அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. வழக்கம் போல் வணிகக் கப்பல் மீதான தாக்குதலைக் காரணம்காட்டியே இந்தத் தாக்குதல்களும் அரங்கேறியுள்ளன.
ஜூன் 17 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட இடைக்காலப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்பட்ட மத்திய கிழக்கு போர்நிறுத்தம், தற்போது உடைந்துபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை சனிக்கிழமை நடந்த இந்தத் தொடர் தாக்குதல்கள் காட்டுகின்றன.
மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளை வழிநடத்தும் அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களின் ” தலைமைத் தளபதியின் (ஜனாதிபதி) உத்தரவின் பேரிலேயே” இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.
“வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தொடர் அக்கிரமிப்புக்கு நேரடிப் பதிலாகவே இன்று எங்கள் படைகள் தாக்குதலைத் தொடங்கின.
அமெரிக்க ராணுவ விமானங்கள் ஈரானின் ராணுவக் கண்காணிப்பு உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு அமைப்புகள், வான் பாதுகாப்பு தளங்கள், ட்ரோன் சேமிப்பு வசதிகள் மற்றும் கண்ணிவெடி வைக்கும் திறன்களை இலக்காகக் கொண்டு தாக்கின” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் முக்கிய மையப்புள்ளியாக இருந்த சிரிக் (Sirik) துறைமுகத்திற்கு அருகிலுள்ள ‘தஹ்ருய்’ (Tahrui) கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ‘கெஷ்ம்’ (Qeshm) தீவிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல்கள் தொடங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், வாஷிங்டனின் எதிர்பார்ப்புகளுக்கு ஈரான் இணங்கத் தவறினால், சனிக்கிழமை நடந்த தாக்குதல்கள் இன்னும் தீவிரமான போருக்கு முன்னோடியாக அமையலாம் என்று எச்சரித்துள்ளார்.
இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
“அவர்கள் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. நாம் நியாயமாக நடந்துகொள்ள முடியாத ஒரு கட்டம் வரலாம். நாம் வெற்றிகரமாகத் தொடங்கிய ராணுவ நடவடிக்கையை முழுமையாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி நடந்தால், ஈரான் இஸ்லாமியக் குடியரசு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும்!” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களும், வெள்ளிக்கிழமை அமெரிக்கா கையாண்ட அதே போர் உத்தியைப் பின்பற்றியே நடந்துள்ளன.
சனிக்கிழமை அதிகாலை சுமார் 4:30 மணியளவில் , பனாமா நாட்டுக் கொடியுடன் ‘கிகு’ (Kiku) என்ற எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றபோது, அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது ஆயுதம் மூலம் தாக்கப்பட்டது. இதில் மாலுமிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, கப்பலில் இருந்த கச்சா எண்ணெயும் கசியவில்லை.
கப்பல் தாக்கப்பட்டபோது அதில் 20 லட்சத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் பேரல்கள் இருந்ததாகவும், அது ஈரானின் “ஒன்-வே அட்டாக் ட்ரோன்” (தற்கொலைப்படை ட்ரோன்) மூலம் தாக்கப்பட்டதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
