Home Blog Page 3658

மலையக மக்கள் முன்னணியை வெளியேற்றுங்கள் – சிவநேசன் வலியுறுத்து

” இரட்டை வேடம் பூண்டுள்ள மலையக மக்கள் முன்னணியை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேற்றுவதற்கு அதன் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் வலியுறுத்தினார்.

ஜனநாயகத்துக்கு சாவுமணி அடித்து சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பி. தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு பங்காளிக்கட்சியான மலையக மக்கள் முன்னணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனினும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் அரவிந்தகுமாரை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையை மலையக மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ளது.

இதனை வன்மையாகக் கண்டித்துள்ள சிவநேசன், கூட்டணி கொள்கைக்கு எதிராகச்செயற்படும் மலையக மக்கள் முன்னணியை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கூட்டணியாக போட்டியிட்டதால்தான் பொதுத்தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளரால் வெற்றிபெற முடிந்தது என சுட்டிக்காட்டும் அவர், முடிந்தால் மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்டுமாறும் சவால் விடுத்துள்ளார்.

அதேவேளை, தொழிலாளர் தேசிய சங்கம், முன்னணிக்குள்ள பலத்தை சிலர் பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாலும், கொள்கைமாறி செயற்படுவதாலும் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் முன்னணி தனித்து போட்டியிட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் மலையக மக்கள் முன்னணியும் அதன் தலைவரும் இரட்டை வேடம் போடுகின்றனரா, அரச ஆசியுடன் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் சிவநேசன்.

சுகாதார அமைச்சரின் கணவருக்கும் கொரோனா தொற்று

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவர் காஞ்சன ஜெயரத்னவுக்கும் கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த அதிகாரிகள் நேற்று மாலை முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுக்கு உள்ளான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு சிகிச்சைக்காக நேற்று மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சக வளாகத்தில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டது.

இராணுவத் தளபதி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் எச்சரிக்கை

ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது.

இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி காசி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் தீராப்பகை உருவானது.‌

காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்ப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது.‌

இந்த நிலையில் ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

அயத்துல்லா அலி காமெனியின் அதிகாரபூர்வ வலைதளத்தில், டிரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கையில் அவரது தலைக்கு மேல் போர் விமானம் பறப்பது போன்ற ஒரு புகைப்படம் பகிரப்பட்டிருக்கிறது. அந்த பதிவில் பழிவாங்கப்படுவது நிச்சயம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.‌

அதேபோல் அயத்துல்லா அலி காமெனியுடன் தொடர்புடைய டுவிட்டர் கணக்கிலும் இந்த புகைப்படம் பகிரப்பட்டது.

அந்தப் பதிவில் சுலைமானியைக் கொன்றவர். இவர் தான் சுலைமானியை தாக்க உத்தரவிட்டார். டிரம்ப் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்’’ என பாரசீக மொழியில்‌ கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. அதேசமயம் இந்த டுவிட்டர் கணக்கு அயத்துல்லா அலி காமெனியுடையது இல்லை என்றும் போலியான டுவிட்டர் கணக்கு என்றும் டுவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளது.

ஆயிரம் ரூபாவுக்காக இறுதி அஸ்திரத்தை ஏவுமா இ.தொ.கா?

பெருந்தோட்ட மக்களின் சம்பள நிர்ணயம் மற்றும் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. அதனை சற்று பின்னோக்கி பார்ப்பதற்கு முன் பிந்திய தகவல் ஒன்றைப் பதிவு செய்வது சிறப்பு. தோட்டத் தொழிலாளர்களுக்கு தினச்சம்பளமாக 1025 ரூபாவை வழங்க முன்வந்திருக்கிறது தோட்ட முதலாளிமார் சம்மேளனம். அப்பாடா..! அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது என்று யாரும் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து விடாதீர்கள்.

இது ஒன்றும் அடிப்படைச் சம்பளமல்ல, இதர கொடுப்பனவுகளுடன் கூடிய சம்பளமேதான். ஆகக்கூடினால் தற்போது 700 ரூபாவாக இருக்கும். அடிப்படைச் சம்பளம் இனி 725 ரூபாவாக உயரலாம். அவ்வளவுதான். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் எதிர்பார்ப்பு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் என்பதே. அதனையே அவரது புதல்வரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் வலியுறுத்துகின்றார். இதன் பின்னணியில் இ.தொ.கா. தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் முன்மொழிவை ஏற்குமா? அல்லது கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள முன்வருமா? ஏற்கனவே இ.தொ.கா. இப்படியொரு தீர்மானத்தை எடுப்பது பற்றி குழப்பத்தில் இருக்கின்றது. ஏனெனில் கூட்டு ஒப்பந்த சூத்திரதாரியே இ.தொ.கா.தான்.

1865இல் கொண்டுவரப்பட்ட இந்திய தோட்டத் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களின் சம்பள முறைமைகளை ஒழுங்குபடுத்த உதவியது. இதன் மூலம் முதலாளி, சம்பளம் என்னும் சொற்பிரயோகங்கள் நடைமுறைக்கு வந்தன. செக்ரோல் என அழைக்கப்படும் பதிவேடு ஆரம்பமானது. இதன் பின்னர் 1927 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குறைந்தபட்ச சம்பள (இந்திய) சட்டத்தினை அடிப்படையாக கொண்டு 1941இல் சம்பளச் சபைகள் சட்டம் வடிவமைக்கப்பட்டது. இச்சபையே தொழிலாளர்களது சம்பளத்தை தீர்மானிக்கும் சகல உரிமைகளையும் கொண்டிருந்தது.

எனினும் அன்றைய தோட்டக் கட்டமைப்பின் செயற்பாடுகளின் பின்புலத்தில் இலவச வதிவிடம், குடி நீர், மலசலகூடம், அரிசி, மா விநியோகம், 10 வயது வரை குழந்தைகளுக்கு இலவச உணவு, பேரீச்சம்பழம், சலவை சிகையலங்காரம், சுகாதார ஏற்பாடுகள் எல்லாமே கம்பனி தரப்புகளாலேயே வழங்கப்பட்டது. இதனால் குறைந்த சம்பளமே தீர்மானிக்கப்பட்டு வந்தது.

நாடு சுதந்திரமடைந்த பின்னரும் 1972 வரை இதே முறைமையை பின்பற்றி வந்தது கம்பனி தரப்பு. 1972 அதுவரை ஆங்கிலேயர் வசமிருந்த பெருந்தோட்டங்கள் அரசுடைமையாக்கப்பட்டன. இதன் பின்னரும் சில நிர்வாக நடவடிக்கை மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டு அரசு சம்பள நிர்ணய சபைக்கூடாகவே சம்பளத் தொகை நிர்ணயமானது.

இச்சபையில் அரசு துறைசார் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. இதனால் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்படும் சம்பளக் கோரிக்கைகள் தோல்வியடைந்து வந்தன. அன்று அமைச்சரவையில் வீற்றிருந்த அமரர் செளமியமூர்த்தி தொண்டமானுக்கு இது சங்கடத்தை தந்தது. எனினும் இம்முறையை மாற்றக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.

அதற்காக அவர் 1992 ஆம் ஆண்டு வரை காத்திருக்க நேர்ந்தது. பிரேமதாச அரசாங்கம் இந்த ஆண்டில் தான் பெருந்தோட்டங்களைத் தனியார் கம்பனிகளுக்கு நீண்டகால குத்தகைக்கு விடும் முடிவை எடுத்தது. ஆங்கிலேய கம்பனிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்கியதாலேயே இத்தீர்மானம் அப்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.

இதில் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானுக்கும் உடன்பாடு இருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அவர், தோட்டத் தொழிலாளா்களின் சம்பள நிர்ணயம் சம்பந்தமான கூட்டு ஒப்பந்த முறைமையை முன்மொழிந்தார். இதற்கு பெருந்தோட்டங்களை குத்தகைக்கு பெற்றுக்கொண்ட கம்பனிகளும் உடன்பட்டன. எனவே இதற்கான சட்டவரைபு தயாரானது. இது அமைச்சரவை பத்திரமாக சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றது. பின்னர் பாராளுமன்றத்தில் இது முன்மொழியப்பட்டு சட்டரீதியான ஒப்பந்தமானது.

கூட்டு ஒப்பந்த முறைமை நீண்டகாலத்துக்கு முன்பே பல சர்வதேச நாடுகளில் அறிமுகமாகியிருந்தது. இலங்கையிலும் சில தனியார் வங்கிகள், வர்த்தக நிறுவனங்களில் நடைமுறையில் இருந்து வெற்றியும் கண்டிருந்தது. ஏனெனில் இவ் வொப்பந்தத்தின் மூலம் தொழில் உறவுகளை ஒழுங்கமைப்பது, தொழிலாளர்களுக்கான பங்கினை உறுதிப்படுத்துவது போன்ற நியாயமான ஷரத்துக்கள் இருக்கவே செய்கின்றன. ஒப்பீட்டளவில் இது முற்போக்கான அம்சமாகவே காணப்படுகின்றது.

அச்சமயத்திலும் கூட்டு ஒப்பந்தம் பற்றிய காரசாரமான விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிற்சட்டத்தின் ஒரு குறை நிரப்பேயன்றி தொழிற் சட்டத்திற்கான பதிலீடு அல்ல என சட்டத்தரணியும் தொழிற்சங்கவாதியுமான இ. தம்பையா 2017ஆம் ஆண்டு நீதிமன்றில் வாதிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1992ஆம் ஆண்டு சம்பள நிர்ணயத்துக்கான கூட்டு ஒப்பந்தமே நடைமுறைக்கு வந்தது. 2003ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த விடயங்களை உள்ளடங்கிய கூட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. எனினும் தொடர்ந்து வந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தத்துக்கு முரணாக கம்பனி தரப்பு நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏலவே தொழிலாளர்கள் அநுபவித்து வந்த உரிமைகள் சூசகமாக பறிக்கப்பட கூட்டு ஒப்பந்தத்தை சாதனமாக பயன்படுத்துவதாகவும் தொழிற்சங்கத்தரப்பு குரல் எழுப்பத் தொடங்கின.

உதாரணத்துக்கு, 1951ஆம் ஆண்டு 14அம்ச உடன்படிக்கையில் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை சேவையிலிருந்து நீக்குவதை தடுப்பதற்காக இருந்த ஏற்பாடுகள் 2003ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி உள்ளடக்கப்படாமலே விடப்பட்டமை அவதானிப்புக்குரியது. கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களுக்கு சாதகமான அம்சங்களை தோட்ட நிர்வாகங்களே அநுபவித்து வருவதாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

இதனை தடுப்பதற்கு திராணியற்ற நிலையிலேயே ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க தரப்புகள் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் சம்பந்தப்படாத தரப்புகள் இதில் தலையிட முடியாது என்பதை நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. ஆனால் கம்பனி தரப்போ அரசாங்கம் தன்னிச்சையாக அடிக்கடி தலையிடுவதால் தாம் அசெளகரியங்களுக்கு உள்ளாவதாக பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டுகின்றது. எனினும் யாமறிந்தவரை அரசாங்கம் மத்தியஸ்த நிலையில் நின்று சமரசம் செய்யும் தரப்பாகவே அன்று முதல் இன்றுவரை இருந்து வருகிறது.

2016களில் கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமான எதிர்வலைகள் தலைதூக்கியிருந்தன. அமரர் ஆறுமுகன் தொண்டமான் அதிரடியாக விடுத்திருந்த ஓர் அறிக்கையில் கூட் டு ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படும் என்றார். கம்பனி தரப்பு மசியவில்லை. இதனையே பின்னால் கூட்டு ஒப்பந்த முறைமைக்கு மாற்றாக ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கம்பனி தரப்பில் கூறப்பட்டது. ஆனால் எத்தரப்பும் எதனையும் செய்தபாடில்லை.

கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இ.தொ.காவே அதிகமான அங்கத்தவா்களைப் பிரதிநித்துவப் படுத்தும் பொிய சக்தியாக உள்ளது. அது கூட்டு ஒப்பந்தத்தை தமது பலப்பிரயோக கருவியாக பயன்படுத்த முயலவே செய்யும். அதேவேளை அதன் சறுக்கல்களை மூடி மறைக்கவும் இதனையே கவசமாகவும் கொள்ள முயலும். ஏனெனில் சம்பளத்தை மட்டுமே பெருந்தோட்டப் பிரதேசங்கள் எதிா்கொள்ளும் பாாிய பிரச்சினையாக உருமாற்றம் செய்யப்பட்டு நெடுநாளாயிற்று. தோ்தல் வாக்குறுதியாக சம்பள விவகாரமே முதன்மைப்படுத்தப்பட்டு வந்துதுள்ளது. இவ்வாறான வாய்ப்பை இ.தொ.கா. இலகுவில் கைவிடுமா?

பன். பாலா

நன்றி – தினகரன்வாரமஞ்சரி

சொத்துகள் முடக்கப்படும் – பயணத்தடை வரும்! இலங்கைக்கு ஐ.நா. ஆணையாளர் எச்சரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது இடம்பெற்றதாக நம்பப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையர்கள் மீது பயணத்தடை விதிக்கப்படுவதற்கும் இலங்கையர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதற்கும் சாத்தியமுள்ளதாக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பாக வெளியிடவுள்ள புதிய அறிக்கையிலேயே இந்தக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முன்னணி ஆங்கிலப்பத்திரிகைக்கு கருத்துவெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ‘ எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இன்னமும் உறுதிப்படுத்தப்படாதவர்கள் குறித்தே ஐநா ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ‘ எனக் கூறியுள்ளார்.

” அந்த அறிக்கையிலுள்ள சில விடயங்கள் இந்தத்தருணத்தில் முற்றுமுழுதாக அவசியமற்றவை என நாம் கருதுகின்றோம். எம்மை தவறுகாண முயலும் எந்த நாட்டை விடவும் இலங்கை மிகவும் அமைதியானதாகவும் ஸ்திரமானதாகவும் உள்ளதென நாம் உணர்கின்றோம். அது ( அறிக்கை ) இறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அரசாங்கம் பொதுமக்களுக்கு அதனைப் பகிரங்கப்படுத்தும் எனவும் வெளிவிவகாரச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி – குளோப் தமிழ்

ஓரிரவில் இலட்சாதிபதியாகி புகழடைந்த சுக்ரா முனவ்வர் வழங்கிய நேர்காணல்

நன்றி – தினகரன் வாரமஞ்சரி

நேர்காணல் – ஷம்ஸ் பாஹிம்

ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாடியும், ஆடியும் புகழ்பெறுபவர்களிடையேகல்வித் திறமையால் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ள சுக்ராவிற்கு வெறும்
17 வயதுதான். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற்ற லட்சபதி போட்டியில் இவர் விடையளிக்கும் அழகு, சிங்கள இலக்கியம் பற்றிய ஆழ்ந்த அறிவு, ஒவ்வொரு விடையின் போதும் அது பற்றி அளிக்கும் விளக்கம், சிங்கள புலமை என இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

முழு நாடும் அவரை பாராட்டுகையில் அவர் பற்றிய விமர்சனமும் எழாமலில்லை. மார்க்கத்திற்கு முரணாக அவர் நடந்து கொண்டதாக பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது பற்றியெல்லாம் சுக்ராவிடம் கேட்டோம்.

கே: ஒரே இரவில் பணக்காரியாகி விட்டீர்கள். உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள்?

பதில்: எனது குடும்பத்தில் தாய் தந்தை தவிர எனக்கு இரு சகோதரிகள் ஒரு தம்பி இருக்கிறார். தந்தை இலிகிதர். கடந்த 5 வருடங்களாக சர்க்கரை நோயினால் வீட்டோடு இருக்கிறார். அம்மாதான் வீட்டின் அனைத்து தேவைகளையும் கவனிக்கிறார். பொருளாதார கஷ்டம் காரணமாக சகோதரிகளுக்கு கல்வித் துறையில் நீடிக்க முடியவில்லை. நான் உயர்தரம் கற்கிறேன். வறுமையை தோற்கடித்து தாயின் சுமையை இறக்கி வைக்க நான் அர்ப்பணிப்புடன் கற்று வருகிறேன். அந்த அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாகவே இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்கிறேன்.

கே: லட்சாதிபதி போட்டியில் கலந்து கொள்ள என்ன காரணம்?

பதில்: குடும்ப வறுமை நிலைதான் இதில் பங்கேற்கக் காரணம். ஓன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மடிக்கணினி ஒன்று தேவை. தந்தையிடம் அதற்கான வசதி இல்லை. தாயிடம் நான் கேட்கவில்லை. கணனி வாங்க பணம் இல்லை. மாதாந்தம் தவணை அடிப்படையில் வாங்கினாலும் செலுத்தமுடியுமா என்று சந்தேகம். இந்த நிலையிலே போட்டியில் பங்கேற்றேன். நான் சிறுவயது முதல் திடநம்பிக்கையுடன் செயற்படுபவள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

கே: நீங்கள் அதிகமாக பெண் உரிமை பற்றி பேசினீர்கள். பெண்களின் சக்தி பற்றி வெகுவாக கதைத்தீர்களே?

பதில்: ஆம் பெண்களுக்கு எல்லா இடங்களிலும் உரிய இடம் வழங்கப்பட வேண்டும். ஆதிகமான உயர் பதவிகளில் ஆண்கள்தான் இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஆண்-பெண் ஏற்றத்தாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாம் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றாக வாழும் நிலை உருவாக வேண்டும். நாட்டுப்பற்று அனைவருக்கும் இருக்க வேண்டும். இன்றிருக்கும் பாகுபாடுகள், பிரிவினைகள் என்பவற்றுக்கு முடிவு காணவேண்டும். நாளைய சந்ததி ஒற்றுமையாக வாழவேண்டும்.

கே: சிங்கள மொழியில் இவ்வளவு தேர்ச்சி எவ்வாறு சாத்தியமாகிற்று.?

பதில்: முன்பள்ளி முதல் சிங்கள பாடசாலைகளில்தான் கற்றேன். சிங்கள மொழியை போன்றே நல்லிணக்கத்தையும் பாடசாலையில் கற்றேன். எனது பாடசாலைதான் என்னை புடம்போட்டது. நான் உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவை தெரிவு செய்தாலும் எனக்கு சிங்கள இலக்கியத்தின் மீது அலாதியான ஆர்வம் இருக்கிறது. இலக்கிய நூல்களைத் தேடித்தேடி படிப்பேன். சிங்கள காவியங்கள் அற்புதமானவை. அவை எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

கே: உங்களை மலாலா யூசுபுடன் சிலர் ஒப்பிடுகின்றனர்.?

பதில்: அவரைப் பற்றி அறிந்திருந்தாலும் அவரின் நூல்களை இதுவரை வாசித்தது கிடையாது. நான் மலாலா அல்ல . அவர் தனது நிலைப்பாட்டை பிரபலப்படுத்த தன்னை அர்ப்பணித்தார். நான் எனது நிலைப்பாட்டை சமூகத்தில் பரப்ப பாடுபடுவேன்

கே:பெற்றோர் உங்களுக்கு வழங்கியுள்ள சுதந்திரத்தை முறைகேடாக பாவிக்காமல் நியாயமாக நடக்கிறீர்களா?

பதில்: நான் சிங்கள மொழி பாடசாலையில் சிங்கள சகோதரிகளுடன் கற்கிறேன். அவர்கள் என்னுடன் மிக அன்பாக பழகுவார்கள். என்னை எனது தாய் தான் மோட்டார் சைக்களில் அழைத்து வருவார். மேலதிக வகுப்புகளுக்கும் அவர் தான் அழைத்துச் செ்லவார். அதே போல் பெற்றோர் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் ஒரு போதும் மீறியது கிடையாது.

கே: உங்களை பலரும் புகழ்ந்தாலும் சில விமர்சனங்களும் வரத்தான் செய்கிறது. அது பற்றி?

பதில்: ஆம். நானும் அறிந்தேன். சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி சிலர் விமர்சித்திருந்தனர். முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும என்னை வீடு தேடி வந்து பாராட்டி பரிசில்கள் தந்தார். அவரின் மனைவியும் வந்திருந்தார். அவர் எனக்கு தந்தை மாதிரி. அவர் என் தோளை தட்டி பாராட்டியதை சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். எனது பெற்றோரும் அந்த சமயம் அங்கிருந்தார்கள். அவர் தவறான நோக்கில் அவ்வாறு நடக்கவில்லை. நானும் அதனை தவறாக கருதவில்லை. எமது குடும்பம் வறுமையில் கஷ்டப்பட்ட போது விமர்சனம் செய்யும் யாரும் உதவ வரவில்லை. இன்று மார்க்கம் என்ற பெயரில் என்மீது சேறு பூச முயல்கிறார்கள். நான் ஒரு போதும் எனது மார்க்கத்தை எதற்கும் விட்டுக் கொடுத்ததில்லை.

99 வீதமானவர்கள் எனது திறமைகளை புகழ்கையில் ஒரு வீதத்திற்கும் குறைவானவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை நான் பொருட்டாக கொள்ளவில்லை. அதனைஎனது முன்னேற்றத்திற்கு தடையாக கருதவில்லை. அவை என்னை இன்னும் ஊக்கப்படுத்துகின்றன. எனது மதத்திற்கு முரணான எதனையும் நான் செய்ய மாட்டேன். எனது மதத்தினால் எனக்கு அழுத்தம் வரும் எதனையும் நான் சொல்லவோ செய்யவோ இல்லை.

எனது தனிப்பட்ட வாழ்வில் இஸ்லாத்திற்கு முரணான எதனையும் இது வரை செய்ததில்லை. முன்னேறிச் செல்ல எனது மார்க்கத்தில் எந்த தடையும் கிடையாது. சிலர் பார்க்கும் விதத்தில் தான் தவறு, கோளாறு இருக்கிறது. இந்தத் தடைகளை தகர்த்து முன்னேறுவது சவால் நிறைந்தது. அதற்காக குரல் கொடுக்கவும் முன்னிற்கவும் தயங்க மாட்டேன்

கே: சுக்ரா ஒரே இரவில் பிரபலமடைந்து விட்டீர்கள். இந்த பிரபலம் உங்கள் கல்விக்கு தடையாக அமையாதா?

பதில்: நிச்சயமாக இல்லை. நான் சிறுவயது முதல் கஷ்டப்பட்டு வளர்ந்தவள். கல்வித்துறையில் மேலும் முன்னேறி சிறந்த பெறுபேறு பெற வேண்டும். எனது பெற்றோரின் கஷ்டங்களை போக்க வேண்டும். எனது இலட்சியங்கள் நிறைவேறும் வரை ஓடிக்கொண்டே இருப்பேன். எனது திறமைக்கு இந்தப் போட்டி களமமைத்துக் கொடுத்தது. இதனை படிக்கல்லாக பயன்படுத்தி இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டும்.

கே: உங்களுக்கு பாராட்டுகளும் பரிசில்களும் அள்ளிக் கிடைப்பதாக அறிகிறோம்.

பதில்: ஆம் பலரும் நேரிலும் தொலைபேசியிலும் பாராட்டி வருகிறார்கள். பரிசில்களும் கிடைத்து வருகிறது. நான் ஆசைப்பட்ட மடிக்கணினி கூட அன்பளிப்பாக கிடைத்துள்ளது. மட்டில்லாத மகிழ்ச்சியில் இருக்கிறேன். சில அரசியல்வாதிகள் கூட வந்து பாராட்டினார்கள். பிக்குமார்கள் கூட என்னை பாராட்டியது முஸ்லிம் பெண்ணாக பெருமை தருகிறது. வீடு தேடி பலரும் வருகிறார்கள். இன,மத பேதமின்றி சகலரும் இந்த வெற்றியை கொண்டாடுவது பெருமை தருகிறது

மகளின் வெற்றி பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்ட சுக்ராவின் தாய் இஸ்ஸதுல் பாத்திமா.

இந்த வெற்றி மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. பல தடைகள் கஷ்டங்களைத் தாண்டி இப்படியொரு வெற்றி கிடைத்துள்ளது. வறுமையினால் நாம் பட்ட கஷ்டங்கள் இனித் தீரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. நான் தான் மகளை சைக்கிளில் பாடசாலைக்கும் வகுப்புகளுக்கும் அழைத்துச் செல்வேன்.

இதனை சிலர் விமர்சிப்பார்கள். முஸ்லிம் பெண் இப்படி சுற்றுவதா என சீண்டுவார்கள். நான் அதை பொருட்படுத்தவில்லை. பொதுவான ஊர்வி டயங்கள் வந்தால் பெண் என்று ஒதுங்காமல் முன்னின்று செய்வேன். ஊருக்கு பாதைபோடக் கூட நான்தான் முன்னின்று செயற்பட்டேன். நான் யாருக்கும் பயப்படவோ ஒதுங்கவோ மாட்டேன். அந்த தைரியம் தான் சுக்ராவிற்கும் இருக்கிறது. மகளின் வெற்றிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

சிலர் பாலித தெவரப் பெருமவுடனான வீடியோவை வைத்து விமர்சித்தும் மதத்தை தொடர்புபடுத்தி கண்டித்தும் வருகிறார்கள். எமது முன்னிலையில் தான் அவர் மகளுடன் படம் பிடித்தார். அதனை தவறாக நாம் பார்க்கவில்லை. நல்ல உள்ளத்துடன் அவர் வந்து மகளை மனதார பாராட்டிச் சென்றார். மார்க்கம் என்ற பெயரில் சிலர் இதனை விமர்சித்து வருகிறார்கள். நாம் என்றும் மார்க்கத்திற்கு உட்பட்டே நடக்கிறோம். இறைவனுக்கு பயந்தே எதனையும் செய்கிறோம். பெற்றோராகிய நாங்களே இதனை தவறாக பார்க்காதபோது சிலர் மட்டும் இதனை பெரிதுபடுத்துகிறார்கள் என்று கூறி முடித்தார் சுக்ராவின் தாயார்.

மேலும் இரு படங்களில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி மேலும் 2 படங்களில் வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய்சேதுபதி வில்லன், முதியவர், திருநங்கை கதாபாத்திரங்களில் இமேஜ் பார்க்காமல் நடித்து வருகிறார். பிறமொழி படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

பொங்கல் பண்டிகையில் திரைக்கு வந்த விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக வந்தார். அவரது கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் விக்ரம், வேதா படங்களிலும் வில்லனாக நடித்து இருந்தார்.

தற்போது மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இதில் விஜய் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதியின் வில்லன் வேடத்தில் விஜய்சேதுபதியையே நடிக்க வைக்க இந்தி மாஸ்டர் படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர்.

இதுபோல் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் சலார் படத்திலும் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘நாட்டில் இன்று மாத்திரம் 724 பேருக்கு கொரோனா தொற்று’

நாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இன்று மாத்திரம் 724 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 48 ஆயிரத்து 617 பேர் குணமடைந்துள்ளனர். 278 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 53 ஆயிரத்து 710 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று

பெங்களூரு சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா உடல் நலக்குறைவால் விக்டோரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரது சளி மாதிரியை சிறை மருத்துவ குழுவினர் எடுத்து, பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர், சசிகலாவுடன் தொடர்பில் இருந்த பெண் வார்டன்கள், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களின் பரிசோதனை முடிவு இன்று வெளியிடப்பட்டது. அதில் பெங்களூரு சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இளவரசிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவரையும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க பெங்களூரு சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 216 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 261 பேர் குணமடைந்துள்ளனர். 278 பேர் உயிரிழந்துள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

0
மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை...

மக்களின் இதயங்களையே மஹிந்த கொள்ளையடித்தார்!

0
"மஹிந்த ராஜபக்ச திறைசேரியில் கொள்ளை அடிக்கவில்லை. மாறாக மக்கள் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள்...

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்!

0
கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! 'டித்வா' அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதற்காகத் தேவையான...