பிரவுன்ஸ் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் லுனுகலை, சோலண்ட்ஸ் தோட்டத் தேயிலை தொழிற்சாலை, உற்பத்திப் பணிக்காக இன்று மீள் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தேயிலைத்தூள் களவு போதல், நட்டத்தில் இயககுதல், பராமரிப்பு செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து கம்பனி நிர்வாகம் குறித்த தொழிற்சாலையின் உற்பத்தி பணியை இடைநிறுத்தி, குறித்த தேயிலைத் தொழிற்சாலையை மூடியிருந்தது.

இதன் காரணமாக சோலண்ட்ஸ் தோட்டத்தில் பறிக்கப்படும் கொழுந்து அடாவத்தை தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலைதூள் உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்டு வந்ததுடன் , தொழிற்சாலையில் கடமையாற்றிய தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
கம்பனி நிர்வாகத்தின் இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தொழிற்சங்ககள் ஒன்றிணைந்து கம்பனி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமரச தீர்வை ஏற்படுத்தி இருந்தன.

ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் பிரவுன்ஸ் கம்பனி தோட்டங்களின் குழு முகாமையாளர் ஆரியதிலக்க தொழிற்சாலையை இன்று (30) மீள் திறந்து உற்பத்தியை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் இ.தொ.காவின் பதுளை மாநில இயக்குநர் கனகராஜ் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதி ஞானப்பிரகாசம், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் காரியாலய உத்தியோகத்தர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள், தொழிலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
பசறை நிருபர்










