Home Blog Page 4041

விவேக்கின் அம்மா இறந்துவிட்டதாக பரவிய செய்தி: ட்விட்டரில் அவர் கொடுத்த விளக்கம்

விவேக்கின் அம்மா சென்ற வருடம் இறந்த நிலையில், தற்போது தான் அவர் இறந்தார் என்பது போல புதிதாக

சினிமா துறையையும் வதந்திகளையும் பிரிக்கவே முடியாது என்கிற நிலை தான் தற்போது உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பற்றி நாள் தோறும் ஏதாவது ஒரு செய்தி பரவிக் கொண்டே தான் இருக்கின்றது. குறிப்பாக நடிகர்களின் சொந்த வாழ்க்கை பற்றி வதந்திகள் அதிக அளவில் பரவுகின்றன.

இந்நிலையில் காமெடி நடிகர் விவேக்கின் தாயார் நேற்று இரவு காலமாகி விட்டார் என சமூக வலைத்தளங்களில் சிலர் தகவல் பரப்பி விட்டுள்ளனர். ஆனால் உண்மையில் விவேக்கின் தாயார் சென்ற வருடமே இறந்துவிட்டார். ஒரு வருடம் கழித்து தற்போது அவர் இறந்தது போல ஒரு செய்தியை விஷமிகள் சிலர் இணையத்தில் பரப்பி உள்ளனர். இது பற்றி அறியாத பலரும் இந்த தகவலை அதிகம் ஷேர் செய்து இருக்கின்றனர்.

இது தொடர்பாக பெண் ஒருவர் ட்விட்டரில் விவேக்கை டேக் செய்து ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் “நடிகர் விவேக் சார் அவர்களின் தாயார் 2019ல் இறந்துவிட்டார். ஆனால் நேற்று இரவுதான் இறந்ததாக பொய்யான தகவல் பரப்பபடுகிறது. என்ன ஏது எப்போ என்று சரியாக தெரியாமல் பல பொய்யான தகவல்கள்பரப்பபடுகிறது. ஒரு தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்று சொன்னால் எதையுமே யோசிக்காமல் ஷேர் பண்றாங்க” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் கூறியுள்ள விவேக் “என் தாயார் இயற்கை எய்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது.ஆனால் செய்தி பரப்புவோருக்கு அவர் மேல் அவ்வளவு அலாதி பிரியம் போலும்.இந்த வருடமும் இயற்கை எய்த வைக்கிறார்கள்.போகட்டும் விடுங்கள். For me, my mom still lives with me!!” என தெரிவித்துள்ளார்.

 

‘சஜித் ஆட்சியில் நானும் அமைச்சர் – சிறிகொத்தவையும் கைப்பற்றுவோம்’

“ நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதியாகும். இவ்வெற்றியின் மூலம் எமது தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்பார். அவர் ஆட்சியில் அமைச்சராவதற்கு அனைத்து தகுதிகளும் எனக்கு உள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பசறை வாரச்சந்தைத் தொகுதியில்  இன்று 23.07.2020ல் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது வடிவேல் சுரேஷ் மேலும் கூறியவை வருமாறு,

“200 வருடமாக வரலாற்றினைக் கொண்ட எமது உறவுகளுக்கென்று கடந்த நான்கரை வருடங்களுக்கு என்னால் இயன்ற வகையில்இ  பலகோடி ரூபா செலவில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். இந்நிலையில் மீளவும் பொதுத்தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றேன்.

என்னால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பணிகளை தொடர்வதற்கு மக்களின் அங்கீகாரத்தைக்கோரியே இத்தேர்தலை  எதிர்கொள்கின்றேன். அதற்கென்ற ஆதரவையும்,அங்கீகாரத்தையும் எனது தொப்புள் கொடி உறவுகள் வழங்குவார்களென்ற அபார நம்பிக்கை எனக்குண்டு.

என்னிடம் ஊழல்கள், மோசடிகள் எதுவும் இல்லை. தூய்மையான கரங்களைக் கொண்டு உணர்வூர்வமாக எம்மக்களுக்காக பணியாற்றி வருகின்றேன்.
இக்கூட்டத்தை நடாத்துவதற்கு பசறை பொது மைதானத்தை தருமாறு கோரினோம். சம்பந்தப்பட்டவர்கள் தர மறுத்து விட்டனர். பின்னர் பிரதேச மண்டபத்தை தருமாறு கோரிக்கை விட்டோம். அதுவும் கிடைக்கவில்லை இறுதியில் செய்வதியாத நிலையில் பசறை சந்தைத் தொகுதியில் இக்கூட்டத்தை நடாத்தினோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்   எமது தலைவர் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருப்பார். அவருக்கு ஏற்படுத்திய சதி மற்றும் சூழ்சிகளினாலேயே அவர் தோல்வி கண்டார். ஆனால்   இம்முறை அச்சதி சூழ்ச்சி ஆகியவற்றை முறியடித்து அமோக வெற்றி பெறுவார். அவ்வெற்றியின் மூலம் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் ஶ்ரீகொத்தவும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.” – என்றார்.

எம். செல்வராஜா, பதுளை

‘தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது இந்த அரசு’ – சஜித்

” தற்போதைய அரசினால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் படுமோசமான முறையில் ஏமாற்றப்பட்டுள்ளனர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பசறை வாரச்சந்தைத் தொகுதியில்  இன்று 23.07.2020ல் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது சஜித் மேலும் கூறியவை வருமாறு,

” அடுத்த மாதம் 5ஆம் திகதி நடைபெறும் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றியடைந்து நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும். அவ் ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை வடிவேல் சுரேசுக்கு வழங்குவேன்.

வடிவேல் சுரேசிடம் உங்களுக்கு எந்த அமைச்சு வேண்டும் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் பதில் கூறவில்லை. பெருந்தோட்ட மக்களை கௌரவிக்கும் வகையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சை வழங்கினால் பொறுப்பேற்பீர்களா என்றும் கேட்டேன். அதற்கு அவர் சரியென்று தலையை அசைத்தார்.

அத்துடன் ரவி சமரவீர,  ஹரின் பெர்னான்டோ ஆகியோருக்கும் முக்கிய அமைச்சு பொறுப்புக்களை வழங்குவேன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் எனக்கு வழங்கிய அமோக ஆதரவிற்கு  பிரதி உபகாரமாகவே  அம்மக்களுக்கு சேவையாற்றக்கூடியதொரு அமைச்சான பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சை அம்மக்களுடன் இரண்டறக் கலந்திருக்கும் வடிவேல் சுரேசிற்கு வழங்குவேன்.

நான் பிரதமராக பதவியேற்று 24 மணித்தியாலயங்களுக்குள் எரிபொருள்களின் விலையைக் குறைப்பேன். சுயதொழில்கள் மற்றும் வாழ்வாதரங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள நூற்றுக்கு 4 வீத வட்டியையும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகளைச் செய்வேன். வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை தலா இருபதாயிரம் ரூபா என்றடிப்படையில் வழங்குவேன். மக்களிடம் பணபுழக்கத்தை ஏற்படுத்துவேன். ” – என்றார்.

எம். செல்வராஜா, பதுளை

மலையக சமூகம் மிகப் பெரிய கல்விச் சமூகமாக மாற்றம் பெறும்! முத்தையா பிரபு

மலையக சமூகம் கல்வியில் மிகச் சிறந்த சமூகமாக மாற்றம் பெற வழி செய்ய வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.

மலையக இளைஞர்கள், யுவதிகள் அனைத்துத் துறைகளிலும் தற்போது சாதித்து வருகின்றனர். அதேநேரம் எமது தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளத்திற்கு இன்னமும் போராட வேண்டியிருக்கிறது. அத்துடன், வறுமையின் காரணமாக தந்தை வெளியிடத்திற்கும், தாய் வெளிநாட்டிற்கும் தொழிலுக்காக சென்று விடுகின்றனர். இதனால் எமது பிள்ளைகளின் கல்வி மீதான கவனம் குறைகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்கும் போது, இந்த மாவட்டத்திலேயே அதிக வருமானத்தைப் பெறக் கூடியதாக இருக்கும். அதனால் பெற்றோர் வெளியிடங்குச் சென்று பணியாற்றுவதை நிறுத்த முடியும். இதனால் எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கான முதலாவது அடித்தளத்தை இடமுடியும்.

அத்துடன், பாடசாலைகளின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களின் கல்விக்கான தடைகளைத் தகர்த்தெறிய வேண்டும். திறமைகள் கொட்டிக் கிடக்கும் மலையகத்தை மிகப் பெரிய கல்விச் சமூகமாக மாற்ற முடியும்.

எமது சமூகத்தின் விடுதலை கல்வியில் தங்கியுள்ளது. இளைஞர், யுவதிகள் எப்படி அனைத்துத் துறைகளிலும் சாதிக்க ஆரம்பித்துள்ளதைப் போல மகச் சிறந்த கல்விச் சமூகமாகவும் மாற வேண்டும். எமது சமூகத்தை மிகப் பெரிய கல்விச் சமூகமாக மாற்றுவதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது.” என்று முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.

பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் மாத்திரம் ‘ இலங்கையர்’ என்றிருந்தால் போதுமா?

இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்குபோதே   இந்த அரசாங்கம் இருக்கும் வரை ஒருபோதும் ‘இனம்’ என்பது நீக்கப்படாது என அமைச்சர் விமல் வீரவங்ஸ கூறி எழுந்த நம்பிக்கைளை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டார்இருப்பினும் நேற்று பதிவாளர் நாயகம் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை அடுத்து நேற்றிரவு எழுத ஆரம்பித்து இன்று நண்பகல்  முடித்த பதிவை இங்கே பதிவிடுகின்றேன்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் விநியோகிக்கப்படவுள்ள புதிய டிஜிற்றல் பிறப்பு சாட்சிப்பத்திரத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள உத்தேசித்திருப்பதாகக் கூறப்படும் சில மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால் உண்மையிலேயே வரவேற்கப்படவேண்டியவை.

நாட்டில் பிறக்கும் அனைவரது பிறப்புப் சாட்சிப்பத்திரங்களிலும் அவர்களது இனம், மதம் போன்ற விடயங்கள் நீக்கப்பட்டு ‘இலங்கையர்’ என்ற பொது அடையாளமே இடம்பெறும் என பதிவாளர் நாயம் என். சீ. விதானகே நேற்று ஊடகங்களிடம் கூறியிருப்பது நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த ஒரு மாற்றம் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கின்றது.

அடையாள அட்டையில் இனம் என்ற குறிப்புக்காரணமாக கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதிப்பை உணர்ந்துகொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த அறிவிப்பு நிச்சயமாக ஒருவித நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

புதிய பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களில் ஒருவரது இனம் மதம் போன்ற விடயங்கள் இடம்பெறமாட்டாது அனைவரும் இலங்கையர் என்றே குறிப்பிடப்படுவர் என்ற செய்தி பிரசுரமாகியதை அடுத்து தனது டுவிட்டரில் கருத்துவெளியிட்டிருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன ‘ இறுதியாக நாட்டிற்கு நல்லதொரு விடயம் நாம் சரியான தடத்திலே பயணிக்கின்றோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்று பலரும் சாதகமான கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

விருதுகள் பல வென்ற கேலிச்சித்திரக் கலைஞர் அவந்த ஆட்டிகல இன்று இவ்விதமாக ஒற்றுமையின் பலத்தை வெளிக்காட்டும் கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருந்தார்.

இவற்றைப்பார்த்த போது எதிர்காலம் குறித்த பெரும்நம்பிக்கைகள் மக்களின் ஒரு சாரார் மத்தியில் எழுந்திருந்ததை உணர முடிந்தது.

இன்னமும் சிலர் இந்தச் செய்தியை வரவேற்றிருந்த அதேவேளை உண்மையில் இடம்பெறவேண்டியது என்ன என்பதையும் குறிப்பிட்டிருந்தனர். இந்த மாற்றம் என்பது வெறுமனே ஒப்பனை மாற்றமாக அன்றி நடைமுறையில் அர்த்தபூர்வமான மாற்றமாக அமையவேண்டும் எனத்தெரிவித்திருந்தனர்.

இப்படி ஒரு அறிவிப்பு வந்தபோது தேர்தல் நேரத்தில் இப்படி அறிவிப்பை வெளியிடுவதேன் என்ற கேள்வி எழுந்தது. ஒரு வேளை தேர்தலின் போது பெரும்பான்மையின மக்களிடையே கரிசனைக்குரிய விடயத்தை அறிவித்துவிட்டு பின்னர் அந்தக்கரிசனையைப் போக்கியவன் ஏற்பட இருந்த தவறை நிவர்த்தித்து விமோசனம் பெற்றுத்தந்த மீட்பர் என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வாக்குவேட்டை நடத்தும் எண்ணம் இருந்திருக்மோ என்ற சந்தேகம் எழுந்தது.

இலங்கையின் கடந்த காலத்தை ஆராய்ந்து பார்த்தால் வெறுமனே அரசியல்வாதிகளதும் அதிகாரிகளதும் வார்த்தை ஜாலத்தில் நாம் மயங்கிவிடக்கூடாது என்ற உண்மை புலனாகும்.

2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது பொறுப்புக்கூறல் விடயத்தில் விசாரணைகளை முன்னெடுப்போம் என்றார்கள் .ஆனால் நடந்தது என்ன என்பதை யாவரும் அறிவர். அரசியல்கைதிகள் விடுதலை காணிகள் விடுவிப்பு போன்ற விடயங்களில் அளித்த வாக்குறுதிகளில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு செய்தது உண்மை என்றாலும் முழுமை பெறவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஒரு பெயருக்கு ஒரு அலுவலகம் அமைத்தது உண்மை ஆனால் அதனால விளைந்த பயன் யாது என்றால் இதுவரை ஏதும் இல்லை என்பதே உண்மையாகும்.

அரசியல் தீர்வு தொடர்பாக ஆட்சியாளர்கள் எத்தனை வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள் ஆனால் நடந்தது என்ன ? என்பது அனைவருக்கும் வெளிச்சம்.

அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் பெரும் விடயங்கள் என்பதால் நாட்டுமக்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தும் அடையாள நடவடிக்கைளையேனும் எடுப்பார்களா என்றால் அதற்கு விடைதேட பல ஆண்டுகள் பின்னோக்கிப்பயணிக்க வேண்டியதில்லை.

மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் பாடமுடியும் எனக்கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு நடந்தது என்ன? கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற சுதந்திர தினத்தில் சிங்களமொழியில் மாத்திரமே அது பாடப்பட்டமை நினைவிருக்கும். தமிழ் மொழி பேசுவோரை இலங்கையர் என்று இந் த அரசாங்கம் ஏற்க மறுக்கின்றதா ? உள்வாங்க விரும்பவில்லையா ? போன்ற கேள்விகள் அப்போதே எழுப்பப்பட்டன. அரசின் நடவடிக்கையை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் கறுப்பு சட்டை அணிந்து தமிழிலும் தேசிய கீதத்தைப் பாடியமை நினைவிருக்கின்றது.

ஒரு அரசாங்கத்தினால் அடையாளத்திற்காக செய்யப்படுகின்ற விடயம் இன்னுமொரு அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் நீக்கப்படுகின்றதென்றால் ஆட்சியாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் எத்தகைய நிலைப்பாட்டைக்கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகும் .

ஆட்சிகள் மாறினாலும் அனைத்து இனமக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் அர்த்தபூர்வமான உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளே அவசியமாகும்.

பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் இலங்கையர் என்று இருப்பதாலே தேசிய கீதத்தை தமிழில் பாடுவதாலோ மாத்திரம் நல்லிணக்கத்தைக் நிலைநாட்டி ஒற்றுமையை வளர்க்க முடியாது. ஆனால் அவை அதனை நோக்கிய ஆரம்பத்திற்கான பலமான அடையாள நடவடிக்கைகளாக பார்க்கமுடியும். உண்மையாகவே நல்லிணக்கத்தையும் புரிதலையும் ஏற்படுத்தி இலங்கையர் என்ற அடையாளத்தை மக்களின் மனதில் கட்டியெழுப்புவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கு முதலில் தேர்தல்காலங்களில் இனங்களுக்கு இடையே குரோதத்தை வளர்க்கும் பிரசாரங்களை முன்னெடுப்பதைத் தவிர்த்தல் போலிச்செய்திகளைப் பரப்புவதை நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.

அரசியல்யாப்பில் சிறுபான்மையினருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள உரிமைகளையே வழங்க மறுக்கும் அன்றேல் பிடுங்கும் அரசாங்கங்கள் எவ்வாறு அவர்களையும் இலங்கையராக உளமார அங்கீரிக்கும் என்பது கேள்விக்குரியது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் – அருண் ஆரோக்கிநாதன்

‘வீட்டுத்திட்டத்தை விமர்சிக்க இ.தொ.காவுக்கு உரிமை கிடையாது’ – ராதா

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சேவைகளை விமர்சிப்பதற்கு சில அரசியல் கட்சிகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. குறுகிய காலப்பகுதிக்குள் பல திட்டங்களை செய்து முடித்துள்ளோம். ஆயிரம் ரூபாவை பெறுவதற்காக எமது அழுத்தங்களும் தொடரும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பூண்டுலோயா சீன் தோட்டத்தில் 23.07.2020 அன்று மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையகத்துக்கான தனிவீட்டுத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்தவர்தான் திகாம்பரம். கடந்த காலங்களில் இருந்தவர்கள் உரியவகையில் செய்யவில்லை. ஆனால், குறுகிய காலப்பகுதிக்குள் திகாம்பரம் சுமார் 7 ஆயிரம் வீகளை நிர்மாணித்துக்கொடுத்துள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் மலையகத்துக்கு 4 ஆயிரத்து 50 வீடுகள் வழங்கப்பட்டன. 2010 இல் இதற்கான அனுமதி கிடைத்தும் 2015வரை கட்டப்படவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணி வந்தபின்னரே குறித்த வீட்டுத்திட்டம் முடிக்கப்பட்டது. எனவே, எமது வீட்டுத்திட்டத்தை எவரும் விமர்சிக்கமுடியாது. உங்களுக்கு பணி செய்வதற்காகமே நாம் அரசியலில் இருக்கின்றோம்.

கடந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் எமக்கு அமோக ஆதரவை தந்தீர்கள். நானும், திகாம்பரமும், திலகரும் பாராளுமன்றம் சென்றோம். மூவரும் சிறப்பாக செயற்பட்டுள்ளோம். திலவர் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படக்கூடியவர். எனவே, அவரை தேசியப்பட்டியலில் உள்ளே கொண்டுபோக வேண்டும். அது எமது கடமை. உதயாவும் சிறப்பாக செயற்படக்கூடியவர். அவர் எம்முடன் களமிறங்கியுள்ளார்.

மாகாண அமைச்சராக இருக்கும்போது கல்வித்துறைக்காக பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தேன். கல்வி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னரும் எனது பணிகள் தொடர்ந்தன. கணித, விஞ்ஞான பாடசாலைகள் மலையக பகுதிகளில் திறக்கப்பட்டன. நுவரெலியா மாவட்டத்துக்கு மாத்திரம் அல்ல, எல்லா மாவட்டத்துக்கும் சேவை செய்துள்ளேன்.

முழு மலையகத்துக்கும் எமது சேவை தொடரவேண்டுமானால் பிரதிநிதிகளை தெரிவுசெய்யவேண்டிய பொறுப்பு நுவரெலியா மாவட்ட மக்களுக்கே இருக்கின்றது.  எனவே, எமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பிரச்சினையை ஜனாதிபதி மற்றும் பிரதமரால் தீர்த்துவைக்கமுடியாது. கம்பனிகள்தான் அதனை செய்யவேண்டும். ஆயிரம் ரூபாவுக்கும் மேல் தற்போது தேவை. எனவே, குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாவை வழங்குவதற்காவது கம்பனிகள் முன்வரவேண்டும். அதற்கான எமது அழுத்தங்கள் தொடரும்.

சஜித் பிரேமதாசதான் பிரதமராகவர வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம்.”  -என்றார்.

க.கிசாந்தன்

‘மனோவை பாராளுமன்றம் அனுப்பவேண்டியது தமிழர்களின் கடமை’

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்பு மாவட்ட தமிழர்களின் கடமை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் செறிந்து வாழ்வதனால் அவர்கள் தமிழ்க் கட்சிகளைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற தமிழ் வேட் பாளர்களுக்கே வாக்களிப்பார்கள். ஆனால் கொழும்பு மாவட்ட நிலைவரம் அவ்வாறானது அல்ல. இதற்கு நேர் மாறானது.

காரணம் இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் வாழு கின்ற மாவட்டம். அங்கு வசிக்கின்ற சிங் கள மக்கள் சிங்கள தேசியக் கட்சிகளுக்கே தமது வாக்குக்களை வழங்குவார்கள். ஆகவே அங்கு இருக்கின்ற தமிழர்கள் தமது வாக்குகளை சிதறடிக்காது தமது விருப்பு வாக்குகளை மனோகணேசன் அவர்களுக்கு வழங்கி கடந்த நாடாளு மன்ற தேர்தலில் கொடுத்த ஆணையை விட பல மடங்கான ஆணையை வழங்க வேண்டிய கடமை உள்ளது.

இந்த ஜனநாயகக் கடமையை இந்த காலத்தின் கட்டளையை கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகின்றேன்.

இலங்லையில் உள்ள தமிழர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் போது அல்லது அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது குரல் கொடுக்கின்ற ஒரு மனிதநேய வாதியாகவே மனோ கணே சன் அவர்களைப் பார்க்கின்றேன்.

தமிழர் தரப்பு நியாயங்களையும் சிங்கள பேரினவாத அரசின் போலிப் பிரசாரங்களையும் தகர்த்து அதன் உண்மைத் தன்மைகளை சிங்கள மக்களுக்கு
வழங்கக் கூடிய பேச்சாற்றல் மற்றும் மொழியாற்றல் உள்ள தமிழ் அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். ஆகவே இவ்வாறானவர்கள் என்றுமே தவிர்க்கப்பட முடியாதவர்கள் என்ற உண்மையைக் கொழும்பு மாவட்ட தமிழர்கள் புரிந்து அவரை மீண்டும் நாடாளுமன்றம் அனுப்ப செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாடு ஓர் இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளதனை அனைவரும் அறிகின்றோம். பார்கின்றோம். இந்த நிலையில் தமிழர்களின் இருப்பைத் தக்க வைக்க, தமிழர்கள் தங்களின் அடையாளங்களுடன் வாழ, அனைத்துப் பகுதிகளிலும் தமிழர் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட நலன் களுக்காக செயற்படுகின்ற தமிழ் அரசியற் கட்சிகள் மற்றும் தமிழர்கள் ஒன்றாகப் பயணிக்க வேண்டிய சந்தர்ப்பத்தை காலம் உருவாக்கி உள்ளது. காலத்தின் கட்டளையை ஏற்று ஒரே திசையில் ஓர் இலக்கு நோக்கி பயணிக்க தயாராவோம். – என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

பாலித்தமீது தாக்குதல் நடத்தியோரை கைது செய்க – செந்தில் தொண்டமான் வலியுறுத்து!

முன்னாள் பிரதியமைச்சர் பாலித்த தெவரப் பெரும மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், தாக்குதலை நடத்தியோர் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், பதுளை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

களுத்துறை, மத்துகம வேகந்தல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டமொன்று தரம்குறைந்ததாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து அது தொடர்பில் கண்காணிப்பதற்காக பாலித்த தெவரப்பெரும குறித்த இடத்திற்கு சென்றபோது தாக்கப்பட்டார்.

மக்களின் பிரச்சினைக்காக எப்போதும் குரல் கொடுக்கும் பாலித்த தெவரப்பெரும மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்து, அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் உள்ள மக்களுக்கு இன, மத பேதமின்றி பணியாற்றும் பாலித்த தெவரப்பெரும மீது நடத்தப்பட்ட தாக்குதல் கட்சி பாகுபாடின்றி கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் சுயதொழில் திட்டம்’

பெருந்தோட்டதுறையில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளில் சுய தொழில் திட்டங்களை ஆரம்பிப்பதன்மூலம் இங்குள்ள இளைஞர் யுவதிகள் அதிகளவில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் நிலையை உருவாக்கலாம் என்று  மலையக மக்கள் முன்னணியின் பிரதிசெயலாளர் நாயகமும் சட்டத்தரணியும் கோடரி சின்ன வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

அப்கொட் பகுதியில் தன்னை சந்தித்த இளைஞர் யுவதிகள் மத்தியில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது,

” மலையகத்தில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கேற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் எமது இளைஞர்கள், வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கிறார்கள். இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மட்டுமல்ல எமது சமூக கட்டமைப்பிலும் பாரிய சிக்கல்களையும் சவால்களையும் தோற்றுவித்து விடுகிறது.

தேயிலை பயிர்ச்செய்கையில் ஆர்வமில்லாத இளைஞர் யுவதிகளும் கூட அன்றாட வேலைக்காக வெளிமாவட்டங்களுக்கும் நகர்ப்புரங்களுக்கும் இடம் பெயர்ந்து செல்கிறார்கள் இவ்வாறானவர்களின் எதிர்காலம் எவ்விதமான உத்தரவாதமும் இன்றி கேள்விக்குறியாகிறது.

இவர்களை சுயதொழிலில் ஈடுபடுத்துவதற்கேற்ற அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும்.

இதன் ஒரு கட்டமாக மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளில் பல்வேறு சுயதொழில் திட்டங்களை உருவாக்கலாம். இதில் முதலீடு செய்யுமளவுக்கு தொழிலதிபர்களுக்கு நாம் நம்பிக்கையான செயற்திட்டங்களை முன்வைக்க வேண்டும்.
புலம் பெயர்ந்து வாழும் மலையகத்தவர்களின் உதவிகளையும் மலையகம் சார்ந்த தொழில் அதிபர்கள் மட்டுமின்றி எம் சமூகவளர்ச்சியில் அக்கறைக் கொண்ட ஏனைய முதலீட்டாளர்களின் பங்களிப்பையும் இதில் பெற்றுக்கொண்டால் இவ்வாறான திட்டங்களை அமுல் படுத்துவதில் எந்த பிரச்சினையுமே ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

கம்பனிகளிடம் அடிபணியோம்! சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது இலக்கு என்கிறார் ஜீவன்!!

 பெருந்தோட்டங்களை, தோட்ட கம்பனிகள் மேலும் 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கேட்கின்றன. அதற்கு உடன்பட முடியாது. எமது மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது இலக்காகும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை எல்பியன் தோட்டத்தில் 23.07.2020 அன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்த கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதியால் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாது, அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை என்று சிலர் கூறியுள்ளனர். ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் உறுதியளித்துள்ளனர். எனவே, கம்பனிக்கு தேவையான சலுகைகளை வழங்கி, அழுத்தங்களைப் பிரயோகித்து உரிய நடவடிக்கையை எடுப்பார்கள். மாபெரும் தொழிற்சங்கமான எமக்கும் பக்கபலமாக இருப்பார்கள்.

மேலதிக 2 கிலோ கொழுந்து, மேலும் 25 ஆண்டுகளுக்கு குத்தகை காலத்தை நீடித்தல் உட்பட மேலும் சில நிபந்தனைகளை கம்பனிகள் முன்வைத்தன. அவற்றுக்கு நாம் உடன்படவில்லை. தற்போதே பாதி தோட்டங்களை காடாக்கியுள்ளனர். இந்நிலையில் மேலும் 25 ஆண்டுகள் வழங்கினால் என்ன நடக்கும்? முழு தோட்டத்தையும் நாசமாக்கிவிடுவார்கள்.

100 ரூபாவை வாங்கிக்கொடுத்துவிட்டு நிலுவைக்கொடுப்பனவான 88 ஆயிரம் ரூபாவுக்கு சிலர் வேட்டு வைத்ததுபோல, நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அவசரப்பட்டு தவறான முடிவை எடுப்பதற்கு நாம் தயார் இல்லை. அப்படி செய்தால் அவர்களுக்கும், எமக்குமிடையில் வித்தியாசம் இல்லாமல்போய்விடும்.

மலையக பல்கலைக்கழகம் அட்டனில் அமையவேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தோம். அதற்கான நிதி ஆசிய அபிவிருத்தி வங்கி ஊடாக பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஓராண்டுக்குள் திட்டம் நிறைவேறும். இதன்படி ஆறுமுகன் தொண்டமானின் ஒரு கனவு நிறைவேறிவிடும்.

அதேவேளை, கடந்த காலங்களில் ஆயிரம் ரூபாவை வைத்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்தனர். தற்போதும் இதனையே செய்வதற்கு முயற்சிக்கின்றனர். தொழிற்சங்கம் ரீதியாக செய்துமுடிக்கவேண்டிய வேலையைக்கூட அரசியல் மயப்படுத்துகின்றனர். குடிநீர் பிரச்சினை உட்பட எமது மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. இவை தொடர்பில் பேசவேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் ஆயிரம் ரூபா போதாது, எனவே, நிரந்தர தீர்வு அவசியம். அதற்காக தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும்.  அதற்கான திட்டத்தை நாம் முன்னெடுப்போம்.

எமது மக்களுக்கான தனிவீட்டுத் திட்டம்கூட உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை. எமது இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தோட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு மாத்திரமே அதுவும் கட்சி மற்றும் தொழிற்சங்கம் பார்த்து வழங்கப்பட்டது. இந்நிலைமையை நாம் மாற்றுவோம். கிராமமொன்றை அமைப்போம். பொருளாதாரத்தையும் பலப்படுத்துவோம். காணி உரிமை பத்திரம் வழங்கிவிட்டார்களாம். அவற்றை காட்டுமாறு சவால் விடுகின்றேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
இலங்கையின் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) இன்று முற்பகல் (16)...

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...