கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
ஆண்கள் இருவரும், பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
ஆண்கள் இருவரும், பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா இன்றும் நாளையும் நடைபெறுகின்றது.
24.02.2021 இன்று நடைபெற்ற அமர்வின்போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை எனும் ஊரைச் சேர்ந்த சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.
இதன்மூலம் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் உடுவிலைச்சேர்ந்த மாணவியான செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாரும் முன்னைய ஆண்டு யாழ்ப்பாணம் கோண்டாவில் குமரகோட்டத்தைச் சேர்ந்த யாழ் பல்கலை மாணவியான தினேஸ் விஜயதர்சினியும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் கல்கலை பட்டமளிப்பு விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை இவ் ஆண்டு பெற்றுக்கொண்ட செல்வி முனியப்பன் துலாபரணியுடனான கருத்துப் பகிர்விலிருந்து……,
“எனது பெயர் முனியப்பன் துலாபரணி. எனது சொந்த ஊர் மாத்தளை மாவட்டத்தில் சுதுகங்கை என்னும் கிராமம் ஆகும். எனது பெற்றோர் கூலித் தொழிலாளிகள். நான் ஆரம்பக் கல்வியை மாத்தளை இந்து தேசிய கல்லூரியிலும், தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரை மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியில் கல்வி கற்றேன்.
உயர் தரத்தில் 1A, 2B ஐ பெற்றுக் கொண்ட நான், எனது முதல் பல்கலைக்கழகத் தெரிவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தெரிவே அமைந்தது. வரலாறு மற்றும் ஊடகக் கற்கைகள் துறையில் முதலாம் வருடத்தில் பயின்ற நான், இரண்டாம் வருடத்திலிருந்து ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்புக் கலையாக பயின்றேன். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றேன்.
எமது பாடசாலைகளில் ஊடகக் கற்கைகள் ஓர் பாட அலகாக இல்லாமையால் புதிய பாடத்தெரிவு என்ற அச்சம் ஆரம்பத்தில் என் மனதில் எழவே செய்தது. ஆனால், விரிவுரையாளர்களின் சிறப்பான கற்பித்தல் முறைகள் அவ் அச்சத்தை போக்கியதால் இலகுவாகவும் விருப்புடனும் ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்பாகக் கற்கக்கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது.
செயன்முறைப் பயிற்சிகள் மற்றும் கமரா மீது கொண்ட ஆர்வமே என்னைத் தொடர்ந்து ஊடகக் கற்கைகள் துறையைக் கற்கத் தூண்டியது எனலாம். முதலாம் வருடத்தில் ஊடகங்கள், தொடர்பாடல் சார்ந்து கோட்பாட்டு ரீதியாக கற்ற நாம், இரண்டாம் வருடத்திலிருந்து செயன்முறை ரீதியாக கற்றலில் ஈடுபட்டோம்.
ஷசஞ்சிகை வெளியீடு, புகைப்பட இதழியல், ஆவணப்படத் தயாரிப்பு மற்றும் ஊடகத் தொழிற்சார் பயிற்சி என்பன ஊடகக் கற்கைகள் துறையால் எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்கள் என்றே கூற வேண்டும். ஊடகத் துறைசார் அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துப் பகிர்வுகள், ஊடகத் தொழிற்சார் பயிற்சிகள் மற்றும் ஆளுமை வாய்ந்தவர்களின் விரிவுரைகள் ஆகியன எமக்கான ஊக்கத்தை அளித்தது.
பாட திட்டத்தில் கற்ற விடயங்களை ஊடக நிறுவனங்களில் நாம் பயிற்சிக்காகச் சென்ற காலங்களில் அனுபவத்தினூடாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது. இதனூடாகவே ஊடகத்துறைக்குள் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பும் அதிகமானது என்றே கூறலாம். ஊடகத் துறையில் எழுத்துத்துறைச் சார்ந்து சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய அவாவாக உள்ளது. அன்று எமக்கு வழிகாட்டிகளாக இருந்த எமது ஊடகக் கற்கைகள் துறை சகோதர சகோதரிகள் பலர் இன்று இலங்கையில் பல ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றமை எங்களுக்கும், எமக்கு அடுத்தபடியாக உள்ள சகோதர சகோதரிகளுக்கும் பெரும் நம்பிக்கையளிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கற்றலில் மட்டுமின்றி பல வழிகளிலும் எமக்கான வாய்ப்புக்களை உருவாக்கி எம்மை செதுக்கிய ஊடகக் கற்கைகள் துறையின் துறைத்தலைவர் கலாநிதி. சி. ரகுராம் அவர்களுக்கும், விரிவுரையாளர்களான திரு. யூட் தினேஸ் கொடுதோர், திருமதி. பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் மற்றும் அனுதர்ஷி லிங்கநாதன் ஆகியோருக்கும் மற்றும் எனது கல்விக்கு உற்ற துணையாக இருந்த எனது குடும்பத்தார் மற்றும் எனது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை எனக்களித்துக் கௌரவித்த நிலா நிதியம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.
2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படும் என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நாளை கட்சியின் நிறைவேற்றுக்குழு கூடி ஆராய்ந்த பின்னர், கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இன்று (2021.02.24) முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ‘வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில்’ பங்கேற்றார்.
இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இம்மாநாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பிரதமர்கள் இருவரும் நேற்றைய தினம் (23) அலரி மாளிகையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தியிருந்தனர்.
இவ் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு இருநாட்டு முன்னணி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அவர்களது எண்ணப்படி எதிர்கால வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்ட அரிய சந்தர்ப்பமாகும்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக இரத்து செய்தனர்.
ரஜினி உட்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். இதையடுத்து இரண்டு மாதங்கள் ஆகியும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 15 ஆம் திகதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறதாம்.
அங்கு முக்கிய காட்சிகளை படமாக்கியதற்கு பின், இறுதிக்கட்ட படப்பிடிப்பை கோவை மற்றும் பொள்ளாச்சியில் நடத்த உள்ளார்களாம். அண்ணாத்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர்.
இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவிக்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர், இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வன்னி மாவட்டத்தின் ‘St. Anthony’s Sports Club’ கிரிக்கெட் கழகத்தின் சார்பிலேயே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் தமிழகத்தின் மறைந்த முதலவர் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளான இன்று திறந்து வைத்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் உள்ளது.
பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அழகிய கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை கடந்த மாதம் 27 ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
50,422 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடம் 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம், 43 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது.
இந்த நினைவிட வளாகத்தில் அறிவுசார் பூங்கா ஒரு புறமும், மற்றொரு புறம் டிஜிட்டல் அருங்காட்சியகமும் ரூ.12 கோடி மதிப்பில் (இந்திய ரூபா) கட்டப்பட்டுள்ளது.
அதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்கு செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் உரைகள், சிறுகதைகள், புகைப்படங்கள் அமைக்கப்பட்டு வந்தன.
இந்த பணிக்காக ஜெயலலிதா நினைவிடம் கடந்த 27 ஆம் திகதியில் இருந்து மூடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான இன்று திறந்து வைத்தார்.
ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவி ஒருவர் லேப்-டாப் பெறுவது போன்று மெழுகு சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் 6 அடி உயர மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவி ஒருவர் லேப்-டாப் பெறுவது போன்று மெழுகு சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அருங்காட்சியகத்தில் 8 அடி உயர மெழுகு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்புக்கான யோசனைகளை பெற்றுக் கொள்கின்ற நிபுணர் குழுவின் செயற்பாடுகள் திருப்பதிகரமாக அமைந்துள்ளது.என்னுடைய தலைமையில் மீண்டும் ஒருமுறை அந்த குழுவை சந்திப்பதற்கான வாய்ப்பு எற்பட்டுள்ளது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான பேராசிரியர் சங்கரன் விஜேசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (24.02.2021) நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
” நாங்கள் அண்மையில் மலையக மக்கள் முன்னணி என்ற வகையில் அரசியல் யாப்பு நிபுணர் குழுவை சந்தித்து எங்களுடைய யோசனைகளை முன்வைத்துள்ளோம். இதன்போது மிகவும் ஆர்வத்துடனும் அக்கறையோடும் அவர்கள் எங்களுடைய முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பாக விளக்கங்களை கேட்டறிந்து கொண்டனர்.
நாங்கள் முன்வைத்துள்ள அநேகமான யோசனைகள் புதிய விடயங்கள் எனவும் இது தொடர்பாக இன்னும் அதிகமான விளக்கங்கள் தேவைப்படுவதாகவும் எனவே மீண்டும் ஒரு முறை எங்களுடைய குழுவினரை சந்திக்க நேரம் ஒதுக்கி தருவதாகவும் முழுமையான தகவல்களை இதன்போது தங்களுக்கு பெற்றுத் தருமாறும் அவர்கள் எங்களுடைய தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனிடம் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு அமைய எங்களுடைய தலைவரின் பணிப்புரைக்கு அமைவாக எனது தலைமையில் மூவர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவில் மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ஏ.லோரன்ஸ் உப தலைவர் சிவலிங்கம் சதீஸ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.நாங்கள் ஒரு குழவாக செயற்பட்டு இன்னும் பல தகவல்களை அரசியல் யாப்பு சீர்திருத்த நிபுணர் குழுவிடம் கையளிக்கவுள்ளோம்.
அந்த வகையில் எங்களை பொறுத்த அளவில் நாங்கள் எங்களுடைய யோசனைகளில் தனியே மலையக மக்களைப்பற்றி மாத்திரம் யோசனைகளை முன்வைக்காது குறிப்பாக இலங்கையில் வாழுகின்ற சிறுபான்மை மக்களாகிய மலையக தமிழர்கள் வடகிழக்கு தமிழர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று தரப்பினருடைய விடயங்கள் தொடர்பாக நாங்கள் யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
மலையக மக்கள் முன்னணியை பொறுத்த அளவில் நாங்கள் 89 ஆம் ஆண்டு மறைந்த தலைவர் அமரர் சந்திரசேகரனுடன் இணைந்து இந்த கட்சியை ஆரம்பித்த பொழுது நாங்கள் இலங்கையிலே இருக்கின்ற அனைவருடைய குறிப்பாக சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற என்னத்துடனேயே நாங்கள் செயற்பட்டு வந்தோம்.இதன் காரணமாக பலமுறை எங்களுடைய கட்சியை சார்ந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்.
ஆனாலும் நாங்கள் எங்களுடைய கொள்கையில் இருந்து என்றுமே தடம் புரண்டது இல்லை.அதே நேரம் ஒன்றினைந்த இலங்கைக்குள் மலையக எமது தாயகம் நாம் ஒரு தேசியம் என்ற கொள்கையையும் ஒரு நாளும் விட்டுக் கொடுக்கமாட்டோம்.இன்று எங்களுடைய தலைவர் இராதாகிருஸ்ணன் மாத்திரமே மலையகத்தில் அரசியல் ரீதியாக அனுபவம் வாய்ந்த ஒரு தலைவராக இருக்கின்றார்.
ஏனைய தலைவர்களை நான் குறையாக கூறவில்லை.ஆனாலும் அனுபவ ரீதியாக எங்களுடைய தலைவர் முன்னாள் இருக்கின்றார்.மேலும் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மாத்திரமே எங்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும்.அதற்கு தற்பொழுது அரசாங்கம் அமைத்துள்ள அரசியல் நிபுணர் குழுவை சரியான முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது என்னமாகும்.
எனவே இந்த அரசியல் நிபுணர் குழுவிற்கு எங்களைப்போன்று இன்னும் மலையகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் தொழிற்சங்கங்கள் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் மலையக பெண்கள் என அனைத்த தரப்பினரும் தங்களுடைய யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்ற விடயத்தையும் நான் எதிர்பார்க்கின்றேன்.
இந்த அரசியல் சீர் திருத்த நிபுணர் குழு சிறுபான்மை சமூகம் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதை காணக்கூடியதாகவுள்ளது.இந்த பரிந்துரைகள் அனைத்தும் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.இதுவும் நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் யாப்பு சீர் திருத்தம் போல அமைந்து விடக்கூடாது.” – என்றார்.
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை எல பொஜின் தேசிய உணவகத்திற்கு முன்னால் உள்ள மேபீல்ட் தேயிலை மலையில் 24.02.2021 இன்று சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சிறுத்தை விஷ உணவு உட் கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் உடலில் காயங்களும் காணப்படுகின்றது.
குறித்த சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
க.கிசாந்தன்
பசறையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, பசறையில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இன்று இனம்காணப்பட்ட தொற்றாளர்கள் இருவரும், காகொல்லை கொவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு இன்று மாலை அனுப்பப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரப் பரிசோதகர் வி. இராஜதுரை தெரிவித்தார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன் பசறையின் 43 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இப்பரிசோதனை அறிக்கை, இன்று கிடைக்கப்பெற்றபோதே, இருவருக்கு கோவிட்19 தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
பசறை – ‘கோவில்கடை’ப் பகுதியில் கோவிட் 19 தொற்று உறுதியான 40 வயது நிரம்பியநபர், ஏற்கனவே கண்டுப்பிடிக்கப்பட்ட கோவிட் 19 தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தவராவார்.
அடுத்து, பசறைப்பகுதியின் கோணக்கலை பெருந்தோட்டலோவர் பிரிவைச்சேர்ந்த 23வயது நிரம்பிய நபருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. இவர் கொழும்பிலிருந்து பசறைவந்து, தனிமைப்படுத்தப்பட்ட சிலருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவராவார்.
இவ்விருவரும், ககாகொல்லை கோவிட்19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பசறையில் கோவிட்19 தொற்று உறுதியாகியிருந்து சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட 58பேரில், 38 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
பசறையில் கோவிட்19 தொற்று உறுதியான இருவருடன் தொடர்புகளைப் பேணியவர்களை இனம்கண்டு, அவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக, பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் வி. இராஜதுரை மேலும் தெரிவித்தார்.