‘அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பம்’
‘தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு வேட்டுவைக்க துரோகிகள் சதி’
கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதற்கு ஆளுங்கட்சியிலுள்ள பேரினவாதிகள் சக்கர வியூகம் வகுத்து செயற்படும் நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி ஒட்டுமொத்த சமுகத்தையும் காட்டிக்கொடுக்கும் வகையில் செயற்படும் தமிழ் அரசியல் துரோகிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கம்பளை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் வேட்பாளர் வேலுகுமார் மேலும் கூறியதாவது,
“ ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் தமிழ்பேசும் மக்களை புறக்கணிக்கும் வகையிலும், அவர்களை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணத்துடனுமே செயற்பட்டுவருகின்றனர்.
சிங்கள, பௌத்த வாக்குகளால்தான் தான் வெற்றிபெற்றேன் என்று ஜனாதிபதி வீராப்பு பேசுகிறார். மறுபுறத்தில் வாக்குகளுக்காக தமிழ், முஸ்லிம் மக்களிடம் கையேந்தமாட்டோம் என இனவாதிகள் கொக்கரிக்கின்றனர்.
அதுமட்டுமல்ல சிறுபான்மையின மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்மீது அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் முத்திரை குத்தப்படுகின்றது. இந்த நாட்டில் உண்பதற்கு மட்டுமே தமிழ் பேசும் மக்கள் வாய்திறக்கவேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு.
இம்முறை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யவேண்டும் அல்லது இருப்பதை குறைக்கவேண்டும் என்பதற்காகவே எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டும், பிறப்பால் மாத்திரமே தமிழர்களான சில கறுப்பாடுகளை, கைக்கூலிகளை ராஜபக்ச அணி வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது. அவர்களால் வெற்றிபெறமுடியாது. ஆனால், வாக்குகளை சிறதடித்து பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யமுடியும். எனவே, இப்படியான சதிகார கும்பலை மக்கள் வாக்குரிமை என்ற ஆயுதத்தின் ஊடாக கறுவறுக்கவேண்டும். அவர்களுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும், எமது சமுகத்துக்கு எதிராக வழங்கப்படும் வாக்குகளாகும்.
கண்டி மாவட்டத்திலும் இப்படியான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர். இருந்தாலும் மக்களின் மனதை மாற்றுவதற்கான முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். எது எப்படியோ கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது கண்டி தமிழர்களின் அடையாளம் மட்டுமல்ல சுயகௌரவமும்கூட. அதனை எந்தவொரு காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்ககூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர்.
வெற்றி வேட்பாளராக நானே இருக்கின்றேன். எனக்கு வாக்களிப்பதன்மூலமே பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்பது மக்களுக்கு தெரியும். ” – என்றார்.
நுவரெலியா மாவட்டத்தை நாமே கைப்பற்றுவோம் – திகா சூளுரை!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியிலேயே மலையகத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே, எம்மை வெற்றிபெற வைக்கவேண்டியது மக்களின் பொறுப்பாகும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான திகாம்பரம் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியினதும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியினதும், பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தலைமையில் 15.07.2020 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் மதியம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இவரோடு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான வே.இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், வேலாயுதம் தினேஷ்குமார், எம்.ரவீந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது திகாம்பரம் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
” கண்டியில் இருந்து வந்த ஒருவர், பெட், போல்களை வழங்கி வாக்கு கேட்கிறார். மற்றைய தரப்பு அனுதாப வாக்கு திரட்டுகின்றது. எமது அணி மட்டுமே மக்களுக்கு சேவைகளை செய்துவிட்டு, அவற்றை சுட்டிக்காட்டு ஓட்டு கேட்கின்றது. எனவே, நுவரெலியா மாவட்டத்தில் எமது வெற்றி நிச்சயம். ஐந்து ஆசனங்களை வென்று மாவட்டத்தையும் கைப்பற்றுவோம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதுபோல பெருந்தோட்டத்துறையில் அதிகாரிகளாக பணிபுரிபவர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும். அவர்களுக்கான வீட்டு திட்டமும் அவசியம்.
இந்த நாட்டில் இனவாத தலைவர்களே இருக்கின்றனர். ஆனால், அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடியவரே சஜித். அவரது கரங்களை நாம் பலப்படுத்தவேண்டும். தமிழ், முஸ்ஸிம் மக்களின் வாக்குகள் தேவையில்லை என விமல் கூறுகின்றார். அப்படியானால் எதற்காக அவர்களுக்கு நாம் வாக்களிக்கவேண்டும்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக தொழிலாளி ஒருவரே வரவேண்டும். எனக்கு பின்னர் எனது மகனை நான் கொண்டுவரப்போவதில்லை.” – என்றார்.
க.கிசாந்தன்
இராணுவ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா – பதுளையில் 116 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தியத்தலாவைக்கு வந்திருந்த இராணுவத்தினர் இருவர், தமக்கான உடைகளை தியத்தலாவை தையல் நிலையமொன்றில் கடந்த 11 ஆம் திகதி தைத்துச் சென்றிருந்தனர். இவ்விருவருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து தியத்தலாவையிலுள்ள குறித்த தையல் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் ஏழு பேரும் இன்று (15) பிற்பகல் 2.30 மணியளவில் பதுளை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் இன்று மாலை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இப் பரிசீலனை நிறைவுற்றதும், அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குற்படுத்துவது அல்லது அங்கொடை கோவிட் 19 தொற்று அரசினர் மருதுவமனைக்கு அனுப்புவது குறித்தும் தீர்மானிக்கப்படும் என்று பதுளை அரசினர் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இராணுவ அதிகாரிகள் மூவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு அம் மூவருடன் தொடர்புடைய 116 பேர் பதுளை பகுதியில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவிட் 19 தொற்றுக்குள்ளான மூவரும் பசறை, பதுளை, மஹியங்கனை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களாவர். இவர்கள் விடுமுறை பெற்று தமது வீடுகளுக்கு வந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது. பசறை பகுதியை சேர்ந்தவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்.
எம்.செல்வராஜா பதுளை
முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் முத்தையா பிரபுவை விளாசித் தள்ளிய சஜித்
” பந்தையும், துடுப்பு மட்டையையும் வழங்கி வாக்கு கேட்பவர்களை நம்பவேண்டாம். இனவாதிகளுடன் இணைந்தே அவர் போட்டியிடுகின்றார். அத்தகையவர்களுக்கு வாக்களித்தால் மலையகத்தில் மாற்றம் ஏற்படாது. எனவே, ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியினதும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியினதும், பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தலைமையில் 15.07.2020 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் மதியம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இவரோடு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான வே.இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எம்.ரவீந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது,
” மலையக மக்களுக்கு எனது தந்தையே குடியுரிமை வழங்கினார். அதன்பின்னர் வாக்குரிமையும் வழங்கப்பட்டது. ஆனால், இவற்றால் மட்டும் அம்மக்களுக்கு நிம்மதியாக வாழமுடியாது. தனக்கென காணி, வீடு அவசியம். கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் மேம்படவேண்டும். இவை நடைபெற்றால் மாத்திரமே மலையக மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என நம்பக்கூடியதாக இருக்கும்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, வருமானம் உழைக்ககூடிய வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் மாற்றத்தை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மலையகத்துக்கு அமைச்சுப் பதவி மட்டுமல்ல பெருந்தோட்ட மக்களின் நலன்புரி, அபிவிருத்தி உட்பட இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக விசேட செலயணியொன்று அமைக்கப்படும். அது பிரதம அமைச்சரின் கண்காணிப்பின்கீழ் செயற்படும். திகாம்பரம் உள்ளிட்டவர்களும் அதில் இருப்பார்கள்.
பெட், போல் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கிவிட்டு வாக்குபெறலாம் என சிலர் நினைக்கின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரரை அவமதித்த வேட்பாளர் அங்கம் வகிக்கும் இனவாத கூட்டணியிலேயே இவரும் போட்டியிடுகின்றார். அவருக்கு வாக்களிப்பதால் மலையகத்தில் மாற்றம் வரப்போவதில்லை. எனவே, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த அரசாங்கத்திடம் பொருளாதார திட்டங்கள் இல்லை. மக்கள்மீது சுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. நாம் ஆட்சிக்கு வந்ததும் 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்பதுடன், உடனடியாக எரிபொருள் விலையும் குறைக்கப்படும்.” – என்றார்.
க.கிசாந்தன்
மலையகத்துக்காக விசேட செயலணி – சஜித் உறுதி!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹட்டன் டி.கே.டபிள்யூ. மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“மலையக மக்களுக்கு எனது தந்தையே குடியுரிமை வழங்கினார். அதன்பின்னர் வாக்குரிமையும் வழங்கப்பட்டது. ஆனால், இவற்றால் மட்டும் அம்மக்களுக்கு நிம்மதியாக வாழமுடியாது. தனக்கென காணி, வீடு அவசியம். கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் மேம்படவேண்டும். இவை நடைபெற்றால் மாத்திரமே மலையக மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என நம்பக்கூடியதாக இருக்கும்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, வருமானம் உழைக்ககூடிய வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் மாற்றத்தை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மலையகத்துக்கு அமைச்சுப் பதவி மட்டுமல்ல பெருந்தோட்ட மக்களின் நலன்புரி, அபிவிருத்தி உட்பட இதர கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக விசேட செலயணியொன்று அமைக்கப்படும். அது பிரதம அமைச்சரின் கண்காணிப்பின்கீழ் செயற்படும். திகாம்பரம் உள்ளிட்டவர்களும் அதில் இருப்பார்கள்.” -என்றார்.
இலங்கையில் ‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,001 பேர் தப்பினர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,OO1 ஆக அதிகரித்துள்ளது.
653 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 665 ஆக இருக்கின்றது.
நீரோடையில் மிதந்து வந்த சிசுவின் சடலம் வெலிமடையில் மீட்பு
நீரோடையில் மிதந்து வந்த பிரசவமான ஒரு தினத்தைக் கொண்ட பெண் சிசுவொன்றின் சடலத்தை, வெலிமடைப் பொலிசார் இன்று (15) மீட்டுள்ளனர்.
வெலிமடைப் பகுதியின் வக்கடஹின்ன நீரோடையிலேயே, மேற்படி சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.
இவ்வக்கட ஹின்ன நீரோடை நுவரெலியா எல்லையிலிருந்து ஆரம்பித்து, வெலிமடைப் பகுதியின் உமா ஓயா ஆற்றில் சங்கமமாகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது.
இறந்த சிசுவின் தாயைத் தேடி பொலிசார் தேடுதல் செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகவும், விரைவில், சிசுவின் தாயைக் கண்டுபிடித்து கைது செய்ய முடியுமென்று, வெலிமடைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எய்ச்.எம். ஹேரத் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட சிசு, கதகதப்பான உடையிலும் பொலிதினினாலும் சுற்றப்பட்ட நிலையிலிருந்ததாகவும், கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்துமே, மீட்கப்பட்டதாகுமென்றும் பொலிசார் தெரிவித்தனர்.
எம். செல்வராஜா, பதுளை.
அஞ்சல் வாக்கு சீட்டை படமெடுத்தவர் கைது!
மொனராகலை, தனமல்விலை இ.போ.ச. டிப்போ செயலகத்தில் அஞ்சல் வாக்கினை செலுத்திய நபரையும், அஞ்சல் வாக்குச் சீட்டையும் தொலைபேசிமூலம் படம் எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
தனமல்விலை இ.போ.ச. டிப்போ பணியகத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த தேர்தல் உத்தியோகத்தர்கள், கடமையிலிருந்த பொலிஸாரின் உதவியுடனேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டதுடன், படம் எடுக்கக் கூடாதென்று தமக்குத் தெரியாதென்றும், தனக்கு மன்னிப்பு வழங்கும்படியும் வினயமாக கேட்டுக் கொண்டதற்கமைய, எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
அத்துடன், குறிப்பிட்ட புகைப் படங்களை கையடக்கத் தொலைபேசியிலிருந்து அகற்றப்பட்டது.
எம். செல்வராஜா, பதுளை
மொனராகலையில் இருவருக்கு கொரோனா – 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
மொனராகலை மாவட்டத்தில் கொவிட் – 19 தொற்றுடையதாக இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மொனராகலை சுகாதார சேவைப் பணிப்பாளர் பி.பி.கே. அதிகாரி இன்று 15-07-2020 தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“மொனராகலை மாவட்டத்தில் எத்திமலை, சியாம்பலாண்டுவை ஆகிய பகுதிகளின் கோவிட் 19 தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட ஐவர் பி.சி.ஆர் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களில் இருவர் நோய்த் தொற்றுக்கிழக்காகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவருக்கும் நோய்த் தொற்று இல்லையென்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.
அத்துடன், கோவிட் 19 தொற்றுடையவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 68 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் எட்டுப் பேர் அரச தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதுடன் ஏனைய 60 பேர் சுய தனிமைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பொதுமக்கள் அனைவரும், கோவிட் 19 சுகாதார வழிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றுமாறும், பொதுமக்களிடம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் கூறினார்.
எம். செல்வராஜா பதுளை





