Home Blog Page 3814

தொழிற்சாலையை திறக்குமாறு வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்

கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட எல்பொட வடக்கு (காச்சாமலை) தோட்ட மக்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (16) முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேற்படி தோட்டத்தில் பல வருடங்களாக இயங்கிவந்த தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மீள திறக்குமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தோட்ட நிர்வாகத்தின் சூழ்ச்சி நடவடிக்கையே இதுவெனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து எல்பொட வடக்கு , எல்பொட நடுப்பிரிவு, எல்பொட கீழ்ப்பிரிவு,மேமலை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

’20’ ஆல் நெருக்கடி – பங்காளிகளை அவசரமாக சந்திக்கிறார் கோட்டா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குமிடையில் இன்று (18) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பங்கேற்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்துவருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே ஜனாதிபதி பங்காளிகளை அவசரமாக சந்திக்கிறார் எனக் கூறப்படுகின்றது. நாளை ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.

‘நியூசிலாந்து வரலாற்றில் முதன்முதலாக பாராளுமன்றம் செல்லவுள்ள தமிழ்ப் பெண்

நியூசிலாந்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்மணியான வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகின்றார்.

நியூசிலாந்து வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட முதலாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.

இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

இவரை வேட்பாளராகக் களமிறக்குவதற்கான அங்கீகாரத்தை தொழிற்கட்சி வழங்கியிருந்தது.

ஆக்லான்டில் போட்டியிட்ட இவர், தேர்தலில் வெற்றிபெற்றிருப்பதால் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கோவிட் 19 க்கு மத்தியிலும் தன்னுடைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை அவர் தீவிரமாக முன்னெத்திருந்தார். இலங்கை அரசாங்கத்துடனும் உலகம் முழுவதிலும் பரந்து வாழும் தமிழ்ச் சமூகத்துடனும் உறகளைப் பலப்படுத்திக்கொள்வதற்குத் தான் விரும்புவதாக தன்னுடைய தேர்தல் பரப்புரைகளின் போது அவர் கூறிவந்தார்.

14,142 வாக்குகளை இவர் பெற்று தனது வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டார்.

வனுஷி இராஜநாயகம் நியூசிலாந்து அரசாங்கத்திலும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு பொறுப்புவாய்ந்த உயர் பதவிகளை வகித்ததன் மூலம் பரந்த நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் கொண்டவர். சட்டத்துறையிலும், இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் பலவற்றிலும் முக்கியமான பதவிகளையும் வகித்திருக்கின்றார்.

தற்போது நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு சிரேஷ்ட முகாமையாளராகவும் பதவிவகிக்கும் அவர், சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டது இவரது குடும்பம். வனுஷியின் தந்தை வழிவந்த பாட்டி லூசியா சரவணமுத்து இலங்கையின் அரசுப் பேரவையின் உறுப்பினராக கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து 1931 இல் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரது கணவரான சேர் ரட்ணசோதி சரவணமுத்து கொழும்பு மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது பெயரிலேயே சரவணமுத்து ஸ்ரேடியம் அமைக்கப்பட்டது.

புகழ்பெற்ற சரவணமுத்துவின் அரசியல் குடும்பத்தில் வந்த வனுஷி, ஐந்து வயதாக இருக்கும் போதே அவரது தந்தை காலஞ்சென்ற ஜனா இராஜநாயகம், தாயார் பவித்திரா ஆகியோருடன் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். வோல்ட்டேர்ஸ் என்பவரைத் திருமணம் செய்த வனுஷிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள்.

தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

சமூகத்தொற்றைத் தடுக்கவே புதிய வர்த்தமானி வெளியீடு!

” நாட்டை முழுமையாக முடக்காததால் கொரோனா வைரஸ் இலகுவில் பரவக்கூடும். எனவே, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி முழு ஒத்துழைப்பை வழங்கும்பட்சத்திலேயே சமுகத்தொற்றை தடுக்கமுடியும். அதற்காகவே புதிய வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.” – என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” விஞ்ஞானப்பூர்வமாக 4 கட்டங்களாகவே இந்நோய் பரவல் கணிக்கப்படுகின்றது.நோயாளி எவரும் இல்லை என்பது முதல் கட்டமாகும், ஆங்காங்கே நோயாளிகள் அடையாளம் காணப்படுதல் மற்றும் அவர்களின் தொடர்புகளை கண்டுபிடிக்ககூடியதாக இருக்கும் நிலையே 2 ஆம் கட்டமாகும்.

தற்போது ஏற்பட்டுள்ள கொத்தணி பரவல்களே மூன்றாம்கட்ட அலையாக கருதப்படுகின்றது. சமூகத்தில் வகைதொகையின்றி எல்லா இடங்களிலும் நோயாளிகள் அடையாளம் காணப்படுதல், எங்கிருந்து எப்படி அவர்களுக்கு தொற்று பரவியது என்பதை கண்டுபிடிக்கமுடியாத நிலை நான்காம் கட்டம் அதாவது சமூகதொற்றாகும். அந்த நிலைக்கு எமது நாடு இன்னும் செல்லவில்லை.

எனினும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படாததால், மக்கள் சுகாதார பாதுகாப்புடன் செயற்படதவறும் பட்சத்தில் வைரஸ் பரவக்கூடிய அபாயம் இருக்கின்றது. எனவேதான் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டபோது நாடு முழுவதும் இரண்டு மாதங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி அதனைக்கட்டுப்படுத்தினோம். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு இது இலகுவான வழிமுறை என்றபோதிலும் மீண்டும் அவ்வாறானதொரு கட்டத்துக்குசெல்லமுடியாது. ஏனெனில் பொருளாதாரம் முடக்கப்படும் என்பதுடன் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும்.

எனவேதான் வீண் பயணங்களைக் கட்டுப்படுத்தி மக்கள் வீட்டுக்குள் இருக்கவேண்டும், அத்தியாவசிய தேவைக்கு பொதுவெளிக்கு செல்லும்போது சமூகஇடைவெளி, முகக்கவசனம் அணிதல் வந்த பின்னர் கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும். அப்போதுதான் இதனை கட்டுப்படுத்தமுடியும். சுகாதார பழக்கவழக்கங்களை பழகிக்கொண்டால் மாத்திரமே வைரஸ் தொற்றிலிருந்து தப்பமுடியும்.

அதேவேளை, நாளாந்த பீசீஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, 21 வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.” – என்றார்.

தலவாக்கலை நகரில் தீ விபத்து – தீக்கிரையானது கடை!

தலவாக்கலை நகரில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீ விபத்து 18.10.2020 அன்று காலை 6 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டி வில்லியர்சின் அதிரடியால் வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டி வில்லியர்சின் அதிரடியால் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் ஸ்டீவ் சுமித் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதன்படி, ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான ராபின் உத்தப்பா ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ராஜஸ்தான் 5.4 ஓவரில் 50 ரன்களை எடுத்த நிலையில் தொடக்க வீரரான ஸ்டோக்ஸ் 15 ரன்னில் வெளியேறினார்.

22 பந்துகளை சந்தித்த உத்தப்பா 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 41 ரன்கள் குவித்து சாஹல் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த சஞ்சுவ் சாம்சங் 9 ரன்னில் வெளியேறினார்.

7.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் அணி சற்று தடுமாறியது. அடுத்துவந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

25 பந்துகளை சந்தித்த பட்லர் 24 ரன்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்து வீச்சில் வெளியேறினார். 36 பந்துகளை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித்
1 சிக்சர் 6 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து மோரிஸ் பந்தில் வெளியேறினார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 177 ரன்களை குவித்தது. அந்த அணியின் ராகுல் தெவாட்டியா 11 பந்துகளை சந்தித்து 19 ரன்னிலும்,ஆர்ச்சர் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

பெங்களூர் தரப்பில் அந்த அணியின் கிரிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

11 பந்துகளை சந்தித்த பிஞ்ச் 14 ரன்னிகள் எடுத்த நிலையில் ஸ்ரேஷ் கோபால் பந்தில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கோஹ்லி, படிக்கல்லுடன் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

37 பந்துகளை சந்தித்த படிக்கல் 2 பவுண்டரிகள் உள்பட 35 ரன்களுடன் ராகுல் தேவாட்டியா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். படிக்கல் வெளியேறிய உடனேயே 32 பந்தில் 43 ரன்கள் குவித்திருந்த கேப்டன் கோலியும் கார்த்திக் தியாகி பந்து வீச்சில் வெளியேறினார்.

இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ், குர்கித்ரட் சிங் மேனுடன் ஜோடி சேர்ந்தார். குர்கித்ரட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மறுமுனையில் டி வில்லியர்ஸ் ருத்ர தாண்டவம் ஆடினார்.

18 ஓவரில் 143 ரன்கள் எடுத்திருந்த பெங்களூர் அணி வெற்றிபெற 2 ஓவரில் 35 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை வீசிய உனாத்கட் பந்து வீச்சை டிவில்லியர்ஸ் புரட்டி எடுத்தார். அந்த ஓவரில் 3 சிக்சர்கள் உள்பட 25 ரன்கள் குவிந்தது.

இறுதியாக 19.4 ஓவரிலேயே பெங்களூர் அணி 179 ரன்களை எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.

அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் 22 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 55 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று வெற்றிக்கு வழிவகுத்தார்.

ராஜஸ்தான் அணியின் ஸ்ரேஷ் கோபால், கார்திக் தியாகி, தேவாட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறப்பாக ஆடிய டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

‘கலைத்துறையில் அரசியல் தலையீடு வேண்டாம்’ – சரத்குமார்

கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், கலைத்துறையின் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்புடையதல்ல என்று சரத்குமார் கூறியுள்ளார்.

சாதாரண மனிதன் பல போராட்டங்களுக்கு பிறகு, எப்படி விளையாட்டு துறையில் உச்சநிலையை அடைந்தான் என்பதை சித்தரிக்கும் கதைக்களத்தை வரவேற்க வேண்டும். அரசியல் ரீதியாக அணுகி எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால் கலை உலகம் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாத சூழல் உருவாகிவிடும் என்றும் சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, படமானது தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியாகும் என்றும், படைப்பாளிகளின் முயற்சியை தடுக்க வேண்டாம் என்றும் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 22 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 20 பேர் மினுவாங்கொட தொற்றாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதன்படி  மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பிலான தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2014 ஆக அதிகரித்துள்ளது.

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் ஜெசிந்தா ஆர்டென் வெற்றி

நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றிபெற்றுள்ளார்.

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டென் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.

வெற்றி குறித்து ஜெசிந்தா கூறும்போது, அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைய பணிகள் உள்ளன. கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டைச் சிறப்பாகக் கட்டமைப்போம் என கூறி உள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஊவா கல்வி வளர்ச்சிக்கான கூட்டம் : செந்திலின்கோரிக்கையை ஏற்று பணிப்புரை வழங்கிய கல்வி அமைச்சர்

ஊவா கல்வி வளர்ச்சி குறித்து ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீல்.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பதுளை ஆளுனர் தேனுக விதானகே, பிரதமரின் பெருந்தோடட இணைப்புச் செயலாளரும், பதுளை மாவட்ட இணைப்பாளரும் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலரும் பங்கெடுத்தனர்.

இதன்போது பெரும்பான்மை பாடசாலைகளின் வளர்ச்சி குறித்து ஆராயப்பட்ட நிலையில், தமிழ் மொழிமூலமான பாடசாலைகள் சார்பான கோரிக்கைகளை செந்தில் தொண்டமான், கல்வி அமைச்சரிடம் முன்வைத்தார்.

இவற்றில் முக்கியமாக அனர்த்தங்களினால் இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள பாடசாலைகளுக்கான கட்டிடங்களை அமைப்பதற்கான கோரிக்கையாகும்.

ஸ்ரிங்வளி, மேம்மலை, தியனகல, ரொசட் லியாங்கவளை, தம்மேதென்ன 3, யூரி, கனவர்ல 1, கனவர்ல 3, ஆகிய பாடசாலைகளை அங்கிருந்து அப்புறுப்படுத்தி, உரிய, பாதுகாப்பான இடங்களில் அமைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான இடங்களில், கட்டிடங்களை அமைப்பதற்கான கோரிக்கையை செந்தில் தொண்டமான் இதன்போது முன்வைத்தார்.

அத்துடன்,தூர பிரதேசங்களுக்கு பேருந்து வசதிகள் இல்லாததால், ஆசிரியர்களுக்கு பாடசாலைகளுக்கு அருகாமையல் தங்குமிட வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.

அத்துடன், பதுளையில் உள்ள இரண்டு விஞ்ஞானப்பிரிவு பாடசாலைகளுக்கு, தற்போது நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களில் மேலதிக விஞ்ஞான ஆசிரியர்கள் இந்த பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்..

அதேபோலு, உதவி ஆசிரியர்களுக்கு நிலுவைச் சம்பளத்தை வழங்க கல்வி அமைச்சன் ஊடாக நடவடிக்கை எடுகு;க வேண்டும் என்றும் செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்தார்.

இந்த பிரதான நான்கு கோரிக்கைகளையும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். ஏற்றுக்கொண்டார். இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இவற்றை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

யாழ்.மீனவர்மீது தமிழகத்தில் தாக்குதல்: நாமல் கொதிப்பு!

0
யாழ்.மீனவர்மீது தமிழகத்தில் தாக்குதல்: நாமல் கொதிப்பு! யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் தமிழ்நாட்டின் சில மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஷ தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தனது...

சுயாதீன நாடுகளின் கொள்கைகளில் அமெரிக்கா இனி தலையிட முடியாது!

0
“பிறநாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவால் இனி திணிக்க முடியாது. சுதந்திரமான நாடுகள் மீது தனது கொள்கையை திணிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை.” என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சக செய்தித்...

இதொகாவின் பிரதான மே தின கூட்டம், பேரணி ரத்து! தோட்டவாரியாக நடத்த ஏற்பாடு!

0
சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் வழமையாக பிரமாண்டமாக நடத்தப்படும் பிரதான கூட்டம் மற்றும் பேரணி என்பன இம்முறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சுமையை...