பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 15 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவரை பிணையில் விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தனுஷ் எனப்படும் தம்பையா பிரகாஷ் என்ற அரசியல் கைதியையே பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர் சுமார் 15 ஆண்டுகள் தடுப்புக்காவலில் கழித்துள்ளார் என்றும், கைது செய்யப்பட்டபோது அவருக்கு 26 வயது தான் என்றும், விசாரணைகளுக்காகக் காத்திருந்தபோது, தனது இளமைப் பருவத்தின் பொன்னான ஆண்டுகளைச் சிறையில் கழித்துள்ளார் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
நீதியரசர் பிரதீப் ஹெட்டியாராச்சி வழங்கிய இந்தத் தீர்ப்புடன், நீதியரசர் பி. குமாரரத்தினமும் உடன்பட்டிருந்தார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கில், மூன்றாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் என்ற தனுஷுக்குப் பிணை மறுத்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்றின் இந்தத் தீர்ப்பு ரத்து செய்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றப்பத்திரிகையில் அவருக்கு எதிராக 230 குற்றச்சாட்டுகள் உள்ளன; அவற்றில் 115 குற்றச்சாட்டுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும், மேலும் 115 குற்றச்சாட்டுகள் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழும் சுமத்தப்பட்டுள்ளன.
கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிரதிவாதியான தம்பையா பிரகாசுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
தலா ரூ. 50 இலட்சம் மதிப்புள்ள நான்கு பேரின் பிணைக் கையொப்பம், 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, காவல் தலைமையகத்தில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை முன்னிலையாக வேண்டும், மற்றும் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும் ஆகிய கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
பிணை நிபந்தனைகளில் ஏதேனும் மீறல் ஏற்பட்டால், பிணை ரத்து செய்யப்படும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் எச்சரித்தது.
விதிவிலக்கான சூழ்நிலைகளில் பிணை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில்,2022 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் 15B என்ற திருத்தத்தை நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியிருந்தபோதிலும், பிணையை மறுக்கும்போது மேல்நீதிமன்றம் அந்தத் திருத்தத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை முறையாகக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டபோது அவரது மகளுக்கு ஒரு வயதுதான் ஆகியிருந்தது என்றும், அவர் நீண்ட காலம் காவலில் வைக்கப்பட்டிருந்ததால், அந்தக் காலகட்டம் முழுவதும் அவரது குடும்பத்தினருக்கு அவரது கவனிப்பும் பாதுகாப்பும் கிடைக்காமல் போனது என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.










