Home Blog Page 3697

ஜனவரி முடிவடையும்வரை சிவனொளிபாத மலைக்கு வராதீர்!

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும்வரை சிவனொளிபாத மலைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் ஒன்றுகூடினால் வைரஸ் வேகமாக பரவும் அபாயம் இருக்கின்றது. நெருக்கடி நிலைமை தொடர்பில் சுகாதார தரப்புடன் ஆலோசனை நடத்தினோம். இதன்பிரகாரம் ஜனவரி மாதம் நிறைவடையும்வரை சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வரவேண்டாம் என பக்த அடியார்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

சிவனொளிபாதமலை மூடப்படவில்லை. ஆனாலும் ஜனவரி மாதம் இறுதிவரை நிலைமைகள் அவதானிக்கப்பட்டு,  வழிபாடுகளுக்காக பக்த அடியார்களை அனுமதிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.  தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தால், சுகாதார நடைமுறைகள் மற்றும் சில கட்டுப்பாடுகளுடன் பெப்ரவரி மாதம் முதல் சிவனொளிபாத மலைக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். ” – என்றார்.

க.கிசாந்தன்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்குமா சுதந்திரக்கட்சி?

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணையமாட்டார்கள் என்று சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர நம்பிக்கை வெளியிட்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள்மீது அதிருப்தியில் இருக்கும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளனர் எனவும் அதற்கான பேச்சுகள் நடைபெற்றுவருகின்றன எனவும் நாளை நடைபெறவுள்ள சு.கவின் மத்தியகுழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் வினவியபோதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார்.

” கூட்டணிக்குள் பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். இவை தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படும். எனினும் ,சஜித் அணியுடன் இணையும் எண்ணம் இல்லை. அதற்கு நாம் என்றும் தயாரில்லை.” என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

முரளியின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின்  படைத்துள்ளார். முரளியின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸில், ஜோஷ் ஹேசில்வுட்டை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இடது கை துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்திய பந்து வீச்சாளராக  அஸ்வின் சாதனை படைத்து உள்ளார்.

அஸ்வின் இதுவரை 192 இடது கை துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் 191 விக்கெட்டுகளை வீழ்த்தியமையே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனை அஸ்வினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

அஸ்வின் 73 டெஸ்ட் போட்டிகளில் இருந்து 25.22 சராசரியாக 375 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுகளையும், தற்போது நடைபெற்று வரும் மெல்போர்ன் டெஸ்டில் முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இடது கை பேட்ஸ்மேன்களை அதிக ஆட்டமிழக்க செய்தவர்கள் பட்டியலில் உள்ள மற்ற பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் (186), கிளென் மெக்ராத் (172), ஷேன் வார்னே (172) மற்றும் அனில் கும்ப்ளே (167).

‘அரசியலுக்கு வரமுடியவில்லை – என்னை மன்னித்து விடுங்கள்’ – ரஜினி அறிவிப்பு

தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை மறுநாள் 31 ஆம் திகதி வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

” என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சென்னால் நாலு பேர் நாலுவித்மாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுகு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி என்னக்கு மட்டும் தான் தெரியும்.இதனால், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் கிடைத்துள்ளது.

ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

” என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன்.

கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக் குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக் கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம்.

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோணா பரிசோதனை செய்வித்தார்.

எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது. ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது, மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும்.

ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது,

என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார் இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம்.

இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை, இதை ஆண்டவன் பார்க்கிறேன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது.

இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி, பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது, இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் Immuno Suppressant மருந்துகளை சாப்பிடும் நான், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரச்சாரத்தின் போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்

மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள், அது வீண் போகாது.

அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும், கடந்த நவம்பர் 30 – ம் திகதி  நான் உங்களை சந்தித்த போது, நீங்கள் எல்லோரும் ஒரு மனதாக ‘உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே’ என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன்.

நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை

உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய் ஹிந்த்

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 1,927 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய ஆயிரத்து 927 பேர் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நடமாடியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘அதிவீரியம் கொண்ட கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்தது’

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வந்தது. இந்த சூழலில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

“இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17 பேரில் ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 16 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மொத்தம் 30 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா பரவும் வாய்ப்பு குறைவு. உருமாறிய கொரோனா பற்றிய தகவலை கேட்டு பதட்டமடைய வேண்டாம். அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம்” என்று தெரிவித்தார்.

‘ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இரு இடங்கள் பரிந்துரை’

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக இரண்டு இடங்களை பரிந்துரை செய்திருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பான அறிக்கை ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதன்படி மன்னார் மறிச்சுக்கட்டி மற்றும் கிழக்கு இறக்காமம் என இரண்டு பிரதேசங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன.

இதனிடையில் சுகாதாரதுறையினர் இந்த இரண்டு இடங்களிலும் எந்த இடத்தில் கொரோனாவினால் மரணமாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய வேண்டும் என தீர்மானிக்க முடியும் என்பதை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் முகமாக கொரோனாவினால் மரணமாகும் உடலங்களை தகனம் செய்வதே சிறந்தது என பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ருகுணு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யூ.சி.பி. பெரேரா மற்றும் ருகுணு பலகலைக்கழகத்தில் மற்றுமொரு பேராசிரியர் பிரியந்தயாப்பா ஆகியோர் இந்த பரிந்துரைகளை விடுத்திருக்கின்றன. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட உடலங்களை மண்ணுக்குள் அடக்கம் செய்ததன் பின்னர் அதிலுள்ள வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பது தொடர்பில் இன்னும் கண்டறியப்படவில்லை.

எனவே நீண்டகால அடிப்படையில் கொரோனாவினால் மரணமான உடலங்களை தகனம் செய்வதே சிறந்தது என இந்த இரண்டு பேராசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

‘கொரோனா’ கட்டுக்குள் வந்த பிறகே மாகாண தேர்தல்!

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது மாகாணசபைத் தேர்தல் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அதன்பின்னரே கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை தேர்தலை நடத்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று

தெலுங்கு திரைப்பட நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியான சீரஞ்சிவியின் மகனான ராம்சரண், அறிகுறிகள் இல்லாத நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆஸி. அணிக்கு பதிலடி கொடுத்தது இந்தியா – 8 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனைத்தொடர்ந்து இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா 195 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. 12-வது சதத்தை அடித்த தலைவர் அஜிங்யா ரஹானே 112 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 57 ரன்களுடனும், அடுத்து வந்து வீரர்கள் குறைவான ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது

பின்னர் 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் (4 ரன்) உமேஷ் யாதவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் பிடிபட்டார். அடுத்து மேத்யூ வேட்டும், மார்னஸ் லபுஸ்சேனும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஸ்கோர் 42 ரன்களை எட்டிய போது லபுஸ்சேன் (28 ரன்) அஸ்வின் சுழலில் ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.

3-வது விக்கெட்டுக்கு வந்த அபாயகரமான பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்படும் ஸ்டீவன் சுமித் (0) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. மறுமுனையில் நிதானமாக செயல்பட்ட மேத்யூ வேட் (40 ரன், 137 பந்து, 3 பவுண்டரி) ஜடேஜாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டிராவிஸ் ஹெட் (17 ரன்), கேப்டன் டிம் பெய்ன் (1 ரன்) ஆகியோரும் சீக்கிரம் வீழ்ந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 99 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 66 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 2 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருந்தது.

அதைதொடர்ந்து இன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் கேமரூன் கிரீன் 17 ரன்னுடனும், கம்மின்ஸ் 15 ரன்னுடனும் களத்தில் இறங்கினர். இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சில் இந்த ஜோடியில் பேட் கம்மின்ஸ் 22 ரன்களும், சிறப்பாக ஆடிய கேமரூன் கீரின் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நாதன் லைன் 3 ரன்னும், ஹேசில் வுட் 10 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 103.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், ஆர்.அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 69 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறக்கினர். இதில் மயங்க் அகர்வால் 5 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாராவும் 3 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சுப்மன் கில்லுடன், கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து கலக்கிய இந்த ஜோடி, அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் சுப்மன் கில் 35 ரன்களும், ரஹானே 27 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் இந்திய அணி 15.5 ஒவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 70 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதன்படி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...