‘முதல் தடவையாக ஒன்லைன்மூலம் கோப்குழு விசாரணை’
‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் மேலும் 294 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இதுவரையில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்து 447 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அழுத்தத்தால் ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டி வரும் : ஶ்ரீதரன்
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அழுத்தங்களினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
கூட்டணித் தலைவர்கள், ஆயிரம் ரூபாவைக் கடந்து அதற்கும் அதிகமான தொகையைப் பெற்றுக் கொடுக்க குரல் கொடுப்பார்கள் என்றும் ஶ்ரீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றின் சமகால அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபா வரை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் முன்மொழிந்துள்ளார். இது இறுதியான வார்த்தை அல்ல. இதில் மயக்கம் இருக்கிறது. இதனை அழுத்தமாக சொல்லவில்லை. தோட்டத் தொழிலாளருக்கு சம்பளம் வழங்க ஒரு முறை இருக்கிறது. தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே சம்பளம் குறித்த இணக்கம் காணப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்களின் கொடுப்பனவு தனியார் துறைசார்ந்த கொடுப்பனவாக இருக்கிறது. அரசாங்க ஊழியர் ஒருவரின் சம்பளம் குறித்து பிரதமரோ, நிதியமைச்சரோ இதனைக் கூறலாம். ஆனால், தோட்டத் தொழிலாளிக்கு ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்று பிரதமர் எந்த அடிப்படையில் கூறியிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆகவே இதனை நம்பக்கூடிய கூற்று அல்ல. ஆயிரம் ரூபாவை விட அதிகமாக சம்பளம் வேண்டும் என்பதற்காக தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் இப்போதே குரல் எழுப்பத் தொடங்கிவிட்டார். இவ்வாறு முன்வைக்கும் அழுத்தத்தின் காரணமாக நிச்சயமாக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தைப் பெறுவதற்கான போராட்டங்களையும் முன்னெடுப்போம். கோரிக்கைகளையும் முன்வைப்போம்.” என்று மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் பிடிக்குள் இருந்து 15,447 பேர் மீண்டனர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 485 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 5 ஆயிரத்து 426 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று (25) நிறைவேற்றப்பட்டது.
சபை அமர்வு ஆரம்பமாகியதும் தவிசாளர் கதிர்ச்செல்வனால் அடுத்தாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.
15 உறுப்பினர்கள் அங்கம் வகித்தாலும் இன்று 12 பேரே சமூகமளித்திருந்தனர். இதில் ஒருவர் மாத்திரமே பட்ஜட்டை எதிர்த்து வாக்களித்தார். ஏனைய 11 பேரும் ஆதரவாக வாக்களித்தனர். இதன்படி மேலதிக 11 வாக்குகளால் பட்ஜட் நிறைவேற்றப்பட்டது.
உலகளவில் 6 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, 6 கோடியே ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 799 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து 4 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
பதுளையில் 100 கோவில்களுக்கு நிதியுதவி
பதுளை மாவட்டத்தில் புனரமைக்கபட்ட 100 கோவில்களுக்கு செந்தில் தொண்டமான் நிதி வழங்கியுள்ளார்.
நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப்பணிகள் தாமதமான நிலையில் இருந்த கோவில்களை தெரிவு செய்து அந்த கோவில்களின் கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்காக நிதி வழங்கியுள்ளார்.
தொட்டலாகலை, சேர்வுட், நீட்வுட் 40 ஏக்கர் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து கோவில் கட்டுமானப்பணிக்கான நிதியை வழங்கி வைத்தார்.


நுவரெலியா நகரசபை உறுப்பினர்கள் நால்வர் சஜித்துடன் சங்கமம்!
நுவரெலியா நகரசபையின் உறுப்பினர்கள் நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேரில் சந்தித்து அவர்கள் தமது ஆதரவை உறுதிப்படுத்தினர். அத்துடன், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடினர்.
நுவரெலியா நகரசபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களான காமினி திஸாநாயக்க, நவரட்னம் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கட்சிமாறியுள்ளனர்.
‘கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வு விக்டோரியா நீர்த்தேக்கத்தை பாதிக்காது’
கண்டி பல்லேகல பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வுகள் விக்டோரியா நீர்த்தேக்கத்தை பாதிக்காது என்று பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி ஜகத் குணத்திலக்க தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின் பல்லேகல பிரதேசத்திற்கு அருகாமையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட சிறிய பூகம்பங்களின் தாக்கத்தின் தன்மையை அறிவது தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில், இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் குறித்த ஆய்வு அறிக்கை தொடர்பில் இவ்வாறு விளக்கமளித்தார்.
புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி ஜகத் குணதிலக்க. மேலும் கூறுகையில்,
விக்டோரியா நீர்த்தேக்கம் ஆனது உலகின் மிக திறமையான வடிவமைப்பாளர்களால் கட்டப்பட்டது. அந்த பகுதியில் அதிகபட்ச நில அதிர்வு தீவிரம் பற்றி,கடந்த 100 ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கங்களின் அளவைக் கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட ஆய்வொன்றின் அடிப்படையில் அவ்வாறு நீர்த்தேக்கத்தை பாதிக்கும் பூகம்பமோ நில அதிர்வுகள் எதுவுமே இல்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கை தீவானது , பூகம்பங்கள் ஏற்படக்கூடிய பகுதியில் இல்லை என தெரிவிக்கும் சிரேஷ்ட பேராசிரியர் , சமீபத்தில் பல்லேகல அருகே ஏற்பட்டிருக்கும் நிகழ்வை பூகம்பங்கள் என மக்கள் கருதினாலும் அவை பூகம்பங்கள் அல்ல என்றும் கூறினார்.
இந்த நிலநடுக்கம் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு சிறிய நில அதிர்வு என்று அவர் வலியுறுத்தினார்.
சுண்ணாம்பு தொடர்பான தொழில்கள் இந்த பிராந்தியத்தில் இடம்பெறுகின்றன.இந்த பூகம்பங்களுடன் அவை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் மாற்றமாக பூகம்பமே இதற்குக் காரணம் என்று முடிவு செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.
சுண்ணாம்புக் கல் நாட்டுக்கு இன்றியமையாத வளமாக இருப்பதால், அதை, அதன் இடத்திலிருந்து மிகக் கவனமாக அகழ்ந்தெடுக்க வேண்டும். அதை முறையான தொழில்நுட்ப அறிவுடன் தோண்ட வேண்டும்.விக்டோரியா நீர்த்தேக்கம் கட்டப்பட்ட பின்னர், நீர் அதன் அதிகபட்ச கொள்ளவை எட்டிய பல சம்பவங்கள் இருந்த போதிலும் கூட முந்தைய நான்கு பூகம்பங்களிலும் நீர்த்தேக்கம் அதன் அதிகபட்ச திறனை எட்டவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
பூகம்பம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் புவியியல் துறை, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு, புவியியல் மற்றும் சுரங்க பணியகம், பேராதனை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆய்வாளர்கள், கண்டி மாவட்ட அதிகாரிகள் என பலர் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
டயகமவில் 3 கி.மீ. நடந்து வந்த கொரோனா தொற்றாளர்!
நுவரெலியா, டயகம – நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று (24.11.2020) அடையாளம் காணப்பட்டார் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு மெனிங் சந்தையில் தொழில்புரிந்த 72 வயதுடைய குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி நெட்பொன் தோட்டத்துக்கு வந்துள்ளார்.
கொழும்பில் இருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு வருபவர்கள் கினிகத்தேனை, கலுகல்ல பகுதியில் உள்ள சோதனைச்சாவடிக்கு அருகாமையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கடந்த சனிக்கிழமை முதல் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் குறித்த நபரிடமும் பிரிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபரை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்வதற்கு அம்புலன்ஸ்வண்டி வந்துள்ளது. எனினும், குறித்த தோட்டத்துக்கு அன்புலன்ஸ் வண்டி செல்வதற்கு வழியில்லாததால் கொரோனா தொற்றாளர் சுமார் 3 கிலோமீற்றர்வரை நடந்துவந்தே அன்புலன்ஸில் ஏறியுள்ளார். அதன்பின்னர் அவர் அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
க.கிசாந்தன்





