” ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்.”
இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த 28-ஆம் திகதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமெனியின் மகன் மொஜ்தபா கமெனி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதுவரை மொஜ்தபா கமெனி பொது வெளியில் தோன்றவில்லை.
அவர் அமெரிக்காவின் தாக்குதலில் காயம் அடைந்துள்ளதாகவும், கோமா நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதற்கிடையே நேற்று மொஜ்தபா கமெனி முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில் அமெரிக்கா-இஸ்ரேலை பழிவாங்குவோம். அரபு நாடுகள் மீதான தாக்குதல் தொடரும். ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் மொஜ் தபா கமெனி உயிருடன் உள்ளார் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர், “மொஜ்தபா கமெனி ஒரு வேளை காயமடைந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் ஏதோ ஒரு வடிவத்தில் உயிருடன் இருக்கலாம் என்று நினைக்கிறேன் ” என்றார்.
இதற்கிடையே மொஜ் தபா கமெனிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிரட்டல் விடுத்து உள்ளார்.
போர் தொடங்கிய பிறகு அவர் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இஸ்ரேல் எப்போதையும் விட தற்போது வலிமையாக உள்ளது.
ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்.
மொஜ்தபா கமெனி, பொதுவெளியில் தனது முகத்தைக் காட்ட முடியாது. அவர் ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கைப்பாவையாக உள்ளார்.
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளை நாங்கள் நசுக்கி வருகிறோம்.ஈரானில் கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவதற்கான சூழலை அந்நாட்டு மக்களுக்கு உருவாக்குவதற்காகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் செயல்பட்டு வருகின்றன.
ஈரான் மக்கள் புதிய சுதந்திரப் பாதையில் அடியெடுத்து வைக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம். உங்களுக்கு உதவுகிறோம்.
ஆனால் இறுதியில் அது உங்களைச் சார்ந்தது. அது உங்கள் கைகளிலேயே உள்ளது என்றார்.










