Home Blog Page 3693

ஜன.5 முதல் 8 வரை பாராளுமன்றத்தில் என்ன நடக்கும்?

2021ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனவரி 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 07 ஆம் திகதி வியாழக்கிழமை வரை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 வரையும் , ஜனவரி 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாராளுமன்றம் கூடும்.

ஜனவரி 05 ஆம் திகதி மற்றும் 07 ஆம் திகதி ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும். சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணி வரை இடம்பெறும்.

எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி எதிர்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்படும்.

ஜனவரி 08 ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை எதிர்கட்சியினால் முன்வைக்கப்படும் நாட்டின் தற்போதைய நிலைமை பற்றிய பிரேரணை சபை ஒத்திவைப்பு விவாதமாக முன்னெடுக்கப்படும்.

ஜனவரி 08 ஆம் திகதி முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 05 ஆம் திகதி கடை, அலுவலக ஊழியர் திருத்த சட்ட மூலம் உள்ளிட்ட 04 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படுவதுடன், ஜனவரி 06 ஆம் திகதி தண்டனை சட்டக் கோவையின் திருத்த சட்டமூலம் உள்ளிட்ட 03 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக, ஜனவரி 07 ஆம் திகதி புலமைச் சொத்து (திருத்த) சட்ட மூலம் இரண்டாம் வாசிப்பு மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட 10 கட்டளைகள் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தஸநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜனவரி 5 ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

‘இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை’

கல்வியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு உடனடியாக ஆசிரியர் நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி தனது சங்கத்தால் கல்வி அமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

” உறுதியளிக்கப்பட்டவாறு 216/18 கல்வியாண்டிற்கான கல்வியற் கல்லூரிகளில் கல்வி கற்ற 3,772 டிப்ளோமாதாரிகளுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நியமனங்கள் வழங்க அரசாங்கம் தவறியதற்கு எதிராக அந்த டிப்ளோமாதாரிகளின் பங்களிப்புடன் எமது சங்கம் ஜனவரி 4 ஆம் திகதி  கல்வி அமைச்சுக்கு முன்பாக ஒரு போராட்டத்தை நடத்தும் என்பதை அறியத்தருகின்றோம்.

2014 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தர சித்தி பெற்றவர்களின் மாவட்ட தகுதி மற்றும் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையில் கல்வியற் கல்லூரிகளில் 3 ஆண்டு டிப்ளோமா பாடநெறிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இந்த டிப்ளோமாதாரிகள் தங்கள் படிப்பை நிறைவுசெய்ய ஆறு ஆண்டுகள் கடந்தன. பாடநெறியின் இறுதி முடிவுகள் வெளியாகி இப்போது 9 மாதங்கள் ஆகின்றன.

​​இந்த டிப்ளோமாதாரிகள் உயிர்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் கொரோனா தொற்றுநோய்களின் போது தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், மேலும் கல்வி அமைச்சகம் இந்த நியமனங்கள் தாமதப்படுத்துவதால் அவர்களுக்கும் ஆசிரியர் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப் படுகின்ற மாணவர்களுக்கும் செய்கின்ற பாரிய அநீதியாகும்.

நியமனங்கள் வழங்குவது தொடர்பாக டிசம்பர் 10 ஆம் தேதி ஆன்லைனில் அவர்களின் நியமனங்களை பெற கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அச்செயற்பாட்டில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன என்பதை நன்கு அறிந்த விடயமாகும்.

அதே நேரத்தில் டிசம்பர் 11 ஆம் திகதி , எங்கள் சங்கம் அவர்களுக்கு இந்த நியமனங்கள் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவித்தது, மேலும் டிசம்பர் 14 அன்று அந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பையும் கோரியது ஆனால், இதைக் கேட்காத கல்வி அமைச்சு இந்த நிலைமைக்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

எனவே, கல்வி அமைச்சு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி ஆட்சேர்ப்பு அடிப்படையில் மேலும் தாமதமின்றி மற்றும் அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் இந்த நியமனங்களை வழங்குமாறு பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” எனவும் சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

மக்களே அவதானம்! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!!

சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகளை அனுப்புவதன் ஊடாக பண மோசடியில் ஈடுபடுவோரிடம் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பரிசுத் தொகை அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதாக இன்றைய தினம் (31) சமூக வலைத்தளங்கள் ஊடாக கூறப்படும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தீர்மானம் மிக்கதான இன்றைய நாளில், வௌிநாடுகளிலுள்ள நண்பர்கள் புதுவருட பரிசுப் பொதிகளை அனப்பியுள்ளதாக, பரிசுப் பொதிகளை அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அல்லது குறிப்பிட்ட இடங்களில் பரிசுப் பொதிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி பணத்தை வைப்பிலிடுமாறு Facebook, Whatsapp, Viber, imo ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் கிடைக்கலாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அறிமுகம் இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிடுவதை தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலா விசாக்கள் மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வௌிநாட்டவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா விசாக்களில் வருகை தந்து இவ்வாறான பண மோசடி செயல்களில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் 24 பேர் கடந்த காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரிய பிரஜை ஒருவர் சமூக வலைத்தளத்தினூடாக பெண் ஒருவரிடம் இருந்து கிட்டத்தட்ட 3 கோடி பணத்தை மோசடி செய்த சம்பவம் ஒன்று கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தேக நபர்களிடம் சிக்காது இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

சம்பிக்க வந்தாலும் சஜித்தே பொது வேட்பாளர் – ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டம்!

” 43 ஆம் படையணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவது குறித்து எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வியக்கமும் எமது அணியுடன் இணைந்தே செயற்படும். எது எப்படி இருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரே ஜனாதிபதி வேட்பாளர். இதனை வேறு எவருக்கும் வழங்க மாட்டோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, 43 ஆவது படையணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சம்பிக்க ரணவக்கவால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனநாயக அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் கட்சி பலப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஐக்கிய கூட்டணி அமைக்கப்படும். இக்கூட்டணியில் எமது கொள்கையுடன் ஒத்துபோகக்கூடியவர்கள் இணையலாம். அதற்கான அழைப்பை விடுக்கின்றோம்.

சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளார். 43 என்ற அரசியல் இயக்கம் பற்றி எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக பல வழிகளிலும் தாக்குதல்களை தொடுக்கவேண்டும். அதற்காக அணிகள் இருப்பது சிறப்பு.

எது எப்படியிருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாசவே செயற்படுவார். அவ்வாறு தலைவர் பதவியை வகிப்பவரே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார். பொது வேட்பாளராக மாற்று கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படாது. அவ்வாறு வழங்கி கட்சிக்கும், ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட அநீதிகள் தொடர்பான படிப்பினை எமக்கு இருக்கின்றது. “

‘அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இல்லையேல் போராட்டம் வெடிக்கும்’

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும் – என்று பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மஸ்கெலியாவில் நேற்று மேற்படி இயக்கத்தால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொகவந்தலாவ தோட்டத்தை சேர்ந்த திருமதி அருளப்பன் இதய ஜோதி  கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், ஆறு வருடங்கள் கடக்கவுள்ள நிலையிலும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் பட்ஜட் ஊடாக மீண்டும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனவரி மாதம் முதல் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம். இல்லையென்றால் போராட்டங்களை முன்னெடுப்போம். தற்போது வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது. பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. எனவே, எமக்கும் சம்பள உயர்வு அவசியம்.” – என்றார்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

கொரோனா தொற்றாளர்கள் ஐவர் தப்பியோட்டம்!

பொலன்னறுவை கல்லேல பகுதியில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் ஐவர் இன்று தப்பியோடியுள்ளனர்.

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த கைதிகளில் ஐவர் சிகிச்சைகளுக்காக இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.

இவர்கள் ஐவரும் போதைப்பொருளுக்கு அடிடையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கண்டுபிடித்து, கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

ரஜினியை கொண்டாடுவோம் – சீமான் புகழாரம்

நடிகர் ரஜினிகாந்தை கடும் சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்ததற்காக வருந்துகிறேன். இனி எப்போதும் எங்களின் புகழ்ச்சிக்குரியவர் ரஜினிகாந்த் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னை வளசரவாக்கம் அடுத்த சின்னபோரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வாரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். அவரும், அவரது குடும்பத்தாரும் கருதுவதுபோல் அவரது உடல்நலன், நிம்மதி, அமைதி மிகவும் முதன்மையானது. அதை விரும்பியே அவரிடம், அரசியல் வேண்டாம் என்ற கருத்தை பலமுறை நான் பதிவு செய்து இருந்தேன்.

கடந்த காலங்களில் ரஜினி மீது பெரும் மதிப்பு வைத்திருந்த ரசிகன் நான். அரசியல் ரீதியாக வரும்போது அவர் மீது கடும் விமர்சனங்களை, கடும் சொற்களை பயன்படுத்தி இருக்கலாம். அது அவரையோ, அவரது குடும்பத்தையோ, ரசிகர்களையோ காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

இனி எப்போதும் எங்களின் பெரும் புகழ்ச்சிக்குரியவர் ரஜினிகாந்த். அவர் மிகச்சிறந்த திரைஆளுமை கொண்டவர். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆசிய கண்டம் முழுவதும் அவரது புகழ் வெளிச்சம் பரவிக்கிடக்கிறது.

தமிழ் மக்கள் பெரிதும் அவரை கொண்டாடுகிறார்கள். நாம் தமிழர் பிள்ளைகளும் இனி அவரை கொண்டாடுவார்கள். அரசியல், அவருக்கு அவசியம் இல்லை. அவர் எடுத்த முடிவை பாராட்டுகிறேன். அவரது பிள்ளைகள் இருவரும் வேண்டாம் என கூறியதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக எனக்கு கூறினார்கள்.

இளம் வயதிலேயே அமைதியை தேடி இமயமலை சென்றவர். இப்போது அவருக்கு கூடுதலாக நிம்மதியும், அமைதியும் தேவைப்படும். அரசியலில் உட்கட்சி பிரச்சினையை சமாளிக்க முடியாது. அரசியலில் இறக்கிவிட்டு விட்டு எல்லோரும் அவரை திட்டுவார்கள். புகழ்ச்சியை மட்டுமே பார்த்த அவரால் இதனை தாங்க முடியாது. ” – என்றார்.

‘மாகாணசபைத் தேர்தல் வேண்டாம்’ – மல்வத்துபீடம் வலியுறுத்து

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டாம் என்று இலங்கையிலுள்ள மிக முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் கூறியவை வருமாறு,

” மாகாணசபை என்பது வெள்ளையானை. அதனிடம் வேலை வாங்கமுடியாது. மாறாக உணவுகளை மாத்திரமே வழங்கிக்கொண்டிருக்கவேண்டும். அவ்வாறானதொரு நிலைமை எமது நாட்டுக்கு தேவையில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கிவருகின்றார். எனவே, மாகாணசபைகள் வேண்டாம். அதற்கான தேர்தலை நடத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்களின் சார்பில் கோரிக்கை விடுக்கின்றேன்.” – என்றார்.

அதேவேளை, கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சார்பாக செயற்பட்ட பௌத்த அமைப்புகளும், பௌத்த தேரர்களும் மாகாணசபை முறைமைவேண்டாம், அதனை இல்லாதொழிக்கவேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மல்வத்துபீடத்தின் முக்கிய தேரரும் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மாகாணசபை முறைமை குறித்து அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன?

மாகாணசபை முறைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா அல்லது இல்லாதொழிக்கப்படுமா என்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, மாகாணசபை முறைமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இனப்பிரச்சினை காரணமாகவே நாட்டில் போர்கூட ஏற்பட்டது. அவ்வாறானதொரு இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. அதற்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவரும்போது அன்று அதற்கு எதிராக செயற்பட்டவர்கள் அதன்பின்னர் தேர்தல்களில் போட்டியிட்டனர். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காலப்போக்கில் மாகாணசபைகளின் ஆட்சி அதிகாரத்தைக்கூட கைப்பற்றியிருந்தது.

மஹிந்த ராஜபக்ச 13 பிளஸ் பற்றிகூட கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் 13 ஐ நிராகரிக்கும் வகையிலெயே கோட்டாபய ராஜபக்ச செயற்படுகின்றார். 13 விடயத்தில் மஹிந்தவின் நிலைப்பாட்டில் கோட்டாபய இல்லை. ஆளுங்கட்சிக்குள் குழப்பநிலை உருவாகியுள்ளது. எனவே, மாகாணசபை முறைமை தொடருமா அல்லது இல்லையா என்பது குறித்து நாட்டு மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும்.

மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். வேட்பாளர்களுக்கான விண்ணப்பபடிவங்களும் கோரப்பட்டுள்ளன. ஆனால் மூன்றிலிரண்டு பலம் இருக்கும் அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகின்றது. ” – என்றார்.

2021 இற்குள்ளும் நுழைகிறது 1000 ரூபா! கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று 31 ஆம் திகதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், இ.தொ.கா. பிரமுகர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஏனெனில் அவர்கள் பங்கேற்றிருந்த நிகழ்வுகளில் அக்கரபத்தனை பிரதேச சபைத் தலைவரும் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் ஏனையவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை இன்னும் சில நாட்களுக்கு பின்பற்றவேண்டியுள்ளது. இதன்காரணமாகவே கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...