Home Blog Page 3766

நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 87 பேர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்து 497 பேர் குணமடைந்துள்ளனர்.

சஜித் – சந்திரிக்கா அவசர சந்திப்பு!

எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று (23) இடம்பெற்றது.

உலகம் பூராகவும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக இதன்போது விஷேட அவதானம் செலுத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பாரிய அளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலுக்கு மத்தியில் எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் குறித்தும், அதனை வெற்றி கொள்வதற்குரிய வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடலுக்குட்படுத்தப்பட்டது.

அதே போன்று இலங்கைக்குப் பொருத்தமான தேசிய சுற்றாடல் கொள்கை வகுப்பின் தேவைப்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதோடு,சர்வதேச ரீதியாக ஏற்ப்பட்டிருக்கும் காலநிலை மாற்றம் தொடர்பாகவும் இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

‘மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பல்வேறு முறைகேடுகள்’

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் (கோப்) வெளிப்பட்டது.
இந்த நெடுஞ்சாலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளுக்காக மாத்திரம் 1.7 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவு செய்யப்பட்டிருப்பதாக இங்கு உறுதியானது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது கட்டமான கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப்பணிகள் 2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை தாமதமானமையால் 8 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.
இதில் முதலாவது சாத்தியக்கூறு ஆய்வுக்காக SMEC நிறுவனம் கொள்முதல் நடைமுறைகளுக்கு அப்பால் தெரிசெய்யப்பட்டமையும் விசாரணைகளில் தெரியவந்தது. அத்துடன், 2012ஆம் ஆண்டு வடக்கு அதிவேக நெடுஞ்சாலை என மூன்று கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட திட்டம் 2015 ஆண்டாகும்போது நான்கு கட்டங்களைக் கொண்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய என்டேரமுல்ல முதல் மீரிகம வரையும் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நெடுஞ்சாலையை கடவத்தையிலிருந்து அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், இந்தத் தீர்மானம் காரணமாக மீண்டும் சாத்தியகூறு ஆய்வுகள் சிலவற்றுக்காக பெருந்தொகை பணம் செலவுசெய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு எந்தவொரு முறையான நிபுணத்துவ ஆலோசனையும் இன்றி அமைச்சரவையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு வெளிப்பட்டது.
அசல் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தால் ஏற்பட்ட நிதி இழப்புக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு கூடியிருந்ததுடன், இதில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரத்ன, ஜகத் புஷ்பகுமார, பிரேம்நாத்.சி.தொலவத்த, ரஞ்சன் ராமநாயக்க, டி.வி.சானக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கடவத்தையிலிருந்து மீரிகம வரையான பகுதி வடக்கு அதிவேக நெடுஞ்சாலை என்ற பெயரிலிருந்த திட்டத்தில் பொத்துஹர முதல் ஹீன்தெனிய வரையில் கட்டுமானங்களை மேற்கொள்ள கொள்முதல் நடைமுறையையும் மீறி MCC என்ற சீன நிறுவனத்தைத் தெரிவுசெய்ய 2015 ல் அமைச்சரவை தீர்மானம் எடுத்ததாகவும் இங்கு வெளிப்பட்டது.
இதற்காக 159 மில்லியன் ரூபா நிதி செலவுசெய்யப்பட்டதுடன், பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழு இதுபற்றிய தீர்மானத்தை எடுத்ததுடன், கொடுப்பனவு தொடர்பான பிரச்சினை காரணமாக இப்பகுதிக்கான கட்டுமானப் பணிகள் 04 வருடங்கள் தாமதமடைந்து 2019ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இங்கு வெளிப்பட்டது. இந்த காலதாமதத்தினால் ஏறத்தாழ 8 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கோப் குழு விசாரணைகளின் போது புலப்பட்டது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாவது கட்டமாண பொத்துஹர முதல் கலகெதர வரையிலான பகுதியின் கொள்முதல் செயற்பாடுகளில் காணப்பட்ட மோசடிகள் காரணமாக கொள்முதல் செயற்பாடுகள் பூர்த்தியடையவில்லை. விலைமனுக் கோரலுக்கு அமைய MS Taisei என்ற நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் கையளிக்கப்பட்டிருக்க வேண்டியிருந்தபோதும் Fujita என்ற நிறுவனத்துக்கு இதனை வழங்க பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் அழுத்தம் இருந்ததால் கொள்முதல் செயற்பாடுகளில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் இங்கு வெளிப்பட்டது.
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுபோன்ற குழு இருப்பதில் எந்தவிதமான தவறும் இல்லாதபோதும், பில்லியன் பெறுமதியான கொள்முதல் செயற்பாடுகளில் தொடர்புபடுவதால் இது நாட்டின் நிதி ஒழுக்கத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கோப் குழுவின் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
பொருளாதர முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழு சில சந்தர்ப்பங்களில் எழுத்துப்பூர்வமாக செல்வாக்கு செலுத்தியது என்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும், கண்காணிப்பதற்கும், ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அமைக்கப்படும் குழுக்கள் கொள்முதல் செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துவது ஒரு பெரிய பிரச்சினை என்றும் அவர் கூறினார். எனவே, கொள்முதல் செயற்பாடுகளுக்கு ஏற்ப இந்த அதிவேக நெடுஞ்சாலையில் எதிர்காலப் பணிகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் தலைவர் வலியுறுத்தினார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் தற்போதைய நிலை குறித்தும் கோப் தலைவர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். கடவத்தை முதல் மீரிகம வரையில் 5% பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும், மீரிகம முதல் குருநாகல் வரையிலான இரண்டாவது கட்டத்துக்கான பகுதியில் 75% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளைப் பூர்த்திசெய்ய முடியும் என்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அதேநேரம், பொத்துஹரவிலிருந்து கலகெதர வரையிலான பிரிவுக்கு கொள்முதல் செயல்முறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும், அடுத்த ஆண்டு பணிகளைத் தொடங்க முடியும் என்றும் திட்டப் பணிப்பாளர் கூறினார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது, மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்களின் முன்னேற்றம் குறித்து முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்கவும் குழு பரிந்துரைத்தது.
2012ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளுக்காக ஏறத்தாழ 284 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும் இங்கு தெரியவந்தது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளில் சில தற்போதைய அதிவேக நெடுஞ்சாலைக்குப் பயனற்றவையாகக் காணப்படுகின்றன என்று வருத்தம் தெரிவித்த தலைவர், எதிர்கால நிதி நடவடிக்கைகள் அனைத்தையும் நிர்வகிப்பது முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், இந்தத் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளும் இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எந்தளவு பயனுள்ளவை என்பது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கோப் குழுவின் தலைவர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீடத்தில் சிவநேசன்!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் உத்தியோகஸ்தர் சபை கூட்டமும் நிர்வாகசபை கூட்டமும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தலைமையில் ஹற்றனில் இடம்பெற்றது.

இதன்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளராக  சங்கத்தின் உதவிச் செயலாளரும் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினருமான பழனிவேல் கல்யாணகுமார் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.

அதேவேளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர் பீடத்துக்கு மத்திய மாகாணசபையின் முன்னாள் அமைச்சரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவருமான முத்தையா ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணித் தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பாலகிருஷ்ணன் சிவநேசன் ஆகியோர் உள்வாங்கப்பட்டனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் , பிரதி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்தக் கூட்டங்களில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் எஸ்.செபஸ்டியன்,

நிர்வாகச் செயலாளர் எஸ் .வீரப்பன், உப தலைவர்களான இரத்தினசாமி, மாணிக்கம் ,எஸ் .ராஜமாணிக்கம் வேலு சிவானந்தன்,ஏ. இராஜமாணிக்கம் , உதவிச் செயலாளர்களான வைலட்மேரி,ஆர்.சிவகுமார், பிராந்திய தேசிய அமைப்பாளர்களான ஆர். விஜய வீரன்,கே. கல்யாணகுமார், ஏ. பிரசாந்த், எம். மனோகரன்,, தொழிற்சங்க இயக்குனர், அ. நந்தகுமார் ஆகியோரும் மாவட்ட தலைவர்களும் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

அதேவேளை புதிய வருடத்திற்கான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டி விபரங்கள் அடங்கிய கோவை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரிடம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ் .பிலிப் ஒப்படைத்தார்.

‘கொரோனா’வில் இருந்து 14,497 பேர் மீண்டனர் – 5,587 பேருக்கு சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 428 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 587 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து  171 ஆக அதிகரித்துள்ளது.

‘மலையக மக்களுக்கு 100 நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள்’

” மலையக மக்களுக்கு நூறு நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் விசேட வேலைத்திட்டமானது தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.” – என்று குறித்த வேலைத்திட்டத்தின் பிரதானியும், இ.தொ.காவின் உப செயலாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் மூன்றாண்டுகளுக்குள் இவ்வாறு ஒரு இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் பாரத் அருள்சாமி மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவுக்கமைய பிரதம அமைச்சின் விசேட செயல்திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. முதற்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும். குறிப்பாக முதல் நூறு நாட்களுக்குள்  ஆயிரம் பேருக்கு இதனை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

இதன்படி நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும். அதன் பின்னர் ஏனைய பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். எப்படியும் மூன்றாண்டுகளுக்குள் ஒரு லட்சம் பேரின் காணி உரிமையை சட்டபூர்வமாக உறுதிப்படுத்துவதே எமது இலக்காக இருக்கின்றது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் 1200 கண்டி மாவட்டத்தில் 830 மாத்தளை மாவட்டத்தில் 340 காணி உறுதிப்பத்திரங்கள் தயார்படுத்தப்படுகின்றது.

நல்லாட்சி எனக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்களால் காணி உறுதிப்பத்திரம் என்ற போர்வையில் கடதாசி பத்திரமே வழங்கப்பட்டது. ஆனால் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டபூர்வமான ஆவணத்தையே நாம் வழங்கவுள்ளோம்.

மலையகத்தில் அமரர் சௌமிமூர்த்தி தொண்டமான், அமரர். ஆறுமுகன் தொண்டமான், அமரர் சந்திரசேகரன் ஆகியோராலும் தனி வீடுகள் அமைக்கப்பட்டன. எனினும், அவற்றுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் இல்லை. அந்த வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி தலைவராக நான் பதவியேற்றபோது, காணி உரிமை என்ற விடயத்தை தலைவர்  அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களிடம் குறிப்பிட்டிருந்தேன் அதன்படி அவர் தலைமையில் கொட்டகலை ரொசிட்டா பகுதியில் 50 குடும்பங்களுக்கு 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்ப கட்டமாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இவ் விசேட வேலைத்திட்டத்தின் கமிட்டியின் பிரதானியாக அமைச்சர் என்னை நியமித்துள்ளார்” – என்றார்.

‘மலையகத்தின் பிரதான நகரங்களை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை’

மலையகத்தின் பிரதான நகரங்களான ஹட்டன், மஸ்கெலியா, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஹட்டன் நகரில் ஹட்டன் புகையிரத பகுதியில் நிர்மானிக்கப்படும் கட்டடத்தொகுதி மற்றும் பழைய சந்தை தொகுதி, தலவாக்கலையில் உள்ள சந்தை தொகுதி,

மஸ்கெலியா நகரம், கொட்டகலை கொமர்சல் பகுதியில் இடைநிறுத்தப்பட்ட நடைபாதை பூங்க ஆகியவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இன்று (23.11.2020) கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, இது தொடர்பாக ஆராய்வதற்காக இன்று மதியம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறித்த பிரதசங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டார்.

இதன்போது, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் மற்றும் உப தலைவர் உள்ளிட்ட பலர் அமைச்சரோடு உடனிருந்தனர்.

க.கிசாந்தன்

பதவி துறந்தார் அகில! பொதுச்செயலாளராகிறார் நவீன்?

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை அகில விராஜ் காரியவசம் இராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இது தொடர்பான அறிவித்தலை அகில விடுத்துள்ளார்.

கட்சி மறுசீரமைப்புக்கு வழிவிடும் நோக்கிலேயே அவர் இவ்வாறு செய்தார் என கூறப்பட்டாலும் அதிருப்தி காரணமாகவே பதவி துறந்தார் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, ஐ.தே.கவின் புதிய பொதுச்செயலாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்படக்கூடும் என அறியமுடிகின்றது.

 

‘புலிகள்மீதான தடையைநீக்க வழக்கு தாக்கல் செய்யுங்கள்’

” புலிகள் அமைப்புமீதான தடையைநீக்குமாறுகோரி இலங்கை நீதிமன்றத்தில் சுமந்திரன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்யவேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் யோசனை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது வடக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுக்கு தெற்கில் இருந்து எதிர்ப்புகள் கிளம்புவது தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு யோசனையொன்றை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. தெற்கிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றது. குறிப்பாக அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பியின் தமது தோழர்களை நினைவுகூருகின்றனர். அதேபோன்றதொரு சூழ்நிலையை – சுதந்திரத்தை வடக்கில் உள்ளவர்களும் எதிர்ப்பார்க்கின்றனர்.

ஜே.வி.பி. என்பது தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல. தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, சுமந்திரன், விக்னேஸ்வரன், பொம்மன்பலம் போன்றவர்கள் நீதிமன்றம்சென்று புலிகள்மீதான தடையை நீக்குவதற்கு வழக்கு தாக்கல் செய்யவேண்டும். வெளிநாடுகளில் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது. இல்லையெனில் இப்பிரச்சினை தொடரும்.

அதேவேளை, புலிகளின் பெயர், கொடி, கொள்கைகள் பற்றி கதைக்காமல் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவுகூரலாம். அது தவறு இல்லை. இதற்குள் அரசியல் திணிக்கப்பட்டால்தான் அது சர்ச்சைக்குரியதாக மாறும். ” – என்றார்.

‘வில்பத்துவை மீளக்கட்டியெழுப்ப ரிஷாட் 50 கோடி ரூபாவை வழங்கவேண்டும்’

வில்பத்து வனத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு ரிஷாட் பதியுதீன் 50 கோடி ரூபாவை வழங்கவேண்டும் – என்று வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார்.

பூண்டுலோயா நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாராந்த சந்தைக் கட்டடத் தொகுதியை அமைச்சர் சிபி ரத்னாயக்க நேற்று (22.11.2020) திறந்து வைத்தார். இந்நிகழ்வின் பின்னர் அமைச்சர் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.

இதன்போது மீள்குடியேற்ற நடவடிக்கையின்போது பஸில் ராஜபக்சவும் மரங்களை வெட்டினார் என ரிஷாட் பதியுதீனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ரிஷாட் பதியுதீன் என்பவர் நீதிபதி கிடையாது. வில்பத்து விவகாரத்துக்கு அவரே பொறுப்புக்கூறவேண்டும். அவர் தொடர்பிலேயே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் அவர் செயற்படக்கூடாது என்பதுடன் மற்றையவர்கள்மீது குற்றஞ்சுமத்துவதற்கும் முற்படக்கூடாது. வில்பத்து வனத்தை மீளக்கட்யெழுப்ப 50 கோடி ரூபாவை செலுத்துமாறு கோருகின்றோம்.

மீள்குடியேற்றத்தின்போது பஸில் ராஜபக்ச சட்டபூர்வமாகவே செயற்பட்டுள்ளார். வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம், தவிநெகும, மகநெகும என நாட்டைக்கட்டியெழுப்பும் திட்டங்களையே அவர் முன்னெடுத்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ரிஷாட் பதியுதீன் என்ன செய்தார், அவரின் குடும்ப பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னாரில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. கடந்தகாலத்தில் எங்கே மீள்குடியேற்றம் நடந்தது. அது தொடர்பான தகவல்களும் வெளிவரும். ” – என்றார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...