இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு: செப்டம்பரில் பேச்சு

கிளிநொச்சி மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (11) பிற்பகல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்தில், முன்னைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள மீனவ சங்கங்களின் சமாசங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் விரிவான கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறல்கள் அதிகரித்து வருவதால் தமது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக மீனவ சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம். செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன” என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கிளிநொச்சி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், கடற்றொழில் துறையில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

தட்டுவன்கொட்டி கிராம அலுவலர் பிரிவில் சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் வழங்கப்பட்ட 28 முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட வீடுகளில் 15 வீடுகளின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த காணி வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவித்து கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, அன்புபுரம் முதல் கௌதாரிமுனை வரையிலான கடற்பரப்பில் கம்பி வலை (Trap Net) பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்குத் தேவையான சாத்தியவள ஆய்வறிக்கையை தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவரகமான NARA நிறுவனத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அன்புபுரம், செபஸ்தியார்புரம், நாச்சிக்குடா, நல்லாயன், அன்னை வேளாங்கண்ணி, கிராஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மீன்பிடி இறங்குதுறைகளை ஆழப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மீனவ பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பிலும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தார்.

கிளிநொச்சி மாவட்ட மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கும், கடற்றொழில் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles