சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong , பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ‘விரிவான மூலோபாய கூட்டாண்மை’ குறித்து ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகே பிரதமர் மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலி மீள்திறனை (Supply chain resilience) உறுதி செய்தல் போன்ற துறைகளில் வளர்ந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாய கூட்டாண்மை குறித்து நாங்கள் விவாதித்தோம்.
சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து பணியாற்றும்.”” – என்று பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அவரது பயணத்திற்கு முன்னதாக சந்தித்ததில் பெருமையடைகிறேன்.
பிரதமர் மோடி அவர்களை வரவேற்பதற்கும், எங்கள் கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.”என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.










