Home Blog Page 3667

பசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா

பசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுறுதியானது.

கடந்த 14 ஆம் திகதி கொழும்பிலிருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தப்பட்ட 28 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்முடிவுகளின்படி மொணராகலை பிரதேச தொற்றாளரோடு நெருங்கிய தொடர்பை பேணிய 15 வயதுடைய டெமேரியா வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கும், கொழும்பிலிருந்து வருகை தந்த யூரி தோட்ட தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருக்குமே கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பசறை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் வீ.இராஜதுரை தெரிவித்தார்.

இதன்படி பசறை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆக பதிவானது. இவர்களில் 26 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

– நடராஜா மலர்வேந்தன்

கேகாலை பிந்தெனிய தோட்டத்தில் கலாசார மண்டபம்

– (ரா.கமல்)

கேகாலை மாவட்டம் கலகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிந்தெனிய தோட்ட மேல் பிரிவில் நேற்று (17ஆம் திகதி) காலை 9.00மணியளவில் கல்வி, கலை, கலாசார மண்டபமான ‘பிரசாந்தி மண்டபம்’ திறந்து வைக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவில் உள்ள வன்னி ஹோப் நிறுவனத்தின் பூரண அனுசரனையுடன் வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் அமுலாக்கத்தில், மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் ஒழுங்கமைப்பில், பிந்தெனிய சாய் இளைஞர் மன்றத்தினதும் ஆலய பரிபாலான சபையினதும் தோட்ட பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடனும் இந்த கலாசார கட்டிடம் நிறுப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக நேற்று கையளிக்கப்பட்டது.

இதன்போது பிரதம அதிதியாக முன்னாள் இந்து கலாசார அமைச்சரும், கோப்பியோ அமைப்பின் இலங்கைக்கான அமைப்பாளரும் சமூக சேவையாளருமான பி.பி.தேவராஜ் அவர்களும் கோப்பியோ அமைப்பின் உறுப்பினரும் மலையக மாணவர்களின் தரம் ஐந்திற்கான மேம்பாட்டாளருமான பாலசுப்ரமணியம் அவர்களும் கலந்துகொண்டனர். மற்றும் இந்த கட்டிடம் நிறுவப்பட காரணமாக இருந்த வன்னி ஹோப் நிறுவனத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அனுசரனையை பெற்றுத்தந்த மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவர் முரளிதரன், பேரவையின் தேசிய அமைப்பாளர் ஆர். சந்திரமோகன் போன்றோரும் அவர்களுடன் வரக்காபொல காளிகாம்பாள் ஆலய ஸ்தாபகர், ஆலய பிரதம குரு வணக்கத்துக்குரிய விநாயகமூர்த்தி அவர்கள், பிந்தெனிய தோட்ட முத்துமாரி அம்மன் ஆலய பிரதமகுரு, சித்த ஆய்வாளரும் யோகா ஆசிரியருமான தனசேகர் போன்றோரும் மற்றும் கிராமசேவகர் சந்தமாலி, தோட்ட பொதுமக்கள், இளைஞர்கள், பிந்தெனிய தோட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.

கேகாலையில் மிகவும் பின்தள்ளப்பட்ட அடிப்படை வசதிகளற்ற ஒரு தோட்டமான பிந்தெனிய தோட்டத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெற்றமை உண்மையில் பாராட்டதக்க விடயமாகும். நிகழ்வின் முதற்கட்டமாக அதிதிகள வரவேற்கப்பட்டு, தேசிய கொடியேற்றல், நந்திகொடியேற்றல், பின் அதிதிகள் மங்கல விளக்கேற்றல் ஏற்ற பிந்தெனிய ஸ்ரீமுத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மாணவர்களின் இறை ஆராதனையுடன் நிகழ்வு தொடங்கியது. அடுத்ததாக பிரசாந்தி மண்டபத்தின் ஞாபக கல்லின் திரை சீலையை மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவரும் தேசிய அமைப்பாளரும் திறந்து வைத்தனர். பின் அதிதிகளின் பங்களிப்புடன் அநறெறி மாணவர்கள் மண்டபத்தினை நாடாவெட்டி திறந்து வைத்தனர்.

நிகழ்வில் தலைமையுரையை ஆற்றிய வரக்காபொல தமிழ் சமூக பேரவையின் தலைவர் விநாயகமுர்த்தி கோமதி அவர்கள் பிரசாந்தி மண்டப திறப்பு விழாவுக்கு சகல விதத்திலும் பங்களிப்பு செய்ய அனைவருக்கு நன்றியை தெவித்தார். குறிப்பாக அவர் மேற்படி தோட்டத்திறகு அறநெறி பாடசாலை ஆரம்பிக்க வந்தபொழுது ஆலயத்திற்கு முன் ஒரு பழைய கட்டிடம் இருப்பதை அவதானித்து இதனை சீர்செய்து ஒரு கலாசார மண்டபம் அமைக்கவேண்டும் என எண்ணியதாகவும் பிறகு மலையகத்தில் கல்வி, சமூக, சமய சேவைகளை ஆற்றிவரும் மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் தொடர்பின் மூலம் அவுஸ்ரேலியாவில் இயங்கும் வன்னி ஹோப் நிறுவனம் மண்டபம் அமைக்க தேவையான நிதியுதவியை வழங்க முன்வந்ததாகவும் அதன்பிறகு கொரோணவின் அசாதாரண சூழ்நிலையிலும் வரக்கொபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் மற்றும் தோட்டத்தின் சாய் இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய பரிபாலன சபையினர், அறநெறி பாடசாலை மாணவர்கள், தோட்ட பொதுமக்கள் அனைவரும் மண்டபம் அமைக்க உதவி நல்கியுள்ளனர் என்றார். இம்மண்டபம் தோட்ட மக்களுக்கு கிடைத்த பெரும் வரபிரசாதமாகும். இதன்மூலம் தோட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்வி அபிவிருத்திற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் என்றார்.

அடுத்ததாக மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவர் முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்

இந்த கட்டிடத்ததை அமைக்க முன்னின்று உழைத்த வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவைக்கு நன்றியை தெரிவித்தார். அடுத்து வன்னி ஹோப் நிறுவனம் அவுஸ்ரேலியாவில் இயங்குகிறது. இது இலங்கையில் சகல பாகங்களிலும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. வன்னி ஹோப் நிறுவனத்தின் பிரதான நோக்கம் கல்வி அபிவிருத்திதான் கல்வி அபிவிருத்தியால்தான் மலையக சமூகமாக இருக்கலாம் வடகிழக்கு சமூகமாக இருக்கலாம் கல்வி அபிவித்தி மூலம் இலக்கை அடையலாம் என்பதனை கருத்தில்கொண்டு பல்வேறு உதவிகளை நல்கி வருகிறது. குறிப்பாக வறுமையில் வாடும் மாணவர்கள் கல்வியில் இடைவிலகாமல் மேலும் அவர்கள் தொடர்ந்து கற்பதற்கான உதவிகளையும் கல்வி மாத்திரம் மன்றி கைத்தொழில் மற்றும் அறநெறி கல்வியை ஊக்குவித்தல் போன்றவற்றிக்கும் உதவிகளை நல்கிவருகிறது. மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விப்பயிலும் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றது. இந்த பிரசாந்தி மண்டபம் அமைக்க நிதி அனுசரணையை தந்துதவிய டாக்டர் மோகனதாஸ் பாலசிங்கம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார். சுமார் 8இலட்சம் பொருள் செலவில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அத்தோடு வன்னி ஹோப் நிறுவனத்தின நிறைவேற்று பனிப்பாளர் ரஞ்சன் சிவஞான சுந்தரம் அவர்கள் மலையக கல்வி அபிவிருத்தியில் மிகுந்த அக்கரைக்கொண்டவர் அவருக்கு நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.

அடுத்த நிகழ்வாக வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் தலைவர் கோமதி அவர்களுக்கு பிந்தெனிய தோட்ட ஆலய பரிபாலன சபையினர், அறநெறி பாடசாலை மாணவர்கள், சாய் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் கோமதி அம்மையாரின் சமூக சேவையை பாராட்டி கௌரவிததனர். அதனைத் தொடர்ந்து வரக்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையால் மலையக சமூக அபிவிருத்தி பேரவை தலைவர் மற்றும் அமைப்பாளருக்கும் பிந்தெனிய சாய் இளைஞர் மன்றத்தினருக்கும் ஆலய பரிபால சபையினருக்கும் வாழ்த்து மடல் அன்பளிப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து பிரதம அதிதி உரையில் பி.பி தேவராஜ் அவர்கள் கேகாலை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு தோட்டத்தில இவ்வாறான நிகழ்வு சிறப்பாக இடம்பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். நாங்கள் கோப்பியோ அமைப்பின் மூலம் கேகாலை மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஆனால் இன்று வரக்க்காபொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவை வரக்காபொலையில் சிங்கள பெரும்பாண்மை சமூகத்திற்கு மத்தியில் சமூக சேவையில் மிகவும் வெற்றியுடன் வீறுநடைபோடுகின்றமை மகிழ்ச்சி. மற்றும் பிந்தெனிய தோட்ட மக்களுக்கு, மாணவர்களுக்கு இலவசமாக நூல்களை அன்பளிப்பு செய்வதாக கூறினார்.

அடுத்து மலையக சமூக பேரவையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆர். சந்திரமோகன் கருத்து தெரிவிக்கையில் தாம் பல்கலைக்கழக கல்வியை தொடர்கின்றபொழுது மலையக சமூகம் முன்னேறுவதற்கு ஏதாவது செற்றிட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என எண்ணியிருந்ததாகவும் 2008ஆம் ஆண்டு மலையக பட்டதாரிகள் ஒன்றியமாக ஆரம்பிக்கப்பட் அமைப்பு பின் 2015ஆம் ஆண்டு மலையக சமூக அபிவிருத்திற்கு பலரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக அதன் பெயரை மலையக சமூக அபிவிருத்தி பேரவை என மாற்றிக்கொண்டதாகவும் இந்த அமைப்பு மலையக சமூகம் குறிப்பாக கல்வி அபிவிருத்தி நோக்கிய நகரவேண்டும் என்றும் அதற்கு தடையாக இருப்பவற்றi இனங்கண்டு அதற்கான தீர்வுகளையும் உதவிகளையும் முன்னெடுப்பதே மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் தார்மீக கடமையாக உள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் தரத்தை மேலும் ஒருபடி தரப்படுத்த பிந்தெனிய ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களினதும் வரக்காபொல காளிகாம்பாள் அறநெறி பாடசாலை மாணவர்களினதும் அரங்கேற்றப்பட்ட நடனம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

நிகழ்வின் இறுதியில் தோட்ட பொதுமக்காளல் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மலையகத்தில் பல அமைப்புக்கள் செயற்பட்டபோதிலும் இவ்வாறான அமைப்புக்களின் சேவைகள் உண்மையில் பாராட்டத்தக்கது. எங்கு என்ன தேவையோ அங்கு மக்களை தேடிச்சென்று இவ்வாறான உதவிகளை செய்துவரும் அமைப்புக்கள் மேலும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வாழ்த்துவோமாக.

 

 

தோட்டத் தொழிலாளரின் முயற்சியில் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் : மஸ்கெலியாவில் முன்னுதாரணம்

– மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

மஸ்கெலியா நகரில் தோட்டத் தொழிலாளர்களினால் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக நிலையத்தை புதியதாக பதவியேற்ற கண்டி இந்திய உதவி தூதரக பதவியேற்றுள்ள ராகேஸ் நடராஜ் நேற்று (17) திறந்து வைத்தார்.

ஈ 4 டி நிறுவனத்தினால் (ஈபோடி) வழிகாட்டலில் லக்கம் தோட்ட மக்களினால் கடந்த காலங்களில் சேமிப்புக்குழுக்களை உருவாக்கி அதன் மூலம் சேமிக்கப்பட்ட 3.2 மில்லியன் ரூபா பணத்தினை கொண்டு இந்த கூட்டுறவு வர்த்தக நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் மூலம் பெறும் வருமானத்தில் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதும்,தோட்ட மக்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவு பொருட்களுக்கு நியாயமான விலைக்கு பெற்றுக்கொடுப்பதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், பொருளாதாரத்தை உயர்த்துவதும், அதே நேரம், வருகின்ற லாபத்தில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை விருத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

ஈபோடி நிறுவனம் கூட்டுறவு துறையில் அனுபவமிக்கவர்களை கொண்டு இந்தப் பயிற்சிகளும், தெளிவூட்டல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தோட்டத்தில் வாழ்கின்ற பல குடும்பங்களில் பொருளாதார நிலைமைகள் மேம்படவுள்ளதுடன் பலருக்கு தொழில் வாய்ப்புக்களும் கிடைக்கவுள்ளன.

ஈபோடி (E4D) நிறுவனத்தின் முகாமையாளர் கே.விக்னேஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மஸ்கெலியா பிரதேசசபையின் தவிசாளர் செம்பகவள்ளி,ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

கலை, விளையாட்டு துறைகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவு சின்னங்கள்

மலையக கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட, மாகாண ரீதியில் கலை, விளையாட்டு துறைகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நினைவு சின்னங்கள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வழங்கிவைத்தார்.

மலையக கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் கலை,கலாசார, விளையாட்டு, ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை கெளரவிக்கும் முகமாக இன்றைய தினம் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது.

இதன்போது வருகை தந்த மாணவர்களுக்கு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் பரிசில்களும் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மலையக கலாசார ஒன்றியத்தின் தலைவர், k.சிவராஜேஸ்வரன், செயலாளர் ரகு இந்திரகுமார், போஷகர் k.சதீஷ் மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

கந்தப்பளை போராட்டம் கைவிடப்பட்டது – கம்பனிக்கு தொழிலாளர்கள் அடிமைகள் இல்லை!

– க.கிஷாந்தன்

நுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தின் நேற்றிரவு (17.01.2021) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதாக, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம் போராட்டத்தை கைவிட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

பார்க் தோட்ட முகாமையாளருக்கு எதிராக கட்சி பேதமின்றி, உடபுஸ்ஸல்லாவ பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பார்க் பெருந்தோட்டப் பகுதியில் 305 வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகளை பெற்றுக்கொடுக்க தோட்ட முகாமையாளர் மறுப்பு தெரிவித்திருந்ததுடன், பெருந்தோட்ட மக்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் முகாமையாளர் நேற்றைய தினம் பேசியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, குறித்த பகுதியில் பாரிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டிருந்ததுடன், இன்று (18.01.2021) பிற்பகல் போராட்டம் வெற்றியடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவிக்கின்றார்.

குறித்த முகாமையாளரின் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கு ஒரு நாள் காலவகாசம் கோரப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

அதனைத் தொடர்ந்து, இந்த பிரச்சினைக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க பெருந்தோட்ட கம்பனி உறுதியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, எட்டப்பட்ட தீர்மானம் தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அடிமைகளாக வாழ முடியாது என கூறியுள்ள ரமேஷ்வரன், பெருந்தோட்ட பகுதிகள் தமக்கு சொந்தமான காணிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தாமே இந்த காணிகளின் உரிமையாளர்கள் என தெரிவித்த அவர், கம்பனிகளின் முகாமையாளர்கள் வந்தேறிகள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

2005ம் அண்டு தமது பெருந்தோட்ட பகுதிக்கு வருகைத் தந்த தோட்ட முகாமையாளர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வழமையான நடைமுறைகள் அனைத்தையும் மாற்றியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது நடவடிக்கை காரணமாக 300 வரையான தொழிலாளர்கள் பணிப் புரிந்த இந்த பகுதியில், தற்போது சுமார் 150 வரையான தொழிலாளர்களே பணிப் புரிந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மக்களை அச்சுறுத்தியே அவர் தனது பணிகளை செய்து வந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கூட்டு உடன்படிக்கையிலுள்ள அனைத்து சலுகைகளையும் குறித்த முகாமையாளர் இல்லாது செய்துள்ளதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இவ்வாறான தோட்ட அதிகாரிகளை பணிக்கு அமர்த்த வேண்டாம் என பார்க் பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், குறித்த பகுதியில் போராட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிபடையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு போராட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கந்தப்பனை பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

 

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மாறிப் போனதா? கையறு நிலையில் மாணவி

கொட்டகலை மஞ்சள் கடவையில் மோதுண்ட மாணவி : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மாறிப் போனதா? கையறு நிலையில் மாணவி

கொட்டகலை பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி மஞ்சள் கடவையில் மோதுண்டு காயமடைந்த மாணவியின் விபத்தை விசாரித்த கொட்டகலை பொலிசார் சம்பவத்தைத் திரிபுபடுத்தியுள்ளார்களா என்பது குறித்து விசாரிக்க பணிப்புரை வழங்கியுள்ளதாக நுவரெலியா தலைமையகப் பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன், காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஒரேநாளில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், மாணவிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதைக் காண்பிப்பதற்காக இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கொட்டகலையில் கடந்த 30ஆம் திகதி மஞ்சள் கடவையில் முச்சக்கர வண்டி மோதுண்டு மாணவியொவர் மீது மோதியுள்ளது. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவியொருவரே விபத்தில் சிக்கியுள்ளார். ஸ்டொலிகிளிப் தோட்டத்தைச் சேர்ந்த மாணவி கொட்டகலை நகருக்கு வந்திருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்த மாணவி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரே நாளில் வீட்டிற்க அனுப்பப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் தொடர்ந்து அனுமதிக்கப்படும் பட்சத்தில் விபத்து குறித்து பொலிசார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் இவ்வாறு உடனடியாக வீட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் விபத்து குறித்த பொலிஸ் நிலைய பதிவில், குறித்த மாணவி முச்சக்கர வண்டியில் பயணித்த போது அதிலிருந்து விழுந்துள்ளதாக எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும்,இந்தத் தகவலை கொட்டகலை பொலிசார் இன்னமும் உறுதி செய்யவில்லை. எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் குறித்து கொட்டகலை பொலிசாரின் விசாரணையில் திருப்தி இல்லாததால் குறித்த மாணவியின் தோட்டத்தில் உள்ள நலன்விரும்பி ஒருவர், நுவரெலியா பொலிஸ் தலைமையக அதிகாரியொருவரை நாடியுள்ளார். சம்பவத்தைக் கேட்டறிந்த குறித்த அதிகாரி, கொட்டகலை பொலிசாரிடம் இதுகுறித்து விசாரிக்குமாறு பணித்துள்ளார். இதனையடுத்தே கொட்டகலை பொலிசார் மீண்டும் வாக்குமூலம் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த மாணவியின் குடும்பத்தில் தந்தை நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், தாய் தோட்டத் தொழிலாளி ஈடுபட்டுள்ள நிலையில், இரண்டு சகோதரிகள் கொழும்பில் பணிபுரிந்து வீட்டு வறுமையை போக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்தை நாடியதாக குறித்த நபர் குறிப்பிட்டுள்ளா◌ார்.

எவ்வாறாயினும், விபத்தில் காயமடைந்து உபாதைக்குள்ளான மாணவியை மஞ்சள் கடவையில் மோதிய குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்கும், மாணவிக்கு உதவிகளை வழங்குவதைத் தவிர்க்கவும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டுள்ள குறித்த மாணவிக்கு விபத்தை ஏற்படுத்திய தரப்பினர் உரிய முறையில் நட்டஈட்டை வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில், இதுகுறித்து நீதிமன்றத்தில் தீர்வு எட்டப்பட நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.

விபத்தை ஏற்படுத்தி நபர் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக விபத்தை நேரில் பார்த்த பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வீதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV காணொளியில் பதிவாகியுள்ள விபத்து

வீடுகள் அமைக்க காணி தர மறுக்கும் பார்க் தோட்ட முகாமையாளர் : முற்றுகையிட்ட பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள்

வீடுகள் அமைக்க காணி தர மறுத்ததுடன், தோட்டத் தொழிலாளர்களைத் தரக்குறைவாக பேசிய கந்தப்பளை பார்க் (Park Estate) தோட்டத்தின் முகாமையாளரை மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தி முகாமையாளரின் வீட்டை தோட்டத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது

தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான காணிகளை ஒதுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் கந்தப்பளை பார்க் தோட்டத்திற்கு 305 வீடுகளை அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக காணிகளை ஒதுக்குவதில் குறித்த தோட்ட முகாமையாளர் இழுத்தடிப்புச் செய்துள்ளார். இதுகுறித்து இ.தொ.கா நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் மருதபாண்டி குறித்த தோட்ட முகாமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். இதற்குப் பதிலளித்த தோட்ட முகாமையாளர், இவர்களுக்கு எதற்கு வீடுகள் அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளதுடன்,தோட்டத் தொழிலாளர்களை தரக்குறைவாக, தகாத வார்த்தைகளினால் முகாமையாளர் பேசியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய தோட்ட முகாமையாளர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், வீடுகளை அமைப்பதற்கு காணியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் கோரி இ.தொ.கா ஆதரவாளர்கள் முகாமையாளரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இதனையடுத்து தோட்டத்தில் உள்ள பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் குறித்த முகாமையாளரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

அத்துடன், அங்கு இ.தொ.கா உள்ளிட்ட ஆதரவாளர்களும் கூடி தொழிலாளர்களிடம் மன்னிப்புக் கோரும் வரையில் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

எனினும், குறித்த முகாமையாளர் வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இதுகுறித்து கந்தப்பளை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது பொலிசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

முகாமையாளர் மன்னிப்பு கோரும் வரையில் போராட்டம் தொடரும் என்று தொழிலாளர்கள் கூறிவருகின்றனர்.

ஊவாவில் 42 பாடசாலைகளுக்கு 42 புதிய ஆசிரியர் நியமனங்கள் : செந்தில் தொண்டமானுக்கு ஊவா கல்வி சமூகம் பாராட்டு!

கல்வியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிளை நிறைவுசெய்த ஊவா மாகாணத்தின் 42 ஆசிரியர்களுக்கு நாளை நியமனம் கிடைக்கப்பெற உள்ளது.

வெளிமாவட்டத்தில் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவிருந்த இந்நிலையில் அந்த விடயத்தில் தலையீடு செய்து கல்வி அமைச்சுடன் நேரடியான கலந்துரையாடல்கள் நடாத்தி குறித்த ஆசிரியர்களும் ஊவா மாகாணத்தில் அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே நியமனத்தை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் நடவடிக்கையெடுத்திருந்தார்.

செந்தில் தொண்டமானின் இந்த பணி நியமனம் பெறவுள்ள ஆசிரியர்களை மன உளைச்சலில் இருந்து மீட்டதுடன், அவர்கள் தொடர்ந்து குடும்பத்துடன் இருந்துக்கொண்டு பணியாற்றும் சூழ்நிலையும் உருவானதால் ஊவா கல்வி சமூகம் செந்தில் தொண்டமானின் இந்த செயற்பாட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

‘முடக்கப்பட்ட நாவலப்பிட்டிய நகரம் நாளை திறக்கப்படும்’

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் 15 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்ட நாவலப்பிட்டிய நகரம் முழுவதும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

நகரம் முடக்கப்பட்டுள்ளதால் நேற்றும் இன்றும் நாவலப்பிட்டிய வெறிச்சோடி காணப்பட்டது. இன்று காலை முதல் நகரசபையினரும், சுகாதார பிரிவினரும் இணைந்து தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்படி நாவலப்பிட்டிய நகரம் நாளை (18) முதல் வழமைபோல செயற்படும் என வர்த்தக சங்கத்தின் தெரிவித்தனர்.

அதேவேளை, நாவலப்பிட்டிய பகுதியில் இதுவரை 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

கொரோனாவிலிருந்து 45,171 பேர் குணமடைவு -6,886 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 425 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 886 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 256 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 52 ஆயிரத்து 313 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...