Home Blog Page 3763

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது ‘நிவர்’! தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 1 2 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும். அப்போது 155 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு நோக்கி 6 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இரவு 11.30 மணிக்கு கடலூருக்கு 310 கி.மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 320 கி.மீட்டர் தொலைவிலும் இருந்தது. சென்னைக்கு 380 கி.மீட்டர் தொலைவில் நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளது.

அதேவேளை, நிவர் புயல் தாக்கத்தால் இலங்கையில் கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

2ஆவது அலைமூலம் 17,432 பேருக்கு கொரோனா! 81 பேர் உயிரிழப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (25) 17ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 81 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம்  3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 14 ஆயிரத்து 373 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கில் 14 ஆயிரத்து 961 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 458 பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 20 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 962 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில்  கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் நால்வர் உயிரிழந்தார்.

இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

LPL கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகலமாக ஆரம்பம்!

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது அங்குரார்ப்பண தொடர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நாளை ஆரம்பமாகின்றது.

நவம்பர் 26ஆம் திகதி முதல் டிசம்பர் 16ஆம் திகதிவரை லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆரம்பத்தில் இப்போட்டித் தொடர் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானம், கண்டி பல்லேகல விளையாட்டு மைதானம் மற்றும் தம்புள்ள ரங்கிரி விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் ரங்கிரி தம்புள்ள மைதானம் நீக்கப்பட்டு ஏனைய இரண்டு மைதானங்களில் போட்டி நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் இறுதியாக இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் மாத்திரம் போட்டிகள் நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பட்டது.

அந்த வகையில் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஆரம்ப நிகழ்வு நாளை 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் 5 அணிகளின் பங்கெடுப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இதில், கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைகிங்ஸ், காலி க்ளேடியேட்டர்ஸ், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் என அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.

’27 பேருக்கு கொரோனா’ – வெளிமாவட்டங்களில் இருந்து மஸ்கெலியா வராதீர்!

மஸ்கெலியா பகுதியில் 27 கொரோனா தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்

மஸ்கெலியா பிரதேசம் அவதானம் மிக்க பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகைத்தருவதை குறைத்துக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மஸ்கெலியா சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் மட்டும் புதிதாக ஏழு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இக்குடும்பத்தில் ஒருவர் கொழும்பிலிருந்து வருகைத்தந்திருந்தார். அவருக்கு மேற்கொண்ட பி.சி. ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியான பின்னணியில் அவரது குடும்பத்தினருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. ஏனைய இருவரும் கொழும்பிலிருந்து வந்தவர்களாவர்.

மேலும் தீபாவளி பண்டிக்கை காலத்தில் கொழும்பு பகுதிகளிலுள்ளவர்கள் மஸ்கெலியா பிரதேசத்திற்கு வரவேண்டாம் என அறிவித்திருந்தேன். ஆனாலும் அதிகளவானோர் வருகைத்தந்துள்ளனர். அவ்வாறு வந்தவர்களுக்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுவரையில் மொத்தமாக 27 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனைதொடர்ந்து மஸ்கெலியா மற்றும் அம்பகமுவ சுகாதார பிரிவுகளில் வெளியிடங்களிலிருந்து வந்த அனைவருக்கும் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோல பரிசோதனை நடவடிக்கைளை மேற்கொள்ள தேவையான வசதிகள் காணப்படுவதானால் எங்களுடைய சேவையை முன்னெடுக்ககூடியாதாக உள்ளது. வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் முடியுமான வரை மஸ்கெலியா பிரதேசத்திற்கு வருவதை தவிர்க்குமாறு வைத்திய அதிகாரி சந்திரராஜன் வேண்டுகோள் விடுத்தார்

கொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மூன்று ஆண்களும், ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் 70 வயதடைக்கடந்தவர்கள்.

கொழும்பு 15, கினிகத்தேன, பண்டாரகம, சிலம்பலாபே ஆகிய பகுதிகைளச் சேர்ந்தவர்களே வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

‘சரியான நேரத்தில் ஓய்வூதியத்தை வழங்க விரைவான திட்டம்’

சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்க விரைவில் செயல்முறையொன்று உருவாக்கப்படும் என்று அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன் தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுச்சேவைகள், மாகண சபைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைச்சின் ஆலோசனைக்குழு முதன்முறையாக நேற்றுக் (23) கூடியபோது, பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பியகேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்குள் ஓய்வுபெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளை சேகரிக்குமாறு குறித்த குழு ஓய்வூதியத்திணைக்களத்திற்கு அறிவுறுத்தியது. ஓய்வூதியம் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் ஓய்வூதியத்தை பாதிக்கும் காரணிகளை மறு ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இங்கு விவாதிக்கப்பட்டது.
பொது சேவையில் இருந்து ஓய்வுபெறும் அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்தும் இதன்போது கவனம்செலுத்தப்பட்டது.
மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவது தொடர்பாக கௌரவ பிரதமரிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குழுவில் தெரிவித்தார். விகிதாசார பிரதிநிதித்துவம் அல்லது கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து கௌரவ பிரதமரிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணய செயற்பாடுகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் கீழ் இதற்காகத் தனியான ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பிரதேச அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது குறித்தும் இக்குழு விவாதித்ததுடன், புதிய தேர்தல் முறையும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தும் இங்கு முன்வைக்கப்பட்டது. பிரதேச சபை உறுப்பினர்கள் முறையற்ற வகையில் நடத்தப்படுகின்றமை இன்று ஒரு பிரச்சினையாகிவிட்டது.
உள்ளாட்சித் தேர்தல் முறையின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். உள்ளூராட்சி அமைப்புகளுக்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

‘நினைவேந்தலை தடுக்கும் கோட்டாவின் கோமாளி அரசு’ – மனோ விளாசல்!

” 1971 இல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர். ஆனால், உயிரிழந்த தமிழ் போராளிகளையும், தமிழ் பொதுமக்களையும் நினைவுகூர முடியாது என கோட்டா அரசு தடை போடுகிறது.

இப்படி ஒவ்வோர் மாகாணங்களுக்கும், வெவ்வேறு சட்டங்களை போடும், இதே அரசுதான்  “ஒரே நாடு ஒரே சட்டம்” என்றும் கோமாளித்தனமாக சொல்கிறது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு மனோ கணேச எம்பி வழங்கியுள்ள நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது;

தொகுப்பாளர்: நீங்கள் அண்மையில் தமிழ் ஊடகமொன்றுக்கு, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது கேலிக்குரிய விடயமாக இருக்கின்றது என கூறியிருந்தீர்கள். அதாவது ஆயுதம் ஏந்தியவர்களை நினைவுகூருவதை நியாயப்படுத்த முயல்வது போலவே அது தோன்றியது. என்ன கதை இது?

மனோ கணேசன்: நான் எனது Twitter மற்றும் Facebook ஊடாக இந்த கருத்தினை பதிவேற்றியிருந்தேன். அது தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றது.

நான் சொல்ல முயல்வது இதுதான். அதாவது இந்த நாட்டில் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் பிரச்சினை, வடகிற்கும், தெற்கிற்கும் இடையில் இருந்து வருகின்றது. இது ஒரு புதிய பிரச்சினையல்ல.பாருங்கள், பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதங்கள் ஏந்தி போராட்டங்களை மேற்கொள்பவர்கள்தான் பயங்கரவாதிகள் என கூறப்படுகிறார்கள். இதுபற்றிய எளிமையான விளக்கம் அவ்வளவுதான்.

நாம் இப்படி பார்க்கின்ற போது, 1971, 1989 ம் ஆண்டுகளில் ஆயுதம் ஏந்திய JVPயினர் பயங்கரவாதிகள். LTTEயினரும் பயங்கரவாதிகள். மற்றும் இன்று அமைச்சு பதவி வகிக்கும் டக்லஸ் தேவானந்தவின் EPDP, PLOT, TELO ஆகிய அமைப்புகளும் பயங்கரவாத அமைப்புகளாகத்தான் செயற்பட்டுள்ளன.

ஆனால் இப்போதுள்ள கேள்வி, JVP இன்று தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அதன் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் LTTE யிற்கு இன்னும் தடையுள்ளது. அதனால், வடக்கில் யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகளாக இருக்கட்டும், பொதுமக்களாக இருக்கட்டும் அவர்களை, LTTEயின் பெயரை பயன்படுத்தி நினைவு கூறுவது சட்ட விரோதமானது என அரசாங்கமாக இருக்கட்டும், அல்லது தெற்கில் யாராவது கூறினால் அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால் இதனை ஒரு காரணமாக கொண்டு உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதை நிறுத்துவது என்பது அநீதியானது, பிழையானது, மனிதாபிமானமற்றது என நான் நினைக்கிறேன்.

தொகுப்பாளர்:ஆனால் பிரபல நாடுகளில், அதாவது யுத்தம் நடைபெறுகின்ற நாடுகளில், உதாரணமாக தலிபான் இயக்கங்களை நினைவு கூருவதற்கு இடமளிப்பதில்லையே?

மனோ கணேசன்: (உடனடியாக இடைமறித்து..) அப்போது எவ்வாறு தெற்கில் JVP நினைவு கூருகின்றது?

தொகுப்பாளர்:JVPக்கு நினைவு கூர இடமளிக்கப்படுகின்றதா?

மனோ கணேசன்:நினைவு கூருகின்றனர். ஏன் இல்லை, உங்களுக்கு தெரியாதா?1971-ல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர்.

தொகுப்பாளர்:ஆம். ஆம். JVPயினர் மாவீரர்களை நினைவு கூருகின்றனர்தாம்.

மனோ கணேசன்:இவர்கள் பிரசித்தமாக நாட்டில், கொழும்பு தலைநகரில், மேடை அமைத்து, போஸ்டர்களை ஓட்டி, பாதயாத்திரைகளை நடத்தி, ரோஹன விஜயவீர மற்றும் உபதிஸ்ச கமநாயக்க ஆகியோரை நினைவுக்கூறுகின்றனர்

தொகுப்பாளர்:அப்போது நீங்கள் அந்த அந்தஸ்துக்கு LTTE தலைவர் பிரபாகரனையும் வைக்கின்றீர்களா?

மனோ கனேசன்: நான் JVPயின் ஆயுத கொள்கையினை ஏற்றுகொள்பவனல்ல. நான் இந்நாட்டின் பிரச்சினைகளை ஒருபோதும் ஆயுதம் ஏந்தி தீர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவன் அல்ல.

பேச்சுவார்தை. பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை, கலந்துரையாடல், கலந்துரையாடல், கலந்துரையாடல். வேறு வழிமுறைகள் இல்லை.

அப்போது நான் எப்படி JVPயின் ஆயுத கொள்கையினை ஏற்றுக்கொள்வது? நான் எப்படி வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுத கொள்கையினை ஏற்றுக்கொள்வது? முடியாதுதானே! ஆயுத போராட்டம் வேண்டாம்! சண்டையிட வேண்டாம்! அடித்து கொள்ள வேண்டாம்! சாகடிக்க வேண்டாம்!

அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றாலும், உயிரிழந்தவர்களை நினைவு கூர வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.அது எங்களுக்கு இல்லை. ஆனால், அது JVPக்கு வழங்கப்பட்டுள்ளது.ஒன்றே ஒன்று, JVPயின் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.ஆனால் சிலர், ஜேவிபியினர் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் கலகக்காரர்கள், ஆனால், LTTE பயங்ரவாதிகள் என்று கூற முயல்கின்றனர்.அதை நான் ஏற்க மாட்டேன். இதை தாங்கள் தேவைகளுக்காக சொல்லுகின்றனர். அதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன். அதில் பாரபட்சம் உள்ளது.

தொகுப்பாளர்:அப்படியென்றால் இரு சாராரினதும் நோக்குகள் ஒன்றா?

மனோ கணேசன்: ஒன்றாகும்! ஒன்றாகும்!

ஆயுத போராட்டம் என்பது, ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொள்வேண்டி ஆகும். புலிகளின் நோக்கம் வடகிழக்கில் வேறொறு நாட்டை உருவாக்குவது என்று சொல்கிறார்கள்.

1971, 1989களில் தெற்கில் சில பிரதேசங்களை JVP பிடித்து தம்வசம் வைத்திருந்தனர். உங்களுக்கு தெரியுமாயிருக்க வேண்டும். அப்பிரதேசங்களை அவர்கள் ஆட்சி செய்தார்கள். அந்த கிராமங்களில் அவர்களது நீதிமன்றங்களை நடத்தினர். தெரியும்தானே!

LTTE மற்றும் தமிழ் அமைப்புகள், வடக்கையும் கிழக்கை மட்டும் ஆக்கிரமிக்க முயன்றனர். ஜேவிபினர் முழு நாட்டையும் பிடிக்க முற்பட்டனர்.

LTTE மற்றும் ஆயுதம் ஏந்திய ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் இடையிலும், JVPக்கு இடையிலும் கொள்கை வித்தியாசங்கள் உள்ளன. அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், அதை காரணமாக கொண்டு, தமிழ் அமைப்புகள் பயங்கரவாதிகள். JVPயினர் கெளதம புத்தர்கள் என்று சொல்ல முயல்வதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்.

எல்லோருமே ஆயுதங்களை ஏந்திதான் போராட்டங்களை செய்தனர். அதிலிருந்துதான் என் கொள்கை நிலைப்பாட்டை நான் ஆரம்பிக்கிறேன்.

ஆயுத அமைப்புகளின் போக்கினை நான் ஏற்றுகொள்வதும் இல்லை, அதை சரியென நான் சொல்வதும் இல்லை. அங்கீகரிப்பதும் இல்லை.ஆனால் அவர்கள் உயிரிழந்தனர்.

அதனால் அவர்களின் தாய், தந்தை, மனைவிமார்களுக்கு. பிள்ளைகளுக்கு தமது பிள்ளைகளை, கணவர்மார்களை, பெரியோரை, உறவினர்களை, நினைவுகூர இடமளிக்கப்பட வேண்டும். இது இவ்வுலகில் யாருக்கும் இருக்க வேண்டிய உரிமை.

அதனால் LTTE ஒரு தடை செய்யப்பட இயக்கம் என்பதால்…, அந்த தடை என்றாவது ஒருநாள் நீக்கப்பட முடியும், அதுவரை அந்த அமைப்பின் பெயர் குறிப்பிடாமல், அவர்களது கொள்கைகளை பற்றி பேசாமல், இறந்தோரை நினைவுக்கூர அவர்களுக்கு இடமளிக்கபட வேண்டும்.

தொகுப்பாளர்:ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லையே. அவர்கள் படங்களை பிரசுரிக்கின்றனர்?

மனோ கணேசன்:அதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். தற்போது அரசாங்கம் மற்றும் தெற்கில் இருக்கும் அடிப்படைவாதிகள் சம்பூரணமாக நினைவுகூரவே கூடாது என்று கூறுகிறார்கள்.

இங்கே LTTE போராளிகள் மட்டுமல்ல, சதாரண மக்களும் யுத்தத்தின் இறுதி காலகட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அப்படியானால், அவர்களை எவ்வாறு நினைவு கூறுவது? அதற்கு இடமளிக்க வேண்டும் அல்லவா?

ஜேவிபியினருக்கு நினைவுகூர இடமளிக்கப்பட்டுள்ளதே. இங்கே கொழும்பில், எம் தலைநகரத்தில் பாருங்கள். இம்மாதம் பாருங்கள். அவர்கள் நினைவு கூருவார்கள்.

இதற்கு ஒரு கலந்துரையாடல் அவசியம். என்னுடைய டுவீட்டர் செய்தி மூலம் இதுபற்றிய ஒரு தேசிய கலந்துரையாடலையே நான் எதிர்பார்க்கின்றேன். ஒரு தேசிய விவாதத்தையே எதிர்பார்க்கின்றேன்.

சிலர் என்னிடம் வந்து, LTTE வேறு, JVP வேறு என்று சொல்லுகின்றனர் அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதை பற்றி நான் கதைக்க போவதில்லை. அவர்கள் ஆயுத போராட்டம் செய்தார்களா? இல்லையா? “லெஜிடிமேட் கவர்ன்மன்ட் ஒப் ஸ்ரீலங்கா”, சட்டபூர்வமான இலங்கை அரசாங்கம், என்பதற்கு எதிராக அவர்கள் ஆயுத போராட்டம் செய்தார்களா? இல்லையா?

இப்போது இந்நாட்டில் ஆயுதம் வைத்திருக்க யாருக்கு உரிமை உள்ளது? காவல்துறைக்கும், இராணுவத்திற்கும்தான் உள்ளது. வேறு யாருக்கும் கிடையாது.

எனக்கும் மந்திரி என்பதால் அனுமதி பெற்ற பிஸ்டல் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் எனக்கு அந்த அவசியம் இல்லை. ஆகவே என்னிடம் துப்பாக்கி இப்போது இல்லை. மற்றவர்களுக்கும் அதை வைத்திருக்க முடியும் ஆனால் அதற்கு அரசாங்கத்தின் அனுமதி தேவை.

தவிர, அமைப்புரீதியாக யாருக்கும் ஆயுத போராட்டம் நடத்த முடியுமா? ஆயுதங்கள் சேகரிக்க முடியுமா? அதைதான், அதை மட்டும்தான் நான் பார்க்கின்றேன் இவர்களின் கொள்கைகளை நான் பார்க்கவில்லை. யுத்தத்தினை இருசாராரும்தானே செய்தார்கள்? நாம் இவர்களுக்கு இடமளிக்கின்றோம். அவர்களுக்கு இடமில்லை. அப்படியானால், தமிழ் மக்களின் மனம் புண்படுமல்லவா?

இப்போது பாருங்கள். தெற்கிலுள்ள தாய், தந்தையர்களுக்கு மற்றும் மக்களுக்கு தங்களுடைய உயிரிழந்த புத்திரர்களை நினைவுகூர உரிமை உண்டு. இந்த புத்திரர்களில் பெரும்பாலோர் JVP போராளிகள். தேசபிரேமி போராளிகள். அவர்கள் இந்நாட்டில் என்ன செய்தார்கள்?

ஸ்ரீலங்கா இராணுவத்தினரை கொன்றார்கள். ஸ்ரீலங்கா பொலிஸ்காரர்களை கொன்றார்கள். அரசியல்வாதிகளை கொன்றார்கள். ஊடகவியலாளர்களை கொன்றார்கள்.

நடந்ததுதானே? இல்லை என சொல்ல முடியுமா? 1971,1989ம் ஆண்டுகளில் நடந்ததா? இல்லையா? சொல்லுங்கள். இல்லையென கூற முடியுமா? இப்போது அந்த வழியை கைவிட்டு, மனம் மாறி, பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றார்கள். நல்லது மற்றும் அழகானது.

தொகுப்பாளர்:கருணா அம்மானும் வந்திருக்கின்றார்.

மனோ கணேசன்:

EPDPயினர் வந்திருக்கின்றனர். PLOT தலைவர் சித்தார்த்தன் வந்திருக்கின்றார். TELO அமைப்பின், தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை பாராளுமன்றத்தில், குழுக்களின் பிரதி தலைவராக இருந்திருக்கின்றார். இன்னமும் புதிதாக பலர் பாராளுமன்றம் வந்திருக்கின்றார்கள். இவர்கள் PLOT, EPDP, TELO, EPRLF அமைப்புகளில் இருந்தவர்கள். அவர்களும் ஆயுத போராட்டம் மேற்கொண்டவர்கள். அதேபோல LTTEகாரர்களும் வரலாம். ஏன், கருணா வந்து போனார். இப்போது பிள்ளையான் வந்திருக்கின்றார்.

தொகுப்பாளர்:உங்கள் வாதம் தர்க்கரீதியாக சரி. ஆனால், நாங்கள் இரண்டையும் நிறுத்து பார்தோமானால், LTTEயின் ஆயுத போராட்டத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம். அதனால் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும், நாட்டிற்கும் ஏற்பட்ட சேதம் அதிகம் அல்லவா? அதை நீங்கள் ஏற்றுகொள்ளுகின்றீரகளா?

மனோ கணேசன்:இல்லையில்லை. யுத்தம் நடக்கும் போது… JVPயின் காலத்தில் தொழிநுட்பங்கள் அதிகம் இருக்கவில்லை. அவர்கள் சாதாரண காட்டுத்துப்பாக்கிகளை பாவித்தனர். பின்னர் 1989ல் அவர்களும் முன்னேறி இயந்திர துப்பாக்கிகளையும் பாவித்தனர். இப்போது அல்லது எதிர்காலத்தில் இன்னொரு யுத்தம் வந்தால் அவர்கள் இன்னமும் முன்னேறுவார்கள்.

ஆயுத போராட்டம் நடந்தால், யுத்தம் நடந்தால் சேதம் ஏற்படத்தானே செய்யும். நான் அதை ஏற்றுக்கொள்பவன் அல்லவே. எனக்கு அது வேண்டாமே! நான் கதைப்பது அதையல்லவே.

அங்கு சேதம் அதிகம். ஆகவே அவர்களுக்கு இடமளிக்க முடியாது. இங்கு சேதம் குறைவு. அதனால் இங்கே இடமளிப்போம். இந்த தர்க்கம் பிழையானது. இது ஒரு பாரபட்சமான தர்க்கம். அப்படி செய்ய முடியாது. ஏன் தெற்கிற்கு மட்டும் ஒரு நீதி?

இப்போ பாருங்கள். இந்த அரசாங்க காலத்தில்தான் அதிகம் சொல்லப்படுகின்றது. “ஒரே நாடு: ஒரே சட்டம்” எனப்படுகிறது.

ஒரே நாடு, என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். எனக்கு யாரும் அதுபற்றி வகுப்பு எடுக்க தேவையில்லை. நான் சொல்கிறேன். இது ஒரே நாடுதான். அதற்குள் வேறொறு நாட்டை உருவாக்க முடியாது.

இது ஒரு நாடாகவும் இருக்க வேண்டும். அரசியல் இலக்குகளை அடைய ஆயுத வழியற்ற பயணத்தையும் மேற்கொள்ள வேண்டும். இவை என் பிரதான இரண்டு நோக்கங்கள். ஒன்று, இது ஒரே நாடு. இரண்டாவது, அரசியல் நோக்குகளை அடைய ஜனநாயகமற்ற பாதையில் செல்லாமல் இருப்பது. இது இரண்டும் எனது அடிப்படை. அதற்குள்ளேதான், நான் எல்லாவற்றையும் அளந்து, நிறுத்து பார்க்கின்றேன்.

அதற்குள் எல்லாமே வருகிறதுதானே? “ஒரே நாடு, ஒரே சட்டம்“ என்று இந்த அரசாங்கம்தானே சொல்கின்றது? ஒரே சட்டத்தை கொண்டுவர முடியுமோ என எனக்கு தெரியவில்லை. அதற்கு வெவ்வேறு பிரச்சனைகள் உள்ளன.

கண்டியில் “மலைநாட்டு சிங்கள சட்டம்” உள்ளது. வடக்கில் “தேசவழமை சட்டம்” இருக்கின்றது. “முஸ்லிம் சட்டம்” இருக்கின்றது. இவற்றையெல்லாம் கலந்துரையாடி ஓரிடத்திற்கு கொண்டு வரவேண்டும். அப்படியென்றால் நல்லது. அப்படி ஒரே சட்டம் கொண்டு வரும் போது, அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.

நான் சொல்வது அதனையல்ல. இப்படி சொல்லும் அரசாங்கம், இப்போது பாருங்கள், வடக்கிற்கும், கிழக்கிற்கும் வேறு சட்டத்தை அமுல் செய்வது போல் தெரிகிறதே. அங்கே நினைவுக்கூர முடியாது. தெற்கில் நினைவுக்கூர முடியும்.

அப்போது அது வேறொரு நாடா? வேறு நாடு இல்லை என நாங்கள் சொல்லுகின்றோம். ஆனால் இதன் முலமாக வெவ்வேறு நாடுகள் என அரசாங்கம் சொல்லுகின்றது.

நாங்கள் இதை மனிதாபிமான கோணத்தில், மனிதாபிமான பிரச்சினையாக பார்க்க வேண்டும். அவர்களுக்கு நினைவுகூர இடமளிப்பது, அவர்களுடைய கொள்கைகளை அப்படியே ஏற்கின்றோம் என்பதல்ல.சரி…, எனக்கு சொல்லுங்களேன். LTTE இப்போது எங்கு இருக்கின்றது?

2009 மே மாதம் 19 தினம் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என உத்தியோகபூர்வமாக அக்காலத்தில் ஜனாதிபதி இப்போது பிரதமராக இருக்கின்றவர் பாராளுமன்றம் வந்து அறிவித்தார். அந்நேரத்தில் LTTE முற்றாக அழிக்கப்பட்டது எனவும், யுத்தத்தில் வெற்றி பெற்றோம் எனவும் தெரிவித்தார்கள்.

இப்போது சில இடங்களில், சில நேரங்களில், LTTE கொடிகளை ஏந்தி, சிலர் வெளிநாடுகளில் போராட்டங்களை மேற்கொள்ளுகின்றனர். அவற்றை வைத்துக்கொண்டு, அதை ஒரு பயங்கர பூதமாக காட்டி, காலம்பூராவும் சாதாரண தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க முடியாது. இப்போது LTTE இல்லை.

மற்றபடி, வட-கிழக்கு மக்களின் இன்றைய மனப்பான்மையை நான் நன்கறிவேன். அவர்கள் இன்னுமொரு பயங்கர யுத்தத்திற்கு தயார் இல்லை. இப்பொழுது யாராவது ஆயுத போராட்டத்தை பற்றி பேசினால், பொலிஸ், ராணுவத்துக்கு முன், வட-கிழக்கு தமிழ் மக்கள் அதை எதிர்ப்பார்கள். ஆகவே இந்த பின்னணியில்தான் இவற்றை நாம் பார்க்க வேண்டும்.

நாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 90 பேர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்து 962  பேர் குணமடைந்துள்ளனர்.

‘கொரோனா’ – 14,962 பேர் மீண்டனர்! 5,456 பேருக்கு சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 465 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 456 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 90 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து  508 ஆக அதிகரித்துள்ளது.

‘கொரோனா அச்சத்தால் தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்தில் பதற்றம்’ – நடந்தது என்ன?

பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை, கொரோனா அச்சத்தால் அவர்களின் பெற்றோர் இடைநடுவில் வீடுகளுக்கு அழைத்துச்சென்ற சம்பவம் இன்று (24.11.2020) தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர் என கிடைத்த தகவலையடுத்தே பெற்றோர் இவ்வாறான நடவடிக்கையில் இறங்கினர்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத்தவிர நாட்டில் ஏனைய பகுதிகளில் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நேற்று (23) திறக்கப்பட்டன. 2ஆவது நாளாக இன்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தன.

வழமைபோல் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

கொழும்பில் இருந்து பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வருபவர்கள் சுகாதார அதிகாரிகளால் சுயதனிமைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் இன்று (24) பாடசாலைக்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய நிர்வாகத்தினரால் குறித்த மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பியனுப்பட்டுள்ளனர்.

எனினும், இது தொடர்பில் பெற்றோருக்கு வேறு விதத்தில் தகவல் சென்றுள்ளது. அதாவது தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பாடசாலையில் இருக்கின்றனர் எனக் தகவல் சென்றுள்ளதால் பதற்றமடைந்த பெற்றோர், பாடசாலையை நோக்கி படையெடுத்துவந்தனர்.

தமது பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்புமாறு அதிபர், ஆசிரியர்களிடம் கோரினர். இதனால் ஆசிரியர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து இது தொடர்பில் வித்தியாலய அதிபர் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

” இது தொடர்பில் நான் நுவரெலியா கல்வி வலய பணிப்பாளருடன் கலந்துரையாடினேன். அவரின் ஆலோசனையின் பிரகாரம், மாணவர்களை அழைத்துச்செல்ல வந்த பெற்றொர்களிடம் கடிதம் வாங்கிக்கொண்டு மாணவர்கள் அனுப்பட்டனர்.” என்று வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

க.கிசாந்தன்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...