசங்க , பண்டார 4507, ரோஹித 28946, துனுகர 45203 ,அணில் 61722 ஆகியோரும் விசாரணைக் குழுவில் இடம்பிடித்தனர்.

சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு தீவிர விசாரணைகள் இடம்பெற்றன. இதன் அடிப்படையில் 23,27 மற்றும் 39 வயதுகளுடைய மூவர் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளையடித்த 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபா பணத்தில், புதிய ஆட்டோவொன்றை வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாவை செலுத்தியுள்ளனர். அத்துடன் ஏனைய சில பொருட்களையும் வாங்கியுள்ளனர்.

கம்பளை நிருபர் – லாவண்யா

பாராளுமன்ற உறுப்பினராக ரத்ன தேரர் சத்தியப் பிரமாணம்!

வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரர் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (05) சத்தியப்பிரமாணம் செய்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சிக்குக் (அபே ஜனபல கட்சி) கிடைத்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரரின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்திருந்தது.

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே தேரர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

புதிய வகை கொரோனாவால் முடக்கப்பட்டது இங்கிலாந்து

இங்கிலாந்தில் புதிய வகை வீரியம்மிக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

எனினும் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுடங்காமல் பரவியதால், இங்கிலாந்து தடுமாறியது. ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு புறம் வைரஸ் பரவல் வேகமாக உள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தேசிய அளவிலான ஊரடங்கை அறிவித்தார். ஆறு வாரங்களுக்கு இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனத் தெரிகிறது. புதன் கிழமை முதல் பள்ளிகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தும் இதேபோன்ற ஊரடங்கை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து மக்கள் பத்திரமாக தங்கள் குடியிருப்பிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள போரிஸ் ஜான்சன், நாட்டில் அமலுக்கு வரும் இந்த ஊரடங்கு புதிய வகை கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை அமல்படுத்தப்பட்டிருந்ததைப் போல மிக கடுமையானதாக இருக்கும் என்று தெரிகிறது.

மோதரையில் 3 பிரிவுகள் ‘லொக்டவுன்’!

கொழும்பு – 15, மோதரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 03 வீதிகள் இன்று (05) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புனித அன்ரூஸ் வீதி, புனித அன்ரூஸ் மேல் மற்றும் கீழ் வீதி ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் (04) அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் பெரும்பாலானோர் குறித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மைத்திரி மௌனத்தை கலைத்ததால் கடும் சீற்றத்தில் மொட்டு கட்சி!

உள்ளக அரசியல் முரண்பாடுகள் தொடர்பான தகவல்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியாட்டு ஊடகங்களிடம் வெளியிட்டமை தவறாகும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் கூட்டணியாக முன்னோக்கி பயணிப்பதே எமது எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தனித்துவத்தை நாம் மதிப்பதுடன், அவற்றுக்கு உரிய இடம் வழங்கும் வகையிலேயே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கூட்டணி என்றால் முரண்பாடுகள் ஏற்படக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் உள்ளக பேச்சுகளில் ஈடுபட்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதே ஏற்புடைய நடவடிக்கையாக அமையும்.

2010 -2015 மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் நான் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டேன். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கியும் உள்ளோம். ஊடகவியலாளர்கள் எவ்வாறுதான் கேள்விகள் தொடுத்தாலும், எமது நாட்டு உள்ளக அரசியல் தொடர்பில் கருத்துகளை வெளியிடவில்லை. எதிரணிகளை தாகிபேசக்கூடிய வாய்ப்பிருந்தும் அதனை செய்யவில்லை.

எமது நாட்டுக்குள் கட்சி அரசியலை நடத்தினாலும், நாட்டுக்கு வெளியில் ஒரு தேசமாகவே கொள்கைகளை முன்னெடுத்தோம்.

இந்நிலையில் மேற்படி சம்பிரதாயத்தை மீறும் வகையில் எமது கூட்டணியில் உள்ள தலைவர் ஒருவர் (முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ) வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக கருத்துகளை முன்வைத்துள்ளார்.

உட்கட்சி பிரச்சினைகள் தொடர்பில் உள்நாட்டு ஊடகங்களில்கூட கருத்து வெளியிடுவது ஏற்படைய விடயமல்ல. அந்தவகையில் அவரின் நேர்காணல் குறித்து கவலையடைகின்றோம். அவ்வாறான செயலை கண்டிகின்றோம்.” – என்றார்.

நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்போம் – பாரத் அருள்சாமி உறுதி!

மஸ்கெலியா காட்மோர் தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று இ.தொ.காவின் உப செயலாளரும், சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழில் உறவுகளுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா, காட்மோர் தனியார் தோட்டம், மற்றுமொரு தரப்புக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமக்கான சேவைக் கொடுப்பனவை முன்னைய நிர்வாகம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி காட்மோர் பகுதி தொழிலாளர்கள் கடந்த 28 ஆம் திகதி முதல் போராடிவருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று ஹட்டன் உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
காட்மோர் தோட்டத்தின் நிர்வாகம், புதிய நிர்வாகம், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் பிரதிநிதிகள் என பலரும் சந்திப்பின் பங்கேற்றனர்.
சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட பாரத் அருள்சாமி,
” நாம் கொடுத்த அழுத்தத்தின் பிரகாரம் எதிர்வரும் 8ஆம் திகதி தொழிலாளர்களுக்கு சம்பளத்தையும் போனஸ் கொடுப்பனவை வழங்கவும் தோட்ட நிர்வாகம் இணக்கம் வெளியிட்டுள்ளது. அடுத்தப் பேச்சுவார்த்தையில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும்.” – என்றார்.
க.கிசாந்தன்

‘சேவைகால கொடுப்பனவை வழங்க காட்மோர் தோட்ட நிர்வாகம் இழுத்தடிப்பு’

மஸ்கெலியா, காட்மோர் தோட்டத் தொழிலாளர்களுக்கான சேவைகால கொடுப்பனவை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் இழுத்தடிப்பு செய்துவருகின்றது. இன்று (4) நடைபெற்ற கலந்துரையாடலிலும் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

காட்மோர் தனியார் தோட்டத்தின் நிர்வாகம் மற்றுமொரு தரப்புக்கு கைமாற்றப்பட்டுள்ள நிலையில், தமக்கான சேவைகால கொடுப்பனவை முன்னைய நிர்வாகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 28 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது தொடர்பில் மலையக தொழிற்சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று ஹட்டன் உதவித் தொழில் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் சார்பில், பாரத் அருள்சாமி கலந்துகொண்டார். அத்துடன்,   இ.தொ.காவின் தோட்ட இயக்குனர் ராஜராம், காட் மோர் தோட்டத்தின் தற்போதைய தோட்ட உரிமையாளர், புதிதாக நிர்வாகத்தை பொறுப்பேற்கவுள்ள நிர்வானத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.   ஏனைய தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இச்சந்திப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.  இதனையடுத்து தோட்ட உரிமையாளர், சேவைக்கால நிதியை வழங்க ஏனைய பங்குதாரர்களுடன் பேச வேண்டுமென கால அவகாசம் கோரினார். அடுத்தவாரம் நடைபெறவுள்ள மற்றுமொரு கலந்துரையாடலில் அதற்கான தீர்வு எட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் உறுதியாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

” நாம் கொடுத்த அழுத்தத்தின் பிரகாரம் எதிர்வரும் 8ஆம் திகதி தொழிலாளர்களுக்கு சம்பளத்தையும் போனஸ் கொடுப்பனவை வழங்கவும் தோட்ட நிர்வாகம் இணக்கம் வெளியிட்டுள்ளது. அடுத்தப் பேச்சுவார்த்தையில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும்.” – என்று சந்திப்பின் பின்னர் பாரத் அருள்சாமி கருத்து வெளியிட்டுள்ளார்.

க.கிசாந்தன்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

அலகல தோட்டம்: கற்பாறைகளின் மேல் ஊசலாடும் வாழ்க்கை !

0
கட்டுரையாளர் - : வேலு இந்திரசெல்வன் 'நேர்படப் பேசு' – இது மகாகவி பாரதியின் கொள்கை மட்டுமல்ல ,இன்று நுவரெலியா மாவட்டத்தின் அலகல தோட்ட மக்களின் அபயக் குரலுமாகும். ஹங்குரன்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட 508...

மரக்கறி விலைப்பட்டியல் (12.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வடக்கின் அபிவிருத்திக்கு விசேட செயற்றிட்டம்

0
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு...