நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களுக்கு அரசு விளக்கம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின் முன்மொழிவுக்குக் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், உத்தேச திட்டம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் கண்டிக்கு விஜயம் செய்து, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் கலந்துரையாடினர்.

இதன்போதே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனை குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,

“நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் கொள்கை அளவில் தீர்மானித்துள்ளது. ஆனால், இது குறித்துச் சமூகத்தில் சிலர் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த யோசனையின் உண்மையான நோக்கம் குறித்துத் தெளிவுபடுத்தினோம்.” – என்று குறிப்பிட்டார்.

மேலும், தனிநபர் ஒருவரை இலக்கு வைத்தே இந்த யோசனை கொண்டுவரப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் முற்றாக நிராகரித்தார்.

குறிப்பிட்ட ஒரு நீதியரசரையோ அல்லது உயர் நீதிமன்றத்தையோ மட்டும் மையப்படுத்தி இது கொண்டுவரப்படவில்லை என்றும், நாட்டின் அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் நீதி அமைச்சர் விளக்கமளித்தார்.

Related Articles

Latest Articles