125 வருடகால ஆஸ்திரேலிய இராணுவ வரலாற்றில் முதன்முறையாக இராணுவ தளபதி பதவிக்கு பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுத் திறன்களுக்கான தளபதியாக (Chief of Joint Capabilities) பதவி வகிக்கும் சூசன் கோய்ல் (Susan Coyle), புதிய இராணுவத் தளபதியாகப்பொறுப்பேற்கவுள்ளார்.
அதேவேளை, ஆஸ்திரேலிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் மார்க் ஹம்மண்ட் (Mark Hammond), அடுத்த பாதுகாப்புப் படைத் தளபதியாக (Chief of Defence Force) நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி அட்மிரல் டேவிட் ஜான்ஸ்டன் மற்றும் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட் ஆகியோர் தங்களது ஓய்வு முடிவை அறிவித்ததைத் தொடர்ந்து மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள Mark Hammond) இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,
“எதிர்கால சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் இந்தப் புதிய பொறுப்பை ஏற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.
மேலும், ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை தற்போது மேற்கொண்டு வரும் “நீர்நிலம் சார்” (Amphibious) பாதுகாப்பு முறை மாற்றத்தின் பிரதிபலிப்பாகவே தனது நியமனம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“அடுத்த பத்தாண்டுகளில் ‘ஆக்கஸ்’ (AUKUS) ஒப்பந்தத்தின் கீழ் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதே எனது முதன்மைப் பணியாக இருக்கும். இது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் பொருளாதார வளத்தையும் மேம்படுத்தும்,” என ஹம்மண்ட் நம்பிக்கை தெரிவித்தார்.
40 ஆண்டுகால அனுபவம்
2022 முதல் கடற்படைத் தளபதியாகப் பணியாற்றி வரும் ஹம்மண்ட், கடந்த 40 ஆண்டுகளாக கடற்படையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்.
போர்க்கப்பல்களில் (Frigates) தனது பணியைத் தொடங்கி, பின்னர் நீர்மூழ்கிக் கப்பல்களின் தளபதியாகவும், ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் பிரிவின் (Australian Fleet) தலைவராகவும் சிறப்பான சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.










