Home Blog Page 4042

பாலித்த தெவரபெரும மீதான தாக்குதலுக்கு ஆனந்தகுமார் கடும் கண்டனம்!

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும மீதான தாக்குதல், சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதலாகவே தான் கருதுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

களுத்துறை மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வரும் தமிழர்களை பாதுகாக்க முன்னின்று செயற்பட்டு வரும் பாலித்த தெவரபெரும மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை, சிறுபான்மை சமூகத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதை போன்று உணர முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலித்த தெவரபெரும மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான பாலித்த தெவரபெருமவை நாகொட வைத்தியசாலைக்கு சென்று எஸ்.ஆனந்தகுமார் இன்று பார்வையிட்டு, அவரின் உடல்நலம் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

மலையகத்திலும் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு பாதுகாவளனாகவே பாலித்த தெவரபெரும இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

பாலித்த தெவரபெரும மீது மிலேச்சத்தனமாக நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்த கணம் முதல் தமிழர்களின் இதயங்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ் தலைவர்கள் இருக்கின்ற போதிலும், மலையகத்திலும் ஒதுக்கப்பட்ட பகுதிகளான இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளை அவ்வாறான தலைவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என எஸ்.ஆனந்தகுமார் கூறுகின்றார்.

எனினும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரான பாலித்த தெவரபெருமவே, மலையகத்தில் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழும் தமிழர்களின் பாதுகாவளனாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாலித்த தெவரபெருமவின் வழிகாட்டலின் கீழ் தான் ஒதுக்கப்பட்ட மலையக சமூகத்தின் தலைமைத்துவத்தை ஏற்று, அந்த மக்களின் பாதுகாவளனாக செயற்படுவதாக பாலித்த தெவரபெருமவிடம், எஸ்.ஆனந்தகுமார் உறுதியளித்தார்.

வனிதாவுக்கு பாடி டிமாண்டு அதிகம்: சீனியர் நடிகர் பேச்சால் சர்ச்சை

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் கடந்த மாதம் 27ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. திருமணம் முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தன்னை விவாகரத்து செய்யாமலேயே பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக ஹெலன் கூறினார். மேலும் தனக்கு தன் புருஷன் வேண்டும் என்றும் கூறினார். ஹெலன் புகார் கொடுத்த பிறகு வனிதா விஜயகுமாரை பலரும் விளாசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார் வனிதா என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லாக்டவுன் நேரத்தில் வனிதா யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். அந்த யூடியூப் சேனலை துவங்க டெக்னிக்கல் உதவி தேவைப்பட்டபோது பீட்டர் பால் உதவினார் என்றார் வனிதா. பீட்டர் பாலின் படத்தில் நடிக்க கதை கேட்க சென்ற இடத்தில் காதல் ஏற்பட்டு திருமணம் வரை வந்ததாக வனிதா கூறினார்.

ஹெலன் புகார் தெரிவித்த பிறகு ஜூன் 27ம் தேதி நடந்தது திருமணம் என்றும் வைத்துக் கொள்ளலாம், நிச்சயதார்த்தம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். லாக்டவுன் முடிந்த பிறகு முறைப்படி திருமணத்தை பதிவு செய்வோம். அந்த நிஜ திருமணத்திற்கு பூட்டு, சாவி அடங்கிய மோதிரங்களை பயன்படுத்துவோம் என்று வனிதா தெரிவித்தார்.

வனிதாவின் திருமணத்தை பற்றி தான் இதுவரை சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. இந்நிலையில் மூத்த நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனும் வனிதா பற்றி விமர்சித்துள்ளார். பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,

வனிதாவை சிறு வயதில் இருந்தே எனக்கு தெரியும். அவரின் முதல் கணவர் ஆகாஷ் ரொம்ப நல்லவர். வனிதா பிரச்சனையால் அவர் படங்களில் நடிக்காமல் இருக்கிறார். வனிதாவுக்கு பாடி டிமாண்ட் அதிகமாக இருக்கலாம். பாடி டிமாண்ட் என்றால் என்ன என்பதை அகராதியில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

படம் தயாரிக்க ஆசைப்பட்ட வனிதா ராபர்ட் மாஸ்டருடன் உறவில் இருந்தார். அதன் பிறகு தெலுங்காரர் ஒருவரை திருமணம் செய்தார். யூடியூப் சேனல் துவங்க பீட்டர் பாலுடன் சேர்ந்தார். தேவைப்படம் போது யாரை வேண்டுமானாலும் நண்பராக ஆக்கிக் கொள்ளலாம். ஆனால் வனிதாவோ அவ்வப்போது திருமணம் செய்து கொள்கிறார் என்றார்.

வனிதா உடல் தேவைக்காக திருமணம் செய்து கொள்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. பீட்டர் பாலுக்கும், எலிசபெத் ஹெலனுக்கும் விவாகரத்து நடக்காததால் வனிதாவை வேறு பெயர் வைத்து கிண்டல் செய்கிறார்கள்.

ட்விட்டரில் இருந்து வெளியேறிய வனிதா: (அ)சிங்கப்பெண் எங்கே ஓடிட்டாங்கனு கலாய்க்கும் கஸ்தூரி

ட்விட்டரில் வனிதா, பீட்டர் பால் திருமணம் குறித்த விவாதமாகத் தான் இருக்கிறது. நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் வனிதாவை விமர்சித்தார்கள். தன்னை விமர்சித்த அனைவரையும் திட்டிய வனிதா நேற்று முன்தினம் மாலை ட்விட்டரில் இருந்து வெளியேறிவிட்டார். ஆனால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அங்கு தன் வாழ்க்கை தொடர்பாக போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

200 லீற்றர் தாரை களவாடிய இருவர் நோர்வூட்டில் கைது!

நோர்வூட் –  மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் 200 லீற்றர் ‘தார் பெரலை’ களவாடிச்சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தாரை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (23) அதிகாலை பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து குறித்த லொறியை சோதனைக்குட்படுத்தும்போதே தாரை களவாடிச் செல்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் சாரதியும், உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

பொகவந்தலாவ நிருபர் – எஸ். சதீஸ்

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 13 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,O77 ஆக அதிகரித்துள்ளது.

664 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக இருக்கின்றது.

மேல் கொத்மலை திட்டம் – இடம்பெயர்ந்தவர்களுக்கு காணி உரித்தை வழங்க அங்கீகாரம்!

மேல் கொத்மலை நீர் மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது மீள அமைக்கப்பட்ட வீட்டுடன் சேர்ந்த காணிகளுக்கு உரித்துரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இது குறித்தான அமைச்சரவை தீர்மானம் வருமாறு,

மேல் கொத்மலை நீர் மின்சாரத் திட்டம் 2006ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டில் அதன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. இந்த திட்டத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடு, கடை மற்றும் வேலைத்தளங்கள் மாற்று இடத்தில் நிர்மாணித்து 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சம்பந்தப்பட்ட நஸ்டஈடு வழங்கும் பணி தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்காக வழங்கப்படும் காணிகளுக்கான உரிமை இதுவரையில் வழங்கப்படவில்லை.

இதனால் மேல் கொத்மலை நீர் மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டதினால் இடம்பெயர்ந்த தரப்பினருக்கு மாற்றுத் தொழில் மற்றும் கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ள மாற்று காணிகளை பயனாளிகளுக்கு விடுவிப்பதற்கான உரித்துரிமைப் பத்திரங்களை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மலையக இளைஞர்களுக்கு களம் அமைத்துக்கொடுப்பேன் – முரளி உறுதி!

மலையகத்திலுள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

மஸ்கெலியா பசுமலையில் இடம்பெற்ற ஆன்மீக நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே முரளி மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வுபெற்று நேற்றுடன் 10 வருடங்கள் ஆகின்றன. மலையகத்தில் கிரிக்கெட் தொடர்பில் திறமையுள்ள வீரர்கள் இருக்கின்றனர். எனினும், உரிய இடத்துக்கு அவர்கள் வருவதற்கான அடிப்படைவசதிகள் இல்லை.

எமது பவுண்டேசனுக்கு உதவி செய்யும் ஒருவர் லிந்துலையில் இருக்கின்றார். லிந்துலை பகுதியில் மைதானமொன்று இருக்கின்றது, அதனை இலவசமாக தருகின்றேன், விளையாட்டு நிறுவனமொன்றை செய்யுமாறு அவர் கூறினார். அந்த கோரிக்கையை நானும் ஏற்பேன். எனவே, அத்திவாரத்தை போட்டுக்கொடுத்தால், விளையாட்டு வீரர்களுக்குதிறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அடிப்படை வசதிகள் இன்மையாலேயே இங்குள்ளவர்களுக்கு திறமையை வெளிப்படுத்தமுடியாதுள்ளது.  கிரிக்கெட் என்பது ஓட்டப்போட்டிபோல் கிடையாது. மைதானத்தில் உரிய பயிற்சி பெறவேண்டும். ஆனால், அடிப்படைவசதிகள்கூட இங்கு இல்லை. அதனை ஏற்படுத்திக்கொடுப்பதே எமது நோக்கமாக இருக்கின்றது.

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியில் 10, 15 வருடங்கள் விளையாடிய வீரர்கள் ஓய்வுபெற்றுவிட்டனர். புதிய வீரர்களுக்கு திறமை இருக்கின்றது. அதனை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு சிறிது காலம் எடுக்கும். அதனை நாமும் வழங்கவேண்டும். ஒரே நாளில் சாம்மியனாக முடியாது. எனவே, எதிர்காலத்தில் திறமையை வெளிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.

சங்கா, மஹேல, வாஸ் போன்றவர்களின் இடங்களை நிரப்புவதற்கு காலம் எடுக்கும். அந்த இடத்தை நிரப்புவதற்கு வீரர்களும் முயற்சிக்கின்றனர்.

க.கிசாந்தன்

‘வங்குரோத்து வேட்பாளர்களின் வெத்து அரசியல் கண்டியில் எடுபடாது’

கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வங்குரோத்து வேட்பாளர்களின் சேறுபூசும் அரசியலானது, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சவாலாக அமையாது.வாக்காயுதம்மூலம் இம்முறையும் சாதனை படைக்க கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டுவிட்டனர். அதுமட்டுமல்ல வெத்து வேட்பாளர்களுக்கும் தக்கபாடம் புகட்டுவார்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் வேலுகுமாருக்கு நாளாந்தம் மக்கள் ஆதரவு அதிகரித்துவருகின்றது.இந்நிலையில் கம்பளை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

“ 2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் மூலம்தான் 15 ஆண்டுகளுக்கு பிறகு கண்டி மாவட்டத்துக்கான தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்கள் வென்றெடுத்தனர். இதற்கு முஸ்லிம் சகோதரர்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.

இந்நிலையில் கடந்த நான்கரை வருடங்களில் என்னால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள்மூலம் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்துவத்தையும் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளதுடன், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது தமக்கான உரிமை, அடையாளம் என்ற உணர்வும் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே, இம்முறை மக்கள் வரலாற்று சாதனை படைப்பார்கள் என்பது உறுதி.

இதனால் கதிகலங்கிபோயுள்ள சில பேரினவாதிகள், தமிழர்களின் சாதனையை தடுப்பதற்காக பிறப்பால் மட்டுமே தமிழர்களான சில வெத்து வேட்பாளர்களை தேர்தலில் களமிறங்கியுள்ளனர். அவர்கள் ஊடாக சேறுபூசும் அரசியலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கைக்கூலிகளை காசுகொடுத்து வாங்கி, மேலும் சிலரை சம்பளத்துக்கு அமர்த்தி போலியான தகவல்கள் பரப்பட்டுவருகின்றன. இவற்றை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை. இருந்தாலும் விழிப்பாகவே இருக்கவேண்டும்.

நேருக்கு நேர் அரசியலில் மோத முதுகெலும்பில்லாதவர்களே, சேறுபூசி அதன் ஊடாக தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சவாலுக்குட்படுத்தலாம் என நினைக்கின்றனர். அவர்களின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது.” – என்றார்.

‘கொரோனா’ – பலி எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 53  லட்சத்து 78 ஆயிரத்து 145 ஆக அதிகரித்து உள்ளது.

இவர்களில் 93  லட்சத்து  53  ஆயிரத்து 382  பேர் குணமடைந்துள்ளனர். 53 லட்சத்து 94  ஆயிரத்து 441 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 66 ஆயிரத்து 912  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 6 லட்சத்து 30 ஆயிரத்து 312 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

‘இந்த ஆட்சியின்கீழ் இனவாதம் கொளுந்துவிட்டு எரிகிறது’ – மனோ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த ஆட்சியின்கீழ் இனவாதம் கொளுந்துவிட்டு எரிகின்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுலகத்தில் நேற்று (22) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

” குருணாகலையிலுள்ள இரண்டாம் புவனேகபாகு மன்னனின் அரச சபை உடைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.அதாவது புவனேகபாகு மன்னர், முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் முடித்ததால் அவர் அவ்வளவு பெரிய மன்னன் கிடையாது என்ற தொனியில் பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார். அது உண்மையா, பொய்யா என எனக்கு தெரியாது, ஆனால், முஸ்லிம் பெண்ணொருவம் திருமணம் முடிப்பது தவறா?

இலங்கையில் கடைசி இராஜ்ஜியம் கண்டி இராஜ்ஜியமாகும். அந்த இராஜ்ஜியத்தை தமிழர் ஒருவரே ஆண்டார். ஶ்ரீவிக்கிரம ராஜசிங்கன் கடைசிகாலத்தில் பிரித்தானியருடன் ஒப்பந்தம் செய்தபோது அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள், தமிழ் மொழியில்தான் கையெழுத்திட்டனர். அதற்கான சான்றும் இருக்கின்றது.

ஶ்ரீவிக்கிரமராஜசிங்கன் கண்டி இராஜ்ஜியத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ராஜ வம்சம் இல்லாதுபோய்விட்டதால், இந்தியாவுக்கு சென்று அவரை அழைத்துவந்து இங்கு சிம்மாசனத்தில் அமரவைத்தனர். இக்கால கட்டத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையே புரிந்துணர்வு இருந்தது. இனவாதம் இருக்கவில்லை. இன்று இந்த ஆட்சியின்கீழ்தான் இனவாதம் கொளுந்துவிட்டெரிகின்றது. இதன் வெளிப்படையாகவே பிரதமர்கூட மேற்கண்டவாறு கருத்து வெளியிடுகின்றார்.

குருணாகலையில் தொல்லியல் சின்னம் தரைமட்டமாக்கப்பட்டது தவறான செயலாகும்.  எனினும், தனது கட்சி மேயர் செய்ததால், குறித்த மன்னன் முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்ததால் அவர் பெரிய மன்னன் அல்ல என பிரதமர் கூறமுற்படுவது அவரின் பதவி நிலைக்கு பொறுத்தமற்ற செயலாகும். ” – என்றார்.

மூன்றிலிரண்டு பலத்தை தாருங்கள் – பிரதமர் மஹிந்த

மொட்டு கட்சிக்கு தெளிவான வெற்றியை பெற்றுக் கொடுப்பதற்காக பொது மக்களின் ஆதரவு அத்தியாவசியமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு மாலபே நகரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாக உடைந்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக இம்முறை வாக்குகளை மொட்டு சின்னத்திற்கு வழங்கி அரசாங்கத்திற்கு உதவுமாறு பிரதமர் இதன்போது பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் இன்று வரையில் தலைமைத்துவமில்லாத நிலைமைக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கும் அவ்வாறான ஒரு தலைவிதி ஏற்படும் தினம் மிக தொலைவில் இல்லை.

ரணில் விக்ரமசிங்க கடந்த அரசாங்கத்தில் பிரதமர் பதவியில் இருந்த போதிலும் நாட்டிற்கு வேலை செய்யவில்லை. இந்த இரண்டு தரப்பும் மக்கள் மத்தியில் தோல்வியடைந்த இரண்டு தரப்புகளாகும். இன்று வரையில் மொட்டு கட்சியின் வெற்றி தௌிவாகியுள்ளது.

அந்த வெற்றியை மாபெரும் வெற்றியாக்குவதற்கு மூன்றில் இரண்டு அதிகாரத்தை பெற்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அனைவரினதும் ஆதரவினை பெற்றுத் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...

விசேட சுற்றுலா வலயமொன்றை உருவாக்க முன்மொழிவு!

0
"தேயிலை பயிர்ச்செய்கை சார்ந்த சுற்றுலாத் தொழில்" குறித்தும் ஆராய்வு! இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதின் தலைமையில் இன்று (16)...