Home Blog Page 3595

‘தாமரை’யுடன் மலையகத்தில் களமிறங்கும் விக்கி!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளை மையப்படுத்தி “தாமரை” சின்னத்தில் கட்சியொன்றை ஆரம்பிக்க வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஷ்வரன் நடவடிக்கை எடுத்து வருவதாக ‘திவயின’ என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பாரதீய ஜனதாக்கட்சி இலங்கையிலும் நிறுவப்படும் என தகவல் வெளியான நிலையில் அதற்கு விக்கி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, தாமரை சின்னத்தில் விக்னேஷ்வரன் புதிய கட்சியை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையுடன் மோத வேண்டாம் – ஐக்கிய மக்கள் சக்தி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் மோதுவதற்கு முனையக்கூடாது. மாறாக  இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு அரசு முன்வரவேண்டும். இலங்கைக்குள் ஜெனிவா கலாசாரத்தை மஹிந்த ராஜபக்சவே கட்டியெழுப்பினார் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போர் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. பொதுச்செயலாளர் பான் -கீ -மூனுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ச கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.  இதன்பிரகாரம் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு ராஜபக்ச அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்காரணமாகவே இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையிட்டது. மஹிந்த அன்று வழங்கிய இணக்கப்பாடுதான் இன்றளவிலும் இலங்கையின் கழுத்தை இறுக்கியுள்ளது.

அதுமட்டுமல்ல 1989 இல் மஹிந்த ராஜபக்சவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஜெனிவா சென்றார். இலங்கையில் ஜெனிவாக் கலாச்சாரத்தை அவரே உருவாக்கினார். அவ்வாறு செய்துவிட்டு அழுது புலம்புவதில் பயன் இல்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் மோதக்கூடாது. இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். செய்யக்கூடியவை எவை, செய்யமுடியாதவை எவை என்பதனை இராஜதந்திர ரீதியில் எடுத்துரைக்க வேண்டும். அதனைவிடுத்து மோதல் போக்கை கடைபிடிப்பது நெருக்கடியையே ஏற்படுத்தும்.

2015 இல் இலங்கைமீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், எமது அரசுதான் நாட்டை நெருக்கடியில் இருந்து பாதுகாத்தது. சர்வதேச விசாரணையில் இருந்து விடுதலை பெற்றோம். எமக்கும் நாடுமீது பற்று உள்ளது.” -என்றார்.

‘கொரோனா’வால் மேலும் ஐவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 489 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நாட்டில் நேற்று மாத்திரம் 489 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மஹா சிவராத்திரியை பக்திபூர்வமாக அனுஷ்டிக்க பிரதமர் ஆலோசனை!

மஹா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ச,  இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

சைவ மக்களின் சிறப்பு விரதங்களில் ஒன்றான மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் (2021.03.11) வியாழக்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இச்சிவராத்திரி நோன்பினை இந்து ஆலயங்களில்  சிறப்புற நிகழ்த்த ஊக்கம் நல்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய  இலங்கையில் சைவத் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற பிரதேச செயலாளர் பிரிவுகளை மையப்படுத்தி, விசேட வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

அதன்போது சைவ சிறார்கள் ஆலயங்களுக்குச் சென்று சிவராத்திரி நோன்பின் பெருமையை உணர்ந்து வழிபாடுகளில் ஈடுபடவும், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பக்தி சார்ந்த கலை நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

இந்நாளில், இந்து பக்தர்கள் மஹா சிவராத்திரி நோன்பினை பக்திபூர்வமாக  அனுஷ்டித்து தெய்வீக அருள் ஒளி எங்கும் நிறைய வழிபாட்டில் ஈடுபடுவர்.

மஹா சிவராத்திரி விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பிரதேச செயலகங்களூடாக தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களுக்கு பிரதமரின் ஆலோசனைக்கமைய நிதி வழங்கி வைக்கப்படவுள்ளது.

ஆட்டம் காணுமா அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம்?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசியிலிருந்து தமது கட்சி வெளியேறவேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர், கட்சி தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தேர்தல் காலங்களில் சுதந்திரக்கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உரிய வகையில் நிறைவேற்றவில்லை எனவும், கட்சியை ஒடுக்கும் செயல்கள்கூட தற்போது மறைமுகமாக இடம்பெற்றுவருகின்றன எனவும் சுட்டிக்காட்டியே மேற்படி வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.

எனினும், சுதந்திரக்கட்சியிலுள்ள மற்றுமொரு தரப்பு, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு விரும்பவில்லை. அவ்வாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றது.

குறிப்பாக அரசுக்குள் இருந்துக்கொண்டே போராடவேண்டும் எனவும், 21/4 தாக்குதல் அறிக்கையை மையப்படுத்தி வெளியேறுவது தவறான விம்பத்தை உருவாக்கும் எனவும் எனவும் அந்த தரப்பு கருத்து வெளியிட்டுவருகின்றது.

இதனால் ஏற்கனவே உடைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, எதிர்காலத்தில் மேலும் இரு அணிகளாக பிளவடையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளும் பட்சத்தில், மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் இழக்க நேரிடும்.

இவ்வருடத்தில் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, சுதந்திரக்கட்சி தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இதற்கிடையில் விமல்வீரவன்ஸ தலைமையிலான அணியினரும் மொட்டு கட்சிக்காரர்கள்மீது அதிருப்தியிலேயே இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தள்ளி கொலைசெய்த தாய்!

கிளிநொச்சி,  வட்டக்கச்சி பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு தானும்தற்கொலைக்கு முயன்ற தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். எனினும், மூன்று குழந்தைகளும் பலியாகியுள்ளன.

ஒரு குழந்தையின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில்,  ஏனைய இரு குழந்தைகளின் சடலங்களும் இன்று மீட்கப்பட்டன.

ஒன்றரை வயதுடைய கிருபாகரன் டேனேஸ், ஐந்து வயதுடைய கிருபாகரன் அக்சயா,
எட்டு வயதுடைய கிருபாகரன் கிருத்திகா ஆகிய சிறார்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

தற்கொலைக்கு முயன்ற பெண் எழுதியதாக குறிப்பிடப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதில் குடியும் அடியும் காரணமாக தன்னால் வாழ முடியாதுள்ளது. இன்று எனது பிறந்தநாள் நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இந்த குடிகாரனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள், உரிமை மீறல்களை கண்டறிய விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு!

இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை (Gender Equity and Equality) உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையிலான பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இந்த கோரிக்கையை மேற்கொண்டுள்ளது.
உத்தேச பாராளுமன்ற குழுவும் அதன் தவிசாளரும் சபாநாயகரால் நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் அதன் அங்கத்தவர்கள் 25 உறுப்பினர்களை கொண்டமைதல் வேண்டும் என பிரேரிக்கப்பட்டுள்ளது.
குழு அதன் முதல் கூட்டத்திலிருந்து ஒரு வருட காலத்திற்குள் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன் அது சமர்ப்பிக்கப்பட்டு 08 வாரங்களில் குறித்த அறிக்கை தொடர்பாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின் அவதானிப்புகளையும் அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
இந்த பிரேரணை பாராளுமன்றத்தின் 03 ஆம் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

ஆட்சிக்கு வர இன்றைய அரசுக்கு, ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது என்ற கோணத்தில் விசாரணை வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது. ஆகவே இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல் ரீதியாக உதவியுள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் நன்மை பெற்றது, இன்றைய இலங்கை அரசாங்கம்தான். இந்த கோணத்தில், இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பல உறங்கும் உண்மைகள் வெளிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

எமது பலத்த கோரிக்கைகளின் பின்னர்தான், உயிர்த்த ஞாயிறு விசாரணை குழு அறிக்கை பாராளுமன்றத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பில் எங்களுக்கு பல கேள்விகள் இன்று எழுந்துள்ளன. சஹரான் பயங்கரவாத கும்பல் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறுகிறார்கள். இந்த பயங்கரவாத கும்பலுக்கும் சாதாரண முஸ்லிம் மக்களுக்கும் தொடர்பில்லை என்பது உண்மை.

ஆனால், செய்தவர் பயங்கரவாதி சஹாரான் என்றால், செய்வித்தவர் யார் என்ற பிரதான கேள்வி எழுகிறது.

சஹாரானை தடுக்க, கைது செய்ய தவறி விட்டர்கள். பொறுப்பு கூரலில் தவறி விட்டார்கள். இந்த குற்றசாட்டுகளை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரை சுட்டிக்காட்டி விட்டு மட்டும் தப்ப முடியாது. அதற்கு அப்பால் பல உண்மைகள் உள்ளன. அவை வெளியே வர வேண்டும். அவற்றை விசாரியுங்கள்.

இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது. ஆகவே இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல்ரீதியாக உதவியுள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் நன்மை பெற்றது, இன்றைய இலங்கை அரசாங்கம்தான். இந்த கோணத்தில், இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பல உறங்கும் உண்மைகள் வெளிவரும்.

உண்மையில், சஹரான் கும்பல் நடத்திய தாக்குதல்கள், “சொப்ட் டார்கட்ஸ்” என்ற “மென் இலக்குகள்” ஆகும். அரசின் மீது கோபம் இருந்தால், அரசின் பாதுகாப்பு தரப்பின் மீதுதான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை முதலில் நடத்துவார்கள். ஆனால், இங்கே அப்பாவி கத்தோலிக்க மக்கள் மீது, அதிலும் பெரும்பாலும் தமிழ் கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்கள் மீது, கத்தோலிக்க, கிறிஸ்தவ, தேவாலயங்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மென்மையான இலக்குகளை தெரிவு செய்ய, பயங்கரவாதி சஹரான் கும்பலுக்கு இருந்த விசேட தேவை என்ன? இந்த கேள்விகளுக்கும் விடை கிடைக்க வேண்டும்.

உண்மையான சூத்திரதாரி யார் என்பது எங்களுக்கு தெரியும். சாட்சியங்கள் உள்ளன. நாம் ஆட்சிக்கு வந்தால், ஒரே மாதத்தில் சூத்திரதாரிகளை கூண்டில் அடைப்போம் என அன்று கூவிய விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இன்று எங்கே? இவற்றுக்கு ஜனாதிபதி கோதாபயவின் பதில் என்ன?

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் கத்தோலிக்க, கிறிஸ்தவர்களாக இருக்கலாம். அவர்களை பற்றி மத அடிப்படையில் பேராயர் ஆண்டகை மல்கம் ரஞ்சித் உரக்க பேசலாம். கறுப்பு ஞாயிறு, கறுப்பு வாரம் என்ற எதிர்ப்பு போராட்டங்களை நடத்தலாம். அதற்கான உரிமை அவருக்கு உண்டு.

அதேபோல், கொல்லப்பட்டவர்கள், இனரீதியாக பெரும்பான்மையினர் தமிழர்கள் ஆவர். எனது தொகுதியான கொழும்பு கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை மற்றும் மட்டக்களப்பில் கொல்லப்பட்டோர் தமிழர்கள். ஆகவே இது பற்றி கேள்வி எழுப்ப எங்களுக்கும் உரிமை உண்டு. கொல்லப்பட்டோரின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

துபற்றி நியாயமான விசாரணை வேண்டும். எங்கள் மக்களை காவு கொடுத்து விட்டு, அரசியல் இலாபம் பெற எவருக்கும் நாம் இடம் கொடுக்க முடியாது. உள்நாட்டில் நியாயம் கிடைக்காவிட்டால், வெளிநாட்டு விசாரணை வேண்டும். இது தொடர்பில் பேராயர் கூறுவது சரி என்றே நான் நினைக்கிறேன்.

1000 ரூபா – நாளை வருகிறது வர்த்தமானி! 15 நாட்களே வேலை!!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1000 ரூபா வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (05) வெளிவரவுள்ளது. இதற்கான அனுமதியை தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா வழங்கியுள்ளார்.

நாட் சம்பளம் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டாலும், வேலை நாட்கள் தொடர்பில் தமக்கு உத்தரவாதமளிக்க முடியாது என தொழில் அமைச்சு தரப்பு அறிவித்துள்ளது.

அதேவேளை, சம்பள நிர்ணய சபையில் சம்பளம் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறவுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சம்பளம் வழங்கக்கூடிய அளவுக்கேற்பவே வேலை நாட்கள் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது 15 நாட்களுக்கு மேல் வேலை வழங்கமுடியாது என்ற நிலைப்பாட்டிலேயே சம்மேளனம் இருக்கின்றது.

எனினும், வேலை நாட்கள் குறைக்கப்படுவதை ஏற்க முடியாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. வேலை நாட்களை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.

‘கொரோனாவால் 168 மில்லியன் மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை’

உலகம் முழுவதும் 168 மில்லியன் சிறார்கள் ஓராண்டாக பாடசாலைக்கு செல்லவில்லை என்று ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பெரும்பாலான உலக நாடுகள் ஊரடங்கை அமுல்படுத்தின. அப்போது முதலே பாடசாலைகள் மூடப்பட்டன. எனினும் பின்னர் ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

தற்போது பல நாடுகள் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை விலக்கி, பாடசாலைகள் திறந்தாலும் முழு அளவில் கல்விக்கூடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அதாவது அனைத்து மாணவ-மாணவிகளும் நேரடியாக வகுப்புகளில் பங்கேற்கும் சூழல் உருவாகவில்லை.

இவ்வாறு பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையை ஐ.நா. அமைப்பான யுனிசெப் ஆய்வு செய்தது. இதில் 168 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கடந்த சுமார் ஓராண்டாக பள்ளி செல்லவில்லை என கண்டறியப்பட்டு உள்ளது.

இதைப்போல உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை. மேலும் முழு மற்றும் பாதியளவு கல்வி பள்ளிகள் மூடலால் 88.8 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் முக்கியமாக 14 நாடுகளில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கடந்த மாதம் வரை பெரும்பாலும் பள்ளிகள் மூடியே உள்ளன.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி நேரில் வாழ்த்து

0
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், தமிழக முதல்வர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். தமிழக முதல்வருக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன், சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன்...

தொலஸ்பாகை தமிழ் வித்தியாலய மேம்பாட்டுக்காக பழைய மாணவர்களின் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டி

0
கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட க/ கம்/ தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்தின் (K/GP/Dolosbage Tamil Vidyalayam) உட்கட்டமைப்பு மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட்...

தமிழக அமைச்சர் ராஜ்மோகனுடன் இலங்கை எம்.பி. அர்ச்சுனா சந்திப்பு

0
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை தமிழக அரசின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின்...