ஆசியக் கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் இந்தியா A அணிக்கு எதிரான போட்டியில் நேபாள அணி 26 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
கட்டாரின் தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (20) நடைபெற்ற B குழுப் போட்டியில், திலக் வர்மா தலைமையிலான இந்தியா A அணி 306 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா A அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 332 ஓட்டங்களைக் குவித்தது.
இந்திய அணியின் திலக் வர்மா 113 பந்துகளில் 107 ஓட்டங்களையும், குமார் குஷாக்ரா 102 பந்துகளில் 117 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் இணைந்து 206 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வலுவான ஓட்ட எண்ணிக்கைக்கு அடித்தளமிட்டனர்.
சூர்யன்ஷ் ஷெட்ஜ் 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை மேலும் உயர்த்தினார்.
333 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாள அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் 11.3 ஓவர்களில் வெறும் 26 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
நேபாள அணி 8.5 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் வெறும் 5 ஓட்டங்களுக்குள் இழந்தது.
நேபாள அணியில் பவன் சராப் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 6 ஓட்டங்களைப் பெற்றதே அதிகபட்சமாக அமைந்தது. ஐந்து துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டமின்றி ஆட்டமிழந்ததுடன், எந்தவொரு வீரரும் இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெறவில்லை.
இந்திய அணியின் பிரின்ஸ் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நேபாள அணியின் துடுப்பாட்டத்தை நிலைகுலையச் செய்தனர்.
நேபாள அணி 26 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை, லிஸ்ட் A கிரிக்கெட் வரலாற்றில் பதிவான ஐந்தாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
