Home Blog Page 3757

கட்சியை பலப்படுத்தும் சஜித்! தொழிற்சங்க பிரிவுகள் உருவாக்கம்!!

ஐக்கிய மக்கள் சக்தியை பலமானதொரு அரசியல் இயக்கமாக கட்யெழுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள சஜித் பிரேமதாச, நேற்று தொழிற்சங்க பிரிவுகளையும் நிறுவியுள்ளார்.

ஐக்கிய சேவைகள் சங்கம், ஐக்கிய அரச சேவைகள் தொழிற்சங்க சம்மேளனம், ஐக்கிய கல்வி சேவை  சங்கம் ஆகியனவே இன்று நிறுவப்பட்டன. அடுத்துவரும் நாட்களில் ஏனைய தொழிற்சங்க பிரிவுகள் உருவாக்கப்படும் என தெரியவருகின்றது.

ஐக்கிய சேவைகள் சங்கத்தின் தலைவராக அசோக அபேசிங்கவும், ஐக்கிய அரச சேவைகள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக முஜிபூர் ரஹ்மானும், ஐக்கிய கல்வி சேவை  சங்கத்தின் தலைவராக துஷார இந்துனிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள 2ஆம் நிலை தலைவர்களுக்கே தொழிற்சங்க பிரிவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

LPL – 2ஆவது போட்டி ஆரம்பம் – காலி அணி துடுப்பாட்டம் (Live)

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ், காலி கிளேடியட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற காலி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்துள்ளது.

https://www.youtube.com/watch?v=XKeNCLAYGvE&feature=youtu.be

‘தென்பகுதியிலும் இந்திய வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கவும்’ – மஹிந்த கோரிக்கை

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவாலுக்கும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (2020.11.27) பிரதமரின் விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போது முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் , இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரிடம் கையளித்தார்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பெரும்பாலும் இராஜதந்திர கலந்துரையாடல்களை இணையத்தின் ஊடாக காணொளி தொழில்நுட்பம் ஊடாகவே மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது என  அஜித் தோவால் இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட இந்த பிராந்திய நாடுகளுக்கு வெளிநாட்டில் தொழில்புரிபவர்கள் ஊடாக சிறந்த பொருளாதார பலம் கிடைத்ததுடன், தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அவர்கள் வேiலைவாய்ப்பை இழந்தமையினால், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளமையால் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாகவும் அஜித் தோவால் சுட்டிக்காட்டினார்.

எனினும், கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்று கூறியதுடன், இப்பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மற்றும் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் மூலோபாயங்களை கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதற்கு, பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு இடையே கருத்தாடலொன்றை கட்டியெழுப்புவதுடன், பொருளாதார மந்தநிலைக்கு தீர்வை கண்டறிந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்களை கண்டறிவதற்கும், மூலோபாய பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னிலை வகிக்குமாறும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் முன்மொழிந்தார்.

அதற்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை பெற்றுத் தருவதாக தெரிவித்த அஜித் தோவால் , கொவிட-19 நிலைமைக்கு மத்தியிலும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற நாடுகளின் அபிவிருத்தியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அத்தகைய வீடமைப்பு திட்டங்களை தென் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கும் ஆதரவை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாக ஸ்ரீ அஜித் தோவால் தெரிவித்தார்.

அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் கீழ் நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீரை பெற்றுக் கொடுக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி, அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இச்சந்திப்பின் போது உடன்பாடு எட்டப்பட்டது.

இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘இரட்டைப்பாதையில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு’

உடப்பலாத்த பிரதேச சபைக்கு உட்பட்ட புஸல்லாவை – வகுகப்பிட்டிய, இரட்டைப்பாதை பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகின்றது. கூட்டமாக வருகின்ற குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களையும் ஏனைய கைக்கெட்டிய பொருட்களையும் எடுத்துச் செல்கின்றன.

கடைகளுக்குள் சமயம் பார்த்து பிரவேசிக்கும் குரங்குகள் பழங்கள் மற்றும் பக்கற்றுக்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள், பிஸ்கட்பக்கட்டுக்கள், பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை தூக்கிச் செல்கின்றன.

அத்துடன் குரங்குக் கூட்டங்கள் கூரைகளில் ஏறி தாவிக் குதித்துத் திரிவதால் கூரைகள் சேதமடைந்து விடுகின்றன. வீட்டின் கூரையில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர்த் தாங்கிகளில் நீரைக் குடிப்பதற்காக அதன் மூடியை உடைத்துத் திறக்கின்றன .

குடிநீர்த் தாங்கிகளில் உள்ளிறங்கி நீராடுகின்றன. வாழை, தென்னை, டூரியன், கொய்யா, பப்பாசி உள்ளிட்ட பழவகைகளை தின்றும் அழித்தும் வருகின்றன. மரக்கறி வகைகளை சேதம் செய்து விடுகின்றன.

மக்களுக்கு பாதையில் பயணிப்பதற்கு கூட அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்குள் மற்றும் வளவுக்குள் நுழைகின்ற குரங்குகளை விரட்டும் போது அவை மனிதருக்கு கடிக்க வருகின்றன. வீட்டுக்காரரையே அவை துரத்துகின்றன.

ஆடைகளை கழுவி உலர்த்துவதற்கு முடியாது உள்ளது. ஆடைகளை கிழித்து விளையாடி நாசம் செய்கின்றன. இவை தனியே வருவது இல்லை. கூட்டம் கூட்டமாகவே வருகின்றன.

தொலைபேசி கம்பிகளில் தொங்கி விளையாடி அக்கம்பிகளை அறுத்து விடுகின்றன. குரங்கு கூட்டதால் இப்பகுதியில் விவசாயச் செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆர். நவராஜா தெல்தோட்டை தினகரன் நிருபர்

நன்றி – தினகரன்

பசறை பகுதியில் மேலும் நால்வருக்கு கொரோனா!

பதுளை, பசறை கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பசறை சுகாதார பிரிவின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இப்பகுதியில் இதற்கு முன்னர் எழு பேருக்கு கொரோனா தொற்றியது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மேலும் நால்வருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

நமது நிருபர்கள் தனராஜ் மற்றும் ஊவா சுரேன்

‘தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்கு வழங்குங்கள்’

” பெருந்தோட்டப் பகுதிகளில் பயிரிடப்படாத 12,000 தொடக்கம் 15000 ஹெக்டராக தரிசு நிலங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தரிசு நிலங்கள் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு பிரித்து வழங்கப்படவேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” நாடு உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பொருளாதாரம் குறித்து அதிகூடிய கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் உரையாற்ற கிடைத்தமை  பெருமதி வாய்ந்தது எனக் கருதுகிறேன்.
மிளகு, கருவா போன்ற சிறு உள்நாட்டு உற்பத்தி மூலம்  ஆரம்பித்த நமது நாட்டிற்கு தேயிலை, இறப்பர், கோப்பி, தென்னை போன்றவை பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்தமை யாராலும் மறுக்க முடியாது.
அதிலும் தேயிலை செய்கையின் பின்னர் நமது நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம் என்பவற்றை ஒருபோதும் மறக்க முடியாது.
இலங்கையில் வெறும் 19 ஹெக்டர் – நிலத்தில் பயிரிடப்பட்ட தேயிலை பின்னர்  சுமார் 4 லட்சம் ஏக்டராக  அதிகரித்து இன்றைய நிலையில் 2 லட்சம் ஹெக்டராக  குறைந்துள்ளது.
ஆரம்பத்தில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்கள்  தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டதாகவும் பின்னர் அது படிப்படியாக குறைந்து சுமார் 200,000  பேர் நேரடி ஊழியர்களாக காணப்புவதாக கணக்கிடப்பட்டுள்ளது. .
எனினும் அண்மையில் பெருந்தோட்டத்துறை அமைச்சின் தகவல்படி, 23 பெருந்தோட்டக் கம்பனிகளிலும், கடந்த 2009ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து 439 தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர்.
இந்நிலையில் தோய்வு ஏற்பட்டு  2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 445 ஆக குறைவடைந்துள்ளது.
குறிப்பாகக் கூறினால் கடந்த ஒன்பது வருடங்களில், சுமார் 68 ஆயிரம் தொழிலாளர்கள் பெருந்தோட்ட தொழில் துறையில் இருந்து விலகியுள்ளனர்.
ஒரு காலத்தில் பெருந்தோட்டத் துறையில் அதிக தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் அந்த நிலைமை இன்று மாறியுள்ளது.
இலங்கையில் மொத்த தேயிலை ஏற்றுமதியில் 72% பங்கினை சிறுதோட்ட உரிமையாளர்களும் 28 % பங்கினை பெருந்தோட்ட கம்பனிகளும் வகிக்கின்றன.
இன்றைய உலகில் தேயிலை உற்பத்தியில் முதலாவது நாடாக சீனாவும் 2வது நாடாக இந்தியாவும் 3வது நாடாக கென்யாவும் 4வது நாடாக நமது இலங்கையும் காணப்படுகின்றது.
அண்மைக் காலமாக இலங்கைத் தேயிலை உற்பத்தித்துறையில் பல சவால்களை எதிர்நோக்கி வருகிறது.  ஒருபக்கம் உற்ப்பத்தி திறன்  வீழ்ச்சி அடைந்துள்ளது. மறுபுறம் முறையான பராமரிப்பின்மையால் தேயிலை விளைநிலங்கள் பல காடாகிக்  கிடக்கின்றது.
மற்றும் நவீன முகாமைத்துவ தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படாமல் இருப்பது வீழச்சிக்கு பிரதான காரணம் என கூறப்படுவதோடு இந்த தேயிலை தொழில் துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் காரணமாகக் கருதப்படுகிறது.
சர்வதேச சந்தையில் இலங்கைக்கு சவால் விடுக்கும்  கென்யா, வியட்நாம் போன்ற நாடுகளின் வெற்றி  புதிய தொழிநுட்ப அறிமுகம், தொழிலாளர்கள் பராமரிப்பு போன்ற விடயங்களில் வெற்றி கண்டு உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
தேயிலை சந்தைப்படுத்துவதில் இன்று நிலவும் போட்டி, விளைச்சலில் காணப்படும் மந்த நிலை, தேயிலையின் தரம் குறித்ததான அதிருப்திக்கு மத்தியில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை மீள்கட்டியெழுப்புவது குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
பெருந்தோட்ட் கம்பனிகள். லாபம் வரும் போது அதனை மறைப்பதும் நட்டம் ஏற்படும் போது அதனை பகிரங்கப்படுத்தி தொழிலாளர் நலன்களை குறைக்கும் தந்திரத்தை கடைபிடித்து வருகிறார்கள்.
தொழிலாளர்களின் நன்புரி விடயங்கள் மற்றும் சம்பள உயர்வு விடயங்களைப் பற்றி பேசும் போது மாத்திரம் கம்பனிகள் நட்டம் அடைவது எப்படி என்ற வித்தை புரியாத புதிராகவே உள்ளது.
ஆனால் தொழிலாளர்கள் அப்படி அல்ல. கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடக்கப்பட்டு அனைவரும் வீ்ட்டில் இருந்த போது தலையின் கூடையையும்  மனதில் பயத்தையும் சுமந்து கொண்டு எமது தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கச் சென்றனர்.
நாட்டில் எல்லா உள்நாட்டு உற்பத்திகளும் பாதிக்கப்பட்ட நிலையில் தேயிலை உற்பத்தி மாத்திரம் சீரான நிலையில் சென்றது.
காலநிலை மாற்றத்தினால் தேயிலை உற்பத்தி 10% குறைந்த போதும் அதன் விற்பனை விலை குறையவில்லை.
இலங்கை தேயிலை சபை இணையத்தின் ஊடாக முன்னெடுத்த ஏலத்தில் 2019ம் ஆண்டு செப்டெம்பர்  542 ரூபாவாக இருந்த தேயிலை ஒரு கிலோவின் விலை 2020 செப்டெம்பர் 624 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டது.
தேயிலையின் தரம் உயர்ந்துள்ளது. ஆனால் அந்த தேயிலை கொழுந்தை பறிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் உயரவில்லை.                அதேபோல  தேயிலையின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.
இன்று பல தோட்டங்களில் தேயிலை மலைகள் கைவிடப்பட்டுள்ளன. தேயிலை தொழிற்சாலைகள் பல இயங்கவில்லை. சில தொழிற்சாலைகள் துறுப்பிடித்துள்ளன.
இந்த தொழிற்சாலைகளை பயனுள்ள விடயங்களுக்கு பயன்படுத்துவது குறித்து  அமைச்சர்  கவனம் செலுத்த வேண்டும்.
உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஊடாக சிறு கைத்தொழில் பேட்டைகளை குறித்த தொழிற்சாலைகளின் ஆரம்பித்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அதன்மூலம் தொழில்வாய்ப்பு ஏற்பட்டு அவர்களது வாழ்வாதாரம் முன்னேறும்.
பெருந்தோட்டப் பகுதிகளில் பயிரிடப்படாத 12,000 தொடக்கம் 15000 ஏக்டராக தரிசு நிலங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தரிசு நிலங்கள் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு விவசாய நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும்
எனவே இந்த தரிசு நிலங்கள் இளைஞர்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுவதற்கு. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு முறையாக செயற்படுத்தப்பட வேண்டும்.. ஆனால் குறித்த நிலங்கள் வெளியாட்களுக்கு பிரித்து கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் சிலோன் டீ என்ற சின்னத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, சிங்கம் பொறிக்கப்பட்ட சின்னமும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை வரவேற்க வேண்டிய விடயம். மேலும் சிலோன் டீ சின்னம் பொறிக்கப்பட்ட முகக்கவசம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முகக்கவசம் 30 முறை கழுவி மீள பயன்படுத்தக் கூடியது என இலங்கை தேயிலை சபை அறிவித்தது.
இங்கு உள்ள மிகவும் கவலையான விடயம் என்றவென்றால், வெயில், மழை பாராது உயிரையும் துச்சமாக நினைத்து கொரோனா வைரஸ் காலத்திலும் வேலை செய்யும் தோட்ட தொழிளாளர்களுக்கு ஏன் இந்த பாதுகாப்பான முகக்கவசம் வழங்கப்படவில்லை என அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன்.” – என்றார்.

2ஆவது அலைமூலம் 18,742 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 279 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். 16 ஆயிரத்து 226 பேர் குணமடைந்துள்ளனர்.

2ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 18 ஆயிரத்து 742 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘தொழிலாளர்களை கைவிடமாட்டோம் – சந்தாவை நிறுத்துவோம்’ – ஜீவன் உறுதி!

” பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து சந்தாப்பணம் பெறுவதனை நிறுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அதனை கட்டங்கட்டமாக செய்வோம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (27) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளப் பிரச்சினை, ஊழியர் சேமலாப நிதிக்கான கொடுப்பனவுகள் உட்பட தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில், தொழில் அமைச்சுமீது எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் விவாதத்தில் உரையாற்றுவதற்கு எதிர்ப்பார்க்கின்றேன்.

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகள் நவீனமயப்படுத்தப்படவேண்டும். உற்பத்திதிறன் ஊக்குவிக்கப்படவேண்டும். அதன்மூலம் தொழிலாளர்களுக்கான நலன்புரி சேவைகளை அதிகரிக்கலாம்.

அதேவேளை, எங்களுடைய தொழிற்சங்கம் மட்டும்தான் சந்தா வாங்குகின்றது என்ற தொனியில் எதிரணி உறுப்பினர் ஒருவர் இங்கு கருத்து வெளியிட்டார். சந்தாப் பணம் வாங்குவது தவறு இல்லை, அதனை வாங்கிவிட்டு தொழிலாளர்களைக் கைவிடுவதுதான் பிரச்சினை.

தொழிலாளர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் இங்கு இ.தொ.கா. நிற்கும். நாம் அவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. எமக்கு அலுவலகங்கள் இருக்கின்றன. அங்கு ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கவேண்டியுள்ளது. அப்படி இருந்தும் கொரோனா பிரச்சினையின்போது நாம்தான் முதலில் சந்தாவை நிறுத்தினோம். அதன்பின்னர்தான் ஏனைய தொழிற்சங்கங்கள் அதனை செய்தன.

சந்தா அறவிடுவதை நிறுத்தவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். ” – என்றார் ஜீவன் தொண்டமான்.

‘பெருந்தோட்டத்துறையை மேம்படுத்த நிலையான கொள்கைத் திட்டம் அவசியம்’

பெருந்தோட்டத்துறையை கட்யெழுப்புவதற்கான நிலையான கொள்கைத்திட்டங்களை வகுக்குமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத்துறை தொடர்பில் இந்த நாட்டிலே 30, 40 வருடங்களாக தெளிவானதொரு கொள்கைத்திட்டம் இருக்கவில்லை. ஆட்சிமாற்றங்கள் ஏற்படும்போது அமைச்சர்கள் தன்னிச்சையாக செயற்படும் நிலைமையே காணப்பட்டது.  தங்களுக்கு ஏற்றவகையில் கொள்கைகளை மாற்றிக்கொண்டனர். இதனால் இத்துறையை மீளக்கட்டியெழுப்பமுடியாமல்போனது.

எனவே, நிலையான திட்டங்களை வகுத்து பெருந்தோட்டத்துறையை வெற்றிகரமான துறையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். துறைசார் விடயத்தில் அனுபவமுள்ள அதேபோல இளம் அமைச்சர் என்ற வகையில் ரமேஷ் பத்திரண இதனை செய்வார் என நம்புகின்றோம்.

அத்துடன், அமைச்சரவை அனுமதியுடன் மலையக மக்களுக்கு எமது ஆட்சியின்போது 7 பேர்ச்சஸ் காணி வழங்கினோம். லயன் யுகத்திலிருந்து எமது மக்களை விடுவித்து, நில உரிமையாளர்களாக்குவதே எமது திட்டமாக இருந்தது. இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் பேசப்படுகின்றது. அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றவேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்.” – என்றார்.

22,028 பேருக்கு கொரோனா – 16,226 பேர் மீண்டனர் – 5,703 பேருக்கு சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 410 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 703 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 99 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...