Home Blog Page 3708

இரத்தினபுரியில் நேற்று மாத்திரம் 23 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 311பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 101 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 193 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரத்தினபுரியில் நேற்று மாத்திரம் 23 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் – பாகிஸ்தானில் அதிரடி அவசர சட்டம்

பாகிஸ்தானின் இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவை, பாலியல் குற்றவாளிகளுக்கு `கட்டாய ஆண்மை நீக்கம்’ செய்து தண்டனையளிப்பதற்கான புதிய அவசர சட்டம் ஒன்றை முன் வைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம், லாகூரை நோக்கி தன் குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருந்த பெண்மணி, கார் பழுதாகி வழியில் நின்றபோது பின்னால் வந்த கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த பாகிஸ்தானும் கொந்தளித்து எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், பாகிஸ்தானின் இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவை, பாலியல் குற்றவாளிகளுக்கு `கட்டாய ஆண்மை நீக்கம்’ செய்து தண்டனையளிப்பதற்கான புதிய அவசர சட்டம் ஒன்றை முன் வைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார். 120 நாள்களுக்குப் பிறகு, இச்சட்டம் அங்குள்ள நாடாளுமன்றத்தால் நிரந்தர சட்டமாக அங்கீகரிக்கப்பட உள்ளது.

இந்தப் புதிய சட்டம் இப்பிரச்னைக்கு உகந்த தீர்வாக இருக்குமா, தண்டனைகள் கடுமையாவதால் குற்றங்கள் குறையுமா என்றெல்லாம் பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், “இந்தச் சட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை நிச்சயமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வழக்குகளை துரிதப்படுத்தி விரைவாகத் தீர்ப்பு வழங்குவதற்காக சிறப்பு நீதிமன்றங்களையும் ஏற்படுத்த இருக்கிறோம்” என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

உண்மையில், தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறைந்துவிடும் என்பது நடைமுறையில் வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருந்து வருகிறது. பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை தெற்கு ஆசியாவிலேயே முதலாவதாக நடைமுறைப்படுத்திய நாடு பாகிஸ்தான்தான். அந்நாட்டின் ராணுவ தளபதியாகவும், ஆறாவது அதிபராகவும் விளங்கிய ஜியா உல் ஹக், முறை தவறிய பாலுறவு மற்றும் வல்லுறவில் ஈடுபடும் குற்றவாளிகளை பொதுவில் நிறுத்தி கல்லால் அடித்துக் கொல்லும் முறையை 1979-ம் ஆண்டிலேயே சட்டமாக்கியிருக்கிறார்.

அதன்பின், 2006-ம் ஆண்டு இந்தச் சட்டத்தை திருத்தியமைத்து, பெண்களை மட்டுமன்றி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவோருக்கும் மரண தண்டனை என்று விரிவாக்கினர். ஆனாலும், அதன் பின்னர் வந்த 14 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருப்பதாகத்தான் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

உலகளவில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டணையான மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை எனப்படும் 25 ஆண்டுக்கால சிறைத்தண்டனையை விதித்த பின்னரும், குற்றங்கள் கொஞ்சமும் குறையாமல் ஆண்டுக்கு ஆண்டு சீராக அதிகரித்து வருகையில், ஆட்சியில் இருப்பவர்கள் இன்னமும் தண்டனைகளை மட்டுமே தீர்வாக நம்பியிருப்பது வருத்தத்துக்குரியது.

இந்தக் கட்டாய ஆண்மை நீக்கம் என்பது என்ன, அது உண்மையாகவே குற்றவாளிகளுக்குத் தண்டணையாக இருக்குமா என்பதும் விவாதத்துக்குரிய விஷயமாக இருக்கிறது. ஆண்மை நீக்கம் என்பது அறுவைசிகிச்சை அல்லது மருந்துகள் உட்செலுத்துவது என இரு வழிகளில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை முறையில் ஆண்களின் விதைப்பைகளை அறுவை செய்து முழுமையாக எடுத்து விடுவார்கள். வலி மிகுந்த இந்த முறையில், ஆண்களால் நிரந்தரமாகப் பாலுறவில் ஈடுபட முடியாத நிலை உருவாகும். ஆனால், பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனையாகச் செய்யப்படுவது `Chemical Castration’ எனப்படும், மருந்துகள் மூலம் அவர்களின் பாலுணர்ச்சிகளை மழுங்கடிக்கும் முறையாகும். இதை ஒரே ஓர் ஊசி போடுவதன் மூலம் செய்து விட முடியாது. குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது தொடர்ச்சியாக அவர்கள் உடலில் MPA (medroxyprogesterone acetate) என்ற மருந்தை ஊசி அல்லது மாத்திரை வழியாக செலுத்திக் கொண்டிருப்பார்கள்.

இது ஆண்களின் முக்கிய பாலுணர்வு ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானின் சுரப்பை மெல்ல மெல்லக் குறைத்து அவர்களை ஆண்மையற்றவர்களாக மாற்றுகிறது. இம்மருந்துகளால் தீவிர மன அழுத்தம், ஈரல் கோளாறுகள், எலும்பு அடர்த்தி குறைவது, முடி உதிர்வது போன்ற பக்க விளைவுகள் நிறைய இருந்தாலும் இதன் வீரியம் 4-5 ஆண்டுகள் மட்டுமே உடலில் இருக்கும் என்பதால் இது நிரந்தரமானதல்ல. மேலும், பாலுணர்வை மட்டுமே மந்தப்படுத்தும் இம்மருந்து, 8 மாதக் குழந்தையிடம்கூட மனிதத்தன்மையின்றி நடந்து கொள்ளும் மிருக உணர்வை எவ்வகையிலும் குறைப்பதில்லை. அதனால், மரண தண்டனைக்கும் ஆயுள் தண்டனைக்குமே குறையாத குற்றங்கள், இந்த ஆண்மை நீக்க தண்டனையால் குறைந்து விடுமாவெனத் தெரியவில்லை.

மேலும் இந்தச் சட்டத்தை இப்போது பாகிஸ்தான் அரசு முதன்முதலாகக் கண்டுபிடிக்கவில்லை. 1940-களில் இருந்தே இது இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் கனடா மற்றும் வளைகுடா நாடுகளிலும் வழக்கத்திலிருக்கிறது. மேற்கு நாடுகளில் ஆயுள் தண்டனையை விரும்பாத பாலியல் குற்றவாளிகள், ஆண்மை நீக்கத்தை சுயவிருப்போடு தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் பாகிஸ்தானின் இந்தப் புதிய சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறினாலும் இல்லாவிட்டாலும் பலன் எதுவும் பெரிதாய் இருக்காதென்றே தோன்றுகிறது. ஒவ்வொரு கொடூர பாலியல் வன்கொடுமை நிகழும் போதும், கொந்தளித்து எழும் பொதுமக்களின் உணர்வெழுச்சியையும், போராட்டங்களையும் தணிப்பதற்காக, பொங்கி வரும் பாலின் மீது நீர்தெளிப்பது போல இது போன்ற தீர்வுகளை முன்வைப்பது, ஆட்சியாளர்களின் உத்தியாக இருந்து வருகிறது. ஆனால், இவை எதுவும் பாத்திரத்தின் அடியில் எரியும் நெருப்பை சற்றும் குறைப்பதில்லை. மாறாக, இச்சட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசு எடுக்கவிருக்கும், சிறப்பு விரைவு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையும், வழக்குகளை விரைந்து முடிப்பதும் ஓரளவுக்கு பயன் தரக்கூடும்.

உண்மையில், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை குற்றவாளிகளை விடவும் கொடூரமாய்த் துன்புறுத்துவது, அவர்களைச் சூழ்ந்திருக்கும் சமூகமாகவே இருக்கிறது. குற்றவாளியை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டும் குறை சொல்லும், கேலி பேசும், ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்கும் சமூகத்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் வழங்க முன்வராத காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்களாலும், ஆண்டுக்கணக்கில் வழக்கு நடந்தபின்னரும் முறையாக நீதி வழங்கப்படாமல் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதாலும், நடக்கும் குற்றங்களில் நூற்றுக்கு 5 சதவிகிதம் மட்டுமே காவல்நிலையங்களில் பதிவாகின்றன என்கிறார்கள். எஞ்சியவர்கள் அவமானத்துக்கும், அலைக்கழிப்புக்கும், விசாரணைகளுக்கும் பயந்து தமக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வெளியில் சொல்வதே இல்லை.

ஆகவே அரசுகள், குற்றவாளிகளுக்கான தண்டனையை அதிகரிக்கும் அதே வேளையில், வழக்கு ஆண்டாண்டுகளுக்கு இழுக்கப்படாமலிருக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் மிகுதியாக அலைக்கழிக்கப்படாமல் தடுக்கவும், அவர்களை மனரீதியாக மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும்படியான விசாரணைகளும் உடல் பரிசோதனைகளும் தளர்த்தப்படவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.

அந்த வகையில், இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் தற்போது இயற்றப்பட்டுள்ள திஷா (2019) சட்டத்தை ஒரு புதிய மாற்றமாகக் கருதலாம். இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் ஆசிட் வீச்சு போன்ற குற்றச் செயல்களில், போதிய ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில், குற்றவாளிகளுக்கு 21 நாள்களுக்குள் மரண தண்டனை விதிக்க வகை செய்துள்ளது. இச்சட்டத்தின்படி, சம்பவம் நடந்த முதல் 7 நாள்களுக்குள் காவல்துறையினர் தங்களது விசாரணையை முடித்தாக வேண்டும். அடுத்த 14 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றத்தின் தீவிரத்திற்கேற்ப தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாதென்ற அக்கறையில், அரசுகள் தினம்தோறும் நூற்றுக்கணக்கான கொடுங் குற்றவாளிகளை சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்ப வைத்துக்கொண்டே இருக்கின்றன. வழக்குகளை விரைந்து முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் உரிய நீதி வழங்க ஆவன செய்யாதபட்சத்தில், இந்த ஆண்மை நீக்க தண்டனையையும் அத்தகைய ஓட்டைகளில் ஒன்றாகவே கருத வேண்டும்.

நன்றி விகடன்

 

அழகு தமிழில் அசத்தல் வர்ணணை – அப்துல் ஜப்பார் காலமானார்

தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளரும், சிரேஸ்ட அறிவிப்பாளர், எழுத்தாளர், சிந்தனையாளர் என பல பரிமாணங்களை எடுத்து, ஊடகத்துறையில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்ட அப்துல் ஜப்பார் காலமானார்.

இவருடைய அழகு தமிழ் வர்ணணைக்கு எம்ஜிஆர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் எனப்பலரும் ரசிகர்கள்.

தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்புக்கு முந்தைய வானொலி காலத்தில் தமிழ் கிரிக்கெட் வர்ணணைக்குப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. வானொலி ரசிகர்களைத் தன் அழகு தமிழ் வர்ணணையால் கவர்ந்த அப்துல் ஜப்பார் இன்று காலை மறைந்தார். அவருக்கு வயது 81.

சாத்தான்குளத்தைச் சேர்ந்தவரான அப்துல் ஜப்பார் 1980-களில் இந்தியா விளையாடிய பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் வர்ணணை செய்துள்ளார். அப்போது வானொலியில் கிரிக்கெட் வர்ணணை செய்துகொண்டிருந்த பலருமே ஆங்கில வார்த்தைகளை கலந்துபேசுவது வழக்கம். ஆனால், அப்துல் ஜப்பாரின் வர்ணணையில் துளி ஆங்கிலம் கலக்காது. அழகு தமிழில், தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்பில், பரபரப்பான தருணங்களை தன் கணீர்குரல் மூலம் ரசிகர்களுக்கு கடத்தியவர் அப்துல் ஜப்பார்.

இவருடைய அழகு தமிழ் வர்ணணைக்கு எம்ஜிஆர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் எனப்பலரும் ரசிகர்கள். பிரபாகரன், அப்துல் ஜப்பாரை தமிழீழத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். இந்த அனுபவத்தை புத்தகமாகவும் எழுதியிருக்கிறார் அப்துல் ஜப்பார். சில ஹாக்கி போட்டிகளுக்கும் தமிழில் வர்ணனை செய்திருக்கிறார்.

கிரிக்கெட் காதலனாக, தமிழ் நேசனாக, வர்ணணை உலகில் எல்லோரின் மனங்களையும் கவர்ந்த அப்துல் ஜப்பாரின் புகழ் என்றும் அழியாது!

இலங்கையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து விசேடமாக வரவழைக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அறிவிப்பாளர் அப்துல் ஜப்பாரை சந்தித்து பேசியிருந்தமை விசேட அம்சமாகும்.

மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவருக்கும் பரிசோதனை

இன்று முதல் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவரும், ரெபிட் ஆன்டிஜென் என்ற துரித கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனைகள் அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட 11 இடங்களில் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்

ஏற்கனவே இவ்வாறு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இதனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் மேல் மாகாணத்தில் இருந்து அதிகமானோர் ஊர்களுக்குச் செல்லக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதேச சபைத் தலைவர்களாக இரண்டு தமிழர்கள் : ஊவாவில் வலுப்பெரும் தமிழர் அரசியல்

பிரதேச மட்டத்திலான அரசியல் மற்றும் நிர்வாகப் பொறிமுறையின்போது பிரதேச சபைகளே முக்கிய நிறுவனமாக திகழ்கின்றது. அத்தகையதொரு கட்டமைப்பில் உயர் பதவியை தமிழரொருவர் வகிப்பதென்பது பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைக்கும் கௌரவமாகவே கருதவேண்டும்.

எனவே, அத்தகையதொரு சூழ்நிலை உதயமாக களம் அமைத்துக்கொடுத்த தேசிய மட்டத்திலான அரசியல் தலைமைத்துவத்தையும்   நிச்சயம் பாராட்டி – வாழ்த்துகூறியே ஆகவேண்டும்.

பதுளை மாவட்ட மக்கள் உட்பட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு சிறப்பானதொரு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிவரும் செந்தில் தொண்டமானின் சாணக்கியத்தாலேயே இன்று ஹல்துமுல்ல பிரதேச சபையில் தவிசாளர் பதவியை தமிழர் ஒருவர் அலங்கரிக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள சகோதரர்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதியில் தமிழர் ஒருவருக்கு உயர் பதவி கிடைத்தமையானது ‘அரசியல் ரீதியில் வென்றெடுக்கப்பட்ட உரிமை’யாகவே பார்க்கப்படுகின்றது.

பதுளை மாவட்டத்தை பொறுத்தமட்டில் உள்ளாட்சி மன்றங்களில் உப தலைவர் என்ற பதவிநிலை அந்தஸ்த்து மாத்திரமே தமிழர்களுக்கு கிடைத்துவந்தது. தலைவராகுவதற்கான வாய்ப்பு இருந்தும் அந்த இலக்கை அடைவதற்கான அரசியல் சூழ்நிலை இருக்கவில்லை. இதனை செந்தில் தொண்டமான் தகர்த்தெறிந்துள்ளார். அவரின் வழிநடத்தலுடன் பதுளையில் இதுவரை இரண்டு சபைகளில் தமிழர்கள் தவிசாளர் பதவிகளைப் பெற்றுள்ளனர்.

ஹப்புத்தளை பிரதேச சபைக்கு தலைவராக தமிழர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ஹல்துமுல்ல பிரதேச சபையிலும் தமிழர் ஒருவர் பதவிக்கு வந்துள்ளார்.பதுளை அரசியல் வரலாற்றில் தமிழர்கள் இருவர் தவிசாளர் பதவியை வகிப்பதும் இதுவே முதன்முறையாகும். அதுமட்டுமல்ல முக்கியதொரு அரசியல் திருப்பமாகவும் இது பார்க்கப்படுகின்றது.

இன்று தமிழர்களுக்கு உரிய இடம் கிடைப்பதற்கு செந்தில் தொண்டமானின் சிறப்பான அரசியல் பயணம் மற்றும் தலைமைத்துவமே பிரதான காரணமாகும்.

அதேவேளை, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது பேரம் பேசும் சக்தியை இழந்துவிட்டதாக பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவ்வாறு அல்ல. பேசும் சக்தி இன்னும் இருக்கின்றது, அது தொடரும் என்பதனை செந்தில் தொண்டமானின் நகர்வுகள் நல்லதொரு உதாரணமாக நிருபிக்கப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் எடுக்கபடும் முடிவுகள் வெற்றிபெறுவதற்கு பிரதேச சபைகளின் பங்களிப்பு மிக அவசியம். அத்தகைய சபைகளில் உரிமைகளை வென்றெடுப்பதென்பது அரசியல் திருப்பமாகவே கருதப்படுகின்றது.

– பதுளை அசோக்குமார்

‘கொரோனா’வால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 183 ஆக உயர்வு!!

‘கொரோனா’ வைரஸ் தொற்றால் 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சைபலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கொழும்பு 7 பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 20 ஆம் திகதி வீட்டில் இருந்தபோது உயிரிழந்துள்ளார். கொவிட் நிலை நிமோனியாவே உயிரிழப்புக்கு காரணம்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

‘சி.எல்.எவ். கூட்டத்திலும் அக்கரபத்தன தவிசாளர் பங்கேற்கவில்லை?

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சி.எல்.எவ். அலுவலகத்தில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அக்கரபத்தன பிரதேச சபையின் தவிசாளர் கலந்துகொண்டுள்ளார் என தகவலகள் வெளியான போதிலும், அவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அந்தக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன..

இக்கூட்டத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் சிலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அக்கரபத்தன தவிசாளர் அன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அந்தக் கட்சித் தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும், நாளை முதல் புலனாய்வு அதிகாரிகள் குறித்த கூட்டத்திற்கு வந்துசென்றவர்கள் குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் குருவிக்கு உறுதிப்படுத்தினார்.

இதன்பின்னர், எவ்வாறாயினும், கொட்டகலை, தலவாக்கலை பிரதேச சபை தவிசாளர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, குறித்த அக்கரபத்தன தவிசாளர் கலந்துகொண்டகூட்டங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் இருவர் மட்டும் தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனையோரை தனிமைப்படுத்துவதற்கான பணிகள் அடுத்த சில நாட்களில் முன்னெடுக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

‘பிரதேச சபை தலைவர் பங்கேற்ற நிகழ்வுகளுக்கு சென்ற ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவர்’

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர் பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது திரட்டப்பட்டுவருகின்றன.

இரு பிராந்திய ஊடகவியலாளர்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிகழ்வுகளுக்கு சென்ற ஏனையவர்களின் விபரம் நாளைக்குள் திரட்டப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க ஐ.நாவின் ஆதரவு உறுதி

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று (2020.12.22) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு உறுதி வழங்கியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் ராஷியா பெண்டிசே மற்றும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதி டிம் சுடன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பல நாடுகள் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கைக்கு இத்தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் உறுதியளிக்க முடியும் என கௌரவ பிரதமருடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நம்பிக்கை வெளியிட்டனர்.

‘இந்த சவால் மிகுந்த காலப்பகுதியில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்கு மிகுந்த கடப்பாட்டுடன் காணப்படுவதாக ஹனா சிங்கர்  குறிப்பிட்டார்.

பெருந்தொகையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும்போது அவற்றை கிடைத்தவுடன் பயன்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கு இலங்கையின் அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் அரச பிரதிநிதிகள் இடையே இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.

‘பல நாடுகளில் கொவிட்-19 இன் ஆபத்தான இரண்டாவது அலை நிலவிவருகிறது’ என சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொற்றை இல்லாதொழிப்பதற்கான ஒரே வழி தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதே எனவும் தெரிவித்தார்.

இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் கொவிட்-19 நோயறிதலுக்கான அணுகலை விரைவுபடுத்துவதற்காக “ACT-Accelerator” எனும் பெயரில் உலகளாவிய கூட்டாட்சியொன்று உருவாக்கப்பட்டது.

COVAX வசதியின் கீழ் கொவிட்-19 நோயறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி தயாரிப்பிற்கேற்ப தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் அணுகுமுறையை துரிதப்படுத்துவதற்கு தகுதிவாய்ந்த நாடுகளின் மக்கள்தொகையில் குறைந்தது 20 வீதத்தினருக்கு தடுப்பூசி வழங்கப்படும். ஆரம்பத்தில், ஆபத்து மிகுந்த தரப்பினருக்கு தடுப்பூசி வழங்கப்படும் நவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தடுப்பூசி வழங்கும் செயற்பாடு மற்றும் பொதுமக்களை அது தொடர்பில் தெளிவுபடுத்துதல் என்பவற்றின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய டிம் சுடன் அவர்கள், முதல் கட்ட தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய யுனிசெப் அமைப்பு ஏற்கனவே ஆதரவு வழங்கியிருப்பதுடன், 20 வீதம் என்ற இலக்கை விட அதிகமான தடுப்பூசிகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் அவர்  பிரதமரிடம் கூறினார்.

கொவிட்-19 தடுப்பூசி குறித்து விளக்கமளித்த வைத்தியர் பெண்டிசே அவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் சமூகமயப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

‘அது ஒரு புதிய தடுப்பூசி’ எனக் குறிப்பிட்ட வைத்தியயர் பெண்டிசே, ‘அது மக்கள் உயிரிழப்பதிலிருந்து பாதுகாக்கும். எனினும், அது பரவலை எந்தளவிற்கு கட்டுப்படுத்தும் என்பது தொடர்பில் கூறிமுடியாது’ எனத் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டு கொண்டதன் பின்னரும் இத்தொற்று குறித்து எவரும் அலட்சியமாக செயற்பட முடியாது என்பது இந்த விசேட கலந்துரையாடலின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆய்வு தொடர்ச்சியாக செயற்படுத்தப்படுவதுடன், தடுப்பூசி மூலம் கிடைக்கும் பாதுகாப்பு எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும் என்பது தொடர்பில் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என்றும் வைத்தியர்கள் கூறியுள்ளனர். அதற்கமைய தடுப்பூசி ஊடாக உடலிலுள்ள வைரஸ் முற்றாக அழிக்கப்படுமா அல்லது வைரஸின் தாக்கம் குறைக்கப்படுமா என்பதும் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

தாக்கத்தை குறைக்கும் செயற்பாடு மாத்திரம் இடம்பெறுமாயின் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபரொருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் வாய்ப்புள்ளது.தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணல் ஆகியவை குறித்து மக்கள் கவனத்தில் கொண்டு செயற்படல் வேண்டும்.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், சுதர்ஷனி பெர்னான்டோபுள்ளே, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.எம்.முணசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 891 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 34 ஆயிரத்து 214 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

வெள்ளக் காடானது பண்டாரவளை நகர்!

0
பண்டாரவளை பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் விற்பனைக்காக...

ஸ்டாலினை சந்தித்தார் விஜய்: ஆரத் தழுவி வரவேற்றார் உதயநிதி!

0
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்...