ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களும் இலக்கு:மிரட்டுகிறது ஈரான்

இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தலைவர் உத்தரவிட்டால், ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைக்கும் திறன் ஈரானுக்கு இருப்பதாக அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.

அத்துடன், புவியியல் எல்லைகளுக்கு அப்பால் பதிலடி இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஈரானால் முடியும் எனத் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த IRGC பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி, இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் போதுமான ஏவுகணைத் திறன் ஈரானிடம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் உத்தரவிட்டால், புவியியல் எல்லைகளைக் கருத்தில் கொள்ளாமல் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய திறன் ஈரானிடம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, உயிரிழந்த முன்னாள் தலைவர் அயதுல்லா செயிட் அலி கமேனி உத்தரவின் பேரில், ஈரானிய ஏவுகணைகளின் தாக்குதல் தூரம் 2,000 கிலோமீற்றராக மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

எனினும், தலைவரின் உத்தரவு கிடைத்தால் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைக்கும் திறனும் ஈரானிடம் உள்ளதாகவும், 4,500 கிலோமீற்றர் தூரம் வரை செல்லக்கூடிய ஏவுகணைத் திறனை ஈரான் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

CNN வெளியிட்டுள்ள அழுக்குக் குண்டு (Dirty Bomb) பயன்பாடு தொடர்பான தகவல்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், அவை எதிரிகளாலும் இஸ்ரேலிய ஆட்சியினராலும் உருவாக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகள் என மறுத்தார்.

“நாங்கள் ஏதேனும் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அதைத் துணிச்சலுடன் வெளிப்படையாக அறிவிப்போம்” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா ஈரானின் அணைகளைக் குறிவைத்துத் தாக்கினால், அதற்கும் நிச்சயமாகப் பதிலடி கொடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

மேலும், உலகின் எந்தப் பகுதியில் உள்ள மற்றொரு நாட்டின் இராணுவத் தளத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ஈரான் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டால், அந்த நாடும் ஈரானின் இலக்காக அமையும் என்றும், இதில் தங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் IRGC பேச்சாளர் எச்சரித்தார்.

Related Articles

Latest Articles