நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (23) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்திற்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் நகர்வு குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன், இந்த ஆலோசனைக் கூட்டத்தை எவ்விதத் தாமதமும் இன்றி கூட்டுமாறு நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரைத் தொலைபேசி மூலமாகவும் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுவதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இதில் பங்கேற்கத் தீர்மானித்துள்ளதாகத் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.










