Home Blog Page 3767

மலையகத்திலும் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று (23.11.2020) காலை ஆரம்பமான நிலையில், மலையகத்திலுள்ள பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஆரம்பித்துள்ளன.

மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியைப் பின்பற்றி அச்சமின்றி வழமைபோல் பாடசாலைகளுக்கு வந்திருந்தாலும், மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மாணவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் வந்ததும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை கழுவிய பின்னர் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறையில் சமூகஇடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எனினும், ஒரு சில பாடசாலைகளில் இதனை காணமுடியவில்லை. வளப்பற்றாக்குறையே இதற்கு காரணம்.

நாட்டில் 10 ஆயிரத்து 165 அரச பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 13 வரை உள்ள 5 ஆயிரத்து 233 பாடசாலைகள் உள்ளன. மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன. ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

அதேவேளை, ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள, ஹட்டன் வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயம், ஆக்ரோயா தமிழ் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் இன்று திறக்கப்படவில்லை.

இப்பகுதிகளில் நேற்று (22) கொரோனா தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே பாடசாலைகள் திறக்கப்படவில்லை. அத்துடன், இப்பகுதிகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களை வீட்டில் இருந்தே கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு கோரப்பட்டுள்ளது.

2021 பட்ஜட் – குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்! டிசம்பர் 10 இறுதி வாக்கெடுப்பு!!

2021 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் இன்று முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவினால் கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.குறித்த வாக்கெடுப்பின்போது இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இந்த நிலையிலேயே 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாம் இன்று முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா மரணங்கள் குறித்த தகவல்கள் நள்ளிரவில் வெளியிடப்படுவது ஏன்?

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான தகவல்கள் ஏன் நள்ளிரவில் வெளியிடப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கத்துக்கு எந்தவொரு விடயத்திலும் வெளிப்படைதன்மை இல்லை. இன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான தகவல்கள்கூட நள்ளிரவில்தான் வெளியிடப்படுகின்றன.

அதாவது இரவு 10.30 மணி செய்தியும் முடிவடைந்த பின்னரே அறிக்கை வெளியாகின்றது. அதுவும் நள்ளிரவு பார்த்து வெளியிடப்படுகின்றது. கடந்த சில நாட்களாக இவ்வாறுதான் நடைபெறுகின்றது. எனவே, மக்களுக்கு  உரிய வகையில் தகவல்கள் சென்றடையக்கூடாது என்ற நோக்கிலா இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது. அத்துடன், பாரதூரத்தன்மையை மூடிமறைக்கும் முயற்சியாகக்கூட இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவில் வெளியிடாமல் காலைவேளையில் வெளியிட்டால் என்ன எனவும் கேட்கவிரும்புகின்றேன்.” – என்றார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 171 ஐ தாண்டியுள்ளது. நேற்று மாத்திரம் 391 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 14 ஆயிரத்து 69 பேர் நேற்றுவரை குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 15 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் கொரோனா தாண்டவம்! 22 நாட்களில் 49 பேர் உயிரிழப்பு!!

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று நள்ளிரவுவரை  6 ஆயிரத்து 900 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

உயிரிழப்பு சம்பவங்களும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகம் இடம்பெறுகின்றன.  நவம்பர் மாதத்தில் கடந்துள்ள 22 நாட்களில் மாத்திரம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழந்த 4 பேரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளிய, மோதரை, கிராணட்பாஸ், தெமட்டகொடை உட்பட 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு கொழும்பு உட்பட நாட்டில் வாழும் மக்களிடம் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கொட்டகலை – ராணியப்பு தோட்டத்தில் 2 வயது சிறுவனுக்கு கொரோனா!

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தில் 2 வயது சிறுவன் ஒருவருக்கு இன்று (22) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தரராகவன் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த சிறுவன் அவரின் தாயாருடன் மாத்தறை கம்புறுகமுவ கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தச் சேர்ந்த ஆணொருவருக்கு கடந்த 19 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிசெய்யப்பட்டிருந்தது. அவரின் மகனே குறித்த 2 வயது சிறுவனாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து கடந்த மாதம் 22 ஆம் திகதி குறித்த நபர் ராணியப்பு தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.இதனையடுத்து அவர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் கடந்த 18 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. அவருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை 19 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த சிறார்களிடம் நேற்று பிரிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. அதில் அவரின் 2 வயது மகனுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

 

ஊவாவில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த 5 திட்டங்கள் முன்வைப்பு!

ஊவா மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக முக்கியமான சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் பதுளை மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தேனுக்க விதானகமே, பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் , மேஜர் தெனிபிட்டிய எம்.பி., ஆகியோருடன் விளையாட்டு துறை அதிகாரிகளுக்கும், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளுக்கும் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின்போது ஊவா மாகாணத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் நாமல் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டன.

1. புதிய விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்துதல்.

2. விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துதல்.

3. சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம்கள் நிறுவுதல்.

4. விளையாட்டுக் கழகங்களையும், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுப் வீராங்கனைகளையும் மேம்படுத்துதல்.

5. பயிற்சி மையங்களுக்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்குதல்.

ஊடகவியலாளர் சந்திரமதிக்கான இறுதிக்கிரியைகள் நாளை!

திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் இறுதிக் கிரியைகள் நாளை (23) இடம்பெறவுள்ளன. அவரது சொந்த ஊரான கண்டியில் நாளை இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சந்திரமதியின் பூதவுடல் கொழும்பு – புஞ்சி பொரள்ளையிலுள்ள லங்கா மலர்சாலையில், மக்கள் அஞ்சலிக்காக இன்றிரவு (22) வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நாளை காலை அவரது சொந்த ஊருக்கு பூதவுடல் கொண்டு சென்று, அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதுடன், மாலை இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ளன.

சக்தி நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனத்தில் கடந்த 4 வருட காலமாக சந்திரமதி குழந்தைவேல் கடமையாற்றியிருந்தார்.

கொழும்பிலுள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு அவர் காலமானார்.

திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையிலேயே அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

சந்திரமதியின் பூதவுடலில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்கு கொவிட் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தாக்கத்தால் அலரிமாளிகை முடக்கப்பட்டதா? பிரதமர் அலுவலகம் மறுப்பு!

“பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதிபடுத்துகின்றோம். கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக அலரி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தேசிய நாளிதழொன்றில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதும் ஆதாரமற்றதுமாகும்.”

இவ்வாறு பிரதம அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

கொவிட்-19 நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையின் நாளாந்த பணிகள் எவ்வித தடையுமின்றி முறையான சுகாதார வழிகாட்டல்களுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையின் பணிகளுக்கென, ஏனைய அரச நிறுவனங்களை போன்று சேவைகளை நிறைவேற்றுவதற்கு அத்தியவசியமான மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், பஸில் ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி செயலணியின் பணிகளும் எவ்வித தடையுமின்றி அலரி மாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமரின் பாதுகாப்பு பிரிவுடன் தொடர்புடைய வெளிப்புற பிரிவினரே கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புப்பட்டுள்ளனர்.

பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் வழமைப்போன்று கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் உறுதிபடுத்துகின்றோம்.

நாட்டில் மேலும் 175 பேருக்கு கொரோனா! 20 ஆயிரத்தை நெருங்குகிறது தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

நாட்டில் மேலும் 175 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்து 69 பேர் குணமடைந்துள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...