Home Blog Page 3719

ஹப்புத்தளை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

ஹப்புத்தளையில், பெருந்தோட்டமொன்றில் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (17-12-2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத் தகவலை ஹப்புத்தளை பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். சுதர்சன் வெளியிட்டார்.

ஹப்புத்தளைப் பகுதியின் பிட்டரத்மலை பெருந்தோட்டப் பிரிவிலேயே, மேற்படி தொற்றாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும், கொழும்பு கொச்சிக்கடைப் பகுதிக்குச் சென்று, மீளவும் மேற்படி பிட்டரத்மலை பெருந்தோட்டப் பிரிவிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இவ்விருவருக்கு பி.சி. ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இப் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கப்பெற்றதையடுத்து, இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் இவ்விருவரும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு, இன்று 17-12-2020ல் அனுப்பப்பட்டனர்.

ஹப்புத்தளைப் பகுதியில் கொரோனா தொற்றுத் தடுப்பு வேலைத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

நிலவின் பாறை துகள்களுடன் பூமிக்கு திரும்பியது சீன விண்கலம்

சீனாவில் இருந்து கடந்த மாதம் 24 ஆம் திகதி ஒரு விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறை துகள்களுடன் பூமிக்கு திரும்பியுள்ளது.

நிலவில் இருந்து பாறை துகள்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்காக சீனா ‘சேஞ்ச்5’ என்ற விண்கலத்தை கடந்த மாதம் 24 ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த விண்கலம் கடந்த 1ஆம் திகதி நிலவை சென்றடைந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து லேண்டர்அசென்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கு பாறைதுகள்கள், மண் மாதிரிகளை சேகரித்த லேண்டர்அசென்டர் நிலவு பரப்பிலிருந்து கடந்த 3 ஆம் திகதி புறப்பட்டு, நிலவைச் சுற்றிக்கொண்டிருந்த ‘சேஞ்ச்5’ விண்கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

இந்த நிலையில் நிலவை சுற்றி வந்து கொண்டிருந்த ‘சேஞ்ச்5’ விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டுள்ளதாக சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த சேஞ்ச்5 விண்கலத்தின் பாதை பூமியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பப்பட்டது.

அந்த விண்கலத்திலிருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்டப் பாதை பூமியை நோக்கித் திரும்பியது. இந்த விண்கலம் வியாழக்கிழமை அதிகாலை வேளையில் பூமிக்கு திரும்பியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்து வந்த 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய 2 நாடுகள் நிலவின் மாதிரிகளை சேகரித்து வந்து ஆராய்ச்சி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு பிரதமர் மஹிந்த வாழ்த்து

இலங்கையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பானுக ராஜபக்ஷவின் தலைமையில் காலி கிளேடியேட்டர்ஸ் அணியுடன் சூரியவௌ மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில், திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகியது. கொழும்பு கிங்ஸ், காலி கிளேடியேட்டர்ஸ், தம்புள்ளை வைகிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், மற்றும் ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் ஆகிய அணிகள் தொடரில் போட்டியிட்டிருந்தன.

ஆரம்ப சுற்றில் 20 போட்டிகளையும் அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகளையும் கொண்டமைந்திருந்த இம்முறை போட்டித்தொடரில் கலந்து கொண்ட அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதே கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் வெற்றிகரமாக போட்டிகளை ஏற்பாடு செய்த விளையாட்டுத்துறை அமைச்சர்  நாமல் ராஜபக்ச, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினர் ஆகியோருக்கும்  பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இம்முறை லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் நாயகனாக ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் வனிது ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டதுடன், இறுதி போட்டியின் நாயகனாக ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் சொயிப் மலிக் தெரிவானார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இறுதி போட்டியை நேரில் கண்டு களிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன்,  பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபச, விளையாட்டுத்துறை அமைச்சர்   நாமல் ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

‘தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது’ – ராதா கேள்வி

” இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது?”  – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

” இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லை. அவ்வாறு இருந்தால் ஒருவரின் பெயரையாவது, அவ்வாறு கூறுபவர்கள் வெளியிடவேண்டும்.” – என்று உதயகம்மன்பில அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் வினவியபோதே இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு வினா தொடுத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்களை பல தடவைகள் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாமும் அது பற்றி கதைத்துள்ளோம். நல்லாட்சியின் போது தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.  அப்படியானால் இருந்த கைதிகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் இருக்கின்றனரா அல்லது இல்லாமல் செய்யப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது.” – என்றார்.

அதேவேளை, மாகாணசபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும். அத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடவேண்டும் என்பதே பங்காளிக்கட்சியாக இருக்கும் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடாகும். இது பற்றி கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும்.

மாகாணசபை முறைமை தொடரவேண்டும். அவ்வாறு இல்லாமல் அதனை இரத்துசெய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டால் அது பாரிய நெருக்கடி நிலைமையை உருவாக்கிவிடும்.” – என்றும் இராதாகிருஷ்ணன் எம்.பி. குறிப்பிட்டார்.

க.கிசாந்தன்

21 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் 2030 இல் தோகாவில்

2030 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி தோகாவில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.

4 ஆண்டுக்கு ஒரு முறை ஆசிய விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக இந்த போட்டி 2018 ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவில் நடந்தது. 2022ஆம் ஆண்டுக்கான போட்டியை சீனாவும், 2026ஆம் ஆண்டுக்கான போட்டியை ஜப்பானும் நடத்தும் உரிமையை பெற்று இருக்கின்றன.

2030ஆம் ஆண்டுக்கான 21ஆவது ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் நாடு எது? என்பதை நிர்ணயிப்பதற்கான ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று நடந்தது.

இந்த போட்டியை தங்கள் நாட்டின் தலைநகர் தோகாவில் நடத்த கத்தாரும், தங்கள் நாட்டின் தலைநகர் ரியாத்தில் நடத்த சவூதி அரேபியாவும் விண்ணப்பித்து இருந்தன.

போட்டியை நடத்தும் உரிமத்தை பெற இரு நாடுகள் இடையே கடும் போட்டி நிலவியதால் யாருக்கு உரிமம் வழங்குவது என்பதை முடிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 45 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஆன்-லைன் மற்றும் வாக்குச்சீட்டு மூலம் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

மின்னணு எந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆன்-லைன் வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டது. முடிவில் அதிக வாக்குகள் பெற்ற கத்தாருக்கு 2030-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமம் வழங்கப்படுவதாகவும், 2-வது இடத்தை பெற்ற சவூதி அரேபியாவுக்கு 2034-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்தது.

‘மாகாணதேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயார்’

தேசிய இனப்பிரச்சினைக்கானதொரு அரசியல் தீர்வாகவே மாகாணசபை முறைமை முன்வைக்கப்பட்டது. எனவே, அதற்கான தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்படவேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் தயார் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க  தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தல் என்பது அரசியலமைப்பு ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாகும். எனினும் அத்தேர்தல் நீண்டகாலமாக நடைபெறாமல் ஆட்சிஅதிகாரம் ஆளுநர்கள் வசம் சென்றுள்ளது. இந்நிலைமை நீடிக்ககூடாது.

தேர்தல் முறைமை தொடர்பில் நாடாளுமன்றம் இன்னும் உரிய அனுமதியை வழங்காததாலேயே தேர்தலை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தேர்தலை நடத்துவதற்கான சட்ட திருத்த யோசனையை அரசாங்கம் உடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவேண்டும். பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை.

எனவே, பழைய முறையில் தேர்தலை நடத்திவிட்டு அடுத்துவரும் காலப்பகுதியில் எந்த முறையில் நடத்தலாம் என்பது பற்றி பரீசிலிக்கலாம். அந்தவகையில் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.” – என்றார்.

ஊவாவில் மேலதிக வகுப்புகளை நடத்த புதிய கட்டுப்பாடுகள்!

ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புகளை நடத்தவுள்ள ஆசிரியர்கள் மற்றும் மேலதிக வகுப்புக்களை முன்னேடுக்கவுள்ள நிறுவனங்கள் கொவிட் –  19 தடுப்பு நிலையத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக, ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முசாம்மில் தெரிவித்தார்.

ஊவா மாகாண ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, ஆளுனர் ஏ.ஜே.எம். முசாம்மில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புக்களின் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் மட்டும், கோவிட் 19 தாக்க சுகாதார வழிமுறைகளுக்கமைய மேற்கொள்வதற்கு துரித நடவடிக்கைகள் தற்போது, எடுக்கப்பட்டுள்ளன.

ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்களை நடாத்தும், நடாத்தவுள்ள ஆசிரியர்கள், வெளி மாகாணங்களுக்கு செல்லுதல் மற்றும் வெளி மாகாணங்களிலிருந்து ஆசிரியர்கள் ஊவா மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கும் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளன. இத்தடைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நாட்டில் கோவிட் 19 தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்றமையினால், ஊவா மாகாண ஒட்டுமொத்த மக்களைப் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு என்னைச் சார்ந்ததாகவுள்ளது. இப்பொறுப்பினை முறையாகவும், கிரமமாகவும் முன்னெடுத்து வருகின்றேன். எனது இம் முன்னெடுப்புக்களுக்கு, சகலரும் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு கோருகின்றேன்” என்று குறிப்பிட்டார்.

எம். செல்வராஜா

வட்டவளையில் 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஜீப் வண்டி விபத்து – வைத்தியர் படுகாயம்!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் ஜீப் வண்டி ஒன்று நேற்றிரவு (16) 9 மணியளவில் 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஜீப் வண்டி அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது வட்டவளை பகுதியில் வைத்து வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் ஜீப் வண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த ஜீப் வண்டியை செலுத்தியவர் அக்கர்ப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவர் என தெரியவந்துள்ளது.இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

சிவனொளிபாத யாத்திரைக்கு முதல் தடவையாக அரச அனுசரணை

சிவனொளிபாத மலை யாத்திரை இம்முறை முதற்தடவையாக அரசின் அனுசரணையோடு நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்னேற்பாடாக புனித புத்தர் சிலை மற்றும் புனித பூஜை பொருட்களுடனான பெரஹரா யாத்திரை எதிர்வரும் 27 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து சிவனொளிபாத மலை புனித தலத்தை சென்றடைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் பலாபத்வல குருவிட்ட பலாங்கொடை அவிசாவளை ஆகிய வழிகளில் இந்த பெரஹரா ஊர்வலங்கள் கொவிட் சுகாதார கட்டுப்பாடு நடைமுறைகளுடன் எடுத்துச் செல்லப்படவுள்ளன.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோரது இணைத் தலைமையில் இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சிவனொளிபாத மலை புனித ஸ்தல விகாராதிபதி பெங்கமுவே தம்ம தின்ன தேரோ இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுக்கு மாலனி லொகு போதாகம உட்பட உயர் அரசாங்க அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு பின்வரும் தீர்மானங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டன.

நான்கு ஊர்வலங்களிலும் கலந்து கொள்ளும் பக்தர்களது எண்ணிக்கையை (1 ஊர்வலத்துக்கு 50 பேர் வீதம்) 200 பேருக்கு கட்டுப்படுத்தல், வாகனங்களது எண்ணிக்கையை கட்டுப்படுத்தல், வீதி நெடுகிலும் வழமையாக நடத்தப்படும் பூஜைகளை இம்முறை நடத்தாதிருத்தல், வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள கடைகளில் கடமையாற்றுவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனைசெய்தல், ஊர்வல த்தில் கலந்துகொள்ள விரும்புவோர் தமது பிரதேச செயலாளரது அனுமதிச் சான்றிதழ் பெறல், நான்கு வீ திகளிலும் தொற்று நீக்கல், தேசிய மற்றும் மேலைத்தேய வைத்திய உதவி களை வழங்கல் ஆகியனவாகும்.

கொழும்பில் 15,123 பேருக்கும், கண்டியில் 1,185 பேருக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 266 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 267 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று இரண்டு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் ஆயிரத்து 185 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 99 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மரக்கறி விலைப்பட்டியல் (11.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை

0
பு​திய முதல்​வ​ராக பொறுப்​பேற்ற பின்​னர் ஜோசப் விஜய் தலை​மைச் செயல​கத்​துக்கு சென்​று, முதல் நாளில் சட்​டம் ஒழுங்கு விவ​காரம் குறித்து அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்தினார். தமிழகத்​தில் புதிய முதல்​வ​ராக ஜோசப் விஜய் நேற்று பதவி​யேற்றுக்...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...