அரைச்சதமடித்த நாமல்: சிறையில் 50 நாட்கள்!

நாட்டின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும், கலாசார மரபுரிமைகளைப் பாதுகாக்கவும் தனது சிறைவாசம் உதவுமெனில், 50 நாட்கள் மட்டுமன்றி 500 நாட்கள்கூட சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 23ஆம் திகதியிடப்பட்ட நீண்ட அறிக்கையொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒக்டோபர் 24ஆம் திகதியுடன் தான் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் நிறைவடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எனது நாட்டுக்கு நன்மை கிடைக்குமென்றும், எமது கலாசார மரபுரிமைகளைப் பாதுகாக்க முடியுமென்றும் இருந்தால், 50 நாட்கள் மட்டுமன்றி 500 நாட்கள்கூட சிறையில் இருக்க நான் தயாராக இருக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் பொருளாதாரச் செயற்பாடுகள் குறித்து கேள்வி
நாட்டின் பொருளாதார நிலைமை முன்னேற்றமடைந்து வருவதாக அரசாங்கம் கூறினாலும், பொதுமக்கள் தொடர்ந்தும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணங்களை மூன்றில் இரண்டு பங்காகக் குறைத்தல், எரிபொருள் விலைகளைக் குறைத்தல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பள அதிகரிப்பு வழங்குதல், பிணையின்றி வட்டியில்லாக் கடன்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் முன்மொழிவுகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், டொயோட்டா விட்ஸ் (Toyota Vitz) கார்களை சுமார் 12 இலட்சம் ரூபாய்க்கு வழங்குதல், அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் வரிகளை நீக்குதல் போன்ற முன்மொழிவுகளும் நடைமுறைக்கு வந்துள்ளனவா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டின் முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, ஒரு குறிப்பிட்ட அரசியல் குடும்பத்தைக் குறிவைக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

“நாடு இத்தகைய நெருக்கடியான தருணத்தை எதிர்கொண்டிருக்கும்போது, ஒரு குடும்பத்தின் பின்னால் நாட்டின் பிரச்சினைகளை மறைக்க முயற்சிப்பது அபத்தமானது” என அவர் தெரிவித்துள்ளார்.
கவந்திஸ்ஸ யானையின் மரணம் குறித்தும் கவலை
அண்மையில் உயிரிழந்த பிரபல தந்தங்களைக் கொண்ட கவந்திஸ்ஸ யானையைப் பாதுகாக்கத் தவறியமை குறித்தும் நாமல் ராஜபக்ச தனது அறிக்கையில் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் கலாசார மற்றும் இயற்கை மரபுரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச, நாட்டின் மரபுரிமைகளைப் பாதுகாத்த தலைவராகச் செயற்பட்டதாகவும், உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியதாகவும் பாராட்டியுள்ளார்.

மதம் மற்றும் கலாசாரம் தொடர்பான விவாதங்கள் ஜனநாயகச் சமூகத்தில் சுதந்திரமாக இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, அதேவேளை மதங்களை அவமதித்தல், உண்மைகளைத் திரிபுபடுத்துதல் மற்றும் வெறுப்பைப் பரப்புதல் போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

“மதம் என்பது போட்டியல்ல; அது ஒன்றாக வாழ்வது. அது வெறும் வெளிப்பாடல்ல; புரிந்துகொள்வதாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து இறுதியில் நீதித்துறை தன்னை விடுவிக்கும் என நம்புவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறைவாசம் தனது வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து சிந்திப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதால் தனது சிந்தனைகளையும் அரசியல் நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால் எமது அணிக்கு ஆதரவாக நிற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சிறையில் அடைக்க முடியாது” என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles