Home Blog Page 3524

‘மாகாணசபைத் தேர்தல் உடன் நடத்தப்படவேண்டும்’

மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும். அதேபோல சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்காத வகையில் எல்லை நிர்ணயம் இடம்பெறவேண்டும். அதனை மையப்படுத்திய பொதுவானதொரு கலந்துரையாடலுக்கு எமது கட்சி தயார் – என்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார்.

நுவரெலியா, இராகலையில் இன்று (21.04.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கொழும்பு துறைமுக நகரம், மாகாணசபைத் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இவை தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சீனாவின் கொழும்பு துறைமுக நகர திட்டத்துக்கு ஆரம்பம் முதலே நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். இத்திட்டமானது இந்நாட்டின் இறைமைக்கும், அரசியல் இருப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. மறுபுறத்தில் நாட்டின் கடல் வளத்துக்கும், சுற்றாடலுக்கும் ஆபத்தாகமே அமையும். இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே பிரதமரால் புதிய சட்டமூலமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் ஆணைக்குழுவொன்றின் ஊடாகவே அப்பகுதி நிர்வகிக்கப்படும். இதன்மூலம் சீனாவின் தேவை நிறைவேற்றப்படும். எனவே, இச்சட்டமூலத்தை அரசு மீளப்பெற வேண்டும். துறைமுக நகர்ப்பகுதியை நாட்டு எல்லைக்குள் உள்வாங்க வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச ஓர் அரசியல் தீர்வாக மாகாணசபை முறைமை காணப்படுகின்றது. அதற்கும் பேரினவாதிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். எனவே, தேர்தல் பிற்போடப்படுவது கண்டிக்கதக்கதொன்றாகும். ஆகவே, ஜனநாயகம் நிலைநாட்டப்படவேண்டுமானால் உடனடியாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

எல்லை நிர்ணயம் என்பது கடந்த காலங்களில் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டது. கடந்த உள்ளாட்சி சபைத் தேர்தலின்போதும் அவ்வாறே நடைபெற்றது. சிறுபான்மையின் கட்சிகளுக்கு கிடைக்கக்கூடிய பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதே இதன் நோக்கம். எனவே, சிறுபான்மையினத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலுயே எல்லை மீள் நிர்ணயம் செய்யப்படவேண்டும். அதனை மையப்படுத்திய பொதுக்கருத்தடாலுக்கு நாம் தயார். – என்றார்.

க.கிசாந்தன்

மூவருக்கு கொரோனா – ஹப்புத்தளை இலங்கை வங்கிக் கிளை மூடப்பட்டது!

ஹப்புத்தளை – இலங்கை வங்கிக் கிளை அலுவலகம், தொடர்ந்து வரும் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக, ஹப்புத்தளை பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியம் சுதர்ஷன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட வங்கிக்கிளையின் முகாமையாளர், காசாளர், உதவியாளர் ஆகிய மூன்று பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பது, இன்று 21-04-2021ல் பகல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக ககாகொல்லை கோவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேற்படி வங்கிக் கிளையில் கடமையாற்றும் ஒன்பது பேருக்கு பி.சி. ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப் பரிசோதனை அறிக்கை 21-04-2021ல் வெளியான போது, குறிப்பிட்ட மூவருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, வங்கிக் கிளையில் கடமையாற்றுபவர்களின் குடும்பத்தினர்களான 22 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், குறிப்பிட்ட வங்கிக் கிளையும் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளனவென்று, பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்பிரமணியம் சுதர்ஷன் தெரிவித்தார்.

எம். செல்வராஜா, பதுளை

’21/4 தாக்குதலுக்கு காரணமான அனைவரையும் நீதியின் முன்னிறுத்த நாம் நடவடிக்கை’

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று ஈராண்டுகளாகின்ற நிலையில் அது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை வருமாறு,

இத்தால் ஈராண்டுகளுக்கு முன்னர் அதாவது 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட இருண்ட தினத்தின் ஈராண்டு நிறைவை மிகுந்த அனுதாபத்துடன் நினைவு கூருகின்றோம். அன்று உயிர்த்த ஞாயிறு தின வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் உள்ளிட்ட 259 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த அனைத்து அன்புக்குரியவர்களையும் நினைவு கூருவதுடன், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றேன். அத்துடன் தாக்குதலின்போது காயமடைந்த மற்றும் ஊனமுற்ற நூற்றுக்கணக்கானோர் உடல், உள ரீதியாக பாதிப்படைந்துள்ள நிலையில் அவர்களும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன். இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்த, ஊனமுற்ற மற்றும் காயமடைந்த அனைவரது குடும்பத்தினருக்கும் ஆழந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை மற்றும் பிற ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கௌரவ சட்டமா அதிபருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக இவ்விடயத்தில் நாம் தலையீடு செய்யாவிடினும், அச்செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராகவிருப்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

அத்துடன் ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக  செயற்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு ஆகியவற்றின் விசாரணைகளை சுயாதீனமான முறையில் முன்னெடுப்பதற்கு தேவையான வசதிகளை ஜனாதிபதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அவ்விசாரணைகளின் இறுதியில் அந்தந்த திணைக்களங்களின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாம் நம்புகின்றோம்.

கடந்த அரசாங்கத்தினால் குற்றங்கள அலட்சியம் செய்யப்பட்டமையினாலும், தேசிய பாதுகாப்பையும், தமது அரசியல் நடவடிக்கைகளையும் குழப்பிக் கொண்டமையினாலும் இறுதியில் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுமக்களே ஆகும். இன்றும், தாக்குதலுக்கு காரணமான தரப்புகள் பல்வேறு பொய்களை சமூகத்தில் பரப்பி, விசாரணைகளில் செல்வாக்கு செலுத்துவதன் மூலம் சமூக கவனத்தை திசை திருப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

நாம் அவர்கள் குறித்து வருந்துகின்றோம். மேலும், உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் அதே வேளை, இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை இனி எப்போதும் ஏற்படாது தடுக்க ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அத்துடன், இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான அனைவரையும் நீதியின் முன்னிறுத்த நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

21/4 தாக்குதலில் உயிர்நீத்த மக்களுக்காக ஹட்டனில் ஆன்மீக வழிபாடு!

இலங்கையில்  2019 வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை  நினைவுகூர்ந்து, அவர்களின் ஆம்தா சாந்தியடைவதற்காக மலையகத்திலும் இன்று (21.04.2021)  ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன.

காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில் மணியோசை எழுப்பி வழிபாடுகளில் ஈடுபடுமாறும், வீடுகளில் விளக்கேற்றி இருநிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்திருந்தார்.  ஏனைய மதத்தவர்களிடமும் அவர் இவ்வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

இதன்படி மலையகத்திலுள்ள தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

அத்துடன், தேவாலயங்கள், கோவில்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலும் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில், அட்டனில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையில் அருட்தந்தை தேவதாசன் செங்கன் தலைமையில் இருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.

மிகவும் பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளியைப் பின்பற்றியே வழிபாடுகள் இடம்பெற்றன. ஒரு சிலரே பங்கேற்றிருந்தனர். அதேபோல் பெரும்பாலான மக்கள் வீடுகளில் விளக்கேற்றி இருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.

கடந்த 2019ம் வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 277 பேர் உடல்சிதறிப் பலியானார்கள். 477 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.கிசாந்தன்

இன்னும் 6 மாதங்களுக்குள் மாகாணசபைத் தேர்தல் – அரசு உறுதியளிப்பு

மாகாணசபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்பு கூறவேண்டும். இவ்வாறு 3 வருடங்களாக பிற்போடப்பட்ட தேர்தலை இன்னும் 6 மாதங்களுக்குள் நடத்த முடியும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும், அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு தமிழ்க் கூட்டமைப்பு தற்போது வலியுறுத்துகின்றது. தேர்தல் பிற்போடப்பட்டதற்கு தமிழ்க் கூட்டமைப்பும் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும். நல்லாட்சியின்போது தவறான வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தாலேயே மாகாண தேர்தலை உரிய காலத்துக்குள் நடத்தமுடியாமல்போனது. இருந்த தேர்தல் முறை நீக்கப்பட்டது. புதிய முறைமை முன்மொழியப்படவில்லை. தேர்தலை பிற்போடுவதற்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவை அனைத்தையும் கடந்த அரசு செய்தது.

எமது அரசு தேர்தலை ஒத்திவைக்காது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் புதிய சட்டமூலமொன்றை முன்வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் நாடாளுமுன்றில் புதிய சட்டமூலம் முன்வைக்கப்படும். எது எப்படி இருந்தாலும் 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் என நம்புகின்றோம்.” – என்றார்.

பதுளையில் 20,620 குடும்பங்களுக்கு சொந்த வீடு இல்லை – 58,852 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை!

பதுளை மாவட்டத்தில் 20 ஆயிரத்து 620 குடும்பங்களுக்கு தமக்கென்ற வாழ்வியலுக்கு வீடுகள் இல்லாத அவலம், மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போது தெரிய வந்திருப்பதாக, பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகம தெரிவித்தார்.

பதுளை மாவட்ட அரச செயலக கேட்போர் கூடத்தில் 21-04-2021ல் நடைபெற்ற கிராமிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான ஆய்வு நிலைக்கூட்டத்தில், பதுளை மாவட்ட அரச அதிபர் கலந்து கொண்டு பேசும்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகம தொடர்ந்து, தமது ஆய்வு நிலைக்கூட்டத்தின்போது,

‘மாவட்டத்தில் இருபதாயிரத்து அறுநூற்று இருபது குடும்பங்களுக்கு வீடுகள் இல்லாத நிலையில், இவர்களில் பத்தாயிரத்து எழுநூற்று நாற்பத்து எட்டு (10,748) குடும்பங்களுக்கு ஓரளவில் சாதாரண வீடொன்றினையாவது அமைத்துக்கொள்வதற்கும், அவர்களுக்கான காணி இல்லாத நிலையும் இருந்து வருகின்றது. மேலும் 136 குடும்பங்கள் ஓலைக்குடில்களில் வசித்து வருகின்றனர்.

பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டங்களை ஏழு கம்பனிகள் நிருவகித்து வருகின்றன. இக் கம்பனிகள் பொறுப்பில் 63 பெருந்தோட்டங்கள் உள்ளன. இப் பெருந்தோட்டங்களில் முப்பத்தேழாயிரத்து அறுநூற்று ஐம்பத்தைந்து (37,655) குடியிறுப்புக்கள் இருந்து வருகின்றன. இத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் வீடுகளற்ற நிலை காணப்படுகின்றன.

பதுளை மாவட்டத்தில் இரண்டு இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து ஐநூற்று எழுபத்தொன்பது (2,68,579) குடும்பத்தினர் மொத்தமாக தத்தமது வாழ்வியலை மேற்கொண்டு வந்த போதிலும், இரண்டு இலட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து ஐநூற்று நாற்பத்தொரு (2,43,541) குடும்பத்தினருக்கே வீடுகள் இருந்து வருகின்றனவென்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன், இம்மாவட்டத்தில் 58 ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்திரண்டு குடும்பங்களுக்கு (58,852) சுத்தமான குடிநீர் வசதிகளற்ற அவல நிலையும் தொடர்ந்த வண்ணமுள்ளது. இத்தொகையானது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் நூற்றிற்கு இருபது வீதமாகும். இவர்கள் ஆறு, நீர் ஓடை, நீர்த்தடாகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் நீரையே குடிநீருக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

தேசிய நீர் வழங்கல் சபை ஊடாக நூற்றுக்கு 30 வீதமான குடும்பத்தினரும், பிரஜா நீர்த் திட்டங்கள் ஊடாக நூற்றுக்கு 27 வீதமான குடும்பத்தினரும், குழாய்க்கிணறுகள் ஊடாக நூற்றுக்கு 23 வீதமான குடும்பத்தினரும் நீரைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், எமது மாவட்டத்தில் 263 குடிநீர் வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், 20 வீதமானவர்களான ஐம்பத்தெட்டாயிரத்து எண்ணூற்று ஐம்பத்திரண்டு (58,852) குடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் இல்லாதுள்ளன. இதனால், சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையிலும் இம்மாவட்டத்தில் அதிகரிப்பு காணப்படுகின்றது.

இத்தகைய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பாரிய பொறுப்புக்கள் எம்மைச் சார்ந்ததாகவுள்ளது. அதற்கான முன்னெடுப்புக்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்’ என்றும் கூறினார்.

20 கிலோ கொழுந்து பறிக்குமாறு அழுத்தம் – நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்

நாளொன்றுக்கு 20 கிலோ பச்சைத்தேயிலை கொழுந்து பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கும் நிர்வாகத்திற்கு எதிராக பொகவந்தலாவ பொகவான தோட்ட தொழிலாளர்கள்எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கவந்தலாவ குயினா தோட்ட பிரதான வீதியின் பொகவான சந்தியிலேயே நேற்று காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்ததாவது..

இதுவரை காலமும் 15 கிலோ பச்சைத்தேயிலை பறித்தோம். ஆனால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் பின்னர் 20 கிலோ பச்சைக்கொழுந்து நாளொன்று பறிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுக்கின்றது. அவ்வாறு 20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் வாரத்தில் 03 நாட்களே வேலை வழங்கப்படும் என அச்சுறுத்தலும் விடுக்கின்றது. இதுவரை வழங்கி வந்த சுகாதாரம் சம்பந்தமான சலுகைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

அரசாங்கம் ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதோடு அத்தியாவசிய விலை உயர்ரவினாலே ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வை கோரினோம். ஆனால் இப்போது பச்சைக்கொழுந்து அதிகளவில் பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் கொடுக்கின்றது, ஆகவே நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், தொழிலமைச்சர் மற்றும் மலையக பிரதிநிதிகள் தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இது தொடர்பில் தோட்ட முகாமையாளரிடன் தொடர்பு கொண்டு கேட்ட போது தற்போது தேயிலை கொழுந்து அதிகளவில் காணப்படுகிறது. ஆகவே தான் கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்க கோரினேன். தேயிலை செடிகளில் வளர்ந்திருக்கும் பச்சைக்கொழுந்தினை வீணாக வெட்டி வீச முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 300 தொழிலாளர்கள் வரை இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கலைந்து சென்றனர் .

ஈஸ்டர் தாக்குதல் எத்தனை பேரின் வாழ்வைப் புரட்டிப் போட்டது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலைப் பொழுது சிறப்பாகவே மலர்ந்தது. ஆனால் அன்று 9.50இற்கு வந்த செய்தியை நம்ப முடியவில்லை. ”கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஏதோ வெடித்தது. நான் அங்கதான் இருக்கிறேன். ஆனால் உள்ள போக முடியவில்லை. நிறைய பேர் விழுந்து கிடக்கிறாங்க. குண்டு வெடிப்பினு தான் சொல்லுறாங்க.” என்ற நண்பர் ஒருவர் அழைத்து சொன்னார்.

கொழும்பின் பிரதான வீதியொன்றில் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த தான், ”ஏதாவது ட்ரான்ஸ்ஃபோமர் வெடிச்சிருக்கும்.” என்று அந்த அழைப்புக்கு பதிலளித்து துடித்துக் கொண்டேன். ஆனால் அடுத்தடுத்து வந்த அழைப்புக்கள் நிலைமை விமரீதமாகியுள்ளதை உணர்ந்து ஊடகப் பணிக்காக களத்திற்கு விரைந்தேன்.

கொழும்பு கொச்சிக்கடை தேவாயலத்தில் ஆரம்பித்த குண்டு வெடிப்பு, கொழும்பு நட்சத்திர விடுதிகள் மூன்றிலும் தாக்குதல் என்ற செய்தி வந்தது. நேரடியாக அங்கு சென்று தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்த போது, நீர்கொழும்பு தேவாயலம், மட்டக்களப்பு தேவாலயம் என்று அடுத்தடுத்து செய்திகள் வரத் தொடங்கின.

அம்பியுலன்ஸ் வண்டிகள் வீதிகளில் பறந்தன. புலனாய்வாளர்கள், இராணுவம், பொலிஸ் என பாதுகாப்புத் துறை வீதிகளில் விரைந்தனர். ஊடகத்துறை என்பதால், அடையாள அட்டையுடன் அங்கும் இங்குமாக செய்திகளை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அன்று மதியம் 2 – 3 மணி வரை அடுத்தடுத்து வந்த செய்திகள் கொலைநடுங்கச் செய்தன. இந்த பதற்றம் சுமார் ஒருவாரத்திற்கு மேலாக தொடர்ந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

ஆனால் அனைத்தும் தலைகீழானது. 300இற்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்த தினத்தை இலங்கையர் மட்டுமல்ல முழு உலக மக்களும் அத்துனை இலகுவில் மறந்துவிட முடியாது.

சுமார் இரண்டு, மூன்று வாரங்கள் வரை இன வன்முறைகளும் பதிவாகின. சில பிரதேசங்களில் கடைகள் தீயிடப்பட்டன. அதன்பின்னர் இலங்கையின் அரசியல், சமூக ரீதியான மாற்றங்களும் இதனை மையப்படுத்தி ஏற்பட்டன.

ஏதோ ஒரு பெயரில் நடத்தப்பட்ட அடி முட்டாள்த்தனமான தாக்குதல்களினால் இலங்கையின் வரலாறு மீண்டும் வேறொரு திசையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. இதுபோன்ற முட்டாள்தனமான சிந்தனைகளை ஆதரிப்பதும், அதனை எதிர்க்காதிருப்பதும் இன்னும் மோசமாகவே கருத வேண்டியிருக்கிறது.

இதுகுறித்து பக்கம் பக்கமாக எழுத கசப்பான நினைவுகள் இருக்கினறன. ஆனால் இதற்கு வித்திட்ட சிந்தனைகளை இனிமேலும் ஆதரிக்கக் கூடாது என்பதை பதிவு செய்து சிறுகுறிப்புடன் முடித்துக் கொள்வது போதுமானதாக தோன்றுகிறது.

உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும். அத்தனைப் பிரார்த்தனை அவர்களுக்காக இருக்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட உறவுகளின் உள், வெளிக் காயங்கள் இலகுவில் மறந்துவிடும் என்று எண்ண முடியாது. அவர்களுக்காக விசேடமாக பிரார்த்திப்போம்.

வீ.ஏ.கே.

 

 

சன்னங்களால் சனங்களை தின்ற ஈஸ்டர் களறியின் ஈராண்டு நினைவு!

இற்றைக்கு ஈராண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் – ஈஸ்டர் திருநாளன்று இலங்கைத் தீவில் பீறிட்டு தெறித்த இரத்தம் அதிர்ச்சியில் அனைவரையும் உறையவைத்தது.

கருத்தரித்திருந்த தாய்மார் முதல் கனவுகளை சுமந்த சிறார்கள்வரை 277 பேர் உடல்சிதறிப் பலியானார்கள். 477 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் சிலர் உடல் அவயங்களை இழந்து, வலிகளை சுமந்தப்படி வாழ்வதை இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மரணத்தை வீழ்த்தி, பாவத்தை ஒழித்து, இருளை வெற்றிகொண்ட இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளில், தேவாலயங்களுக்குள் இரத்த ஆறு பெருக்கெடுத்த பெருந்துயர் சம்பவமானது இலங்கையை மட்டுமல்ல முழு உலகத்தையுமே உலுக்கியது.

தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 8.45 இற்கு செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை.

1.புனித செபஸ்தியன் தேவாலயம், கட்டான

தாக்குதல் நேரம் – காலை 8.45

பலியானோர் – 115

காயமடைந்தவர்கள் – 183

2.அந்தோனியார் தேவாலயம் – கொச்சிக்கடை

தாக்குதல் நேரம் – காலை 8.45

பலியானோர் – 54

காயமடைந்தவர்கள் –  83

3.கிங்ஸ்பரி ஹோட்டல் – கொழும்பு

தாக்குதல் நேரம் – காலை 8.47

பலியானோர் – 10

காயமடைந்தவர்கள் – 19

4.சங்கரில்லா ஹோட்டல் – கொழும்பு

தாக்குதல் நேரம் – காலை 8.54

பலியானோர் – 35

காயமடைந்தவர்கள் – 34

5.சியோன் தேவாலயம் – மட்டக்களப்பு

தாக்குதல் நேரம் – காலை 9.10

பலியானோர் – 31

காயமடைந்தவர்கள் – 67

6.சினமன் கிராண்ட் ஹோட்டல் – கொழும்பு

தாக்குதல் நேரம் – காலை 9.12

பலியானோர் – 22

காயமடைந்தவர்கள் – 20

தெஹிவளை ஹோட்டல் மற்றும் மருதானையிலுள்ள வீடொன்றிலும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்றன.

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2 மணிக்கு பிறகு மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், மேல், வடமேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) காலை வேளையில் மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...