Home Blog Page 3500

22 ஆம் திகதி பாராளுமன்றம் செல்கிறார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 22 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது.

ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் எம்.பியான ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு அக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ரணிலின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் ஐ.தே.க. நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அதன்பின்னர் அப்பெயர் வர்த்தமானியில் வெளியாகும்.

ஜுன் 22 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கூடும் பட்சத்தில் அன்றைய தினம் ரணில் சத்தியப்பிரமாணம் செய்வார்.

ஜப்பானிடமிருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் – பச்சைக்கொடி காட்டிய தூதுவர்

ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகாவிடம் (Yoshihide Suga) முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அக்கிரா (Sugiyama Akira) வுக்குமிடையில் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இதுபற்றி தெரிவிக்கப்பட்டது.

கொவிட் வைரஸ் தொற்றொழிப்பு, மருத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி  முன்வைத்த கோரிக்கைக்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சமுத்திர அனர்த்தம் தொடர்பில் விரைவாகப் பதிலளிப்பதற்குத் தேவையான தொழிநுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள், ஜப்பான் தூதுவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

ஜப்பான் தூதுவர் அலுவலகத்தின் பிரதித் தூதுவர் கித்தமுரா டொசிகிரோ (Kitamura Toshihiro), முதலாவது செயலாளர் இமமுரா காயோ (Imamura Kayo), ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இச்சந்திப்பின்போது கலந்துகொண்டிருந்தனர்.

இணையம் ஊடாக சிறுமியை விற்பனை செய்த நபர் கைது!

பாலியல் நடவடிக்கைளுக்காக, இணையத்தளத்தினூடாக சிறுமியொருவரை விற்பனை செய்த ஒருவர் கல்கிசை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசையில் வாடகை வீடொன்றில் சிறுமியை தடுத்துவைத்து, இணையத்தளத்தில் சிறுமியின் நிழற்படத்தை பிரசுரித்து, பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தெல்கொட பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

35 வயதான சந்தேகநபர், மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை பாலியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

நாட்டில் மேலும் 2,173 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது.

ஓய்வுபெற்ற தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்து கொள்ளுங்கள் – பிரதமர் பணிப்பு

ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சிக்கு இன்று ஆலோசனை வழங்கினார்.

தாதியர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர், மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் முறுத்தெட்டுவே ஆனந்த தேரரின் வேண்டுகோளுக்கமைய அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சுமார் 34,000 தாதியர்கள் இதுவரை தாதியர் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்கள் இதுவரை முகங்கொடுத்துள்ள சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்கள் இதுவரை முகங்கொடுத்துள்ள சேவையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்கள் இதுவரை முகங்கொடுத்துள்ள குறுகிய மற்றும் நீண்டகால தீர்வு காணல் மற்றும் முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதே இச்சந்திப்பின் நோக்கமாகும்.

இதன்போது தாதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் கருத்து தெரிவித்தார்.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு பயிற்சி பெறாத தாதியர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறித்து வணக்கத்திற்குரிய தேரர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி அவர்கள், தற்போது ஓராண்டிற்கு பயிற்சிக்காக 2000 எனும் குறைந்த எண்ணிக்கையிலான தாதியர்கள் மாத்திரம் இணைத்துக் கொள்ளப்படுவதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தற்போது அப்பிரிவுகளில் சேவையாற்றும் பயிற்சி பெறாத தாதியர்களை குறித்த பிரிவுகளில் சேவையாற்றும் காலத்தை பயிற்சி காலத்துடன் சேர்க்குமாறு கௌரவ பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

மேலும் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முனசிங்க அவர்கள், இதுவரை 840 தாதியர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேவையாற்றுவதற்கான குறுகிய கால பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சுமார் 1000 பேருக்கு துரித பயிற்சி வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு இதன்போது தெரிவித்த கௌரவ பிரதமர், தாதியர்களின் சேவை காலத்தை நீடிப்பது குறித்த செயற்பாட்டின் தற்போதைய நிலை குறித்தும் வினவினார்.

தாதியர்களின் சேவை காலத்தை 63 ஆண்டுகள் வரை நீடிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஏற்கனவே அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முனசிங்க அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார சேவையில் ஈடுபடும் அனைவரும் இதுவரை சிறப்பாக சேவையாற்றி வருவதாக தெரிவித்த கௌரவ பிரதமர், அவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் வினவினார்.

சுகாதார துறையில் அனைவருக்கும் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது குடும்ப உறுப்பினருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தாதியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுக்க முறையான செயற்பாடொன்றை வகுக்குமாறு இதன்போது கௌரவ பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தாதியர் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்   பிரதமர், சுகாதார அமைச்சருக்கு தெரிவித்தார்.

தற்போது தாதியர் பட்டத்தை வழங்குவதற்கான பணி சட்ட வரைவுகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வரைவை விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது இந்த கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

பிரதமர், ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்பட்ட பின்னர் இதுவரை அக்கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை என தெரிவித்த வணக்கத்திற்குரிய முறுத்தெட்டுவே தேரர், அக்கொடுப்பனவை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து பொதுத் தீர்மானம் மேற்கொண்டு எதிர்வரும் வரவு-செலவு திட்டத்தில் அதனை நிறைவேற்ற முடியும் என   பிரதமர் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் சுகாதார அமைச்சர்  பவித்ரா வன்னஆராச்சி, பிரதமரின் செயலாளர்  .காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி  யோஷித ராஜபக்ச, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் எஸ்.எச்.முனசிங்க, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன,

பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைமை செயலாளர் எச்.ஏ.டீ.கல்யாணி, உப தலைவர் ஆர்.கே.படுவிட, உப செயலாளர் புஷ்பா ரம்யானி டி சொய்சா, கந்தானை தாதியர் கல்லூரியின் அதிபர் டப்ளிவ்.ஏ.கீர்த்தி உள்ளிட்ட பலர் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

எஞ்சாய் எஞ்சாமி பாடல் – 25 கோடி முறை பார்த்து சாதனை!

சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம், எஞ்சாய் எஞ்சாமி என தொடங்கும்  பாடலைத் தயாரித்துள்ளது.

ரவுடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணைன் மகளான தீ உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

காலா படத்தில் ‘உரிமை மீட்போம்’, வட சென்னை படத்தில் ‘மத்திய சிறையிலே’, மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் ரேப் பாடகர் அறிவு. தற்போது இவர்கள் இருவரும் இணைந்துப் பாடியிருக்கும் ‘எஞ்ஜாய் எஞ்சாமி’ ஆல்பம் பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த எஞ்ஜாய் எஞ்சாமி என்கிற பாடலின் வீடியோ மார்ச் 7 அன்று யூடியூபில் வெளியானது. பாடலை அறிவு எழுதியுள்ளார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் இப்பாடலைத் தயாரித்துள்ளது. அமித் கிருஷ்ணன் பாடலைப் படமாக்கியுள்ளார்.

யூடியூப் தளங்களில் வழக்கமாக திரைப்படப் பாடல்களுக்குக் கிடைக்கும் அமோக வரவேற்பை எஞ்ஜாய் எஞ்சாமி பெற்றுள்ளது. இயற்கை வளத்தையும் கலாசார வேர்களையும் போற்றும் இப்பாடலின் படமாக்கம், ஆங்கிலப் பாடல்களுக்கு இணையாக உள்ளதால் இதற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி வருகிறது.

தற்போது இப்பாடலுக்கு 25 கோடி முரைபார்த்து உள்ளனர். ஒரு சுயாதீனப் பாடல், திரைப்பாடலுக்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமான வரவேற்பைப் பெற்றிருப்பது தமிழ்த் திரையிசை வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கொரோனா வின் பிடிக்குள் இருந்து 180,427 பேர் இதுவரை மீண்டனர்’

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 2 ஆயிரத்து 168 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது.

28 ஆயிரத்து 391 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். கொரோனாவால் ஆயிரத்து 843 பேர் பலியாகியுள்ளனர்.

நுவரெலியாவில் 3 ஆயிரம் பேருக்கு இன்று தடுப்பூசி ஏற்றல்

நுவரெலியா பிரதேசத்திலுள்ள 3 ஆயிரம் பேருக்கு இன்று (9) புதன்கிழமை முதற் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

நுவரெலியா சுகாதார பணியகத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் நடைபெற்றது.

இதன் போது நுவரெலியா பிரதேசத்தில் கடமையாற்றும் கிராமசேவகர்கள், கிராம அபிவிருத்தி அதிகாரிகள், பொலிஸ் இராணுவ அதிகாரிகள், இலங்கை மின்சாரசபை உத்தியோகத்தர்கள்,நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், நுவரெலியா பிரதேசபை உத்தியோகத்தர்கள் உட்பட பல அரச உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் ,

” நுவரெலியா மாவட்டத்திற் 50 ஆயிரம் தடுப்பூசி கிடைத்துள்ளது இன்று முதல் நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதனை தொடர்ந்து கொத்மலை, வலப்பனை, அங்குராங்கெத்த மற்றும் அம்பகமுவ பிரதேசங்களிலும் இந்த தடுப்பூசி வழங்கும் வேளைத்திட்டம் தொடர்ந்து நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்மான் கூறுகையில்,

பெருந்தோட்டப்பகுதியில் நாளை 11 ஆம் திகதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர் களுக்கும் கர்ப்பினி தாய்மார்களுக்கும்பெருந்தோட்டப்பகுதிலுள்ள முன்கள உத்தியோகத்தர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்ககப்படும்.

நுவரெலியா மாவட்டத்திற்கு தற்பொழுது 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளது. மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் ஜனாதிபதியுடனும் சுகாதார
அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடாத்தி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.” – என்றார்.

நுவரெலியா  நிருபர் எஸ்.தியாகு

‘உயர்நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன ஒபேசகரவை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதி’

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசகரவை உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிப்பதற்கு  ஜனாதிபதி மேற்கொண்ட பரிந்துரைக்கு பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் சிசிர.ஜே.டி.ஆப்ரூ ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ஜனாதிபதி இந்தப் பரிந்துரையை மேற்கொண்டிருந்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (08) நடைபெற்ற பாராளுமன்ற பேரவைக் கூட்டத்திலேயே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , கௌரவ கபீர் ஹாசிம் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதேநேரம், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிக்கப்படுவதால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவியில் ஏற்படும் வெற்றிடத்துக்கு நீதிபதி கே.பி.பெர்னாந்துவை நியமிப்பதற்கு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கும் பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக தெரிவித்தார்.

அதேநேரம், நீதிபதி கே.பி.பெர்னாந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி சஷி மஹேந்திரனை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கும் அரசியலமைப்புப் பேரவை தனது இணக்கத்தைத் தெரிவித்திருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அதேநேரம், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் ஏற்படும் வெற்றிடத்துக்கு உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனிய அவர்களை நியமிப்பதற்கும் இங்கு இணங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

சீனாவின் ஆதிக்கத்தை நிறுத்த இலங்கையுடனான உறவுகளைத் துண்டிக்குமாறு சீமான் வலியுறுத்தல்

இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு அருகே அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதனைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலங்களையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட்டிருக்கும் இலங்கை அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகம் அமைப்பதற்கு வாங்கிய கடன்களை அடைக்க இயலாதக் கையாலாகா இலங்கை அரசு, தனது நாட்டுக்குட்பட்டப்பகுதியை சீனாவிற்கு மொத்தமாய்த் தாரைவார்த்து, அந்நாட்டின் இறையாண்மைக்குட்பட்டப் பகுதியாகவும் அறிவித்துச் சட்டமியற்றியிருக்கிறது. அப்பகுதிகளில் இனி இலங்கை அரசின் எவ்வித சட்டத்திட்டங்களும், விதிகளும் செல்லாததாகி அது முழுக்க முழுக்க சீன நாட்டின் கட்டுப்பாட்டுக்குட்பட்டப் பகுதிகளுள் ஒன்றாக இருக்குமென்பது இந்தியாவின் எல்லையோரப் பாதுகாப்புக்குப் பெருங்கேட்டை விளைவிக்கக்கூடியப் பேராபத்தாகும். இது நட்பு நாடென நம்பி உறவு கொண்டாடிய இந்தியாவுக்கு வஞ்சக இலங்கை அரசு செய்திருக்கும் பச்சைத்துரோகமாகும். வடகிழக்கில் எல்லையை ஆக்கிரமித்து, அச்சுறுத்தி வரும் சீனா, தெற்கே கன்னியாகுமரியிலிருந்து 290 கி.மீ. தொலைவில் தன் நாட்டு இறையாண்மையுடன் இலங்கையில் நிலைகொள்ளுவது இந்தியாவின் பூகோள நலன்களுக்கு மிகப்பெரும் ஊறு விளைவிக்கும் கொடுந்தீங்காகும்.

தங்களது தந்தையர் நாடென நேசித்து நின்ற விடுதலைப்புலிகளையும், ஈழச்சொந்தங்களையும் அழித்தொழிக்க இலங்கைக்கு ஆயுதமும், பணமும் கொடுத்து, பன்னாட்டளவில் இலங்கைக்கு ஆதரவு வட்டத்தை உருவாக்கி ஆதரவளித்த இந்தியாவின் முதுகில் மீண்டும் குத்தி தாங்கள் யாரென வெளிக்காட்டியிருக்கிறது சிங்கள ஆளும் வர்க்கம். கடந்த காலங்களில் இந்தியாவுக்கெதிரான தருணங்களில் சீனாவின் பக்கமும், பாகிஸ்தானின் பக்கமும் நின்ற இலங்கை அரசு, தற்போது நேரடியாக சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் நிலைநிறுத்தி இந்தியாவைக் கண்காணிக்கவும், ஊடறுத்து உள்நுழையவும் பெரும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழீழ நாட்டையடைந்து தருவதாக வாக்குக் கொடுத்து, பல இலட்சம் கோடிகளைக் கொட்டித் தருவதாக உறுதியளித்து, திரிகோணமலையில் சில ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குக் கேட்ட அமெரிக்காவையும், சீனாவையும் அந்நியரெனக் கூறி விரட்டியடித்து, இந்தியாவையும், அதன் பாதுகாப்பையும் தொலைநோக்கோடு சிந்தித்துச் செயல்திறன் வகுத்து முடிவெடுத்திட்ட எனதுயிர் அண்ணன் அன்புத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும், விடுதலைப்புலிகளையும் பயங்கரவாதிகளெனக்கூறி, எதிர் நிலைப்பாடு எடுத்து சிங்களப்பேரினவாதிகளின் பக்கம் நின்ற இந்தியப்பேரரசு இப்போது கள்ளமௌனம் சாதிப்பதன் அரசியலை விளங்கிக்கொள்ள முடியவில்லை. தமிழீழ நாடு அமையப்பெற்றிருந்தால் தந்தையின் விரல் பிடித்து நடக்கும் செல்ல மகன் போல, இந்தியாவின் பாதுகாப்புப் பேரரணாக அது இருந்திருக்கும். வரலாற்றில் இல்லாத வகையில் சீனாவால் தெற்கே ஒரு அத்துமீறலை எதிர்கொள்ளும் கொடுஞ்சூழல் இந்தியாவுக்கு உருவாகியிருக்காது. யாவற்றையும் தடுத்துக் கெடுத்து சிங்களத் தரப்பைக் கொண்டாடிய இந்திய வல்லாதிக்கம், இன்றும் சீனாவின் பக்கம் நிற்கும் சிங்கள ஆட்சியாளர்களின் உடன்தான் நிற்கிறதா? இந்தியாவுக்கு மிக அருகே சீனா நிலையெடுக்கத் துணைநிற்கிற இலங்கையை இனியும் நட்பு நாடென வெட்கமின்றி இந்தியா சொந்தம் கொண்டாடத்தான் போகிறதா? என்ன பதிலுண்டு இந்திய ஆட்சியாளர்களிடம்? இலங்கை ஒருநாளும் இந்தியாவின் பக்கம் நிற்காது; சிங்களர்கள் ஒருபோதும் இந்தியாவை நேசிக்க மாட்டார்கள் எனப் பல ஆண்டுகளாக எடுத்துரைத்தோம். அவையாவும் விழுந்ததா இந்திய ஆட்சியாளர்களின் செவிகளில்? ‘எனது இரத்தச்சொந்தங்கள் வாழும் தமிழகம் அங்கம் வகிக்கும் இந்தியாவுக்கெதிராக எனது சிந்தை ஒருபோதும் திரும்பாது’ எனத் தீர்மானமாய் முடிவெடுத்து நேதாஜியின் நாட்டை நேசக்கரம் கொண்டு நேசித்த சத்தியத்தலைவருக்கும், அவரது பிள்ளைகளுக்கும் இந்தியா செய்தது வரலாற்றுப்பெருந்துரோகம் அல்லவா? தலைவர் பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் களத்தில் நின்றிருந்தால் இலங்கையில் சீனா கால்பதித்திருக்குமா? எல்லையில் தனது படைகளை இறக்கச் சிந்தித்திருக்குமா? தமிழர்களின் பக்கம் நின்று ஈழ விடுதலையை ஆதரிக்காது, சிங்களர்களின் பக்கம் நின்று இனஅழிப்புக்குத் துணைபோனது எவ்வளவு பெரிய கொடுஞ்செயலென்று உரைக்கிறதா?? அது எத்தகைய படுபாதகத்தை இந்தியாவுக்கே ஏற்படுத்தியிருக்கிறது என்பது இப்போதாவது விளங்குகிறதா? இன்றைக்கு அம்பாந்தோட்டைப் பகுதியை இறையாண்மைமிக்கதாக சீனா கைப்பற்றி ஆளுகை செய்வது இந்தியாவின் தெற்குப்பகுதியான தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் ஏற்பட்டிருக்கும் பேரபாயம் என்பதை எவராவது மறுக்கவியலுமா? தமிழகத்தின் எல்லைகளைக் காவல்துறையினரைக் கொண்டு பலப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்திருக்குமா?

ஏற்கனவே, கொழும்பில் சீனா சிட்டி எனும் பெயரில் தனது ஆதிக்கத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது சீனா. இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் போர்க்கப்பல்கள் காட்சியளிக்கின்றன. இராமேசுவரம் அருகே நெடுந்தீவு, அனலைத்தீவு, நைனாத்தீவு போன்ற பகுதிகளில் மின்சார உற்பத்திக்கு சீன அரசு அனுமதிப் பெற்றிருக்கிறது. இவ்வாறு இலங்கையை மெல்ல மெல்ல விழுங்கி, சீனா தனது அதிகாரப்பரவலை வேர்ப்பரப்பி வருவதும், இந்திய எல்லைக்கருகே நிலையெடுப்பதும் இந்தியாவின் இறையாண்மைக்குப் பேராபத்தாய் முடியும். இந்திய ஒன்றியத்தின் பூகோள எல்லைப்பகுதிகளில் இவ்வளவு பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கும் இந்நிலையில்கூட பிரதமர் மோடி கனத்த மௌனம் சாதிப்பதும், சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் கண்டிக்கத் தயங்குவதும் வெட்கக்கேடானது.

ஆகவே, இந்திய அரசானது இனியாவது விழிப்புற்று சீனாவின் ஆதிக்கத்தைக் கண்டிக்கவும், தடுக்கவும் முற்பட வேண்டுமெனவும், நட்பு நாடென இலங்கையுடன் உறவுகொண்டாடும் கயமைத்தனத்தைக் கைவிட்டு, அந்நாட்டுடனான அத்தனை உறவுகளையும் துண்டிக்க வேண்டுமெனவும் இந்திய ஒன்றிய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 06 எலும்புக் கூடுகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று (16) மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 26 வது நாள் அகழ்வுப் பணி...

“அடுத்த கட்ட அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை மேலும் கடினமாக இருக்கும்” – சீனா எச்சரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள், முதற்கட்டத்தை விடவும் மிகவும் சவாலானதாகவும் கடினமானதாகவும் இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), பாகிஸ்தான்...

விசேட சுற்றுலா வலயமொன்றை உருவாக்க முன்மொழிவு!

0
"தேயிலை பயிர்ச்செய்கை சார்ந்த சுற்றுலாத் தொழில்" குறித்தும் ஆராய்வு! இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதின் தலைமையில் இன்று (16)...