நாம்200 நிகழ்வில் பங்கேற்பதற்காக தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. முன்வைத்துள்ள குற்றச்சாட்டை இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நிராகரித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எல்லோரும் ஒன்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கம். நாம்200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அழைப்பு சென்றுள்ளது. சுமந்திரன், சாணக்கியனும் வருகை தந்திருந்தனர். திகாம்பரமும் வரமுடியாமை குறித்து தெளிவுபடுத்தினார். வடிவேல் சுரேசும் வரமுடியாமைக்கான காரணத்தை தொலைபேசிமூலம் அறிவித்தார். ஆகவே மனோ கணேசனின் அபாண்டமான குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேடையில் நான் ஏறினேன். பெரும்பான்மை இனத்தை சேர்ந்த எதிரணி அரசியல் தலைவர்கள்கூட நிகழ்வுக்கு வந்திருந்தனர். என் சமூகத்தை சார்ந்த அரசியல் தலைவர்கள் வராமை கவலையளிக்கின்றது. மனோ கணேசனுக்கு அழைப்பு விடுத்தோம். ஜெனிவா சென்று 20 ஆம் திகதி நாடு திரும்பினேன். இது நமது சமூகத்துக்கான நிகழ்வு, அழைப்பிதழை நீங்கள் எதிர்பார்க்க கூடாது இருந்தாலும் அனுப்பினோம் என மனோ கணேசனிடம் கூறினேன். சொந்த வீட்டு கல்யாணத்துக்கு யாரும் அழைப்பிதல் கொடுக்க மாட்டாங்கள். ஆனால் எங்களை வெளிநாட்களாகதான் பார்க்கின்றனர் என்பது தெளிவாகின்றது. அவரின் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்.” – என்றார்.
