கண்டி – தெல்தெனிய, ரங்கல பகுதியில் அமைந்துள்ள கோணவல தோட்டத்தில் மழை காரணமாக லயன் குடியிருப்பன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன், பெய்து வரும் மழையினால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து வருவதுடன், மற்றுமொரு லயன் குடியிருப்பின் சுவர் வளைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் காணப்படுகின்றது.
இத்தோட்டத்தில் உள்ள 06 லயன் தொகுதிகளில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் வீடுகளின் சுவர்களில் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவுகின்றது.
மேலும், கடந்த சில நாட்களாக வீசிய பலத்த காற்று காரணமாக இக்குடியிருப்புகளின் கூரைத் தகரங்கள் பல தூக்கி வீசப்பட்டுச் சேதமடைந்துள்ளன. இதனால் அச்சுறுத்தலான சூழ்நிலைக்கு மத்தியில் வாழ்ந்து வரும் தமக்கு உடனடியாக உரிய பாதுகாப்பான தீர்வை வழங்கி உதவுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
க.யோகா










