Home Blog Page 3715

‘பாணி தம்மிக’ காளியம்மனை கைவிட வேண்டும்! மனோ

” கொரொனாவுக்கு “பாணி மருந்து” கண்டு பிடித்துள்ளதாக, அரசின் சில அமைச்சர்களால் மகிமை படுத்தப்பட்டு ஓடித்திரியும் “பாணி தம்மிக” என்ற “நாட்டு வைத்தியரை” சில தேரர்கள், “தேசிய மோசடிக்காரன்” என்கிறார்கள். சிலர், “தேசிய வீரன்” என்கிறார்கள். எனக்கு இதில் அக்கறை இல்லை. ஆனால் இவர் இந்து கடவுளான காளியம்மனை பற்றி பேசுவதை உடன் நிறுத்த வேண்டும்.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மனோ மேலும் கூறியதாவது,

” நான் இந்த “நாட்டு வைத்தியரின்” பாணி மருந்தை இதுவரை குடிக்கவில்லை. இனிமேல் குடிக்கும் எண்ணமும் இல்லை.

எங்கள் வீட்டில் கொரோனா நோய் தொற்று இதுவரை வராமைக்கு காரணம், எங்க வீட்டு “சித்த வைத்திய” பானங்கள்தான். இவை நாம் எப்போதும் பாரம்பரியமாக எங்கள் பூட்டன், பூட்டி காலத்திலிருந்து பின்பற்றி வரும் இயற்கை மருந்து பானங்கள்.

இங்கே எனது பிரச்சினை என்னவென்றால், இந்த “பாணி தம்மிக” என்ற நாட்டு வைத்தியர், தனக்கு துணையாக “காளியம்மனை” அழைத்துள்ளதாகும். இவர் தனக்கு காளியம்மன் அருள் பாலித்திருப்பதாக கூற, இவரை எதிர்ப்போர் காளியமனையும் சேர்த்து விமர்சிக்கிறார்கள்.  இது நிறுத்தப்பட வேண்டும். காளியம்மன், பார்வதிதேவையின் ஒரு அவதாரம். பார்வதி, இந்துக்களின் மூத்த தாய்க்கடவுள்.

வெறும் 36 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸ் 3ஆவது நாளில் இந்திய அணி 36 ஓட்டங்களுக்குள்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி முதலில் துடுப்பெடுத்தாடுவதாகஅறிவித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில்முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 233 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

2 ஆம் நாள் ஆட்டம் ஆரம்பமானதுமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், 300 ஓட்டங்களை இந்தியா எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மேற்கொண்டு 11 ஓட்டங்களை மட்டுமே அடித்து 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 244- ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை துவக்கியது.

இந்திய அணியில் உமேஷ் யாதவ், நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரின் வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தடுமாறினர். மேத்யூ வேட் (8 ரன்கள்) ஜோ (8 ரன்கள்) ஆகியோர் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர். 3 ஆம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய லாபுசேன் (47 ரன்கள் ) ஓரளவு தாக்குப்படித்தார். எனினும் மறுமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. உமேஷ் யாதவும் தன் பங்குக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

அதேபோல், அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விழிபிதுங்கினர். அவரின் மாயாஜால சுழலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 72.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டி பெய்ன் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை விளையாடியது.

பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஜோடி மீண்டும் மோசமான துவக்கம் கொடுத்தது. பிரித்வி 4 ரன் எடுத்து போல்டானார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்து, 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்திய அணி 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 90 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடும்பட்சத்தில் இந்த இலக்கை எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி ஒரு இன்னிங்சில் எடுத்த மிகக்குறைந்த ரன் இதுவாகும். இதற்கு முன்பு 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்ததே மிகக்குறைந்த ரன்னாக இருந்தது.

சுற்றுலா பயணிகள் வருகை – ஜனவரி நடுப்பகுதியில் திட்டம் அறிவிப்பு!

சுற்றுலாப்பயணிகளுக்காக டிசம்பர் 26 ஆம் திகதி முதல் விமான நிலையம் திறக்கப்படும். முன்னோடி திட்டமாகவே இந்நடவடிக்கை அமையும். அதன்பின்னர் சாதாரண சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான திட்டம் குறித்து ஜனவரி நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மாத்தறை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு, சுற்றுலாத்துறையை மீண்டும்  கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்துவருகின்றோம்.

சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதன் தாக்கம் அனைவருக்கும் புரிந்தது. எனவேதான் வெகுவிரைவில் அத்துறையை கட்டியெழுப்புவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அதன்மூலம் மக்களுக்கான நிவாரணத்திட்டங்களையும் முன்னெடுக்கலாம்.

விமான நிலையத்தை திறக்குமாறு ஆரம்பத்தில் வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், இன்று திறக்கவேண்டாம் எனவும், அவ்வாறு திறந்தால் சுற்றுலா கொத்தணி உருவாகிவிடும் எனவும் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.  அத்துடன் அவ்வாறு திறந்தால்கூட பயணிகள் வரமாட்டார்கள் எனவும் வாதிடுகின்றனர்.

நாட்டை மூடிவைத்திருந்தவேளையிலும் நாட்டில் ஆங்காங்கே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். எனவே, கொரோனா சவாலை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும். எனவே, சுகாதார துறையினரின் ஆலோசனையின் பிரகாரம் சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பமாகும்.  அதன்மூலம் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும்.

இதன்படி டிசம்பர் 26 ஆம் திகதி சுற்றுலாப்பயணிகளுக்காக விமான நிலையம் முன்னோடி திட்டமாக திறக்கப்படும். அதன்பின்னர் சாதாரண சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான திட்டம் குறித்து ஜனவரி நடுப்பகுதியில் அறிவிக்கப்படும்.” – என்றார்.

சிறந்த விவசாய விஞ்ஞானிக்கான விருது தமிழருக்கு!

2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாய விஞ்ஞானிக்கான விருது கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் (ஆராச்சி)கலாநிதி எஸ்ஜே அரசகேசரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேராதனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்விலேயே இவ்விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் விவசாயத்துறையில் புதிய கண்டுப்பிடிப்புக்களை மேற்கொள்ளும் ஆராச்சியாளர்களில் சிறந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டு இவ் விருது வழங்கக்கப்பட்டு வருகிறது. கடந்த 22 வருடங்களாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

22 வருடங்களாக இடம்பெற்று வருகின்ற இவ் விருது வழங்கும் நிகழ்வில் முதன் முதலாக தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் விவசாய திணைக்களத்தினரால் வருடந்தோறும் இவ் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு வெங்காயம், நிலக்கடலை, மிளகாய், மா, குரக்கன் போன்ற பயிர்களில் ஆராச்சியின் மூலம் புதிய இனங்களை கண்டுபிடித்தமைக்காக
இவ்வாண்டுக்கான விவசாய விஞ்ஞானியாக கலாநிதி அரச கேசரி தெரிவு செய்யப்பட்டு விருது சான்றிதழ், தங்கப்பதக்கம், 25 ஆயிரம் ரூபா பணம்
என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

‘கிளங்கன் வைத்தியசாலையில் பல குறைப்பாடுகள்’ – ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார் ராஜாராம்!

ஹட்டன் -டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகேவை அவருடைய கண்டியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நேற்று (18.12.2020) சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினேன்.

விசேடமாக ஹட்டன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடி அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றேன். இந்த வைத்தியசாலையை பொறுத்த அளவில் கிளினிக் வருகின்ற நோயார்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்பாக அதிக அளவில் வருகின்ற நோயாளர்களை அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு சரியான நடைமுறை இல்லாமை.ஒரு சிலர் கூட்டத்தில் மயக்கம் போட்டு விழுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகம்.

மேலும் இங்கு வெளியேற்றப்படுகின்ற கழிவுகளை முறையான முகாமைத்துவம் இல்லாமல் பாதையில் விடப்படுகின்றமை தொடர்பாகவும் மத்திய மாகாணத்தில் கல்வி ரீதியாக பல அரசியல் தலையீடுகள் தொடர்பிலும் அவருடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இது தொடர்பாக மிக விரைவில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இதன்போது அவர் என்னிடம் தெரிவித்தார். ” – என்றார்.

கொழும்பு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 259 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

‘அரசுக்கு ஆதரவான தொழிற்சங்கங்களிடம் பொய்களுக்கு பஞ்சமில்லை’ – உதயா

மலையகத்தில் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும் பொய் பிரச்சாரங்களுக்கு இன்று பஞ்சமில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் என்பதால் தொழிற்சங்கத்திற்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்காக அரசாங்க ஆதரவு தொழிற்சங்கங்கள் பல்வேறு பொய் பரப்புரைகளை முன்னெடுத்து வருவதாக ஹட்டனில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்,

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

கடந்த ஆட்சி காலத்தில் மலையக மக்களுக்கு பாரிய அபிவிருத்திகளை நாம் முன்னெடுத்தோம். ஆனால் இன்று எல்லா இடங்களிலும் அடிக்கல் மாத்திரமே நாட்டப்படுகிறது. ஆனால் வீடுகள் கட்டப்படுவதாக இல்லை. சில இடங்களில் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி 8 மாதங்களுக்கு மேலாகியும் வீடுகளை காணவில்லை. புற்கள்தான் முளைத்துள்ளன.

முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் பல காபட் பாதைகள் புனரமைக்கப்பட்டன. ஆனால் இன்று ஓரிரு வீதிகளுக்கு அடிக்கல் மாத்திரம் நாட்டிவிட்டு கடந்த அரசாங்கத்தில் ஒரு வேலைத் திட்டமும் நடைபெறாதது போல கதைக்கின்றனர். பாதைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். ஆனால் வேலை தொடங்கவில்லை. வேலை தொடங்க மூன்று மாதங்கள் செல்லும் என்கின்றனர். அப்படியானால் ஏன் இப்போதே அடிக்கல் நாட்ட வேண்டும்? தொழிற்சங்க உறுப்பினர்களை அதிகரித்துக் கொள்ளவே இந்த ஏமாற்று நாடகம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சந்தா பணத்தை ஜனவரியில் இருந்து நிறுத்தப் போவதாக பிரச்சாரம் செய்து அனைவரையும் அவர்களது தொழிற்சங்கத்தில் இணையுமாறு கூறி வருகின்றனர். இது ஒரு ஏமாற்று வார்த்தை. கடந்த கொரோனா காலத்திலும் சந்தாவை நிறுத்துவதாக கடிதம் அனுப்பி ஒரு மாதத்தில் மீண்டும் சந்தா அறவிட்டனர். உண்மையில் சந்தா தேவையில்லை என்றால் நிரந்தரமாக நிறுத்தி இருக்கலாமே. சந்தா இன்றி தொழிற்சங்க செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று கூறும் இவர்களே சந்தாவை நிரந்தரமாக நிறுத்தப் போவதாக கூறுகின்றனர். எனவே இது வெறும் ஏமாற்று வித்தை என்பதை மக்களுக்கு தௌிவுபடுத்த வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் மிகவும் குறைந்தளவு நிதியே தோட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வீடமைப்புக்கு 1500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் 12 மாவட்டங்களுக்கு வீடமைப்புத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்படி பார்க்கையில் நுவரெலியா மாவட்டத்தில் 500 வீடுகளைக்கூட கட்ட முடியாது. ஆனால் ஆயிரக்கணக்கில் வீடுகளை கட்டுவது போல பிரச்சாரம் செய்கின்றனர்.

இந்த அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. எல்லாமே 1000 ரூபா போல பொய்தான். குறுகிய காலத்தில் மக்களின் அதிருப்தியை சந்தித்த அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர வாக்களித்த மக்களே அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்.

எனவே இவ்விடயங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி நமது மக்களுக்கான அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் 1,641 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 641 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 05 பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை 280 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 1,273 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 88  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

‘கொரோனா’ – மேலும் ஐவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 165 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் 70 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். எனினும், 2ஆவது அலை ஏற்பட்ட பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் அணியை பந்தாடியது நியூசிலாந்து!

ஆக்லாந்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ரி – 20 போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ரி 20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. 39 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. ஜேக்கப் டபி இதில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணி தலைவர் சதாப் கான் 42 ஓட்டங்களையும், பஹீம் அஷ்ரப் 18 பந்தில் 31 ஓட்டங்களையும் அடிக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் பெற்றது. ஜேக்கப் டபி 4 ஓவரில் 33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். குக்கெலின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 154 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க துடுப்பாட்ட வீரர் டிம் செய்ஃபெர்ட் 57 ஓட்டங்கள் விளாசினார்.

மார்க் சாப்மேன் 20 பந்தில் 34 ஓட்டங்களைப் பெறஅடிக்க நியூசிலாந்து 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஈரானின் பதில் குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

0
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் வழங்கிய பதிலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப்...

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் இன்று!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு இன்று 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

மரக்கறி விலைப்பட்டியல் (11.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...