‘இனியும் தலைகுனிந்து வாழமுடியாது’ – கர்ணனும் மலையகமும்!
மைத்திரி பக்கம் தாவுகிறார் எஸ்.பி.! நடந்தது என்ன?
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது இருவரும் மனம்விட்டு பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.பி. திஸாநாயக்க, நல்லாட்சியின்போது மைத்திரிபால சிறிசேனவின் விசுவாசியாகவே செயற்பட்டார். இதனால்தான் பொதுத்தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும் தேசியப்பட்டியல் ஊடாக எஸ்.பிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அமைச்சுப்பதவியையும் மைத்திரி வழங்கினார்.
எனினும், மைத்திரிபாலவுக்கு நெருக்கடி ஏற்பட்டு, ராஜபக்ச அலை மீண்டும் உருவானபோது, மைத்திரியை கைவிட்டு ராஜபக்சக்களுடன் சங்கமித்தார் எஸ்.பி. இதனால் சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்பட்டார்.
2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தாலும் எஸ்.பிக்கு இராஜாங்க அமைச்சு பதவிகூட வழங்கப்படவில்லை. அரசியலில் நெடுநாள் அனுபவம் கொண்ட – பல அமைச்சுப் பதவிகளை வழங்கிய எஸ்.பிக்கு மாவட்ட தலைவர் பதவி மட்டும் வழங்கப்பட்டமை பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
அதேபோல் அண்மைக்காலமாக அரசியன் செயற்பாடுகளையும் அவர் விமர்சித்துவருகின்றார். எனவே, விரைவில் அவர் சுதந்திரக்கட்சியில் மீண்டும் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பியுடன் செல்வதற்கு சில மாகாணசபை உறுப்பினர்களும் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதொகா தலைவர் பதவி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தேர்வு செய்யும் சாதாரண பதவியல்ல என்கிறார் செந்தில் தொண்டமான்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவியென்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவு செய்யக்கூடிய சாதாரண பதவியல்ல என்று, அக்கட்சியின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
தனியார்த் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று (11) இடம்பெற்ற நேரடி அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த செந்தில் தொண்டமானிடம், இதொகாவின் தலைவர் யாரென்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கான முழுமையான பதிலை வழங்க, அந்நிகழ்ச்சியில் போதுமான நேர அவகாசம் இருக்காத நிலையில், அது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனும் ஸ்தாபனம், பல அடக்குமுறைகள், சதிகள், துரோகங்களை வென்றே, இன்று வரை செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
“இந்நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம், கட்சியின் தேசிய சபைக்கே இருக்கிறது.
“இவ்வாறான நிலையில், இதொகாவின் தலைவர் யாரென, சமீப காலமாகத் தொடர்ந்து என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. அமரர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்த போதே, இது, கட்சியின் தேசிய சபையினால் முடிவு செய்யப்பட வேண்டிய விடயம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். அவ்வாறு தேசிய சபை கூடாதிருக்கும் நிலையில், கட்சியின் தலைவர் யாரெனத் தொடர்ந்து கேட்டு வருவது, அவர்களின் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளதா எனும் கேள்வி எழுகிறது.
“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எனும் பதவி, கட்சியின் மிக முக்கியமான பொறுப்பாகும். அதனை, கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்கள் வகிக்கிறார். அந்தப் பதவியைப் போன்று மிக சக்திவாய்ந்த பதவிதான் தலைவர் பொறுப்பாகும். அந்த வகையில், தேசிய சபை தேர்ந்தெடுக்கும் பட்சத்திலும் காலி முதல் மொனராகலை வரையிலான அடிமட்டத் தொண்டர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திறமையான நபர், கட்சியின் தலைவராக, கண்டிப்பாக ஒரு நாள் தேர்ந்தெடுக்கப்படுவார்.
“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திகாம்பரமா என்று, அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாரிடம் நான் கேட்டால், அவருடைய பதில் என்னவாக இருக்குமோ, அவ்வாறே நானும் பதில் வழங்கியுள்ளேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கௌரவ ஜீவன் தொண்டமான் என்பதை, இலங்கையில் உள்ள அனைவரும் அறிவார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில், அவர் அவ்வாறான கேள்வியொன்றை எழுப்புவது, வேலுகுமாரின் அரசியல் அறியாமையையே புலப்படுத்துகிறது.
“காங்கிரஸ் என்பது, ஒரு கூட்டுச் செயற்பாடாகும். அதிலுள்ள அனைவரையும், அமரர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர்களாகத்தான் உருவாக்கி இருக்கிறார். அதனால், அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் ஆளுமைமிக்க நபரொருவர், கண்டிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமது மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டதென்று, இதொகா எடுத்த முடியற்சிகளுக்கு எதிராக, ஏப்ரல் 4ஆம் திகதி வரை கூவிக்கொண்டிருந்த தமிழ் அரசியல்வாதிகள், ஆயிரத்தை வழங்குவதற்கு 5ஆம் அனுமதி கிடைத்தவுடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அந்த வெற்றியின் பங்காளர்களாக இணைந்து மார்தட்டிக்கொள்வது, அவர்களின் கீழ்த்தரமான அரசியல் செயற்பாட்டையே வெளிப்படுத்துகிறது” என, செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜீவன் மன்னிப்பு கோரியேஆகவேண்டும் – வேலுகுமார் வலியுறுத்து
” தாய்குலத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான் பகிரங்கமாக மன்னிப்புகோர வேண்டும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதிச்செயலாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தாய்குலத்தை கொச்சைப்படுத்தியுள்ளார். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தவறு செய்துவிட்டு அதற்கு மன்னிப்பு கோருவதற்கு பதிலதாக தவறு இடம்பெற்றது என்பதை மட்டும்தான் ஜீவன் ஏற்றுக்கொண்டுள்ளார். செய்த தவறுக்காக அவர் மன்னிப்பு கோரவில்லை. இதனையும் கண்டிக்கின்றேன். அவர் நிச்சயம் மன்னிப்பு கேட்டாக வேண்டும்.” – என்றார்.
“வேலை நாட்கள் குறைக்கப்பட்டால் நாளொன்றுக்கு 2 கிலோ கொழுந்துதான் பறிக்கப்படும்”
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழில் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும். இதற்கான பொறுப்பை நாம் ஏற்கின்றோம்.” – என்று இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் வெற்றியாகும். இதற்கு தற்போது பலர் உரிமை கோருகின்றனர். ஆனால் சம்பள உயர்வை யார் பெற்றுக்கொடுத்தது என்பது மக்களுக்கு தெரியும்.
750 ரூபா நாட் சம்பளமாக கிடைக்கும்போது செய்தவேலையைதான் தற்போதும் செய்ய வேண்டும். தொழில் சுமைகள் அதிகரிக்கப்படக்கூடாது. அவ்வாறு அதிகரிக்கப்பட்டால் அதற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே. முன்னரை செய்த வேலையைவிடவும் துளியளவேனும் அதிகம் செய்யவேண்டாம் என தொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன், தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட்டால் அதனை எவ்வாறு தொழிற்சங்க ரீதியில் எதிர்கொள்ள வேண்டும் என்பதும் எமக்கு தெரியும். வேலை நாட்கள் குறைக்கப்பட்டால் ஒரு நாளைக்கு 2 கிலோ கொழுந்துதான் எடுப்போம். இது தொடர்பில் கம்பனிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. எனினும், வேலை நாட்கள் குறைக்கப்படாது. இதற்கான பொறுப்பை நாம் ஏற்கின்றோம்.” – என்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு ஏப்ரல் 17 இல் – பிரிட்டனில் 8 நாட்கள் துக்க தினம்
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு ஏப்ரல் 17 ஆம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் (99), நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவர் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நெடுங்காலம் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளவரசர் பிலிப் மரணத்துக்கு உலகெங்கிலும் உள்ள மன்னர்கள், அரச தலைவர்கள் முன்னாள் மற்றும் இந்நாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் என பல தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பான நிகழ்வுகளுக்கான அறிவிப்பை அவரது மனைவியும் இங்கிலாந்து ராணியுமான இரண்டாம் எலிசபெத் வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 17 ஆம் திகதி மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெறும். இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்படும். மேலும் 17-ம் திகதி மாலை 3 மணிக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 30 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் நேரம் என்பதால் வெகுவிமர்சையாக ஊர்வலம் மற்றும் அரசு மரியாதை எதுவும் முன்னெடுக்கப்படாது.
வரும் 17-ம் திகதி மாலை வின்ட்சர் கோட்டையில் இருந்து உரிய மரியாதையுடன் இளவரசர் பிலிப்பின் உடல் அருகாமையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு எடுத்துச்செல்லப்படும்.
இறுதிச்சடங்கில் ராணுவத்தினரே பங்கேற்பார்கள், குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இளவரசரின் தனிப்பட்ட அதிகாரிகளும் பங்கேற்பார்கள்.
இந்த ஊர்வலம் சரியாக 3 மணிக்கு செயிண்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு சென்றடையும், அதன் பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்படும். இறுதி ஊர்வலம் முடியும் வரையில் தேவாலய மணிகள் முழங்கும். அத்துடன் துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை செலுத்தப்படும்.
இறுதிச்சடங்குகளில் பங்கேற்கும் நபர்களின் பட்டியல் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்காளிகளுடன் மஹிந்த 19 ஆம் திகதி முக்கியத்துவமிக்க சந்திப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பின்போது எட்டப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே கூட்டணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரசில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து மே தின நிகழ்வை தனியாகவும், ஆளுங்கூட்டணியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனிமாகவும் மேதின நிகழ்வுகளை நடத்துவதற்கு தயாராகிவருகின்றமை ஆளுந்தரப்புக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல மாகாணசபை தேர்தல் முறைமை தொடர்பில் ஆளுந்தரப்பால் முன்வைக்கப்பட்ட புதிய யோசனைக்கு 11 பங்காளிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுங்கட்சி பங்காளிகளை பிரதமர் சந்திக்கின்றார்.
கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு இதன்போது முடிவு கட்டப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது
பாக்கு நீரிணையை நீத்திக்கடந்து விமானப்படை வீரர் சாதனை
இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள நாடு திரும்பிய இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தர படைத்துள்ளார். இது ஆசிய சாதனையாகவும் அமைந்துள்ளது.
இச்சாதனையை புரிவதற்கு (59.3 கிலோ மீற்றர்) அவருக்கு 28 மணித்தியாலங்களும் 19 நிமிடங்களும் 43 வினாடிகளும் எடுத்துள்ளது.
இதற்குமுன்னர் 1971 ஆம் ஆண்டு குமார் ஆனந்தன் என்பவர் பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜீவனுக்கு நா அடக்கம் தேவை’ – மலையக மக்கள் முன்னணி வலியுறுத்து
இ.தொ.காவின் பாசறையில் வளர்ந்து வந்தவன் என்ற அடிப்படையில் இன்றைய தலைவர்களின் சொற் பிரயோகம் அனைத்து தாய்மார்களையும் அவமதிக்கின்ற ஒரு செயலாகும். இதனை நான் வண்மையாக கண்டிக்கின்றேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (11.04.2021) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ள கருத்து அனைத்து தாய்மார்களையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.இதனை மலையக மக்கள் முன்னணி என்ற வகையில் நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பாசறையில் வளர்ந்து வந்தவன் என்ற அடிப்படையில் இது மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயமாக இருக்கின்றது.நாங்கள் மலையகத்தின் தந்தை என எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அமரர் சௌமிய மூர்த்தி தொண்டாமானின் பாசறையில் மிகவும் கௌரவமாக வளர்தெடுக்கப்பட்டோம்.அவர் எங்களை மிகவும் கண்ணியமான மரியாதைக்குரிய அரசியலை செய்ய வேண்டும் என்பதை கற்பித்திருக்கின்றார்.
அதே போல அமரர் ஆறுமுகன் தொண்டமான் இந்த அமைப்பை மிகவும் பொறுப்புடன் கட்டி வளர்த்து வந்திருக்கின்றார்.அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் நான் அந்த பாசறையில் இருந்து வெளியேறிய போதிலும் இதுவரையில் நான் அந்த அமைப்பை எந்த சந்தர்ப்பத்திலும் விமர்சனம் செய்ததில்லை.
அதற்கு காரணம் நான் அந்த பாசறையில் வளர்ந்து வந்தவன் என்பதே.பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ஒரு மூத்த அரசியல்வாதி அவர் இந்த நாட்டில் முக்கிய அமைச்சராக பதவி வகித்தவர்.எனவே எந்த காரணம் கொண்டும் யாரையும் கொச்சைப்படுத்த முடியாது.
அதிலும் குறிப்பாக யாருடைய தாயாராக இருந்தாலும் அவர்களை கொச்சைப்படுத்த முடியாது.அனைத்து தாய்மார்களையும் எங்களுடைய தாயாராக பார்க்க வேண்டும் என்பதே அனைவருடைய கருத்தாகும்.எனவே இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடைபெறக் கூடாது என்பதுடன் இதன் மூலம் ஜீவன் தொண்டமான் தனது நாவை அடக்கி பேச வேண்டும்.என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மலையக மக்களுக்கு தலைமை தாங்குகின்றேன் இளைஞர்களை வழிநடத்துகின்றேன் என்று வாய்ச் சொல்லில் வீரராக இல்லாமல் அதனை செயலிலும் காட்ட வேண்டும்.மலையக இளைஞர்களுக்கு பிழையான வழிகாட்டலை செய்துவிடாதீர்கள்.
இந்த கூட்டத்தில் ஜீவன் பேசுகின்ற விடயத்தை கேட்டு கைதட்டுகின்றவர்களும் அதனை சிந்தித்திருக்க வேண்டும்.இவ்வாறான விடயங்களை ஊக்கப்படுத்த கூடாது.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தலை குனிந்து வாழ்பவர்கள் நிமிர கூடாதா? – ‘கர்ணன்’ படம் மலையகத்துக்கும் பொருந்தும்
நடிகர் – தனுஷ்
நடிகை – ரஜிஷா விஜயன்
இயக்குனர் – மாரி செல்வராஜ்
இசை – சந்தோஷ் நாராயணன்
ஓளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
பொடியன்குளம் கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ். இவர்கள் ஊரில் பஸ் நிறுத்தம் கிடையாது. இங்கு இருக்கும் மக்கள் வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் மேலூர் எனும் ஊருக்கு சென்று பேருந்து ஏற வேண்டும். மேலூர் ஊரில் இருக்கும் சிலர் பஸ் ஏற வந்த கௌரியை அசிங்கப் படுத்துகிறார்கள்.
இதனால் கோபமடைந்த தனுஷ், அவர்களை வெளுத்து வாங்குகிறார். பதிலுக்கு தனுஷை பழிவாங்க நினைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு செல்ல நிற்கும்போது, பஸ் நிற்காமல் செல்கிறது. இதனால் அந்த பஸ்ஸை அடித்து நொறுக்குகிறார்கள்.
இதை விசாரிக்க வரும் பொலிஸ் அதிகாரி நட்டி, ஊர் பெரியவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைக்கிறார். இதையறிந்து வரும் தனுஷ், காவல் நிலையத்தை துவம்சம் செய்கிறார். கோபமடைந்த நட்டி, தனுசையும் ஊர் மக்களையும் பழிவாங்க நினைக்கிறார். இதிலிருந்து தனுஷ் தப்பித்தாரா? ஊர் மக்களை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் தனுஷ், படத்தில் கர்ணனாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கர்ணனாக மனதில் நிற்கிறார். அசுரனை தாண்டி வேற ஒரு தனுஷை பார்க்க முடிகிறது. நாயகியாக வரும் ரஜிஷா விஜயன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
குணசித்திர கதபாத்திரத்தில் நடித்துள்ள லால், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். பாட்டியிடம் திருடும் காட்சியில் கவர்கிறார். அதேபோல் யோகிபாபுவை நகைச்சுவைக்காக பயன்படுத்தாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தி இருப்பது அருமை. தனுஷின் அக்காவாக வரும் லட்சுமி பிரியா பாசம் கோபம் என கைத்தட்டல் வாங்குகிறார்.
பொலிஸ் அதிகாரியாக வரும் நட்டி நட்ராஜ், நடிப்பில் பளிச்சிடுகிறார். போலீஸ் அதிகாரிக்கு உண்டான மிடுக்கான கதாபாத்திரத்தை திறம்பட செய்தியிருக்கிறார்.
1990-களில் நடப்பதுபோல் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கிராமத்து மக்களின் வாழ்வியலையும் கஷ்டங்களையும் கண் முன் நிறுத்துகிறார். தலை குனிந்து வாழ்பவர்கள் நிமிர கூடாதா, கந்தசாமி மகனுக்கு கண்ணபிரான் பெயர் இருக்கலாம், மாடசாமி மகனுக்கு கர்ணன் பேர் இருக்க கூடாதா… என வசனங்கள் படத்திற்கு பலம். சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட பேச வைத்து அழகு படுத்தி இருக்கிறார்.
கதாபாத்திர தேர்வும் அருமை. தனுஷ் போன்ற மாஸ் நடிகர் படத்தில் இருந்தாலும், அவருக்காக கதையில் எந்தவித மாற்றமும் செய்யாமல், தான் சொல்லவந்ததை நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ். மெதுவான திரைக்கதை படத்திற்கு பலவீனம்.
படத்திற்கு பெரிய பலம் சந்தோஷ் நாராயணன் இசை. பாடல்களில் அதிக கவனம் செலுத்திய இவர், பின்னணி இசையில் ஒரு சில இடங்களில் கவனித்து இருக்கலாம். கிராமத்து அழகை மாறாமல் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.
அதேவேளை, மலையகத்திலும் பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் தலைநிமிரவேக்கூடாது என்பதுதான் சிலரின் நினைப்பு. அதனை உடைத்தெரிய வேண்டும். அதற்காக கர்ணனைப்போல வன்முறையைக் கையாய தேவையில்லை. அறவழியில் சாதிக்கலாம்.





