Home Blog Page 3528

எம்பீக்களுக்கு “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் இதோ : மனோ கணேசன்

20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க “மாட்டோம், மாட்டோம்” என இரண்டு முறை தாம் இப்போது அங்கம் வகிக்கும் அரசுக்கு இடித்துக்கூறி, பாவமன்னிப்பு பெற சந்தர்ப்பம் வருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ மேலும் கூறியுள்ளதாவது,

இன்றைய அரசாங்கம், பாராளுமன்றத்தில் இரண்டு சட்ட மூல மசோதாக்களை கொண்டு வந்து நாட்டையும், இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களையும் ஆபத்தில் போட திட்டமிடுகிறது. இந்த ஆபத்துகள் இன்று எம் கண் முன்னே தெரிகின்றன.

ஒன்று, நமது தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை அழித்து, ஒழிக்கும் உத்தேச இரகசிய திட்டமிடலும், முயற்சியும் ஆகும். அதாவது, இந்நாட்டில் இன்றுள்ள தேர்தல் முறை சட்டங்களை திருத்தியமைக்க, இவர்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கொண்டுவர திட்டமிடும் சட்டமாகும்.

இரண்டாவது, இந்நாட்டில் நிலவும் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சீன நாட்டுக்கு விசேட சலுகைகளை அளித்து, கொழும்பு தலைநகரை ஒட்டி, மேற்கு கரையில் அமைகின்ற, தனியொரு நிர்வாகம் கொண்ட “துறைமுக நகர்” ஆகும்.

இந்நாட்டில் தமிழ் மக்களின் ஜனத்தொகையில் 50 விகிதமும், முஸ்லிம் மக்களின் ஜனத்தொகையில் 65 விகிதமும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே, தென்னிலங்கையில் வாழ்கிறார்கள். இப்படி பரவி, விரவி வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை பிரதிநிதித்துவங்களை இல்லாமல் ஒழிக்கும் புதிய தேர்தல் முறைமையை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன கொண்டு வர முயல்கிறது.

அதிஷ்டவசமாக, இன்று அரசின் உள்ளே இருக்கும் பங்காளி சிறுகட்சிகளின் இருப்பையும் இந்த புதிய தேர்தல் முறை யோசனைகள் சவாலுக்கு உட்படுத்துகின்றன. ஆகவே அரசுக்கு உள்ளே இருக்கும், சிங்கள மக்களை பிரதிநித்துவம் செய்யும் சிறு பங்காளி கட்சிகள் இதை அரசுக்கு உள்ளேயே இருந்து எதிர்க்கின்றன. நாளை இந்த கட்சிகள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இது தொடர்பில் கலந்துரையாடுகின்றன.

ஆனால், அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் பங்காளி கட்சியினரும், 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக அரசு பக்கம் தாவிய எம்பீக்களும் அமைதி காக்கின்றனர். இது இன்று தமிழ் பேசும் மக்களின் சாபக்கேடாக இருக்கிறது.

இன்று இருக்கும் தமிழ் பேசும் எம்பீக்கள், அமைச்சர்கள் நாளை இல்லாமல் போகலாம். ஆனால், இந்த நாடு இருக்கும். இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழத்தான் போகிறார்கள். இந்த உத்தேச தேர்தல் முறை மாற்ற முயற்சி, 20ம் திருத்தத்தை விட மிக மிக ஆபத்தானது. எமது மக்களின் இருப்பை இந்நாட்டில் இல்லாமல் செய்யும் உள்நோக்கம் கொண்டது.

ஆகவே எதிர்காலத்தில் எமது தமிழ், முஸ்லிம் இனங்களின் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்யும் சட்டமூலங்களுக்கு முட்டாள்தனமாக கையை தூக்கி, வரலாற்றின் சாபத்துக்கு மீண்டும் ஒருமுறை உள்ளாக வேண்டாம் என சம்பந்தபட்டவர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.

கடந்த அரசில் பங்காளி கட்சி அமைச்சர்களாக நாம் இருக்கும் போது, நமது மக்களின் இருப்புக்கு ஆபத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் உரக்க குரல் கொடுத்து அரசுக்கு உள்ளேயே சண்டையிட்டு, எமது இருப்பை உறுதி செய்தோம் என்பதையும் இங்கே நான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் பெருமையுடன் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அதேபோல், அடுத்த தேசிய ஆபத்து, சீன நாட்டுக்கு விசேட சலுகைகளை அளித்து, இந்நாட்டில் நிலவும் சட்டங்களிலிருந்து விலக்களித்து, கொழும்பு தலைநகரை ஒட்டி, மேற்கு கரையில் அமைக்கின்ற தனியொரு நிர்வாகம் கொண்ட “துறைமுக நகர்” ஆகும். இதற்கான விசேட வர்த்தமானி பிரகடனம் வெளியாகி விட்டது.

நாளை பாராளுமன்ற கட்சி தலைவர் கூட்டத்தில், இது தொடர்பில் பேசப்படும். நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின் இந்த சட்டமூலம் பாராளுமன்றம் வருமா, இல்லையா, வருமானால், வரும் திகதி என்பவை மீண்டும் கட்சி தலைவர்கள் கூடி முடிவு செய்வோம்.

இந்நிலையில், 20ம் திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்கள் ஒன்று கூடி, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை ஒழிக்கும் தேர்தல் முறைக்கு ஆதரவாக நாம் வாக்களிக்க மாட்டோம் என்றும், துறைமுக நகரை சீனாவுக்கு தாரை வார்க்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக நாம் வாக்களிக்க மாட்டோம் என்றும், தாம் இன்று அங்கம் வகிக்கும் அரசுக்கு உறுதியாக இடித்துரைக்க வேண்டும் என நான் இந்நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென்று அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
ஐ.பி.எல். போட்டித் தொடர் நடந்து வரும் நிலையில், அவர் இந்தியாவிலேயே தற்போது இருப்பதாகவும், வழமையான மருத்துவ பரிசோதனைக்கு அவர் சென்று திரும்பியதாகவும் குறித்த குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.
இதயம் தொடர்பிலான சிகிச்சைகளுக்காக முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கேட்டுபோது, இந்த செய்தி முற்றிலும் பொய்யாது என்று குறித்த குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழல்பந்து வீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முத்தையா முரளிதரன் ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னையில் தங்கியுள்ளார். நேற்றிரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன்… ஆனால் அன்று நான் பசியால் வாடிய போது? ரொனால்டோ நெகிழ்ச்சி

உலககால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரோனால்டோ சிறுவயதில் பசியால் வாடிய போது, தனக்கு பர்கர் கொடுத்து உதவிய பெண்ணை தேடி வருவதாக கூறியுள்ளார்.

தற்போது இருக்கும் விளையாட்டு உலகில் கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிப்பவர்களின் வரிசையில் போர்ச்சுகளைச் சேர்ந்த கிறிஸ்டியன் ரோனால்டோவும் ஒருவர், கால்பந்து உலகில் கொடி கட்டி பறக்கும் இவர் தான் தங்கும் ஹோட்டல்களில் ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் டிப்ஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவார்.

அதுமட்டுமின்றி டின்னர், பார்ட்டி என பணத்தை தண்ணீராக செலவழிப்பார் என்று கூறுவார், அந்தளவிற்கு தற்போது இவருக்கு வருமானம் கிடைக்கிறது.

இப்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ, தன்னுடைய சிறுவயதில் பர்கர் வாங்கி சாப்பிடும் அளவிற்கு கூட பணம் இல்லாமல் தவித்துள்ளார்.

சிறுவயதில் பயிற்சி முடிந்த பின்னர் சாப்பிட்டிற்கு உணவு இல்லாம் பசியால் வாடியுள்ளார். அப்போது அருகில் உள்ள மெக்டெனால்டில் வேலைப்பார்த்த பெண்மணிதான் அவருக்கு உதவியுள்ளார்.

இதை அவர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், போர்ச்சுக்கல் லிஸ்பன் ஸ்போர்ட்டிங்கில் சிறுவனாக இருந்த போது, பயிற்சி முடிந்த பின்னர் பசியாக இருக்கும்.

அப்போது, நாங்கள் இருக்கும் கட்டிடத்திற்கு அருகில் மெக்டொனால்டு இருக்கும். இதனால் நாங்கள் அங்கு சென்று கதவை தட்டுவோம். அங்குள்ளவர்களிடம் பர்கர் இருந்தால் கொடுங்கள் என்று கேட்போம். அதில், எட்னா என்ற பெண் எனக்கு பர்கர் கொடுத்து உதவினார்.

அதை என்னால் மறக்க முடியவில்லை, அவருக்கு நான் எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், அவரோடு சேர்ந்து இரண்டு பெண்கள் இருப்பார்கள், அவர்கள் எங்கிருக்கிறார்கள் தெரியவில்லை,

அவர்களை கண்டுபிடித்து டுரின் அல்லது லிஸ்பனில் டின்னர் கொடுக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை!

அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது என்று பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் நாள் சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை என்று தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்வொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த செந்தில் தொண்டமான், அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் (எஸ்.எல்.எஸ்.பி.சி) தலைவரைத் தொடர்புகொண்டு, ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுக்கான தாமதம் தொடர்பில் செந்தில் தொண்டமான் கேள்வி எழுப்பிய போது, இரண்டு வாரங்களுக்குள் அந்தச் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு, எஸ்.பி.சி தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை (ஜே.ஈ.டீ.பீ) எல்கடுவ பிளாண்டேஷன் உள்வாங்கப்பட்டுள்ள அமைச்சின் செயலாளருடனும் தொடர்புகொண்டு, இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கான மேலதிக நிதியைத் திறைசேறியிலிருந்து பெற்றுக்கொள்வதற்காக, விவசாய அமைச்சும் பெருந்தோட்ட அமைச்சும் இணைந்து, கூட்டு அமைச்சரவைப் பத்திரமொன்றை அடுத்த வாரம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, செந்தில் தொண்டமானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன், திறைசேறியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் நிதியை, அந்தந்த தோட்ட நிர்வாகங்களிடம் கையளித்து, நிலுவைச் சம்பளத்தைத் தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், செந்தில் தொண்டமானிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஓரிரு வாரங்களுக்குள், அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று, செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

ம.ம.முவை ஆணிவேரோடு அழிக்கும் வெத்து வேட்டு – ராதாமீது அனுசா சீற்றம்

மலையக மக்கள் முன்னணியை ஆணிவேரோடு அழித்துக்கொண்டிருக்கும் ஒரு சில வெத்து வேட்டுக்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியதாலேயே எம் மக்களின் பொருளாதார நிலை அதள பாதாளத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

மேலும் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களது 64 வது பிறந்த தினம் இன்றாகும்! கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதுமாக பாதிக்கப்பட்ட எம் மக்கள் இப்போதுதான் பொருளாதார ரீதியில் ஸ்திரத்தன்மையை அடைய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் எம் மக்களை ஒன்றிணைத்து கூட்டங்களை நடாத்தகூடாது என்பதாலேயே நாம் பொதுக்கூட்டங்கள் நடாத்துவதை தவிர்த்து வருகிறோம்.

ஆனால் மக்களை பற்றி துளியேனும் கவலைப்படாத ஒருசில மக்கள் பிரதிநிதிகள் அவர் வருகிறார் இவர் வருகிறார் என மக்களை ஒன்று திரட்டி சாணக்கியமற்ற அரசியல் பம்மாத்துகளை நடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இம்முறை மலையகத்திலிருந்து பாராளுமன்றம் சென்ற ஒரு சில வெத்து வேட்டுகளலேயே எம் மக்களின் பொருளாதார நிலை அதள பாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மற்றவர்களை விமர்சிப்பதை விட பாராளுமன்றுக்கு தெரிவாகி ஒரு வருடமாகப்போகிறது. இதுவரையில் இவர்களை தெரிவு செய்த மக்களுக்காக என்ன சேவைகளை செய்துவிட்டார்கள்? வெறுமனே மேடைகளில் பேசி காலத்தை கடத்துபவர்களிடமிருந்து இதைவிட வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்?

அதைவிட இன்றைய தினம் எனது தந்தையும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவருமான அமரர் சந்திரசேகரன் அவர்களின் 64 வது பிறந்த தினம். இதைக்கூட 61வது பிறந்த தினமாக கொண்டாடி அரசியலாக்கி ஒரு மாபெரும் தலைவருக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் முன்னணியினர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராவுல் காஸ்ட்ரோ

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்னமாகத் திகழந்துவரும் நாடான கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

ஏறக்குறைய 60 ஆண்டுகளாக கேஸ்ட்ரோ குடும்பத்தினர் கியூபன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருந்த நிலையில் அந்த மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அடுத்தும் நாட்டை ஆளவரும் இளம் தலைமுறையினருக்கு பொறுப்புகளை வழங்குவதாகக் கூறி ராவுல் காஸ்ட்ரோ பதவி விலக உள்ளார்.

1959ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து சர்வாதிகாரி பாடிஸ்டுடாவின் ஆட்சி அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பிடல் காஸ்ட்ரோ கியூப அதிபரானார். அன்று முதல் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து கியூபாவின் அசைக்க முடியாத தலைவராக விளங்கி வந்தார் பிடல்.

அமெரிக்காவின் பல்வேறு தடைகள், கொலை முயற்சிகள் (கிட்டத்தட்ட 600 முறை ), பொருளாதாரத் தடை ஆகியவற்றைத் தாண்டி இரும்பு மனிதராக கியூபாவை பிடல் வழி நடத்தி வந்தார்.

கடந்த 2006ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக பதவியேற்றுக் கொண்ட ராவுல் கேஸ்ட்ரோ 2008ல் முறைப்படி அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 2011ம் ஆண்டு கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்து, 2-வது முறை அதிபராக ரவுல் கேஸ்ட்ரோ நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கியூபாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு அதிபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பதால், அதிபர் பொறுப்பிலிருந்து விலகிய ராவுல் காஸ்ட்ரோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

ராவுல் காஸ்ட்ரே அதிபராக இருந்த காலத்தில் பரமவைரியான அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினார். 2014ம் ஆண்டில் அதிபராக இருந்த பாரக் ஒபாமாவுடன் ராவுல் காஸ்ட்ரோ சந்தித்து பேசினார். காலங்காலமாக எதிரியாக இருந்த அமெரிக்காவுடன் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ நட்பாக சென்றது உலக நாடுகளிடையே வரவேற்பைப் பெற்றது. கியூபா மீது விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளும் அப்போதைய அதிபர் ஒபாமாவால் விலக்கப்பட்டன. ஆனால், அதைத்தொடர்ந்து வந்த அதிபர் ட்ரம்ப் மீண்டும் பல பொருளாதாரத் தடைகளை கியூபா மீது விதித்தார்.

ஏறக்குறைய 60 ஆண்டு காலம், உலகில் கியூபாவின் முகமாக, கம்யூனிஸத்தின் முகமாக காஸ்ட்ரோ சகோதரர்கள் இருந்து வருகிறார்கள். ஆனால், இந்த சகாப்தம் விரைவில் முடிகிறது.

இந்நிலையில் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில்தான் கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

இ்ந்தக் கூட்டத்தில் ராவுல் காஸ்ட்ரோ பேசுகையில் “ நான் எனக்கு வழங்கப்பட்ட இலக்கை, பணியை முடித்துவிட்டதாக மனநிறைவு கொள்கிறேன். இனி என்னுடைய மண்ணை எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்கும் நம்பிக்கை வந்துள்ளது” என அறிவித்தார்.

ஆனால், தனக்குப்பின் யாரை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நியமிக்கப்போகிறார் என்பது குறித்து ராவுல் காஸ்ட்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், ராவுல் காஸ்ட்ரோவுக்கு அடுத்தஇடத்தில் இருக்கும் 60 வயதான மிகுல் டியாஸ் கேனல் அந்த பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது.

ராவுல் காஸ்ட்ரோவின் இந்த அறிவிப்பால் கியூபாவில் 60 ஆண்டுகாலம் ஆட்சியில் இந்த காஸ்ட்ரோ குடும்பத்தினரின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

ஆனால், கியூவில் இப்போது மிகமோசமான பொருளாதார சூழல் நிலவும்போது, ஆட்சி மாற்றம், தலைமை மாற்றம் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

மத்திய வங்கியின் நிச்சயமற்ற கணக்கில் தோட்டத் தொழிலாளர்களின் ETF, EPF!

ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை, ஸ்ரீலங்கா அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் எல்கடுவ பிளாண்டேசன் ஆகியவற்றின் கீழ் இயங்கும் தோட்டங்களிலுள்ள தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன அறவிடப்பட்டு சரியான விபரம் இல்லாத காரணத்தினால் மத்திய வங்கியில் நிச்சயமற்ற வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் தனியான வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்ய துரித நடவடிக்கை எடுக்குமாறு இ.தொ.கா உபதலைவரும், சட்டத்தரணியுமான கா. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இ.தொ.காவின் பிராந்திய இயக்குனர்களுக்கு அனுப்பிவைத்துள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இது பற்றி கடந்த 08ஆம் திகதி தொழில் திணைக்களத்தில் தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொழிற்சங்கங்களுக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. இதனோடு 09ஆம் திகதி மத்திய வங்கியிலும் இது தொடர்பாக விசேட கூட்டமும் நடைபெற்றது. இதன் அடிப்படையில் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களின் “டீ” கார்ட், தேசிய அடையாள அட்டை போன்றன இல்லாத காரணத்தினால் நிரந்தர வைப்பீட்டில் வைப்பீடு செய்ய முடியவில்லை.

எவ்வாறாயினும் பிரதேச மட்டத்தில் பகுதிவாரியான தோட்ட நிர்வாகங்களோடு தொடர்பு கொண்டு இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதோடு சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் மத்திய வங்கியில் வைப்பீடு செய்வதற்கு உடன் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிராந்திய இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்ட தனது சுற்றறிக்கையில் சட்டத்தரணி கா. மாரிமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி – தினகரன்

நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற சிறுமி பலி

ஹட்டன் – கினிகத்ஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு (Aberdeen Water Falls) நீராடச் சென்ற சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார். சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வௌ்ளவத்தை – நெல்சன் பிளேஸை சேர்ந்த 15 வயதான சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் கினிகத்ஹேன வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கினிகத்ஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1000 ரூபாவை வைத்துக்கொண்டு உளுந்துகூட வாங்கமுடியாது – ராதா விளாசல்

தற்போதைய அரசாங்கத்தில் ஊழலும், இலஞ்சமும் நிறைந்து போயுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு இன்று (17.04.2021) நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னணியின் தலைவரும், எம்.பியுமான வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டின்போது, மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர். பெரியசாமி சந்திரசேகரனின் 64வது ஜனன தினமும் நினைவு கூரப்பட்டது.

இதன்போது, முன்னணியின் பிரதி தலைவர் ஏ.லோறன்ஸ், செயலாளர். எஸ்.விஜயசந்திரன், தேசிய அமைப்பாளர் ஆர்.ராஜாராம், இளைஞர் அணி அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, மலையகத்திற்கு பெருமை சேர்த்த வீர, வீராங்கனைகளுக்கு கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

‘மலையக மக்கள் முன்னணி எப்போதும் வடக்கு கிழக்குடன் சுமூகமான தொடர்பை கொண்டுள்ளது. அதனடிப்படையிலேயே இன்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை அழைத்திருந்தோம். ஆனால் அவர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வரவில்லை. அதேபோன்று தான் ஹரீன் பெர்ணான்டோவும் வரவில்லை. கடந்த தேர்தலில் இளைஞர்களே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தினர். மலையகத்திலும் ஒரு ஜீவனுக்கு இளைஞர்கள் வாக்களித்தனர்.

மறுபக்கத்தில் மற்றுமொரு யுவதிக்கும் பதினேழாயிரம் வாக்குகள் வரை கிடைத்தது. ஆனால் அவை அனைத்தும் இன்று வெற்று வேட்டாக போயுள்ளது. தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் சிக்கியுள்ளது. எல்லாவற்றிலும் ஊழலும், இலஞ்சமும் நிறைந்துள்ளது.

அதேபோல் எல்லாவற்றிலும் கலப்படம் உள்ளது.தேங்கா எண்ணை போன்றவற்றிலும் கலப்படம் நிறைந்துள்ளது. சீனியில் ஊழல், பருப்பில் ஊழல் என அனைத்திலும் ஊழல் கலந்துள்ளது. தற்போது எமது கடல் வளத்தை மூடி சீனாவுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டை விற்கும் செயற்பாடு எங்கு முடியப்போகின்றது என தெரியவில்லை. சஜத்தின் தோல்விக்கு உட்கட்சி மோதலும் முக்கியமானது. அதன் பிறகுதான் சிறுபான்மை மக்களையும் இணைத்து ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளது. முன்னர் ஆட்சி பீடம் ஏறும் தரப்பினரை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் காணப்பட்டனர்.

ஆனால் இன்று சிறுபான்மையினர் துவேசம் மூலம் நசுக்கப்பட்டு வருகின்றனர். இப்போது உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாதுள்ளது. இதனால் இன்று உளுந்து வடை,தோசை, சூசியம் போன்ற திண்பண்டங்களை சாப்பிட முடியாதுள்ளது. இன்றும் 1000 ரூபா சம்பளத்தை முழுமையாக சிலர் பெற்றுக்கொள்ளவில்லை.

முக்கியமாக அரசாங்க தோட்டங்களில் 1000 ரூபா அதிகரிப்பு கொடுக்கப்படவில்லை. இன்று எல்லா சலுகைகளும் இல்லாது போயுள்ளது. தற்போதைய நிலையில் 1000 ரூபாவைக்கொண்டு உளுந்தை கூட வாங்க முடியாது. எனவே எமது இளைஞர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.

‘புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சி’ – யாழ்ப்பாணத்தில் நால்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே நால்வரும் கைது செய்யப்பட்டுதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...