லங்கா ப்ரமியர் லீக் தொடரில் இருந்து இலங்கை வேகப்பந்து விச்சாளர் லசித் மாலிங்க மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட விரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளனர்.
LPL தொடரிலிருந்து கிறிஸ் கெயில், மாலிங்க விலகல்!
2ஆவது அலை ஊழித்தாண்டவம்! 27 நாட்களில் 60 பேர் பலி!!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (19) 15 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 60 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
இவ்வாறு 2ஆவது அலைமூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்றுவரை 9 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்டோர்குணமடைந்துள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 18 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 903 பேர் குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்தனர்.
கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாத்திரம் 437 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 194 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரை 437 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இதுவரையில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்து 903 பேர் குணமடைந்துள்ளனர்.
கோப் குழு நாளை (20) முதல் மீண்டும் கூடும்
கொவிட் 19 நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) செயற்பாடுகளை நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்திருப்பதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
இதற்கமைய கொவிட் 19 சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் சரித ஹேரத் குறிப்பிட்டார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நெடுஞ்சாலைகள் அமைச்சின் கணக்காளர், நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் அதனுடைய தொடர்புடைய திட்ட முகாமைத்துவப் பிரிவுகளின் அதிகாரிகள் நாளையதினம் (20) கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் கணக்காளர், சம்பந்தப்பட்ட திட்டப் பிரிவின் திட்டப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 07 அதிகாரிகள் மாத்திரம் நாளையதினம் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான சாத்தியக்கூற்று ஆய்வு மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை இங்கு ஆராயப்படவிருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அடிப்படை நாட் சம்பளமாகவே 1000 ரூபா வேண்டும் – திகா வலியுறுத்து!
வரவு செலவு திட்டத்தில் மலையக மக்கள் அபிவிருத்தி திட்டங்கள் இன்றி புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
நாட்டில் 75ஆவது வரவு செலவுத் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் பல வாக்குறுதிகள் அள்ளி வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சாதாரண மக்களின் பசி பட்டினியை போக்குவதற்கான எவ்வித அறிவிப்புக்களும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இல்லை.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாம் பல்வேறு கோரிக்கைகளை இந்த சபையிலும் சபைக்கு வெளியிலும் முன்வைத்தோம். அவற்றை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
கடந்த காலங்களில் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட அனைத்து வரவு செலவுத் திட்டங்களிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டு நாட்டில் வாழும் அடிமட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
ஆனால் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்து, பால் சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடிய சாதாரண மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை.
குறிப்பாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுள்ளனர்.
2015ம் ஆண்டில் இருந்து 1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுத் தருவதாக கூறி கடந்த ஐந்து வருடங்கள் அந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். 1000 ரூபா பெற்றுத் தருவதாகக் கூறி இரண்டு கூட்டு ஒப்பந்தங்கள் முடிந்துள்ளன. தற்போது மூன்றாவது கூட்டு ஒப்பந்தமும் வரப்போகிறது.இந்நிலையில் மற்றுமொரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2021 ஜனவரி மாதம் தொடக்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க வரவு செலவு திட்டத்தில் முன்மொழிவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
இதனை செலுத்த தவறும் கம்பனிகளின் உடன்படிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்படும் என வரவு செலவு திட்ட உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.பிரதமர் தனது அறிவிப்பில் 1000 ரூபா அடிப்படை சம்பளம் என்று கூறவில்லை.
உண்மையில் தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய தேவை அடிப்படை சம்பளம் 1000 ரூபாவே தவிர எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து வரும் 1000 ரூபா சம்பளம் அல்ல .தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று அடிப்படை சம்பளமாக 700 ரூபா வழங்கப்படுகிறது.எனவே 1000 ரூபா அடிப்படை சம்பளம் பெறுவதற்கு இன்னும் 300 ரூபா மாத்திரமே தேவை.
இந்த 300 ரூபாவை வழங்குமாறுதான் நாம் வலியுறுத்தி வருகிறோம்.குறித்த 300 ரூபாவும் அடிப்படை நாள் சம்பளமாகவே அதிகரிக்கப்பட வேண்டும்.மாறாக வரவுக் கொடுப்பனவு, மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவு, ஈபிஎப் போன்றவற்றை சேர்த்து ஆயிரம் ரூபா வழங்கி மக்களை ஏமாற்றக்கூடாது.
காரணம் தொழிலாளர்கள் அனைவருக்கும் 75 சதவீத வேலை நாட்களை பூர்த்தி செய்ய முடியாது.அனைத்து தொழிலாளர்களுக்கும் மேலதிக கொழுந்து பறிக்க முடியாது. இதனை முக்கியமாக கருத்திற் கொள்ள வேண்டும்.2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியாக சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இன்னும் ஒரு மாதத்தில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும்.
எனவே இந்த புதிய ஒப்பந்தத்தின் ஊடாகவே சம்பள உயர்வு பற்றி பேச முடியும் என பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.அப்படி இருக்கையில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 1000 ரூபா சம்பளம் வழங்குவது எப்படி என அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்.
கூட்டு ஒப்பந்தத்திற்கு வெளியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு சாத்தியமில்லை என்பதை கடந்த கால அனுபவங்களில் நாம் கற்றுக் கொண்டுள்ளோம்.எனவே வழமை போன்று இந்த அறிவிப்பும் ஏமாற்று நாடகம் என்றே தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
காரணம் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் ஆயிரம் ரூபா கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு இறுதியில் பொங்கலும் தீபாவளியுமே இல்லாமல் போனது.
ஆனாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட இந்த அரசாங்கம் பெருந்தோட்ட கம்பனிகளை கட்டுப்படுத்தி, ஏதேனும் ஒரு வழியில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபா அடிப்படை நாள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு பூரண ஆதரவு தர நாம் தயாராக உள்ளோம்.
எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை நாள் சம்பளம் விரைவில் வழங்கப்பட வேண்டும்.
பிரதமர் தனது வரவு செலவு திட்டத்தில் கிராமங்கள் அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கிராமப்புற வீதி அபிவிருத்தி குடிநீர் வசதிகள் மின்சாரம் என திட்டங்களை சமர்பித்துள்ளார். ஆனால் மலையக பெருந்தோட்டப் பகுதிகள் தொடர்பில் அபிவிருத்தி திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
தோட்ட புறங்களில் புதிய கிராமங்கள், தனி வீட்டுத் திட்டம், வீதி அபிவிருத்தி போன்றவை எமது மக்களுக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது. இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் எதனையும் கூறவில்லை.
ஆகவே இந்த வரவு செலவு திட்டத்தில் மலையக மக்கள் அபிவிருத்தி திட்டங்கள் இன்றி புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சபையில் வலியுறுத்தி விடை பெறுகிறேன்.
தெல்தோட்டை முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடப்பது என்ன? கிடைத்த நன்கொடைகள் எங்கே?
ஒரு சமூகத்தின் வளர்ச்சியிலும், மக்களை நல்வழிப்படுத்துவதிலும் மதங்களின் பங்கு அளப்பரியது.எல்லா மதங்களும் மக்களுக்கு நன்மைகளையே போதிக்கின்றன. அறவழியில் பயணிப்பதற்கு வழிகாட்டுகின்றன.எனவே, வணக்கஸ்தலங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்ற விடயத்தில் எவருக்கு எதிர்ப்பு இருக்கமுடியாது.
ஆனாலும் அபிவிருத்தி என்ற போர்வையில் மோசடிகள் இடம்பெறுமானால் அதனை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. கண்டி மாவட்டத்தில், கலஹா – தெல்தோட்டையில் உள்ள கோவிலொன்று தொடர்பான தகவல்களை இங்கு பதிவிடுகின்றோம். தவறுகளை சுட்டிக்காட்டி, பணிகள் சிறப்பாக தொடரவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே பதிவு பதிவிடப்படுகின்றது.
தெல்தோட்டையில் அமைந்துள்ள மிகவும் தொன்மையான ஆலயமொன்று , ஆலய நிர்வாக சபையினரின் தலமையின்கீழ் புனரமைக்கப்பட்டுவந்தது.
ஆலயத்தின் நிர்மாணப்பணிகளுக்கு நகர வர்த்தகர்கள், பெருந்தோட்ட மக்கள், அரசியல் பிரமுகர்கள், கொடையாளர்கள் என பலரும் தம்மால் முடிந்த உதவிகளை பணமாகவும், பொருளாகவும் வருகின்றனர்.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற நன்கொடைகள் உரிய வகையில் கையாளப்படுவதில்லை எனவும், கணக்குகள்கூட முறையாக காண்பிக்கப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீண்டநாட்களாக கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவந்தாலும் பணிகள் இறுதிபெறவில்லை. ஆலயப்பணிகள் முழுமை பெறாததால் இப்பகுதியில் உள்ள இந்து மக்கள் கவலையுடன் இருக்கின்றனர். நிர்மாணப்பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இவ்விவகாரம் தொடர்பில் சமய விவகாரங்களுக்கு பொறுப்பாக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மக்கள் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். இக் கோவிலானது இந்து கலாச்சார திணைக்களத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர்களே முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஆலயத்தின் பரிபான சபைத் தலைவர் சின்னையா சத்தியநாதனிடம் வினவினோம்.
” ஆலயமொன்றை புனரமைப்பதென்பது இலகுவான காரியமல்ல. சிற்சில குறைப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு போதுமான பணம் இல்லை. கிடைத்த உதவிகளை நிர்மாணப் பணிகளுக்காக முழுமையாக பயன்படுத்தி உள்ளோம். தொடர்ந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.” – என்றார்.
மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்
LPL போட்டியில் பங்கேற்கவந்த வெளிநாட்டு வீரருக்கு கொரோனா!
லங்கா பிறிமியர் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று இலங்கை வந்த, கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ரவீந்தர்பால் சிங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் அண்ட்ரு ரஸ்ஸல் மற்றும் சிலருடன் கனேடிய கிரிக்கெட் வீரரான ரவிந்தர்பால் சிங் நேற்று இலங்கை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ரவிந்தர்பால் சிங் ஹம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளார்.
நாட்டில் மேலும் 243 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 243 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இதுவரையில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்து 903 பேர் குணமடைந்துள்ளனர்.
மஸ்கெலியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!
மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று (19.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர் பி.ஏ, பாஸ்கரன் தெரிவித்தார்.
வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் கட்டட நிர்மாணப்பணி உதவியாளர்களாக பணியாற்றிய 35 மற்றும் 19 வயது இளைஞர்கள் இருவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் திகதி பிரொக்மோர் பகுதியிலுள்ள தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.
இவர்கள் இருவரிடமும் கடந்த 17 ஆம் திகதி பிரிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனைகளில் அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களை இருவரும் அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று (19) அழைத்துசெல்லப்பட்டனர்.
க.கிசாந்தன்
கொழும்பிலிருந்து கொட்டகலை வந்தவருக்கு கொரோனா
திம்புள்ள – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தை சேர்ந்த ஆணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து கடந்த 22 ஆம் திகதி குறித்த நபர் தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து அவர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவரிடம் பிரிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் நேற்று (18.11.2020) பெறப்பட்டன. பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அவரை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையில் பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
இவருடன் தொடர்பில் இருந்த ஆறு குடும்பங்களை சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
க.கிசாந்தன்





