டித்வா புயலின்போது சேதமடைந்த தமது பகுதி வீதியை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி கொத்மலை, வேவண்டன் தோட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் உள்ள பாடசாலையையும் சீரமைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேவண்டன் தோட்டத்தில் சுமார் 48 குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்தடித்வா புயலின்போது இத்தோட்டத்திற்கான பிரதான பாதை முழுமையாகச் சேதமடைந்தது.
இதன் காரணமாக, இத்தோட்டத்தில் உள்ள பாடசாலையின் செயற்பாடுகளும் தற்போது முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
அனர்த்த காலப்பகுதியில் அருகில் உள்ள பாடசாலைகளில் தற்காலிகமாகத் தங்கியிருந்த இம் மக்கள், தற்போது மீண்டும் தங்களது சொந்த இடமான வேவண்டன் தோட்டத்திற்கே திரும்பி வசித்து வருகின்றனர்.
தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக கொத்மலை பிரதேச செயலகம் உறுதியளித்த போதிலும், கடந்த 9 மாதங்கள் கடந்தும் இதுவரை எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தற்போது இத்தோட்டத்திற்குச் செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுடைய பிரதான பாதையை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு இம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியபடி தோட்டத்திலிருந்து நடைபவனியாக வந்த மக்கள், கண்டி – நுவரெலியா பிரதான வீதியின் கெரண்டிஎல்ல பகுதியில் வீதியை மறித்து நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
க,யோகா
