இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் காவல்துறையில் பணியாற்றிய சந்தன விக்ரமரத்ன,இலங்கையின் 35வது காவல்துறைமா அதிபராகப் பதவி வகித்திருந்தார்.
தலஹேன பகுதியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில், தனது சேவைக்கால துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
அவரது உடல் தற்போது முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, 1986 ஆம் ஆண்டு தகுதிகாண் உதவி பொலிஸ் அத்தியட்சகராகப் பொலிஸ் சேவையில் இணைந்தார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பட்டதாரி ஆவார்.
சி.டி. விக்ரமரத்ன 2019 ஏப்ரல் 28 முதல் ஓராண்டிற்கும் மேலாக பதில் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, 2020 நவம்பர் 28 அன்று அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
சி.டி. விக்ரமரத்ன 2023 நவம்பர் 27 அன்று பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
